|
நவம்பர் 2005: வாசகர் கடிதம் |
|
- |நவம்பர் 2005| |
|
|
|
ஜூலை மாதத் 'தென்றல்' இதழைப் பார்த்தேன். மற்ற தமிழ் இதழ்களைவிட மாறுபட்ட பாணியில் தங்கள் இதழ் வெளிவருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. படித்துப் பார்த்ததில் சில அருமையான கதைகள், கட்டுரைகள் வெளியிடப்படுவது தெரிய வந்தது.
டாக்டர் அலர்மேலு ரிஷி எழுதிய 'வயலூர் முருகன் அதிசய வழக்கு' என்னை மிகவும் கவர்ந்தது. தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எவ்விதம் படைப்புகளை வெளியிட வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
என். சுவாமிநாதன் எழுதிய 'வாடகைக்கு விட்ட வீடு' மிக அருமையான கதை. வீடு வாங்குவதில் அக்கறை உள்ள அனைவருக்கும் ஒரு நல்ல அறிவுரையாக அமைந்துள்ளது. இது போன்ற கதைகள் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
சிலிகான் வேல்லி மற்றும் சன்னிவேல் பகுதியில் தமிழர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். குழந்தைகள் தமிழ் கற்க வாய்ப்பில்லை. எனவே மாதந்தோறும் 'தென்றல்' இதழில் தமிழ்ப் பாடங்கள் வெளியிட்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும். பேசுவதுடன் மட்டுமின்றி எழுத்துக்களையும் கற்றுக் கொள்ள முடியும். முடியுமா என்பதை ஆலோசிக்கவும்.
'தென்றல்' ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களால் விரும்பப்படுகின்ற ஒரு வார்த்தை. காற்றில் சிறந்தது தென்றல் காற்று. இதழ்களில் சிறப்பானது 'தென்றல்' என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
'தென்றல்' இதழ் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் குழு, பதிப்பாளர் மற்றும் இலவசமாக எல்லோருக்கும் கிடைக்க உதவும் வகையில் விளம்பரங்கள் கொடுத்துவரும் நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
வே.ஆ. வாசுதேவராஜூ ஐ. ஏ. எஸ். (ஓய்வு) தலைவர், இந்திய சமுதாய வளர்ச்சிக் கழகம், பாண்டிச்சேரி
***** |
|
'தென்றல்' மாத இதழ் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கின்றது. வெளிநாட்டில் வாழும் தமிழ்மொழி பேசும் மக்கள் படித்து மகிழ்ந்திடவும் பயனுறவும் அருமையான இதழ். எனது மனமுவந்த பாராட்டுதல்கள்.
மனோன்மணி மாணிக்கவாசகம் சன்னிவேல், கலி·போர்னியா |
|
|
|
|
|
|
|