2023 ஜூன் 30 மற்றும் ஜூலை 1-2 நாட்களில் 36வது அமெரிக்கத் தமிழ்ப் பேரவையின் தமிழ் விழா சாக்ரமென்டோ தமிழ் மன்றத்தோடு இணைந்து மிகச் சிறப்பாக நடந்தேற உள்ளது. பரந்து விரிந்த கலிபோர்னியாவின் தலைநகரில் வெள்ளிவிழாக் காணும் சாக்ரமென்டோ தமிழ் மன்றம் முத்தமிழாம் இயல், இசை, நாடகத்தை மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழன்னைக்கு அணிசெய்து அழகு பார்க்க உயர்தர ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தமிழின் தொன்மை, தமிழரின் பெருமை என்பதைக் கருப்பொருளாக் கொண்டு இவ்வாண்டின் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்த்துக் களிக்கவும் பங்கேற்கவும் வாய்ப்புகள் பற்பல.
ஜூன் 30 அன்று தொழில் முனைவோர் மாநாடு, மருத்துவர்களுக்குத் தொடர்கல்வி மாநாடு, இளைஞர் மாநாடு என விழா ஆரம்பமாகும். சிறப்புரை, கருத்துரையாடல், கலந்துரையாடல், புதிய முயற்சி, புதிய தொடர்புகள், புதிய வாய்ப்புகள், புதிய தொடக்கம் என்பதோடு இருப்பதைப் விரிவாக்கப் பல வாய்ப்புகளுடன் சுரேஷ் சம்பந்தம் அவர்களின் 'புதிய சிந்தனை' பட்டறை இந்த ஆண்டின் புதுவரவு. மருத்துவர்களுக்கு 6 மணி நேர CME சான்றிதழுக்கான சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களோடு கலந்து உரையாடி, விருந்துண்டு கொண்டாடும் மாலை நிகழ்வு முதல்நாளின் முத்தாய்ப்பு. அரியதொரு வாய்ப்பு.
ஜூலை முதல் நாள் மாநாட்டின் இரண்டாம் நாள். நூறு குழந்தைகள் சேர்ந்திசைக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து நெஞ்சில் நின்றாடும். மாநாட்டின் இரண்டு, மூன்றாம் நாட்களில் மரங்கள் நிறைந்த சாக்ரமென்டோவில் மரபுக் கலைக் கொண்டாட்டம் மேடையேறும். கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், கைச்சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, பெரிய மேளம், நாதஸ்வரம், தவில், பம்பை, தப்பட்டை, பொம்மலாட்டம், பறையிசை, நாட்டுப்புறப் பாடல்கள் என அனைத்தும் நடந்தேறும். மயங்க வைக்கும் நேர்த்தியான படைப்புகள் கைதேர்ந்த கலைஞர்களால் நிகழ்த்தப்படும்.
சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் தலைமையில் முனைவர் பர்வீன் சுல்தானா, நகைச்சுவை மன்னர் மோகனசுந்தரம் இணைந்து தரும் பட்டிமன்றம், கவிஞர் உமாதேவி தலைமையில் கவியரங்கம், தமிழறிஞர் தலைமையில் ஆய்வரங்கம், கதைசொல்லி பவா செல்லத்துரை, கரு. பழனியப்பன் ஆகியோர் பங்குபெறும் கருத்தரங்கம், கூக் வித் கோமாளி புகழ் பாலா மற்றும் மணிமேகலை, மிர்ச்சி ஆர்.ஜே. விஜெய் ஆகிய சின்னத்திரை திறமைகளின் கலாட்டா நேரம். பாட்டுக்குப் பாட்டு புகழ் அப்துல் ஹமீது, என நீள்கிறது நிகழ்ச்சிநிரல்.
பத்மபூஷண் சங்கீத கலாநிதி சுதா ரகுநாதனின் தமிழிசைக்கு, சௌமியா ஜெ. நாராயணன் கடம், கமலகீரண்விஞ்சாமுரி வயலின், அக்ஷயா அனந்தபத்மநாபன் மிருதங்கம். தொன்மைநிறை தமிழ் இலக்கியத்தை சேர்ந்திசையாகப் பரிசளிக்க திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், திரையிசை, மெல்லிசை வழங்க சின்னக்குயில் சித்ரா, சத்யபிரகாஷ், வேல்முருகன், பிரியங்கா, மூக்குத்தி முருகன், மான்சி, ஆருரன் என ஏராளமானோர் உங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வருகிறார்கள்.
பார்த்து, கேட்டுப் பரவசம் அடைவதுடன் பங்கேற்றுப் பரிசு பெறவும் பல்வேறு போட்டிகள் உண்டு. தமிழ்த்தேனீ, குறள்தேனீ, தமிழ்கூறும் தலைமுறை (பேச்சுப் போட்டி), வணக்கம் வட அமெரிக்கா மூலம் நடத்தப்படும் 11 வித போட்டிகள், கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், ஆடல், பாடல், நாடகம், இசைக்கருவி, குறும்படம், சதுரங்கம் (chess). தவிர விறுவிறுப்பான இலக்கிய விநாடி வினா இந்த ஆண்டும் உண்டு.
செம்மொழியாம் தமிழ்மொழியின் தொன்மையை, அதன் உண்மையை உலகறியச் செய்ய, அடுத்த தலைமுறை தமிழமுது பருகிப் பயன்பெற பெருவிழாவிற்கு இன்றே பதிவு செய்யுங்கள்
பதிவு செய்ய: www.fetna-convention.org |