|
ஏப்ரல் 2009: வாசகர் கடிதம் |
|
- |ஏப்ரல் 2009| |
|
|
|
தென்றல், மார்ச் 2009 இதழில் வெளியான நாகேஷ் பற்றியது அருமையான கட்டுரை. எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைத்தவர், பஞ்சதந்திரத்தில் அவர் சர்வ சாதாரணமாகத் தனது பாத்திரத்தைச் செய்திருந்தார். காதலிக்க நேரமில்லையில் பாலையாவிடம் அவர் கதை சொல்லும் விதம் அந்தப் படத்தில் அவரது உடல்மொழி எந்த நகைச்சுவை நடிகராலும் கொண்டுவர முடியாதது. அஞ்சலி செலுத்தும் உங்களுடன் நானும் இணைகிறேன். 'மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு' கோவில் வர்ணனைகள் நன்றாக உள்ளன. எளிமையாக அதேசமயம் சொல்லவந்ததைத் தெளிவாகச் சொல்லும் பாங்கு பிடித்திருந்தது. ஜெயக்குமார், (வலைதளத்தில் இட்ட கருத்து)
*****
மார்ச் மாதத் தென்றல் இதழில் திரு. கணபதி ஸ்தபதியின் நேர்காணல் மிகமிகச் சுவையாக இருந்தது. இரண்டு தடவை படித்தேன். பல விதமான விஷயங்கள் கேட்கக் கேட்க ஆர்வம் அதிகமாகியது. அவர் எழுதியுள்ள எல்லாப் புத்தகங்களையும் படிக்க மிக ஆவலாக இருக்கிறேன். மேலும், சிகாகோவில் உள்ள ஸ்ரீராமர் கோவிலையும், கணேஷ், சிவா, துர்கா கோயிலையும் அவர்தான் கட்டினார். அவருடன் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. தென்றலுக்கு நன்றி. கோபால கிருஷ்ணன், சிகாகோ
*****
தென்றல் இதழ் இனிய தென்றலாக இருக்கிறது. படிக்க மிகவும் சுவையாக உள்ளது. எல்லாவிதப் புது முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் தென்றலுக்கு என் வாழ்த்துகள். நன்றிகள். பத்மா வைத்தீஸ்வரன்,ஃப்ரீமாண்ட், கலி.
***** |
|
‘பத்மபூஷண்' கணபதி ஸ்தபதி அவர்களின் நேர்காணல் மிக நன்று. பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘வா ராஜா வா' படத்தில், இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில் ஒலித்த ‘இறைவன் படைத்த உலகில் எல்லாம் மனிதன் வாழுகிறான், மனிதன் படைத்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகிறான்' என்ற பாடலின் இரண்டாவது வரியில் குறிப்பிடப்படும் 'மனிதன்' என்ற பதத்திற்கு முழுமுதல் உதாரணமாக விளங்குபவர் மகா சிற்பி திரு கணபதி ஸ்தபதியார் தான். தமிழகத்தில் அவர் பிறந்ததும், இத்தகைய மாமேதை வாழும் காலத்தில் நாம் வாழ்வதும் உலகம் முழுமையுமுள்ள தமிழர்கள் பெற்ற பெரும் பேறு ஆகும். ஸ்தபதியாரை நேர்காணல் செய்து, அரிய பல தகவல்களை உலகம் அறிய வைத்த தென்றலுக்கு எனது நன்றி.
வற்றாயிருப்பு சுந்தரின் எழுத்து நடையும் செய்திகளும் உண்மையிலேயே சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. இராமாயணத்தின் காவிய-கவி நயத்தை, பாத்திரப்படைப்புகளை மிக அருமையாக எடுத்துக்காட்டிய ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொடர் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்!
தென்றலின் ஒவ்வொரு பகுதியும் வழக்கம் போல செம்மையும், செழிப்பும் நிறைந்து வெளிவருவதில் மிகுந்த மகிழ்ச்சி. சென்னிமலை சண்முகம், நியூயார்க் |
|
|
|
|
|
|
|