|
கானடாவில் தியாகராஜ ஆராதனை |
|
- அலமேலு மணி|மார்ச் 2024| |
|
|
|
|
நல்ல இனிய காலைப் பொழுது. பனிமழை பொழியாத அரிய பருவநிலை ஆட்டவாவில். ஒரே திருவிழாக் கோலம் கொண்டிருந்தது அந்த இடம். தியகராஜ ஆராதனை என்றால் சும்மாவா?வாழ்வில் இனிமையும் அமைதியும் காண இசையை நமக்கு அளித்தவர் அல்லவா? பிப்ரவரி 24ம் நாள் அவரை ஆராதனை செய்து கொண்டாடினார்கள்.
மேடையில் விதூஷகர்கள் 30 பேர்களுக்கு மேல் அமர்ந்திருந்தார்கள். பழம்பெரும் டீச்சர் திருமதி பாலா இல்லாதது அவரின் மாணவிகளுக்கு ஒரு குறையாக இருந்தது. குரு திருமதி ராஷ்மி தன் டிரேட் மார்க் புன்னகையுடன் மேடையில் இருந்து பஞ்சரத்தின கீர்த்தனையை தொடங்கிவைக்க, யாவரும் பாட ஆரம்பித்தனர். நாற்பது நிமிடம் போனதே தெரியவில்லை.பெரிய வித்வான்கள் யாருமில்லை. இசையும் இறைவனும் ஒன்றாகி அங்கே கோலோச்சினர். முப்பது பாடகர்களும் தம்மை மறந்து ஆராதனையே முடிவென்று பக்தி பெருகப் பாடினர்.அந்த நேரத்தில் அந்த இடத்தில் பொங்கி எழுந்த உணர்வு அலைகளை ஒவ்வொருவரும் உணர முடிந்தது.
சிறிய இடை வேளைக்குப் பின் மீண்டும் சபை கூடியது. அனஜனா, ராமசந்திரன், ரமணி முதலியோர் அழகாககப் பாடினர். அடுத்து வந்த மைலாப்பூர் இரட்டையர் நெற்றி நிறைய நாமமிட்டு ,சிறிய குடுமியுடன் மேடையில் அமர்ந்த விதமே அழகாக இருந்தது. ஆயுஷ்மனன் சாய் சர்மாவும், அக்ஷ்மனன் சாய் சர்மாவும் அருமையாகப் பாடினர். கணீரென்ற அவர்களின் குரலும், சுத்தமான உச்சரிப்பும் அருமை. பிறகு ராஷ்மி அசாவேரியில் அருமையாகப் பாடினார். பல வருட உழைப்பும், அவர் இசையில் கொண்ட ஈடுபாடும் மிகத்தெளிவாகப் புலனாகியது.
அடுத்து திருமதி ராஜேஸ்வரி பாடினார். "அம்மராமம்மா" என்று குரலெடுத்துப் பாட ஆரம்பித்ததுமே சபையோர் நிமிர்ந்து உட்கார்ந்தனர். வயதை மீறிய கணீர்க் குரலில் பாடினார். பண்டுரீதிக்குப் பிறகு சசிகலா பாடினார். பல காலம் இசை பயின்ற முதிர்ச்சி அவரின் பாடலில் தெரிந்தது .நகுமோமுவை மிக மிக அருமையாகப் பாடினார். கரகோஷம் விண்ணதிர்ந்தது.
தியாகராஜரின் பாடல்களுக்கு நடனமும் ஆடி ஆராதித்தது சிறப்பாக இருந்தது. சம்போ மஹாதேவா நடனம் ஆடியவர் மிக அழகாக ஆடினார். அடுத்து ஆடிய ஸ்ருதாவின் உடை நேர்த்தியைக் காட்டியது. முக பாவங்கள் உணர்ச்சிபூர்வமாக இருந்தன. ஜனனி ராம்தாஸ் கணீரென்று வாய் விட்டுப் பாடினார். அடுத்துவந்த வித்யா ஷண்முகம் மிக அழகாகப் பாடினார். சம்போ மஹாதேவா என்று அழைத்த போது அங்கே மகாதேவனைத் தேடத் தோன்றியது. நல்ல பாடாந்திரம் உழைப்பு அங்கே பெரிதும் கை கொடுத்தது உண்மை.
இந்த விழாவைப் பெரிதும் உழைப்புடன் எடுத்து நடத்தியது சவுத் இந்தியா கல்சுரல் அசோசியேஷன். |
|
அலமேலு மணி |
|
|
|
|
|
|
|