|
ஜூலை 2016: வாசகர் கடிதம் |
|
- |ஜூலை 2016| |
|
|
|
ஜூன் தென்றல் இதழை முழுவதுமாகப் படித்தோம். தென்றலுக்கென நீங்கள் ஒரு தனியிடம் தக்கவைத்துக்கொண்டதில் ஆச்சரியமில்லை. 'அளவுக்கு மிஞ்சினால் அமிலமும் நஞ்சு' என்ற மருத்துவக் கட்டுரை மிகநன்றாக இருந்தது. அது எல்லா வயதினருக்கும் உகந்தது. 'தங்கச்சிறை' ஒரு நல்ல கதை. ஆனால், நாங்கள் நல்ல அனுசரணையோடும் புரிதலோடும் இங்கே வந்து இருக்கிறோம். இந்த இடமும் நட்பான மனிதர்களும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் நேர்காணல் மிக நன்று. கணிதப் புதிர்கள், சுடோக்கு என்று இதழ் மிக நல்லவண்ணம், வாசகனைக் கருத்தில்கொண்டு கவனத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது.
R. கண்ணன் & கீதா கண்ணன், சன்னிவேல், கலிஃபோர்னியா
*****
இசை சேகர் எழுதிய 'தங்கச்சிறை' மிக அற்புதம். எங்கள் மகன் 18 வருடங்களாக இங்கு இருக்கிறான். குடும்பச்சூழ்நிலை காரணமாக, எங்களால் வரமுடியவில்லை. முதல்முறை வந்தபொழுது எங்களால் இந்தப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ள முடியவில்லை. திணறித்தான் போனோம். ஆனாலும், சிறு சிறு காரணங்களுக்காக, மகனுடன் இருக்கும் அற்புதமான நாட்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவிலிருந்து வரும்பொழுதே ப்ளெய்ன் புடவைகள் கொண்டுவருகிறேன். எனக்குத் தெரிந்தவரை பெயின்ட் செய்கிறேன். மற்றவர்கள், பார்த்துக் கேலிகூட செய்யலாம். ஆனால் என் மனம் சந்தோஷமாக இருக்கிறது.
இதை எழுதுவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னர், என் மகன், கணவரிடம் கூறிய "இந்த தடவை, நீங்கள் போனால் நான் மட்டுமல்ல, என் நாய்க்குட்டிகளும் உங்களுக்காக ஏங்கும்" என்பதுதான் இதை எழுதவைத்தது.
மனம்தான் காரணம். கதையின் கருத்தை வரவேற்கிறேன்.
சுதா சந்தானம், மில்பிடாஸ், கலிஃபோர்னியா
***** |
|
இசை சேகரின் 'தங்கச் சிறை' சிறுகதை படித்தேன். கதையில் லலிதா எப்படி உணர்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மகன் அல்லது மகள் வீட்டில் எல்லோரும் தத்தம் வேலையாகக் காலையில் வெளியே போய்விட்டு மாலையில் திரும்பிவரும்வரை வீட்டில் தனியே இருப்பது எவ்வளவு துன்பம் தெரியுமா? பேச யாரும் கிடையாது, ஹைடெக் கருவிகளைப் பயன்படுத்த அச்சம்!
நானுக் கணவரும் எங்கள் இரண்டரை வயது பேரப்பிள்ளையுடன் சந்தோஷமாக இருக்கிறோம். ஒருவேளை தனியாக இருந்தால் நானும் லலிதாவைப்போல உணரலாம். எனது நண்பர்கள் சிலரின் குழந்தைகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள், அவர்களும் இப்படித்தான் உணர்கிறார்கள்.
சித்ரா தியாகராஜன் (மின்னஞ்சலில்)
*****
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா வந்தேன். வருவதற்கு முன்பாகவே எனது மருமகள் தென்றல் இதழ்களை வாங்கி வைத்திருந்தார். படிப்பதற்கு நன்றாகவும், கருத்துள்ள பகுதிகள் கொண்டதாகவும் இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதிமுதல் பத்திரிகை வரும்வரை, இர்விங்கிலிருந்து நான்குமைல் நடந்தே ஓட்டல்வரை சென்று பிரதிகளை எடுத்துவந்து காந்தி பார்க் சென்று தமிழ் நண்பர்களுக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறேன். உங்கள் பணி தொடர வேண்டுகிறேன். அயராது தமிழ்த்தொண்டு செய்துவரும் தென்றலுக்கு நன்றி.
வெங்கடாசலம், டாலஸ், டெக்சஸ் |
|
|
|
|
|
|
|