|
டிசம்பர் 2015: வாசகர் கடிதம் |
|
- |டிசம்பர் 2015| |
|
|
|
|
நவம்பர் இதழில் வெளிவந்த எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. டாக்டர் சியாமா, பேரா. மதுரம் சந்தோஷம் நேர்காணல்கள் நன்றாக இருந்தன.
கே. ராகவன், பெங்களுரு, இந்தியா
*****
நவம்பர் இதழில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின் கருணையை மற்றுமொரு அற்புதமான சம்பவத்தின் மூலம் வெளியிட்டுள்ள விஷயம் ,அவரின் 90வது பிறந்த நாளின் சிறப்புச் செய்தியாகும். தன்னை அதிகம் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இளந்தலைமுறை படைப்பாளிகளை ஊக்குவித்த கௌதம நீலாம்பரன் பற்றிய கட்டுரையே அவருக்கு அஞ்சலியும் ஆகிவிட்டதைப் படித்தபோது மனம் வேதனையடைந்தது. சராசரி மனிதர்கள் கடின உழைப்பால் நிறைய சாதித்துள்ள விவரங்களைப் பற்றிப் பேரா. மதுரம் சந்தோஷம் அவர்களின் நேர்காணல் மூலம் தெளிவாக தெரிந்துகொள்ள முடிந்தது. கடற்கரையோர கலாசாரம், கடல்வளத்தைக் காப்பது, மீனவப்பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் லட்சுமிமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
"சாவடிசுட்டாங்க டீச்சர்" நெஞ்சத்தை உறையவைத்தது. பெண்சிசுக் கொலைபற்றிய டாக்டர். சியாமா நேர்காணல் தகவல்கள் அறியப்பட வேண்டியவை. மகாபாரதம் குறித்த ஹரி கிருஷ்ணன் அவர்களின் மிகவும் யோசிக்கவைக்கும் வித்தியாசமான ஆராய்ச்சிகள், அதனை அவர் வெளிக்கொணரும் விதம் மிகவும் அற்புதம்.
ஆகஸ்ட் தென்றல் இதழில் "SODEWS" நிறுவனர் கே.எஸ். ராமமூர்த்தி அவர்களின் நேர்காணலைப் பார்த்துவிட்டு, அவரின் செயல்களுக்குத் துணைபுரிய வேண்டும் என்று மனதார வாழ்த்தி எழுதியிருந்தேன். நல்ல உள்ளம் கொண்ட அவர், சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்கா வந்தபோது என்னிடம் நன்றிசொல்லி ஃபோனில் பேசினார். நான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். இந்தியா போகும்போது அவரைச் சந்திப்பேன்.
சசிரேகா சம்பத், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா
***** |
|
நவம்பர் இதழில் வந்துள்ள Dr. சியாமா அவர்களின் நேர்காணல் கண்களைக் குளமாக்கிவிட்டது. சென்னையில் அவரை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் அன்புள்ளம் கொண்டவர். மிகவும் மென்மையாக, மெல்லிய குரலில்தான் பேசுவார். அவர்களுடைய தொண்டு அளவிட முடியாதது. அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். உள்ளத்தை உலுக்கும் நேர்காணல் தென்றலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
டி .சூரியநாராயணன், ஃபோஸ்டர் சிட்டி, கலிஃபோர்னியா
*****
அபர்ணா பாஸ்கர் எழுதிய ‘ஜில்லுவுக்குக் கல்யாணம்’ அருமை. நகைச்சுவை வெளியில் தெரிந்தாலும் சோகம் உள்ளே இருப்பதை அனுபவிக்க முடியும். பல காரணங்களால் பெண்களுக்குத் திருமணம் நடப்பது நீடித்துக்கொண்டே போனால் என்ன ஆகும் என்பதை அழகாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்.
சுப்ரியா சாந்திலால், எழுத்தாளர், ராஜபாளையம் (மௌண்டன் ஹவுஸ், கலிஃபோர்னியா) |
|
|
|
|
|
|
|