|
|
|
நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் முனைவர் திரு. குமாரசாமி அன்னையர் தினத்தன்று (மே 11, 2014) இறைவனடி சேர்ந்தார். எவருக்கும் இல்லை என்று சொல்லாத, எவர் மனதையும் புண்படுத்தாத, புன்னகையுடன் கூடிய நற்குணம் கொண்டவர் குமாரசாமி. தமிழகத்தில் நாமக்கல் அருகில் செல்லப்பம்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த குமாரசாமி கல்வியில் சிறந்து விளங்கினார். கோவை பிஎஸ்ஜியில் இளநிலை உயிர்வேதியியலும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை உயிர்வேதியியலும் பயின்றார். பாபா அணு ஆராய்ச்சிக் கூடத்தில் சிலகாலம் பயின்றபின் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மேல்முனைவராக (Post Doctoral Fellow) அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபின் கெண்டகியில் உள்ள லூயிவில் பல்கலையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதற்குப் பின்னர் 28 வருடங்கள், அதாவது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்வரை, செரிங் பிளவ்/மெர்க் (Schering Plough/Merck) என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார். மெர்க்கின் மூத்த அதிகாரி டாக்டர். ஜேம்ஸ் போஷ் இவரைப்பற்றிக் கூறுகையில் மஞ்சள் காமாலைக்கு மருந்தும் வேறு சில முக்கிய உயிர்காக்கும் மருந்துகளையும் கண்டுபிடிப்பதில் இவர் மிகச்சிறந்த பங்காற்றியதாகக் கூறினார்.
சமுதாயப் பணியும் தமிழ்ச் சேவையும் அயராது செய்து வந்தார். நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டார். சில வருடங்களுக்கு முன்னர் இவரது துணைவியார் திருமதி ரேணுகா குமாரசாமி அவர்களும் சங்கத் தலைவராகச் செயல்பட்டதுண்டு. ஓய்வுபெற்ற பின்னர் அவருக்கு வந்த பணி வாய்ப்புக்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு உதவுவதிலும், பயணக் கட்டுரை எழுதுவதிலும், பூங்கா பரமாரிப்பிலும் முனைப்புடன் இருந்தார். உலகப் பயணங்களில் ஆர்வமாக இருந்தார். |
|
அன்னையர் தினத்தன்று வீட்டுத் தோட்டத்தில் மரம் நடக் குழி தோண்டிய சமயம் இறைவன் அழைத்துக் கொண்டார். மே 15 அன்று பார்வைக்காக அவர் உடல் வைக்கப்பட்ட பொழுது நூற்றுக் கணக்கானவர் வந்திருந்தனர். நியூ ஜெர்ஸி தமிழ்ச் சமுதாயப் பெரியோர், சங்கத் தலைவர்கள், மெர்க்கின் மூத்த அதிகாரி ஆகியோர் அவரின் திறமை, நற்குணங்கள் பற்றிப் புகழ்ந்துரைத்தனர்.
உங்களால் இயன்றால் குமாரசாமி அவர்களின் நினைவாக மரங்களை நடவும். அதுவே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.
முத்து தங்கம் |
|
|
|
|
|
|
|