|
|
|
தமிழ்த் திரைப்பட ஆய்வாளரும், விமர்சகரும் எழுத்தாளருமான ராண்டார் கை (86) காலமானார். 1934-ல், சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் ரங்கதுரை. குடும்பப் பெயரான 'மாடபூசி' என்பதுடன் இணைத்து, 'மாடபூசி ரங்கதுரை' என்று அழைக்கப்பட்டார். 'ராண்டார் கை' என்ற புனை பெயரில் எழுதினார். அதுவே அவரது பெயராக நிலைத்துவிட்டது.
ராண்டார் கை, சென்னையின் புகழ்பெற்ற வழக்குரைஞர் வி.சி. கோபாலரத்தினத்திடம் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினார். கோபாலரத்தினம் பல குற்றவியல் வழக்குகளைக் கையாண்டவர். அங்கே குற்றவியல் வழக்கு நடைமுறைகளை அருகிலிருந்து அறிந்தார். அதன் பின் ஐந்து ஆண்டுகள் பேட்டர்சன் அண்ட் கம்பெனியில் பணியாற்றினார். பின் அங்கிருந்து விலகி திரைப்படத் துறையில் ஈடுபட்டார்.
திரைக்கதை-வசன ஆசிரியர், திரைப்பாடல் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலவிதங்களில் பங்களித்தார். 'தவப்புதல்வன்' திரைப்படத்தில் 'லவ் இஸ் ஃபைன் டார்லிங்' என்ற பாடல் வரிகளை எழுதியவர் ராண்டார் கை தான். முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். திரைப்பட விமர்சகராகவும் பழைய திரைப்படங்கள் பற்றிய ஆய்வாளராகவும், ஆவணப்படுத்துபவராகவும் செயல்பட்டார். தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்திற்காக, பழங்காலத் திரைப்படக் கலைஞர்களான எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, கே.ஆர். செல்லம், ஹொன்னப்ப பாகவதர், பி. லீலா, கொத்தமங்கலம் சீனு, எஸ்.வி. வெங்கட்ராமன் போன்றோரை நேரில் சந்தித்து, திரைப்பட அனுபவங்களை ஆவணப்படுத்தியது இவரது முக்கியமான பணியாகும்.
குற்றவியல் சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் இதழ்களில் பல தொடர்களை எழுதினார். பழங்காலத் திரைப்படங்கள் பற்றியும் இதழ்களில் தொடர்கள் எழுதினார். 'தி இந்து' நாளிதழில் இவர் எழுதிய 'பிளாஸ்ட் ஃப்ரம் தி பாஸ்ட்' என்ற வாராந்திரப் பத்தி மிகவும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. 'ஃப்ராங்க் காப்ரா' பற்றிய ராண்டார் கையின் கட்டுரையை, யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஃபர்மேஷன் ஏஜென்சி (USIA) வாங்கிப் பயன்படுத்தியது. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட ஒரே அமெரிக்கர் அல்லாதவர் ராண்டார் கை மட்டுமே. ராண்டார் கையின் பணிகளைப் பாராட்டி, சமுத்ரா இதழின் சார்பாக இவருக்கு 'ஞானசமுத்ரா' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. |
|
ராண்டார் கை 24 ஏப்ரல் 2023 அன்று காலமானார். அவருக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
|
|
|
|
|