Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
சுத்த சக்தியின் சங்கடம்! (பாகம்-12)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2008|
Share:
Click Here Enlargeமுன்கதை: Silicon Valleyஇல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்குவர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டேன்ஃபோர்டு மருத்துவமனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவருமாகத் துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

ஷாலினியின் தந்தை முரளி. அவரது நண்பர் மார்க் ஷெல்ட்டன், தன் சுத்த சக்தி தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக அவரிடம் கூறவே, அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். மார்க், சூரிய ஒளி உற்பத்தி நுட்பத்திலும், மின் சக்தியை சேமிக்கப் பயன்படும் உயர்தர பேட்டரி நுட்பத்திலும் வெர்டியான் புரட்சிகரமான முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கூறினார். பல வடிவங்களில் வளைக்கக் கூடிய, ஆனாலும் பெருமளவில் சூரிய ஒளி மின்சக்தி தரும் நுட்பத்தை வெர்டியான் உருவாக்கியிருப்பதாகவும் விளக்கினார். சூர்யா விஞ்ஞானி தாக்கப்பட்டதைப் பற்றிக் கேட்கவே, அதைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார்...

சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றியும் வெர்டியானின் சூரிய சக்தி நுட்பத்தையும் பற்றிப் பெருமிதத்துடன் விவரிக்கும் ஆர்வத்தால் தன் தொழில்நுட்பக் கனவுலகிலேயே ஆழ்ந்து சஞ்சரித்து கொண்டிருந்த மார்க் ஷெல்ட்டனை, விஞ்ஞானித் தாக்கப்பட்டதைப் பற்றிய சூர்யாவின் கேள்வி, அதிரடிபோல் தாக்கி பூமிக்குக் கொண்டு வந்திருந்தது! அந்த விஞ்ஞானி, வூ பிங் சூ சூர்ய சக்தி நுட்பத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்று மார்க் கூறி அவரது தொழில்நுட்ப சாதனைகளைப் பற்றி மேற்கொண்டு விளக்கலானார்.

பல விஞ்ஞானிகள் நடைமுறைக்குப் பலனளிக்கும் காரியங்களில் நிபுணர்கள். ஆனால் அவர்கள் கோட்பாடுகளில் அடிப்படையாக எதுவும் சாதிப்பதில்லை.
மார்க் தொடர்ந்தார்: 'பெரும்பாலான விஞ்ஞானிகள் மிகவும் அடிப்படைக் கோட்பாட்டு ஆராய்ச்சி (fundamental principles research) உலகிலேயே மூழ்கி விடுபவர்கள். அவர்கள் மிகப் பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும் அவர்களது ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புக்களும் மற்ற விஞ்ஞானிகளிடம் பாராட்டுப் பெறலாமே ஒழிய, நடைமுறைக்குப் பலனளிப்பதில்லை. வேறு பல விஞ்ஞானிகள் நடைமுறைக்குப் பலனளிக்கும் காரியங்களில் நிபுணர்கள். ஆனால் அவர்கள் கோட்பாடுகளில் அடிப்படையாக எதுவும் சாதிப்பதில்லை. முதல்ரக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்களைத் தான் ஆதாரமாகப் பயன்படுத்தி சிறிய முன்னேற்றங்களை அளித்து வருகிறார்கள். அதுவும் மிகத் தேவைதான். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் ஒன்றும் விசேஷமானவர்கள் அல்லர். ஆனால் வூ பிங் சூ ஒரு தனிரகம். அவர் கோட்பாட்டு முறையில் மிகச் சிறந்த சாதனை படைத்தவர். ஆனாலும் தன் கோட்பாட்டுக் கண்டுபிடிப்புக்களை நடை முறைப் பலன்களுக்குப் பயன்படும் வகையில் மேற்கொண்டு தேவையான சிறிய, சீரிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், அதற்குத் தேவையான குழுவினருக்குத் தலைமை தாங்கி, தேவையான வேலைகளை நடத்தி முடிப்பதிலும் வல்லவர். உங்கள் இந்திய நாட்டில் அம்மாதிரி சாதித்து குடியரசுத் தலைவராகவே பதவியேற்ற அப்துல் கலாம் போல என்று கூடச் சொல்லலாம்.'

கிரண், 'வாவ்! ராக்கெட் மேன் கலாம்! அது பெரிய புகழ்ச்சிதான்' என்றான்.

மார்க் நிதானமாகத் தலையாட்டினார். 'ஆனால் அது மிகையல்ல. ஐன்ஸ்டைன் சூரிய மின்சக்திக்கு அடிப்படையான கோட்பாடுகளை உலகத்துக்குத் தந்தார் என்று சொன்னேன் இல்லையா. அதற்குப் பிறகு பலப்பல சிறிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் யூ பிங் சூ ஒரு புதிய வைகறை சூரியன் போலத் தோன்றும்வரை வளையும் ஸோலார் பேனல் துறையில் பெரும் முன்னேற்றமே வரவில்லை. பல புரட்சிகரமான நுட்பங்களை யூ தான் கண்டு பிடித்தார். நேனோ நுட்பங்களை சூரிய மின்சக்தித் துறையில் எவ்வாறு பயன்படுத்த முடியும் எனக் காண்பித்தார். நான் கூறிய, வெர்டியான் பயன்படுத்தும் பல முன்னேற்றமான நுட்பங்களும் அவர் கண்டு பிடித்தவைதான். ஆனால் அவரது புகழ் இன்னும் உலகம் முழுவதும் பரவவில்லை. ஏனென்றால் அவரது நுட்பங்கள் பலவும் தொழில்முறை ரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. இதே நுட்பங்களைப் பற்றிப் பல்கலைக்கழகங்களில் யூ ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் வெளியிட்டிருந்தால் அவர் நோபல் பரிசு கூட வென்றிருக்கலாம். ஏன் இப்போது கூட எங்கள் பேட்டன்ட்டுகள் வெளியிடப்பட்டதும் அவருக்கு அந்த விருது கிடைக்கும் என்றுதான் நான் நம்புகிறேன். கிராதகர்கள் யாரோ அவரது திறனை நன்கு தெரிந்துகொண்டு அவரைத் தாக்கியிருக்கிறார்கள்.'
மூச்சு விடாமல் மார்க் யூ பிங் சூவின் புகழைப் பாடி முடித்ததும் சூர்யா யோசனையுடன் மெல்லத் தலையாட்டியபடி 'சரி, நாம் மருத்துவமனையில் அவருடன் பேச முடியுமா?' என்று கேட்டார்.

மார்க் ஒரு கணம் திகைத்து விட்டார். 'சே! எனக்குத் தோணவேயில்லை, பாத்தீங்களா? எதோ என்னுடைய நிறுவனத்தைப் பற்றிப் பேசற மும்முரத்தில் இந்தச் சின்ன விஷயத்தைக் கூட நழுவ விட்டுட்டேன். ரொம்ப தேங்க்ஸ் சூர்யா! இப்பவே ஸ்டேன்ஃபோர்ட் மருத்துவ மனையைக் கூப்பிட்டுக் கேட்கறேன்' என்று செல்பேசியில் பேசினார்.

ஆனால் அவர் முகம் விழுந்துவிட்டது. 'விஸிட்டர் நேரம் ரொம்பக் கம்மி, இப்ப முடியாதுன்னுட்டாங்க' என்றார்.

சூர்யா, 'அப்படியா, அப்போ நாளைக்குப் பார்க்கலாம்' என்று கூறவும், கிரண் துள்ளினான். 'அ... அ... அவ்வளவு சுலபமா விட்டுட்டா எப்படி? நாம இப்பவே போய்ப் பேச நான் வழிசெய்யறேன் பாருங்க' என்று கூறிவிட்டுத் தன் செல்பேசியில் யாரையோ கூப்பிட்டான். இரண்டு நிமிடம் பேசிவிட்டு, 'எல்லாம் வசதி செஞ்சாச்சு. வாங்க போகலாம்' என்றான்.

மார்க் வாயைப் பிளந்தார். "அது எப்படி முடிஞ்சுது!' என்றார்.

கிரண் சிரித்தான். போலிப் பணிவோடு பவ்யமாகக் குனிந்து வணங்குவது போல் பாசாங்கு செய்துவிட்டு, 'உயரிடத்தில் நண்பர்கள் வேண்டும் அன்பரே! எல்லாம் என் அன்புத் தமக்கை ஷாலினியின் செல்வாக்குதான்' என்றான்.

முரளி சிரித்தபடி 'மார்க், என் பெண் ஷாலினி ஸ்டேன்ஃபோர்ட் மருத்துவமனையில பெரிய மருத்துவராவும், ஆராய்ச்சியாளராவும் இருக்கா. அவ நம்ம வேலையோட முக்கியத்துவத்தை விளக்கி ஏற்பாடு பண்ணியிருப்பா. சரி போகலாம் வாங்க. அவளே வந்து சந்திச்சு அழைச்சுக்கிட்டுப் போவா' என்றார்.

மார்க் 'வெரி குட். சரி, எல்லாரும் என் கார்லயே பேசிக்கிட்டுப் போகலாம்' என்று கூறவும், நால்வரும் அவர் காரிலேயே ஸ்டேன்ஃபோர்ட் மருத்துவமனைக்கு விரைந்தனர். கிரண் 'ஆஹா, கார்-பூலிங். கேஸ் விக்கற விலைக்கு இது சரிதான். எவ்வளோ சல்லுன்னு போக முடியுது பாருங்க' என்றான். சூர்யா முறுவலுடன், 'கிரண், கேஸ் விலைக்கும் வேகத்துக்கும் மட்டுமில்லை. சுற்றுச் சூழலுக்கும், வெப்ப உயர்வைக் குறைக்கவும் சேத்துத்தான்' என்றார்.

மார்க் தலையாட்டி ஆமோதித்தார். "அதுதான் சரி சூர்யா. சக்தி உற்பத்தி சுத்தமானா மட்டும் போதாது. சக்தி வீணாகறதையும் தவிர்க்கணும்' என்று கூறிவிட்டு லாகவமாக விரிகுடாப் பகுதியின் வேகச்சாலைகளின் கார்-பூல் வீதிப்பிரிவுகளிலேயே வண்டியை ஓட்டி மிக சீக்கிரம் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தார்.

மாலையில் வெகுநேரமாகி, வெளியாரை விடும் நேரம் தாண்டும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்களை விரைவாக உள்ளழைத்துச் செல்வதற்காக ஷாலினி வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தாள். பழங்கால சோகத்தால் இறுகியிருந்த சூர்யாவின் இதயமும் அவளது அழகுத் தோற்றத்தைக் கண்டதும் சற்றே சிலிர்த்துக் கொண்டது. சூர்யாவின்மேல் அதிநேசம் வைத்திருந்தாலும் அவர் எண்ணம் தன்மேல் முழுவதும் வரும்வரை காத்திருக்கும் விரதம் பூண்டிருந்த ஷாலினியின் நெஞ்சமோ சூர்யாவைக் கண்டதும் படபடத்ததில் ஆச்சர்யமேயில்லை.

இருவரும் ஒரு கணம் நேசப் பார்வையை முறுவலுடன் பரிமாறிக் கொண்டதைக் கவனித்துவிட்ட முரளியும் கிரணும் தங்களுக்குள் ஒரு ரகசிய முறுவலைப் பகிர்ந்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் தலையாட்டிக் கொண்டனர்.

ஓரிரு கணங்களில் நடந்து முடிந்துவிட்ட அந்த மௌனநாடகத்தைப் பற்றி ஒன்றும் அறியாத மார்க் ஷெல்ட்டனோ, பரபரத்தார். 'ஓ! நீங்கதான் ஷாலினியா? யூ-வைப் பாத்துப் பேச அனுமதி வாங்கிக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். நேரம் முடியறத்துக்குள்ள உள்ளே போயிடலாம் வாங்க' ஷாலினியும் முறுவலுடன் தலையாட்டிக் கொண்டு, 'உங்களைச் சந்திச்சதில் ரொம்ப மகிழ்ச்சி மார்க். எங்கப்பா ரொம்பச் சொல்லியிருக்கார். நான் இன்னும் ஒரு மணி நேரம் அதிகமாவே அனுமதி வாங்கியிருக்கேன். ரொம்ப அவசரப்படத் தேவையில்லை. சரி வாங்க போகலாம்' என்று யூ ஓய்வெடுத்துக் கொண்டிருந்த குணப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றாள்.

தலையில் கட்டுக்களுடன் படுக்கையில் சாய்ந்து கொண்டிருந்த யூ பிங், மார்க்கைப் பார்த்தவுடன் எழுந்திருக்க முயன்று முடியாமல் மீண்டும் சாய்ந்து கொண்டாலும் ஒரு பலவீனப் புன்னகையுடன், 'வாங்க மார்க். உங்களைப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு. இவங்க ஒரு வெளிஜீவனைக் கூட உள்ளே விடவே மாட்டேங்கறாங்க. மருத்துவ உடைகளையே பார்த்து சலிச்சுப் போச்சு' என்று வரவேற்றுவிட்டு, மற்றவர்களைக் கேள்விக் குறியுடன் பார்த்தார்.

மார்க் சூர்யா மற்றும் கிரணை விவரமாக அறிமுகப்படுத்திவிட்டு, முரளிதான் சூர்யாவை அழைத்தார் என்றும் விளக்கினார். யூவைச் சந்திக்க ஷாலினி செய்த உதவியைப் பற்றியும் கூறினார்.

யூ சூர்யாவின் கையை பலவீனமாகக் குலுக்கி நன்றி செலுத்தினார். 'உங்களைப் பத்தி எனக்கு ஒண்ணும் விவரம் தெரியாது. ஆனா மார்க் உங்கமேல ரொம்பவே நம்பிக்கை வச்சிருக்கார்னு புரியுது. அதுனால எங்க பிரச்சனைகளுக்குக் காரணமா இருக்கற தீயவர்களை நீங்க கண்டுபிடிச்சு நிவர்த்திக்க முடியும்னு நம்பறேன்' என்றார்.

சூர்யா யூ-வின் குரலில் இழைந்த மெல்லிய அவநம்பிக்கையை உணர்ந்துகொண்டு, முறுவலுடன் தனக்கே உரிய பாணியில் ஒரு அதிர்வேட்டு வீசி அதை அடியோடு தகர்த்தெறிந்தார்.

தொடரும்.

கதிரவன் எழில் மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline