|
ஜனவரி 2012: வாசகர் கடிதம் |
|
- |ஜனவரி 2012||(1 Comment) |
|
|
|
|
தென்றல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக் கதைகள் மூன்றும் முத்துக்கள். முதல் பரிசு பெற்ற இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய 'உயர்ந்த மனிதன்' கதையில் யாழ்ப்பாணத்தின் அவலங்களை அவர் படம் பிடித்துக் காட்டிய அழகை விமர்சிப்பதா அல்லது இரண்டாம் பரிசுக் கதை 'செலவுக் கடை'யின் நெல்லைத் தமிழைச் சீர்படக் கதை முழுதும் கடைப்பிடித்துள்ள அம்புஜவல்லி தேசிகாச்சாரியின் திறமையை மெச்சுவதா அல்லது யதார்த்தத்தைக் கண் முன்னே நிறுத்தியிருக்கும் மூன்றாம் பரிசு பெற்ற 'மடி நெருப்பு' கதையின் ஆசிரியர் ஆனந்த் ராகவைப் பாராட்டுவதா எனப் புரியாத நிலையில் தென்றல் ஆசிரியர் குழாத்துக்கு ஒரு பெரிய 'ஷொட்டு' கொடுத்து முடிக்கிறேன். இமாலய நிகழ்வுக்கு இனிய முடிவு.
R. சந்திரசேகரன், லண்டன், இங்கிலாந்து
*****
அம்புஜவல்லி தேசிகாச்சாரி எழுதிய 'செலவுக்கடை' அற்புதம்! எழுத்தாளரின் மொழிப்புலமையும், மண்வாசனை மணக்கும் நடையும் படிக்கப் படிக்க பூரிக்க வைக்கின்றன. "முன்பசி, "எட்டுக்கு மேல் எட்டவில்லை", "மெழுகுபீர்க்கும், வெண்ணெயாக ருசிக்கும் கத்தரிக்காயும்", "செலவுக்கடை வச்சிருந்தாரே கண்டி சோத்துக்கடை நடத்தலை" - போன்றவற்றைப் படிக்கும் பொழுது புல்லரிக்கிறது. இப்படி authentic-காக எழுதுவோர் மிகவும் அரிதாகிக்கொண்டு வருகிறார்கள். எழுத்தாளன் என்ற முறையில் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. கதையின் கட்டுக் குலையாமல், ஏற்ற இறக்கங்களுடன், நேர்த்தியான தமிழில், காதுகள் குளிர, பதிவு செய்திருக்கும் சரஸ்வதி தியாகராஜனுக்கு மனமார்ந்த நன்றி. அம்புஜவல்லி தேசிகாச்சாரி-சரஸ்வதி தியாகராஜன் இவர்களின் கலவையில், இந்தச் சிறுகதையை படித்து, கேட்டு முடிக்கையில் ஒரு பாரதிராஜா-இளையராஜா படம் பார்த்த நிறைவு.
ஆனந்த் ராகவ் எழுதிய 'மடி நெருப்பு' நிதர்சனத்தைக் கண்முன் நிறுத்தும் நிலைக்கண்ணாடி. "சேமிப்பையெல்லாம் கொட்டிச் சேகரித்த தன் உடமையே தனக்கு மனச்சுமையாகிப் போன நிலை" என்ற மையக்கருத்து, பலரை யோசிக்கவைக்கும். காலமாற்றங்களை ஆராய்கின்ற, 'அரைத்த மாவையே அரைக்காத' புதுப்பொலிவுடன் கூடிய சிறுகதைகள் மனதை தொடுகின்றன. புதிய களம், வித்தியாசமான மனம், என்று கதை மிகவும் refreshingகாக இருந்தது. ஒரு சின்னக்குறை: "பேனர்ஜிகளையும், மிஸ்ராக்களையும், யாதவ்களையும், மேனன்களையும் குடியமர்த்தக்....சிவசங்கரன்களும், மாசிலாமணிகளும் இடைஞ்சலாய் இருக்கிறார்கள்."-இந்தப் பகுதியில் சற்று regionalism தென்படுகிறது. எழுத்தாளரின் நோக்கம் அதுவல்ல என்றாலும், இதனை தவிர்த்திருக்கலாமோ!
சிவாவைப் போன்ற உயர்ந்த மனிதர்கள் உலகில் அரிது. போர், இனவெறி போன்ற சமூகப் பிரச்சனைகள் பல சமயங்களில் எதிர்க்க முடியாத, மாற்ற முடியாத, கட்டுப்படுத்த முடியாத விஷயங்களாக பூதாகாரமாய் நின்று மிரட்டினாலும், தனிமனிதனின் இயலாமையையும், கையாலாகாத்தனத்தையும் குத்திக் குதறி வேடிக்கை பார்த்தாலும், நம்மில் ஒவ்வொருவராலும் இதுபோன்ற பிரச்சனைகளைப் பல வழிகளில் எதிர்க்க முடியும், சமாளிக்க முடியும், சவால் விட முடியும், செயலிழக்கச் செய்யமுடியும் என்பது இந்த நூற்றாண்டில் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய கருத்து. அதை அருமையாக, விறுவிறுப்பாக வெளிப்படுத்தியது இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய உயர்ந்த மனிதன் கதை. வாழ்த்துக்கள்!
மூன்று கதைகளும் முத்துக்கள்.
ஸ்ரீதர் சதாசிவன், நியூ ஜெர்சி
***** |
|
உள்ளங்கை நெல்லிக்காய்! தென்றல் டிசம்பர் 2011 இதழின் மாயாபஜார் பகுதியில் வெளியான நெல்லிக்காய் ரசம் சமையல் குறிப்பில், தேவையான பொருட்களில் நெல்லிக்காய் 4-5 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், செய்முறையில் எந்த இடத்தில் எப்படி நெல்லிக்காயைச் சேர்க்க வேண்டும் என்பது கூறப்படவில்லை. இதனால், "நெல்லிக்காயைக் கையில் வைத்துக் கொண்டு நிற்கிறேன், கை கடுக்கிறது" என்று மிச்சிகனில் இருந்து மணி சுப்ரமணியன் வேடிக்கையாக எழுதியுள்ளார். வேறு சில வாசகர்களும் (கணவன்மார் உட்பட!) இதைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இதோ தங்கம் ராமசாமி அவர்களின் குறிப்பு: செய்முறையின் முதல் வரியை இவ்வாறு வாசிக்கவும்: துவரம் பருப்பைக் குழைய வேக வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்துக் கரைத்து உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடியோடு நெல்லிக்காயை நறுக்கிய சிறிய துண்டுகளைப் போட்டுக் கொதிக்க விடவும்.
ஆசிரியர் |
|
|
|
|
|
|
|
|