|
ஆகஸ்டு 2008: வாசகர் கடிதம் |
|
- |ஆகஸ்டு 2008| |
|
|
|
|
அமெரிக்க நாட்டில் அருமைத் தமிழ் மணத்துடன் வெளிவரும் தென்றல் இதழில், அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் நிறுவிய மனவளக்கலை மன்றத்தைப் பற்றி, பேராசிரியர்கள் நடத்தும் தியான முகாம்களைப் பற்றிய செய்திகள் மிக்க மகிழ்ச்சி தருகின்றது. மகரிஷி அவர்கள் மனவளக் கலை மன்றம் உருவாகவும் அதற்கு மன்ற அன்பர்களை அதிகரிக்கவும் எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறார் என்பதை அவர் வாழ்க்கைச் சரிதத்தைப் படித்தவர்கள் அறிவார்கள். அவர் கண்ட கனவு - உலக சமுதாய சேவா சங்கங்கள், அறிவுத் திருக் கோவில்கள், தியான மனவளக்கலை மன்றங்கள் மூலமாக நிறைவேறி உள்ளது.
குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு கடமைகளைச் சரிவரச் செய்து, மனதை ஒருநிலைப்படுத்த குடும்பப் பெண்கள் தியானத்திற்கு வரலாம் என எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த மகான். சாதாரண குடும்பத் தலைவியான நான் இன்று மனவளக்கலை மன்றத்தின் ஆசிரியை. அவர் எப்போதும் கூறுவார், மனதை அடக்க நினைத்தால் அலைபாயும்; அறிய நினைத்தால் அடங்கும் என்று.
நான் மிகவும் முன்கோபம் உள்ளவள். யார் என்னைப் பற்றி அவதூறாகப் பேசினாலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் நிறையப் பேருக்கு என் மேல் வருத்தமும் உண்டு. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக யார் என்ன சொன்னாலும் அது அவர்களது சுபாவம் என்று என்னால் பொறுத்துக் கொண்டு போக முடிகிறது. காரணம் தவப்பயிற்சி தான். அதன் மூலம் தான் நான் என்ற என் அகந்தை அகன்று பிறரையும் நானாக மதிக்கும் பக்குவத்தை எனக்குக் கொடுத்திருக்கிறது. வாழ்க வளமுடன்! வாழ்கை வையகம்! வாழ்க தென்றல்!
ஜயலக்ஷ்மி சேஷாத்ரி, அட்லாண்டா (ஜார்.)
*** |
|
தமிழ்மணம் வீசும் தென்றலின் இதமான வருடல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த அரிய பணி இடைவிடாமல் தொடர எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மூன்று வருடங்களுக்கு முன்னால் தென்றல் எங்களுக்கு அறிமுகமானது. தற்போது தென்றல் எங்கள் பகுதியில் கிடைப்பதில்லை என்றாலும் சமீபத்தில் அட்லாண்டா சென்றிருந்தபோது கிடைத்தது.
தமிழ்நாட்டிலேயே தமிழை மறந்திருக்கும் பலர் இருக்கையில், அமெரிக்காவில் தமிழ் தழைத்தோங்கி வளர தமிழ்ப்பள்ளிகள் அமைத்து நடத்தி வரும் வெற்றிச்செல்வி இராசமாணிக்கம் போன்றோரின் செயல் சிறக்க எங்கள் வாழ்த்துகள்.
யோகம் அண்ணாமலை, மரீட்டா (ஜார்.)
***
தென்றல் கிடைக்கும் பொழுதெல்லாம் ஒன்று விடாமல் படித்து மனநிறைவு அடைகிறேன். முன்னாள் 'கலைமகள்' இதழின் இலக்கிய, ஆன்மீக வளம்; 'மஞ்சரி' இதழின் அறிவாற்றல்; 'அமுதசுரபி', 'கணையாழி' போன்றவற்றின் மனிதநேயம் ஆகியவற்றைத் தென்றலின் பகுதிகளில் காணமுடிகிறது. டாக்டர் கிருஷ்ண குமாரின் நேர்காணல் மிக உயர்ந்த கருத்துக்கள் கொண்டது. வாழ்க வளமுடன்!
மீனா நாராயணஸ்வாமி, ஹூஸ்டன் (டெக்ஸ்.) |
|
|
|
|
|
|
|