|
உடற்பயிற்சி என்னும் எதிரி |
|
- தன்வந்திரி|மார்ச் 2005| |
|
|
|
நம்மில் பலர் உடற்பயிற்சியை எதிரியாகத்தான் பார்க்கிறோம். 'போரடிக்கிறது', 'நேரம் எங்கே கிடைக்கிறது?', 'என் நண்பன் தினமும் விழுந்து விழுந்து உடற்பயிற்சி செய்வான். நிறுத்தினான், உடனே உடம்பு சதை போட் டிடுச்சு. அதைவிடச் சும்மா இருக்கறதே பரவாயில்லை', 'செய்யணும்தான், புரியுது. முடியலையே!' - என்று எத்தனையோ வகைகளில் நாம் அதைத் தவிர்க்கிறோம். ஆரம்பத்தில் குற்ற உணர்வு இருக்கிறது. போகப்போக அதுவும் இருப்பதில்லை.
உடற்பயிற்சி ரொம்ப அவசியம். சாப்பிடு வது போல, தூங்குவதுபோல, சம்பாதிப் பதைப் போல - உடற்பயிற்சியும் ஓர் அத்தியாவசியத் தேவை. ஒரு வேளை நீங்கள் விறகுவெட்டியாக இருந்தால் உடற்பயிற்சி செய்யவேண்டாம். நடனக் கலைஞராக இருந்தாலும்தான். யாருக்கு அலுவலே உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறதோ அவர்கள் தனியாகப் பயிற்சியும் செய்வது அவசியம் இல்லை.
இங்கே நாம் உடற்பயிற்சி செய்யச் சொல்வது கலி·போர்னிய கவர்னரோடு உடலழகில் போட்டிபோடுவதற்காக அல்ல. வாழும் நாள் வரையில் நோய்கள் அதிகம் தாக்காமல், தாக்கினாலும் அதனை எளிதில் துரத்தும் வலிமை கொண்டவராக இருப்பதற்காக. இயன்ற வரையில் நமது அன்றாடப் பணிகளுக்கு அடுத்தவரைச் சாராமல் இருக்கவேண்டும். வாழும் கணமெல்லாம் உள்ளூர ஒரு மகிழ்ச்சி ததும்பும் உணர்வு இருக்கவேண்டும். 'என்னடா வாழ்க்கை' என்று அலுப்பு வந்துவிடக்கூடாது. இதற்குச் சரியான உணவுப் பழக்கம், சிந்தனைப் பழக்கம், செயல் நெறிகள் ஆகியனவும் அவசியம் என்றாலும் இந்தக் கட்டுரையில் நாம் உடற்பயிற்சியை மட்டுமே விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
இளம் வயதில் நாம் நல்ல ஆரோக்கியத்தை ஏதோ தானாக வருவதாக நினைத்து விடுகிறோம். எதைச் செய்தாலும் உடல் தாங்குகிறது. நமக்கு வயதாகாது, நோய் வராது, சிரமப்பட மாட்டோம் என்பது போலச் சில மாயைகளில் நாம் மூழ்கி விடுகிறோம். வயது சொல்லிவிட்டு ஆவதில்லை. நோயும் முன்னறிவிப்புச் செய்துவிட்டு வருவதில்லை. வந்தபின் "சே! கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்" என்று சொல்கிறோம். நம் மீதே நமக்குக் கோபமாக வருகிறது. இதைக் கழிவிரக்கம் என்பார்கள். இந்தக் கழிவிரக்கத்தால் பயனில்லை என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். ஆனால் வந்த துன்பத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதில் தவறில்லை.
உடற்பயிற்சி செய்வதால்
1. ரத்த ஓட்டம் செம்மையாகிறது. அதனால் உடலின் எல்லாப் பகுதிகளும் ரத்தமும், அது கொண்டு செல்லும் பிராணவாயு மற்றும் ஊட்டப் பொருட்கள் சரிவரப் போய்ச் சேருகின்றன.
2. மூச்சு விடும் வேகம் அதிகமாகிறது. உங்கள் நுரையீரல் மற்றும் இருதயம் பலமடைகின்றன.
3. செரிமானம் வலுவடைகிறது. உண்ட உணவிலிருக்கும் சத்துக்கள் உடலால் சரிவர கிரகிக்கப்படுகிறது. அல்லாத பட்சத்தில் எவ்வளவு நல்ல உணவை, எத்தனை டன்கள் சாப்பிட்டாலும் அது அப்படியே மறுமுனையில் வெளியேறு கின்றது.
4. ஊளைச் சதை குறைந்து சரியான தசைப் பிடிப்பு உண்டாகிறது. நல்ல தசைகளே உடலில் பிராணவாயுவை ஏற்றுப் பயன்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
5. எலும்புகள் வலுவடைகின்றன. குறிப்பாக வயதானவர்களுக்கு எலும்பு முறிவு, தேய்மானம் ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள் குறையும்.
6. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடிகிறது. வடியாத உற்சாகமும் வாழ்க் கையில் பிடிப்பும் ஏற்படுகிறது. தன்னம் பிக்கைக்கும் இது காரணமாகிறது.
7.அளவுக்கதிமாகப் புகைபிடித்தல், மது அருந்துதல், பெருந்தீனி போன்றவற்றில் இருக்கும் ஈடுபாடு குறைந்து மெல்ல அப்பழக்கங்களில் இருந்து விடுபடவும் உடற்பயிற்சி காரணமாகிறது.
8. தோலின் அடைப்புகள் நீங்கி, தோல் சுவாசிப்பதால் அதில் பளபளப்பு உண்டாகிறது. இளமையான தோற்றத் துக்கு இது உதவுகிறது. |
|
உடற்பயிற்சி பல வகைப்படும். 1. வலிமை தருவது (Strength), 2. சமனிலை தருவது (Balance), 3. தாக்குப் பிடிக்க உதவுவது (Endurance) மற்றும் 4. இழுபடு தன்மையை உயர்த்துவது (Flexibility) - இவற்றுக்காகத் தனித்தனிப் பயிற்சி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு சில பயிற்சிகள் மேலே கண்டவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட பலன்களையும் தரலாம். உங்கள் அலுவல், வாழ்முறை இவற்றுக்கேற்ப பயிற்சி அட்டவணையை அமைப்பது அவசியம்.
விரைந்து நடப்பது மிகச் சிறந்த, செலவில்லாத உடற்பயிற்சி. உங்களுக்குப் பிடிக்காத ஒருவர் நூறு டாலர் கடன் கேட்கப் பின்னால் துரத்தி வருகிறார் என்று கற்பனை செய்தபடி ஒரு மணி நேரம் நடந்தால் போதுமானது. தொடக்கத்தில் 30 நிமிடம் நடக்கலாம். படிப்படியாக அதிகப் படுத்தலாம். எல்லா உடற்பயிற்சிகளுக்குமே இது பொருந்தும். ஒரேயடியாக வேர்க்க வேர்க்க ஒரு நாள் செய்வதும், பிறகு பத்து நாள் உடம்பு வலிக்கிறது என்று ஒன்றும் செய்யாமல் இருப்பதும் பயனில்லை. அதைவிட தினந்தோறும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது அதிகப் பலன் தரும். ஒவ்வொரு நாளும் உடலின் ஒருசில பாகங்களுக்கான பயிற்சிகளைச் செய்வது நல்லது. அதே பயிற்சி சுமார் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் திரும்பி வரும்.
வீட்டுவேலைகளைச் செய்வதும் உடற்பயிற்சிதான். காரைத் தூய்மை செய்வது, தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவது, புல்தரை கொய்வது, வீட்டில் இரைந்து கிடக்கும் பொருட்களை ஒதுக்கி வைப்பது - செய்யத் தொடங்கினால் ஆயிரம் வேலைகள். செய்தால் இல்லமும் சொர்க்கமாகும். ஆனால் அதோடு போதும் என்று நிறுத்தாமல், இன்னும் கொஞ்சம் உடற்பயிற்சிகளையும் செய்யத்தான் வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும் நன்கு பசியெடுக்கும். இதுதான் சாக்கு என்று கன்னாபின்னா என்று சாப்பிடக் கூடாது. போதிய அளவு, நல்ல சத்தான உணவை மட்டும் கட்டுப்பாட்டோடு உண்ணுவது அவசியம். இதைப் பற்றிச் சொல்லவே தனிக் கட்டுரை எழுத வேண்டும்.
யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் ஆகியவையும் நல வாழ்வுக்கு மிக உகந்தவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. குறிப்பாக, வேலை அல்லது குடும்பச் சூழல் அதிக மன அழுத்தம் கொடுப்பதாக இருக்கும்போது இவை அளவற்ற நிம்மதியை உள்ளே நிரப்பும். சரியான ஆசானிடம் பயிலுதல் வேண்டும். உடற்பயிற்சியையும் யோகாசனங்களையும் ஒரே நாளில் செய்யாமல், ஒரு நாள் ஒன்றும் மறுநாள் இன்னொன்றுமாக மாற்றி மாற்றிச் செய்யவேண்டும். யோகாசனமும் உடற்பயிற்சியும் அடிப்படையில் வேறு பண்புகளைக் கொண்டவை என்பதால் இது அவசியமாகிறது.
உடற்பயிற்சிக்கு வயது ஒரு தடையே இல்லை. இன்னும் சொல்லப் போனால் முதுமைப் பருவத்தில் நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும், வாழ்வை நீட்டிக்கவும், நலமாக இருக்கிறோம் என்ற உணர்வோடு வாழவும் உடற்பயிற்சி மிக அவசியம். ஆனால் உங்களுக்கு இருக்கும் பலகீனங்கள், இதுவரை செய்யப்பட்ட சிகிச்சைகள் இவற்றைப் பொறுத்து என்ன பயிற்சிகளைச் செய்யலாம் என்பது அமையும். எந்தக் கடுமையான பயிற்சியை மேற்கொள்ளும் முன்னரும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. உடற்பயிற்சிக்குப் பின் சாதாரணமான வலி, வியர்வை, களைப்பு ஏற்கத் தக்கது. ஆனால் விடாத வலி, எழ முடியாத களைப்பு என்று எந்த அசாதாரண நிலை தோன்றினாலும் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரிடம் கேட்ட பின்னரே தொடரலாம்.
தலைப்பில் உடற்பயிற்சியை எதிரி என்று சொல்லியிருக்கிறதே என்று நீங்கள் யோசித்திருக்கலாம். யாருக்கு என்று சொல்லவில்லையே. முதுமை, நோய், மனத்தளர்ச்சி போன்ற உங்களது எதிரிகளுக்குத்தான் அது எதிரி. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறதே!
தன்வந்திரி |
|
|
|
|
|
|
|