Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | சிறுகதை
சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
மீண்டும் ஐயோ.. தீ...!!
- விதுரன்|ஜனவரி 2001|
Share:
Click Here Enlargeசும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி' என்று சொல்வது போல இருக்கிறது. இந்தியப் பிரதமர் வாஜ்பேயியின் சமீபத்திய பேச்சும், அதனால் விளைந்திருக்கின்ற அனர்த்தங்களும்.

தன்னை 'ஸ்வயம் ஸேவக்' என்று பெருமையுடன், அமெரிக்க விஜயத்தின் போது அறிவித்துக் கொண்டதினால் எழுந்த அமளி துமளிகள் ஒருவழியாக அடங்குவதற்குள்ளாக,

மீண்டும் ஒரு பிரச்சினை.

தனிமனித பேச்சு சுதந்திரம், எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் பிரதமர் என்ற இருக்கையில் இருக்கும் நபருக்கு, கொஞ்சம் நாவடக்கமும், சுயக்கட்டுப்பாடும் தேவையல்லவா..?

"ராமர் கோயில் கட்டவேண்டும் என்பது தேசத்தின் பெரும்பாலான மக்களின் ஒட்டு மொத்த உணர்வின் வெளிப்பாடு" என்று அவர் கூறியிருப்பது, ஒரு பேச்சுக்காக உண்மையென்று என்று வைத்துக்கொண்டாலும் கூட, ஒரு பெரிய மதசார்பற்ற குடியரசின் பிரதம நிர்வாகி என்கிற முறையில், தவறே..!

ஒருபுறம், 'ரமதான்'மாதத்திற்காக, காஷ்மீரில், சுயமாக விதிக்கப்பட்டுக்கொண்ட அதிகபட்ச கட்டுப்பாடு.. மறுபுறம் வெறும் வாயைமட்டுமே மென்று கொண்டிருப்பவர்களுக்காகப் போடப்பட்ட அவல்.

ஏனிந்த முரண்பாட்டு தோற்றம் பிரதமர் வாஜ்பாயிக்கு...?

டிசம்பர் 6-ம் தேதி மிகவும் கவனமாகக் கடக்கப்படவேண்டிய நாளாகிவிட்டது, 'பாப்ரி மசூதி' துரதிர்ஷ்டவசமாக இடிக்கப்பட்ட நாளிலிருந்து...! வழக்கம் போல, எதிர்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு, இந்தவருடமும், இதை ஒரு பிரச்சினையாக எழுப்பியுள்ளன.

அதாவது, 'பாப்ரி மசூதி இடிப்பு' விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகக், குற்றம் சாட்டப் பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் மூவரும் (திரு. அத்வானி, திரு. முரளி மனோகர் ஜோஷி, திருமதி. உமா பாரதி) தங்கள் பதவிகளை விட்டு விலக வேண்டும் அல்லது விலக்கப்படவேண்டும் என்பதே அது...

விவகாரம் 'உச்ச நீதிமன்றத்தில்' இருக்கும் போது, இந்த பிரச்சினை எழுவதற்கே நியாயம் இல்லை. ஆனால், 'மதசார்பின்மையை' ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகளுக்கு வேறு வேலை வேண்டுமே..!

இந்த கூத்து, வோட்டு வேட்டைக்காக நடத்தப்படுவது என்னும் சிதம்பர ரகசியம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. பா.ஜ.க, ஹிந்து மக்களின் மத உணர்வுகளுக்கு, தூபம் போடுகிறது. காங்கிரஸ், சிறுபான்மையினர் ஓட்டுக்காக..! அவ்வப்போது சேர்ந்து, பிரிந்து கொண்டிருக்கும் மூன்றாம் அணியினர் - யாரெல்லாம் ஏமாறுகிறார்களோ அவர்களின் ஓட்டுக்காக..!

ஆக, எல்லோரும் செய்வது, அவரவர்களின் ஓட்டு வங்கிகளின் கவன ஈர்ப்புக்காகத்தான்,..!
Click Here Enlargeபாராளுமன்றத்தை நடத்துவதற்கு, ஒரு வாரத்திற்கு, 14 கோடி ரூபாய்கள் செலவு ஆகிறதாம். மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில், நடத்திய ஆர்ப்பாட்டமும், அதனால் பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப் படவேண்டிய முக்கிய விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டதும், எவ்வளவு, நஷ்டத்தை உண்டாக்கியிருக்கும்..?

மக்களுடைய முதல் மற்றும் முக்கியப் பிரச்சினையே, இது ஒன்றுதான் என்பது போல் இருக்கிறது, இவர்கள் நடவடிக்கை..!

இந்த ஆட்சியும் கலைந்து, மறுபடியும் ஒரு தேர்தலைப் பார்க்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்களா..?

மறுபடியும், தேர்தலை சந்திக்கக்கூடிய நிதிவசதி நம்மிடம் உள்ளதா..? நாட்டைச் சுற்றி அபாயம் சூழ்ந்துள்ள நாட்களில், நம்முடைய, நிதி இருப்பை, ராணுவ, மற்றும் கட்டமைப்பு (infrastructure) போன்றவற்றை மேம்படுத்த உபயோகப் படுத்தாமல், இவ்வாறு ஊதாரிச் செலவுகளில் விரயமாக்குவது நியாயமா..?

எங்களுடைய குடியரசு முதிர்ச்சிப் பெற்ற அமைப்பு என்கிற தற்பெருமைக்கு குறைவில்லை. ஆனால், எங்கள் குடியரசின், மக்கள் பிரதிநிதிகளுக்கு, முதிர்ச்சியில்லை என்னும் குறையை எங்கு போய் சொல்ல..?

இந்த தலையங்கம், எழுதி முடிப்பதற்குள்ளாக, இந்த விவகாரம், பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்து, எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் முறியடிக்கப்பட்டு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

ஆனால், மீண்டும், இப்பிரச்சினை தலை தூக்கும். அரசியல் அணிசார்பைப் பொறுத்து, அரசியல்வாதிகளின் 'அந்தர் பல்டிகளும்' தொடரும்..

இதுவரைக்கும், 'அய்யோ..தீ' என்பது 'புலி வருது' என்கிற கதையாகத்தான் இருந்திருக்கிறது. நிஜமாகவே புலிவரும் போது, அலட்சியமாக இருந்து, அவதிப்படுவது என்று தீர்மானித்து விட்டால், அது அயோத்தியில் மட்டும் எரியும் 'தீ'யாக இருக்காது..!

இந்தியா முழுவது எரியும் 'தீ'யாகத்தான் இருக்கும்...!

விதுரன்
Share: 




© Copyright 2020 Tamilonline