|
தா. பாண்டியன் |
|
- |மார்ச் 2021| |
|
|
|
|
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேனாள் மாநிலச் செயலாளருமான தாவீது பாண்டியன் (88) காலமானார். இவர், 1932ல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில், தாவீது-நவமணி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக்கல்வியை முடித்ததும், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து பயின்றார். பின்னர் அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பொதுவுடைமைச் சித்தாந்தம் அவரை ஈர்த்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கட்சியின் சார்ந்த தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாய்ஸுடன் திருமணம் நிகழ்ந்தது.
சட்டம் படிப்பதற்காக வேலையிலிருந்து விலகி சென்னைக்கு வந்தார் பாண்டியன். கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். இருமுறை, பாராளுமன்றத்திற்காக வடசென்னைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார். ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். ராஜீவ் காந்தி, தமிழகம் வந்தபோது, அவரது பேசுவதைத் தா. பாண்டியனே மொழிபெயர்ப்பது வழக்கம். மே 21, 1991 நாளன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், ராஜீவ் காந்தியுடன் மொழிபெயர்ப்பாளராகப் பாண்டியனும் உடனிருந்தார். அந்த குண்டுவெடிப்பில் ராஜீவ் உயிரிழக்க, பாண்டியன் படுகாயமடைந்தார். வெகு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுப் பின்னரே மீண்டுவந்தார். கட்சியின் இதழான ஜனசக்தியில் 16 ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தார். |
|
சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரகப் பாதிப்பால் பாண்டியனுக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. சிகிச்சை மேற்கொண்டவர், தனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் கட்சி தொடர்பான கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். திடீர் உடல்நலக் குறைவினால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமானார். |
|
|
|
|
|
|
|