|
ஜுன் 2005: வாசகர் கடிதம் |
|
- |ஜூன் 2005| |
|
|
|
மே மாதத் தென்றலில் ஆர். சூடாமணி எழுதிய 'பூமாலை' சிறுகதையைப் படித்தேன். ரம்யாவின் உள்மனது ரம்யாவுக்குக் கடிதம் எழுதியதாக இருந்த அந்தக் கதை என்னை ஈர்த்தது. நவீன இளைஞர்கள் தமக்கு உறவினர்களும் நண்பர்களும் இழைத்த கொடுமைகளையே பார்க்கிறார்கள். அதன் மூலம் வெறுப்பை வளர்த்துக் கொண்டு, நல்லவற்றை மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு இக்கதை ஒரு நல்ல பாடம். கதையின் இறுதி யில் வெறுப்பு என்னும் குப்பையைப் பெருக்கித் தள்ளிவிட்டு, இனிய நினைவுகளாகிய பூக்களால் அலங்கரிக்கச் சொல்லும் முத்தாய்ப்பு ரொம்ப அழகு.
R. சுவாமிநாதன் ·பிரிமான்ட், கலி·போர்னியா
*****
மே மாதத் தென்றல் படித்தேன். எல்லா விஷயங்களுமே படிக்க மிகச் சுவையாக இருந்தன. குறிப்பாக ஆர். சூடாமணி எழுதிய 'பூமாலை' பிரமாதம். மற்றவர்கள் நமக்குச் செய்யும் நல்லவைகளை ஒதுக்கிவிட்டு, தீமைகளையே பார்ப்பதன் மூலம் வெறுப்பை வளர்த்துக் கொள்பவர்களுக்கு அவர் நல்ல அறிவுரை கொடுத்திருக்கிறார். நம்மைக் காயப்படுத்தியவற்றை நாம் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது என்பது உண்மை தான். அதற்கு பதிலாக, மற்றவர்கள் செய்த நல்லவற்றையும், வாழ்வில் பெற்ற மகிழ்ச்சியையும் நினைத்துப் பார்த்தால் மனம் ஒரு பூவைப்போல லேசாகிவிடும். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்க முடியும்.
பத்மா ஸ்ரீனிவாசன்
***** |
|
ஆல்·பெரட்டா இந்திய உணவகம் ஒன்றில் உணவருந்தச் சென்றபோது தென்றல் ஏப்ரல் இதழ் பார்த்தேன். இழந்த பொருள் ஒன்று திரும்பக் கிடைத்ததுபோல அவசரமாக எடுத்துப் புரட்டினேன்.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் ஓர் அயல் தேசத்தில் தாய்மொழிப் பத்திரிகையைப் பார்க்கும் எவரும் பரவசம் அடையத் தானே செய்வர். ஒரு தமிழாசிரியனுக்கோ சற்று மிகையான இன்பம்!
மனம் திறந்து சொன்னால் தமிழகத்துக் கலைமகள், அமுதசுரபி போன்ற இதழ்களைப் படித்ததுபோல நான் நிறைவு பெற்றேன்.
தென்றல் அமெரிக்காவாழ் தமிழர்களுக்கான மாத இதழ் என்னும் உங்கள் நெஞ்சுறுதி மிக்க வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றீர்கள். எனது பாராட்டுக்கள்.
திருமேனி நாகராஜன் ஆல்·பெரட்டா, ஜார்ஜியா. |
|
|
|
|
|
|
|