|
தமிழ் விழா-2003 - தமிழ் நாடு அறக்கட்டளை |
|
- கோம்ஸ் கணபதி|ஜூன் 2003| |
|
|
|
அன்பு நிறை வடஅமெரிக்கத் தமிழ் நண்ப: நலமா?
நாமே தேடிக்கொண்ட... இந்த அமெரிக்க வாழ்வின் அவசரம், எதையோ தொலைத்து விட்டுத் தேடுகின்ற இயந்திர கதியின் இசையற்ற சுருதி, நாளெல்லாம் நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கும் கணிப்பொறி... இவற்றினின்று விடுபட்டு ஆண்டுக்கு ஒரு முறையேனும் தமிழ் நாடு அறக்கட்டளையின் விழாவின்போது கூடி மகிழ்வோமே...அந்நாள் அருகிவிட்டதென உனக்கு நினைவூட்டிடவே இக்கடிதம்!
இந்த அமெரிக்க மண்ணின் தென் கோடியில் நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற ஓர்லாண்டோ மாநகரில் வருகின்ற ஜoலை நாலாம் நாள் தொடங்கி ஆறாம் நாள் வரை ஏற்ற மிகு தமிழ் விழாவினுக்கு உன்னையும் உன் இல்லத்தையும், உன் நண்பர்களையும் அழைத்திடவே இக்கடிதம்!
"பெற்ற தாய்தனை மக மறந்தாலும், பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும், நற்றவத்தோர் உள்ளிருந்து ஓங்கும்" நற்றமிழை மறக்க ஒண்ணுமோ!
குமரிக் கடலோசை, குற்றாலத்துக் குளிர் தென்றல், மதுரை மல்லிகை, தஞ்சைப் பெருங்கோயில், கோவைச் சிறுவாணி நீர், மரீனாக் கடற்காற்று -
நானும் நீயும் படித்திட்ட அந்த எளிய பள்ளி, குதித்துக் கும்மாளமிட்ட அனும நதி...
அட போடா, எதை நினைக்க? எதை மறக்க?
...இப்படித் தமிழையோ, நம் ஊனோடும் உயிரோடும் ஒன்றறக் கலந்து விட்ட தமிழகத்தையோ மறத்தல் என்பது எப்படி இயலாதோ... அது போலே பல்லாயிரம் மைல்கள் கடந்து வந்திட்டபோதும் தமிழோடும், தமிழ் மண்ணோடும் நம்மை ஒரு பாலமென இணைத்து நிற்கும் தமிழ் நாடு அறக் கட்டளையின் தன்னலமற்ற பணிகளையும் நீ மறவாய் என்பதை நானறிவேன்.
தமிழ்த் திரு நாடுதன்னில் எண்ணற்ற ஏழையர் இதயம் புழுங்கிக் கல்விக் கண்ணற்ற சேய் போல் கலங்கிடாதிருக்க..., திசை தெரியாது திகைத்து நிற்கும் விதவைப் பெண்டிருக்கு வழி காட்டிட..., மனநோய், தொழுநோய், மற்றும் எய்ட்ஸ் போலும் நோயுடையோரை மனித நேயத்தோடு அணுகி மாற்று வழி காட்டிட... இன்ன பிற நற்காரியங்களுக்கான பொருள் ஈட்டுவதே இவ்விழாவின் ஒப்பரிய நோக்கமாகும் என்பதை உனக்கு நினைவூட்டி அழைத்திடவே இக்கடிதம்!
கடந்த ஏப்ரல் தென்றல் மலரில் அறக்கட்டளையின் விழா நிகழ்ச்சிகளைக் கோடியிட்டுக் காட்டியிருந்ததாக நீ குறிப்பிட்டுச் சொன்னாயே ஞாபகம் இருக்கிறதா? "இவ்விழாவின்போது அகில இலங்கை கம்பன் கழகத்தை தோற்றுவித்த திரு இலங்கை ஜெயராஜ் போன்றோரின் இனிய தமிழுரை உண்டு. ...கவியரங்குண்டு, ...பட்டி மன்றமுண்டு ...இன்னும் தொழில் கருத்தரங்கு, மருத்துவக் கல்வி, விலங்கின மருத்துவக் கல்வித் தொழிற்ப் பட்டறையுண்டு... குழந்தைகளுக்கானப் புதுமைப் பட்டிமன்றமுண்டு..." என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இனிகோடிட்டுச் சொல்வதற்கென இதோ இன்னும் சில நிகழ்வுகள்..."என்னவளே..." என்ற இனிய பாடலை இன்னமும் மனதுக்குள் பதியம் போட்டுக் கொள்ளுமளவுக்குப் பாடிய திரு. உன்னி கிருஷ்ணனின் இசை நிகழ்ச்சி... தனது அப்பாவித்தனமான விழிகளை உருட்டியே நமக்குள் வெடிச்சிரிப்பினை வாரி வழங்கும் நகைச்சுவை நடிகர் திரு. பாண்டியராஜன்... போதுமா!
தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003 குறித்த விளக்கங்களுக்கு www.tco2003.com வலைத் தளத்தில் வலை விரித்திடுக!
மேலும் விபரங்கள் வேண்டுமெனில் விழாக் குழுத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம் MD அவர்களைத் தொலை பேசி எண் 863-385-5538 அல்லது tnfconvention2003@hotmail.com எனும் மின்னஞ்சல் வழியாக அணுகிடுக!அல்லது டாக்டர் திருமதி பரிமளா நாதன் அவர்களை vsp1947@aol.com எனும் மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்க! |
|
கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, மகிழ்ந்திட ஓர்லாண்டோ மாநகரில் அறக்கட்டளை வழங்கிடும் தமிழ்த் திருவிழா-2003 அரியதோர் வாய்ப்பு.
என்றாலும், அண்மையில் நெஞ்சைத் தொட்டிட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு அறக்கட்டளை எந்த அளவில் உறுதுணையாய் இருந்ததென அறிந்திட்டால் மெழுகாய் உருகிப் போவாய்...
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்றேன்.." என வடலூர் வள்ளலார் சொல்லியது உனக்கும் எனக்கும் மனப் பாடம். ஆனால் அது இங்கு அட்லாண்டா நகரில் வாழும் திருமதி. பெக்கி டக்லஸ் இல்லத்தாரின் காதில் ஆலயமணி ஓசையென விழுமென யாரறிவார்! மனநோயில் வாடிக் கொண்டிருந்த தனது இருபத்தி மூன்று வயது மகள் மாண்டபோதும், வெள்ளமென வெடித்து வந்த விழி நீர் காய்வதற்க்குள்ளும், தன்னுடைய இன்னொரு மகள் டயானாவையும் அழைத்துக் கொண்டு எங்கோ இருக்கும் மதுராந்தகத்துக்கு போனதுவும், நீயும் நானும் பார்க்கவும், பேசவும்கூட அஞ்சுவோமே... வாடிய பயிர் போலும் தொழுநோயினர்... அவர்தம் கண்ணீரைத் துடைத்ததுவும்... இன்னும், எத்தனையோ தமிழகக் கிராமங்களில் எண்ணற்ற அனாதைக் குழந்தைகள் பராமரிப்பாரின்றி கருகி விடாதிருக்க வேண்டி 'சங்கீதா அனாதை இல்லம்' போன்ற ஆலயங்களை தத்தெடுத்துக் கொண்டிருப்பதுவும்... வெகு ஜனப் பத்திரிகை களான குமுதம், விகடன், தினத்தந்தி... இது போலும் பத்திரிகைகளில் வந்திடாத செய்தி... விளம்பரம் கருதிச் செய்யும் உதவியல்லவே இவை!...
மதுராந்தகத்தில்... வாடி நின்ற தொழுநோய் இல்லமென்கிற முல்லைக் கொடிக்கு அட்லாண்டா டக்லஸ் இல்லத்தினர் பாரி மன்னனாய் இருந்து பரிவு காட்டித் தேராக நின்றதுவும் தமிழ் நாடு அறக்கட்டளை அவர்தம் உதவியை நெறிப்படுத்தியதும்... பறையறைந்து சொல்லப்படாத காவியங்கள்... பாரதியின் பாட்டுக்கும் உட்படாத... ஓவியங்கள்... ஆகவேதான் மீண்டும் சொல்லுவேன், டாக்டர் சொக்கலிங்கம் அவர்களின் இயக்கத்தில் அறக்கட்டளை எடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேள்விக்கு
"கை கோர்ப்போம், கை கொடுப்போம்!"
வேலைப் பளு... இல்லை... நெருங்கிய நண்பர் வீட்டுத் திருமணம்... என்ற காரணங்களால் வரவியலாது... என்று சொல்லி வருந்துவாயெனில்... வலது கை கொடுப்பதை இடது கை அறியா வண்ணம் வழங்குவதில்தான் நீ கர்ணனாயிற்றே... பெரும் பொறுப்பினைத் தன் தோளில் ஏற்றுக் கொண்டிருக்கும் டாக்டர் சொக்கலிங்கம் மற்றும் அறக்கட்டளையின் இவ்வரிய பணிக்கு... நிதி மிகுந்த நீர் பொற்குவை தாரீர்...!
கோம்ஸ் கணபதி |
|
|
|
|
|
|
|