|
|
அமெரிக்காவில் பல சங்கங்களும் கோவில்களும் தோன்றுவதற்கு முன்னால் 1967ல் துவக்கப்பட்ட பழமையான சங்கம் பாரதி சங்கம். வளமோடு வாழ தமிழ்மக்கள் தொடர்ந்து வெற்றி நடைபோட புகழின் உச்சிக்கு செல்ல தெம்பூட்டும் பாரதியின் வார்த்தைகள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட சங்கம் பாரதி சங்கம். இச் சங்கத்தால் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் நியூயார்க்கில் 'பாரதிதினம்' கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு நியூஜெர்சியில் பிரிட்ஜ்வாடர் என்னும் நகரத்தில் இருக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவில் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கலை நிகழ்ச்சியில் சங்கீத கலை பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் இனிமையான ராகங்களில் பாடி பாரதியின் கவிதைகளை நினைவூட்டினார்கள். மற்றும் நாட்டிய கலையில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் விறுவிறுப்பாக பலரும் வியக்கும் வண்ணம் நடனமாடி பாரதியின் பாடல்களை சித்தரித்தார்கள்.
பக்தர்கள் குழந்தையை தெய்வமாக காண்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் மகாகவி பாரதி வேறுபட்ட பக்தர். அவர் விரும்பி வணங்கிய பராசக்தியை ஒரு குழந்தையாக பாவித்து, குழந்தையின் அழகையை சின்னஞ்சிறு கிளிக்கு ஒப்பிடுகிறார். கண்ணம்மா என்று செல்லமாக கூப்பிடுகிறார். குழந்தையை பார்க்க பார்க்க பாரதியின் உள்ளம் குளிர்ந்து தவம் ஓங்கி வளர்ந்து மேனி சிலிர்க்குது. கள் உண்ட வெறி பிடிக்குது... இது போன்ற உள்ளக்கிளர்ச்சிகளை ''சின்னஞ் சிறு கிளியே'' என்னும் பாடலில் விரிவாக சித்தரித்திருக்கிறார்.
புகழின் உச்சியில் இருந்த பாரதியின் பாடலுக்கு புகழின் உச்சியில் இருக்கும், நடன மற்றும் நடிக கலையில் பேரொளி வீசித் திகழும் திருமதி பத்மினி ராமச்சந்திரன் அவர்கள் இனிமையாக நாட்டிய மாடினார். புள்ளி மானைப்போல் துள்ளி துள்ளி நடனமாடிய காலம் மறைந்துபோனாலும், பாரதியின் பாடலுக்கு நடனமாடி தனக்கு உற்சாகம் சற்றும் குறைந்து போகவில்லை என்பதை காட்டினார். பாரதியின் கவிதைகளை கற்பனைகளை, உள்ளக்கிளர்ச்சிகளை மனதிலே நிலைத்து நிறுத்தி வைத்தார் பத்மினி ராமச்சந்திரன். |
|
''பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா'' என்று கூறியவன் பாரதி. இன்று அமெரிக்காவில் சிறப்பாக வாழ்ந்து வரும் தமிழ்ப்பெண்கள் மத்தியில் சிலர் ஏமாற்றப்பட்டு, விவகாரத்து செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, வாழ்கிறார்கள் என்பது பாரதிக்கு ரத்தக்கண்ணீரையே வரவழைத்து விடும்.பெண்களை ஆபத்திலிருந்து காக்க பெண்கள் முதலில் விரைகிறார்கள். பிரபல வழக்கறிஞர் திருமதி கவிதா ராமஸ்வாமி ''மித்ர'' என்னும் அமைப்பின் சார்பாக அமெரிக்காவில் அல்லல்படும் மங்கையர் களைப் பற்றி பேசினார். தனி ஒரு பெண்ணுக்க நல்வாழ்வு இல்லை எனில் இந்த சமுதாயத்தையே எரித்துவிடுவோம் என்று கூறியது சிலப்பதிகார கண்ணகியை நினைவூட்டியது.
நிகழ்ச்சியின் இறுதியில் பட்டிமன்றம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'தெவிட்டாத இன்பம் தருவது, காதல் திருமணமா? அல்லது நிச்சயிக் கப்பட்ட திருமணமா?' என்னும் தலைப்பில் இளைஞர்கள் குழுவும், மூத்த வயதுள்ளவர்கள் குழுவும் வாதாடினர். தமிழ் இளைஞர்களுக்கு அமெரிக்கா வில் காதலிக்க நேரமும் உண்டு; காதலிக்க வழியும் உண்டு. தமிழர்கள் அமெரிக்கர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் இந்த நாட்டில், 'காதல் திருமணம் தான் தெவிட்டாத இன்பம்' என்று சிறப்பாக வாதாடிய குழு வென்றது.
தகவல்: டாக்டர் ஏ.வி. ரகுநாத் தலைவர், பாரதிசங்கம், நியூயார்க் |
|
|
|
|
|
|
|