|
கவிஞர் சி. மணி |
|
- |மே 2009| |
|
|
|
|
தமிழில் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரும் அமெரிக்காவின் விளக்கு இலக்கியப் பரிசு, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது உட்பட பல்வேறு கௌரவங்களைப் பெற்றவருமான கவிஞர் சி. மணி (72) ஏப்ரல் 7, 2009 அன்று சேலத்தில் காலமானார். சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' இதழ்மூலம் உருவாகி, தனக்கென புதுக்கவிதை உலகில் ஒரு தனி இடத்தைப் பெற்ற மணி, 1936ஆம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் பழனிசாமி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., பட்டம் பெற்ற இவர், கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இளம்பருவம் முதலே கவிதை ஆர்வம் காரணமாக எழுத்து, பிரக்ஞை, கசடதபற போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்த மணி, கவிதை மீது தனக்கிருந்த தனிப்பட்ட ஆர்வம் காரணமாக ‘நடை' என்ற பத்திரிகையையும் நடத்தினார். ‘வரும் போகும்', ‘ஒளிச் சேர்க்கை', ‘சாரல்', ‘இதுவரை' போன்ற கவிதை நூல்களையும், ‘யாப்பும் கவிதையும்' என்ற இலக்கண விமர்சன நூலையும் எழுதியிருக்கிறார். டி.எஸ். எலியட்டின் ‘பாழ்நிலம்' நூலைத் தமிழாக்கம் செய்ததுடன், அதன் பாதிப்பில் நரகம் என்னும் நீள்கவிதையையும் படைத்திருக்கிறார். இவைதவிர தமிழாக்கமாகவும், கட்டுரையாகவும் பல நூல்களைப் படைத்திருக்கிறார். பௌத்தம், தாவோ பற்றிய நூல்களை இவர் மொழியாக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதுமை காரணமாக படைப்புலகிலிருந்து சற்றே ஒதுங்கி இருந்த மணி, மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.
தமிழ்க் கவிதை உலகின் மிக முக்கியமான கவிஞருக்கு தென்றல் அஞ்சலி செலுத்துகிறது. |
|
|
|
|
|
|
|
|
|