|
ந. முத்துசாமி |
|
- |நவம்பர் 2018| |
|
|
|
|
சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், கூத்துப்பட்டறை நிறுவனர் எனப் படைப்புத் தளங்கள் பலவற்றிலும் தடம் பதித்த ந. முத்துசாமி காலமானார். இவர், மே 25, 1936ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை என்னும் கிராமத்தில் பிறந்தார். இளவயதில் கிராமத்தில் கண்ட தெருக்கூத்து நாடகங்கள் இவருக்குள் கலையார்வத்தை விதைத்தன. சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' இதழில் இவரது முதல் படைப்பு வெளியானது என்றாலும் தீவிரமாகப் படைப்பிலக்கியத்தில் இறங்கவில்லை. நாடகங்களின் மீதே இவரது ஆர்வம் இருந்தது. 'கசடதபற', 'நடை' போன்ற இதழ்களில் அவ்வப்போது சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவந்தார். அவை இவரது திறமையை அடையாளம் காட்டியதுடன் பல்வேறு விருதுகளையும் பெற்றுத் தந்தன. இவர் எழுதிய 'ந. முத்துசாமி கட்டுரைகள்' தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசினைப் பெற்றது. 'நீர்மை' இவரது சிறுகதைகளின் தொகுப்பாகும். இவரது 'நாற்காலிக்காரர்', 'படுகளம்', 'கட்டியக்காரன்' போன்ற நாடகங்கள் பரவலாக அறியப்பட்டவையாகும். தெருக்கூத்துக் கலை பற்றி இவர் எழுதிய 'அன்று பூட்டியவண்டி' முக்கியமான தொகுப்பு. நாடகங்களில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார். நாடகக்கலை வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த இவரை இந்திய அரசு 2012ம் ஆண்டில் 'பத்மஸ்ரீ' விருது வழங்கிக் கௌரவித்தது. இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் பசுபதி, கலைராணி, விஜய் சேதுபதி, விதார்த், விமல் உள்ளிட்ட பல நடிக, நடிகையர் இவரது கூத்துப்பட்டறையில் தயார் ஆனவர்களே. |
|
முத்துசாமி பற்றி மேலும் அறிய |
|
|
|
|
|
|
|