|
ஏப்ரல் 2005 : வாசகர் கடிதம் |
|
- |ஏப்ரல் 2005| |
|
|
|
மாயாபஜார் இலவசத் தொகுதி கிடைத்தது. நன்றி. கவர்ச்சியாக இருந்தது. இதனால் அமெரிக்க இந்தியர்களுக்கு தாங்கள் பெருஞ்சேவை செய்ததாகக் கருத வேணும். இங்கே கிடைக்கும் சில பொருட்களை வைத்துச் செய்யும் பொருட்களை உண்ணுவதைவிட, நம் நாட்டில் செய்யும் பண்டங்களைச் செய்ய இந்நூல் மறைமுகத் தூண்டுதலாக இருக்கிறது. இதே போல் நம் நாட்டு மக்களுக்கு இன்னும் பலவித சேவைகளைத் தென்றல் செய்ய வேண்டுமென்று பிரார்த்தனை செய்வேன்.
மதுரபாரதியின் அனுமன் சிலாகிக்கத் தகுந்ததுதான். திருமியச்சூரின் விவரங்கள் நன்றாக இருந்தன. சிறுகதைக்கு அம்மா பேசினாள் என்கிற தலைப்பு வைத்தது தகும்.
அட்லாண்டா ராஜன்
*****
மார்ச், 2005 மாதத் தென்றல் இதழில் பேரா. சுவாமிநாதனின் பேட்டி அற்புதம். அவரது ஒவ்வொரு வார்த்தையும் பொன் எழுத்தில் பொறிக்க வேண்டியவை. ஆம். எவ்வளவு அழுத்தமான தமிழ் மரபு! 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.' இன்று நாம் எண்ணில் மட்டும் தேர்ச்சி பெற்று அதைக் கூட்டிக் கொண்டு பணத்தைப் பெருக்கும் ஒரே நோக்கத்துடன் நமது அமைதியையும், சீரிய நிம்மதியான ஆனந்த வாழ்க்கையை வகுக்காமல் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறோம்.
5000 ஆண்டுகளுக்கு மேலாக மேம்பட்ட நமது செழுமையான கலாச்சாரம், பண்பாடு நாகரீக மரபுகளை அறவே புறக்கணித்துவிட்டோம். என்ன அறியாமை! இதை ஆழமாக, அழகாக, அதிசயிக்கும் முறையில் ஆணித்தரமாக வரைந்து காட்டிய பேராசிரியருடன் நாமும் கண்கலங்கி நிற்கின்றோம்.
உயர்ந்த கருத்துக்களை ஆராய்வதில் உள்ளம் தூய்மையுடன் ஈடுபடட்டும். 'பார்த்திப' தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
டி.பி. மணி, ஃப்ரீமாண்ட், கலி.
***** |
|
மார்ச்சு மாதத் தென்றல் நல்லமுறையில் அமைந்திருந்தது. அண்மையில் படித்த தமிழ் நேர்காணல்களில் சிறப்பானதாகப் பேரா. சுவாமிநாதனுடனான சந்திப்பைக் கூறலாம். நன்கு சிந்தித்து எளிமையாகக் கருத்துக்களை வெளிப்படுத்துவோருடனான உரையாடல்கள் பெரிதும் விரும்பத் தக்கன.
நேர்காணல் தொடரில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதன்முதலில் வெளிவந்து, நின்று போன தமிழ் மாத இதழான 'குறிஞ்சி மலர்' பத்திரிகையின் ஆசிரியர்கள், நிறுவனர்கள் பற்றி முடிந்தால் நேர்காணலாம்.
முனைவர் அலர்மேலு ரிஷி இந்துக் கோயில்கள் பற்றி எழுதும் தொடரில் திருமீயச்சூர் பற்றி எழுதியிருந்தமைக்கு (பாதி) அவ்வூர்க்காரன் என்ற முறையில் மிக்க நன்றி.
திரைப்படச் செய்திகளைக் குறைந்த அளவில் தென்றல் உள்ளடக்கியுள்ளது பாராட்டப்பட வேண்டியதொன்று.
வாசன் பிள்ளை, அல்புகர்க்கி, நியூ மெக்ஸிகோ
*****
வழக்கம் போலத் தென்றல் பல சிறப்பான, உபயோகமிக்க பகுதிகளுடன் வெளிவந்து கொண்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!
உலக - இந்திய - தமிழக மரபுகளை ஆராய்ந்து, அதன் மூலம் மேலான சிந்தனைகளையும் திட்டங்களையும் கொண்டுள்ள பேராசிரியர் சுவாமிநாதனுடன் சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது. ''நல்ல அமைப்புகள், புரவலர்கள் மூலம் நாட்டுப்புற மக்களுக்கு நல்ல கல்வியை, மருத்துவ வசதியைக் கொண்டு சேர்க்க முடியும்'' என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ள சுவாமிநாதனுடன் சந்திப்பு மிகப் பயனுள்ளது. இறுதியில், அவரது 'சுதர்சன்' அமைப்பு மூடப்பட்டது என்ற செய்தி வருத்தத்தைக் கொடுத்தது.
தனிச்சிறப்பும், தகுதியும் வாய்ந்த இதுபோன்ற அமைப்புகளுக்கு மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் மரபு, கலாசாரப் பாதுகாப்பு அமைச்சகங்கள், பெரும் தனவந்தர்கள் மற்றும் வசதிமிக்க சமூகநல அமைப்புகள் தாமாகவே முன் வந்து பல்வேறு வகையிலும் ஆதரவளிப்பது, இன்றைய மற்றும் எதிர்வரும் தலைமுறையினர் நமது மரபு, கலாசாரப் பெருமைகளை அறிய வாய்ப்பளிககும்.
உயந்த லட்சியங்களுக்காக வாழ்ந்த தீபம் நா.பா. அவர்களுடன் நீண்ட காலம் பணியாற்றியதன் தாக்கம் திருப்பூர் கிருஷ்ணனின் 'நேர்காணலில்' தெரிந்தது.
''தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழ் மூலமாக வாழ்க்கை உத்தரவாதம் இல்லாதபோது, தமிழ் செம்மொழி என்று கோஷமிடுவதில் என்ன பயன்'' என்ற திருப்பூர் கிருஷ்ணனின் நியாயமான மனக்குமுறல், தமிழ் வளர்ச்சிக்காக வீறு கொண்டு எழும் நவீன மொழிப்போர் வீரர்கள் அனைவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி.
சென்னிமலை பி. சண்முகம், நியூயார்க். |
|
|
|
|
|
|
|