|
பரதநாட்டிய அரங்கேற்றம்: ஸ்ரேயா சதீஷ் |
|
- அலமேலு மணி|ஜூலை 2022| |
|
|
|
|
சமீபத்தில் அர்க்கன்ஸாஸ் போக நேர்ந்தது. "ஒரு நல்ல நடன அரங்கேற்றம் இருக்கிறது. வா போகலாம்" என்று கூபபிட்டாள சாந்தா. என்க்கு அவ்வளவு உற்சாகம் இல்லைதான். ஆனால் சாந்தா போகவேண்டுமே. வழியில்லாமல் போனேன். என்ன ஒரு நடனம்!
என்னை பிரமிக்க வைத்துவிட்டது அந்த மங்கையின் நடனம். அரங்கேற்றமா? ஆயிரம் முறை ஆடிய ஒரு கால் துடிப்பு, கண் அசைவு, அங்க அசைவு. மெய்மறந்து விட்டேன். ஸ்ரேயா சதீஷ் ஒரு பண்பட்ட நடனக் கலைஞராகவே தோன்றினார்.
ஸ்ரேயா கல்லூரி மாணவி. பதினொரு வருடங்களாக நடனம் பயில்கிறார். நடனத்தில் ஸ்ரேயாவின் உழைப்பு நன்கு வெளிப்பட்ட்து. ஒரே இடத்தில் நின்றுகொண்டு காலில் ஆணி அடித்தாற்போல் பாதம் தரையைவிட்டு எழாமல் ஆடவில்லை. அரங்கம் முழுவதும் சுற்றிச் சுற்றித் தாளகதியோடு அவர் ஆடியது மிக அருமை.
நிருத்யாஞ்சலியுடன் ஆரம்பித்தார் ஸ்ரேயா. தாளப் பரிமாணத்திற்கு ஏற்ப ஆடுவதே முதல் நடனம். அடுத்தது அலாரிப்பு. மனத்தையும் உடலையும் அமைதியாக்கி, நர்த்தகியை வரப்போகும் உழைப்புக்குத் தயார் செய்வதே அலாரிப்பு. நடனக்கலை குருவான திருமதி. பாலசரஸ்வதி அவர்கள் மனதை ஒரு முகப்படுத்தி மேற்கொண்டு ஆட உற்சாகம் தருவதே அலாரிப்பு என்று கூறினார்கள்.
அலாரிப்பில் பெற்ற உற்சாகத்தில் கீர்த்தனையை ஆரம்பித்தார் ஸ்ரேயா. மனதை உருக்கும் "தேவி நீயே துணை" என்ற பாபநாசம் சிவன் பாடல். திருமதி ஆஷா ரமேஷ் மிக இனிய குரலில் அழகான உச்சரிப்புடன் உருக்கமாகப் பாடினார். டி.கே. ஜயராமனின் சிஷ்யையாம். நன்றாகவே தெரிந்தது. "விருந்தினர்" என்ற நடனப் படத்தின் முழு இசையும் அவர்தானாம். மீனாட்சியின் கம்பீரமும் கர்வமும் காதலும் நடனத்தில் அழகாக உருப்பெற்றன. அலைமகளையும் கலைமகளையும் அப்படியே கண்முன் கொண்டுவந்தார் ஸ்ரேயா. அந்தப் பச்சைநிற உடையின் இளஞ்சிவப்புக் கரை சேர்ந்த ஆடை நூதனமாக உருவாக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல் அல்லாமல் யானையின் முகபடாம்போல அமைந்து மிக அழகாக இருந்தது. ஸ்ரேயாவின் தாயார் அகிலாவின் தேர்வாம் அது. ஒற்றைக்காலில் நின்று ஜதி செய்தபோது அந்த மடிப்புகள் மயில் தோகை விரித்தது போல விரிந்தன.
அடுத்து வந்த வர்ணம் 45 நிமிஷங்களுக்கு மேல் ஆயிற்று. திரு முரளீதரனின் வர்ணம் புனிதமான அசைவுகளையும் முக பாவங்களையும் கதைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. அருமையான ஜதிகளும் போட்டிபோட ஒரு மயக்க நிலையைச் சபையோரிடம் கொண்டு வந்துவிட்டார் ஸ்ரேயா. "மாடுமேய்க்கும் கண்ணே" பாடலுக்கு என்ன ஒரு நட்டுவாங்கம்! தாய் கெஞ்சக் கெஞ்ச மகன் பிடிவாதம் பிடிக்கும் காட்சி. கெஞ்சுகிறான், கொஞ்சுகிறான், தரையில் வீழ்ந்து பிடிவாதம் செய்கிறான். பாலகிருஷ்ணனாகவே மாறிவிட்டார் ஸ்ரேயா. அடுத்து பதம் ஆடினார். அபிநயங்களும் சிருங்கார ரசமும்! திருமதி மேகா ராவ் அவர்களின் நட்டுவாங்கத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தேர்ந்த குரு என்பதை அன்றும் நிரூபித்தார்.
வயலின் வாசித்த திருமதி சீதா ஜயந்த் அருமையாக இணைந்தார். தன் தந்தை திரு மாணிக்கத்திடம் பயிலத் தொடங்கி, சென்னையில் திரு கண்டதேவி அழகிரிசாமியிடம் கற்றார். சான் அண்டோவில் சர்வதேச இசை விழாவில் பங்குபெற்றார். திரு அபிஷேக்கும் திரு ஆர்யனும் தொகுத்து வழங்கினார்கள். ஸ்ரேயாவின் சகோதரர் ஆர்யன் அக்காவை நன்கு கிண்டலடித்தார். ஸ்ரேயாவின் பெரியப்பா திரு ஜயந்த் ரமணி ஸ்ரேயாவின் உழைப்பையும் ஒருமுகப்பட்ட நோக்கையும் விவரித்தார். தந்தை சதீஷ் நன்றி உரை கூற அந்த அருமையான விழா முற்றுப் பெற்றது. |
|
அலமேலு மணி, ஆல்பெர்ட்டா, கனடா |
|
|
|
|
|
|
|