|
|
திராவிட மொழியியல் துறையினரால் பேராசான் என்று போற்றப்படும் பர்க்கெலி பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமனோ ஆகஸ்ட் மாதம் 29-ம் நாள் விடிகாலையில் மறைந்தார். 101 வயதான இந்தப் பேராசிரியர் தனியாகவே வாழ்ந்து வந்தார். ஆக்ஸ்·போர்டு பேராசிரியர் தாமஸ் பர்ரோவுடன் இணைந்து அவர் படைத்த 'திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி' (A Dravidian Etymological Dictionary) மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்களில் திராவிட மொழியியல் துறையைப் புத்துணர்ச்சி பெறவைத்தது எனலாம். தமிழ் ஆராய்ச்சியாளர்களும், திராவிட மொழியியல் வல்லுநர்களும் பர்ரோ-எமனோவின் சொற்பிறப்பியல் அகராதி ஒரு பெரும் பண்பாட்டுக் கொடை என்பதை நன்கு அறிவார்கள்.
பேரா. எமனோ கனடாவின் நோவா ஸ்கோஷியா தீவின் ஹாலி·பாக்ஸ் நகரில் ·பெப்ருவரி 28, 1904-ல் பிறந்தார். யேல் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்க மொழிகளை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்ற இவரை இந்தியா ஈர்த்தது. 1935-38 ஆண்டுகளில் நீலகிரி மலைக்கு நேரடியாகச் சென்று வாழ்ந்து அங்கே வாழும் தோடர், கோடர், குடகர் ஆகிய திராவிடக் குடியினரின் மொழிகளை ஆய்ந்தார். மத்திய இந்தியாவில் உள்ள கோலாமி மக்களின் மொழியை ஆய்வதற்கு அவர்களிடையே நேரடியாகத் தங்கினார். அன்று தொடங்கிய ஆராய்ச்சியைத் தாம் ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தார். இது இன்னதென்று இனம் காணமுடியாமல் பலர் திணறிக் கொண்டிருந்த தோடர் மொழியைத் தமிழுடன் மிக நெருங்கிய திராவிட மொழி என்று காட்டினார்.
1940-ல் பர்க்கெலிக்கு சமஸ்கிருதப் பேராசிரியராக வரும்போதே இந்தியவியல், மொழியியல், திராவிட மொழியியல் இவற்றில் புகழ் பெற்றிருந்த பேரா.எமனோ, 1953-ல் பர்க்கெலி தொடங்கிய மொழியியல் துறையின் முதல் துறைத் தலைவர் பொறுப்பை ஏற்றார். 1995 வரை தொடர்ந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்து வந்திருக்கும் எமனோவிடம் இன்றும் ஒரு மணி நேரம் பேசினால், தான் அறியாத ஒன்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது என்றார் பர்க்கெலித் தமிழ்ப்பீடப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட். சொற்பிறப்பியலில் வகுத்த நெறிமுறைகள், மற்ற பல மொழியியல் வல்லுநர்களிடம் இல்லாத சார்பற்ற அறிவியல் சார்ந்த அணுகுமுறை இவை எமனோவின் தனிச்சிறப்பு என்றார் ஹார்ட். |
|
பேரா. எமனோவின் மாணவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் இந்தியாவின் தலைசிறந்த மொழியியலாளர் எனப் போற்றப்படும் திராவிட மொழியியல் அறிஞர் பதிராஜு கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பேராசிரியர்கள் ஆர். கே. ஷர்மா, வில்லியம் பிரைட் ஆகியோர். சென்ற ஆண்டு ·பெப்ருவரியில் கலி·போர்னியா பல்கலைக் கழகம், பர்க்கெலி மொழியியல் துறை அவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்க ஒரு மொழியியல் மாநாடு கூட்டிக் கொண்டாடியது. அப்போது காசிப் பல்கலைக்கழக சமஸ்கிருத வித்வான்கள் சார்பில் பேரா. ஷர்மா தன் ஆசிரியருக்கு 'வித்யாசாகர்' என்ற பட்டத்தை அளித்து மகிழ்ந்தார்.
பேரா. எமனோ தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்காதது ஒரு குறையாக இருந்தாலும், மறைந்து கொண்டிருந்த பல திராவிட மொழிகளை ஆராய்ந்து அவற்றின் குறிப்புகளை முறையாகப் பதிந்து வைத்து மனித குலத்துக்குப் பெருந் தொண்டாற்றியவர்.
மணி மு. மணிவண்ணன், சந்திரசேகரன் பெரியண்ணன் |
|
|
|
|
|
|
|