|
|
|
முன்கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறி வாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யா வுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனை களைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை
ஷாலினியின் தந்தையின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தி தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப் பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக கூறவே சூர்யாவின் திறமையைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஷாலினியின் தந்தை அவருக்கு சூர்யாவை பற்றிக் கூறி அறிமுகம் செய்ய அழைத்து வந்தார். மார்க் சூர்ய சக்தித் தான் சுத்த சக்தித் தொழில்நுட்பங்களிலேயே சிறந்தது என்பதால் அதை மேம்படுத்தப் பாடுபடு வதாகக் கூறி அது ஏன் என்று விளக்க நான்கு வகை சுத்த சக்தி நுட்பங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். முதலில் மாசு விடாத நுட்பங்களைப் பற்றி விவரித்து விட்டு, அடுத்து சில மாசு குறைவான, எத்தனால், பயோடீஸல் போன்ற சில எரிபொருள் நுட்பங்களைப் பற்றி விளக்கினார்.
அடுத்து...
மாசுகுறைவான எரிபொருட்களில் ஏற்கனவே மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றைப் பற்றி இன்னும் விவரிக்கவில்லை என்று மார்க் கூறியதும், முரளி 'ஏற்கனவே பரவலாப் பயன்படுது, ஆனால் அதைப்பத்திப் பேசலையா? ஆச்சர்யமா இருக்கே?
என்ன அது?' என்று கேட்டார்.
மார்க் வாய் திறக்குமுன், கிரண் முந்திக்கொண்டான். 'ஓ...ஓ பிக் மீ, பிக் மீ! எனக்குத் தெரிஞ்சு போச்சு. இயற்கை வாயுதானே? கம்மாடிட்டி பங்குச் சந்தையில ரொம்ப நாளாவே பெட்ரோலியம் ஆயில் மாதிரி நிறைய விக்குதே!'
மார்க் பாராட்டினார், 'யெஸ், கிரண் யூ ஆர் அப்ஸொல்யூட்லி ரைட், சரியா பிடிச்சுட்டே.'
முரளி புரியாமல் விழித்தார். 'சரி, ஆனா, அதுதான் ரொம்ப நாளா இருக்கே? இப்ப என்ன அதைப்பத்தி புதுசா?'
மார்க் விளக்கினார். 'நீங்க சொல்றது சரிதான் முர்லி, வீடுகளில் சமையல் செய்யறதுக்கும், குளிர் பிரதேசங்களில் வீடுகளுக்குள் சூடாக்கிக் குளிர் குறைக்கவும், தண்ணீரைச் சுடவைக்கவும் இயற்கை வாயுவை ரொம்ப காலமாவே எரிபொருளாப் பயன் படுத்திக்கிட்டிருக்காங்க. ஆனா இப்ப புதுசா ஆரம்பிச்சிருக்கிறது என்னன்னா, இயற்கை வாயு ரொம்ப சுத்தமா எரிஞ்சு, ரொம்பக் குறைவா மாசு வெளிவிடறதுனால, கார், பஸ் போன்ற வாகனங்களில் கேஸலின், டீஸலுக்குப் பதிலா இதைப் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. பயோடீஸலை விடக் கூட இது நல்லதுதான்.'
கிரண் இடைமறித்தான். 'ரைட், ரைட்! நான்கூட எதோ படிச்சேன். புதுடெல்லில ரொம்ப மாசு அதிகமாயிடுச்சுன்னு, எல்லா பஸ், ஆட்டோ ரிக்ஷாக்களையும் இயற்கை வாயுல ஓடறா மாதிரி மாத்திட்டாங்க, அதுனால இப்ப அங்க காத்து முன்னைவிட
ரொம்பவே சுத்தமாயிருக்கு, ஆகாய நீலத்தைக்கூட ரொம்ப நாளுக்கப்புறம் இப்பப் பாக்க முடியுதுன்னு.'
முரளி பெருமூச்செறிந்தார். 'கிரண் சொன்ன மாதிரி, இந்தியா பூரா பெருமளவு ஓடற, கருப்புப் புகை கக்கற லாரி வண்டிகளை இயற்கை வாயுல ஓடற மாதிரி மாத்திட்டா நல்லா இருக்குமே.'
மார்க் 'அப்படியும் ஒரு திட்டம் இருக்கறதா நான் எங்கயோ படிச்சேனே. அப்படி செஞ்சுட்டா இந்தியாவுக்கு அது டபுள் போனஸ். பெட்ரோலியத்தை விட இயற்கை வாயு உலகத்தில பல இடங்களில கிடைக்கிறது. அது ஒரு போனஸ்.
இன்னொரு போனஸ், இந்தியாவிலேயே கிருஷ்ணா கோதாவரி நதிகள் கடலில் கலக்கும் இடத்திலேயே பெரிய இயற்கை வாயுத் தேக்கங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக் கிறதுதான்' என்று விளக்கினார்.
சூர்யா மேலும் குழப்பத்துடன் கேட்டார், 'ஹூம்... இயற்கை வாயு பெட்ரோலிய எண்ணெய்களை விட மட்டுமல்லாம பயோடீஸல், எத்தனாலை விடவும் சுத்தமா எரியற சக்திப் பொருள், அது நல்லதுதான். ஆனா, நாம தொடர்ந்து உற்பத்தி செய்யக் கூடிய ரின்யூவபுள் சக்தி நுட்பங்களைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கறதா நினைச்சேன்? இயற்கை வாயுவும் இப்ப அதிகமா கிடைச்சாலும், வருங்காலத்துல முடிஞ்சு போயிடுமே? அப்ப என்ன செய்யறது?'
மார்க் 'அற்புதமான கேள்விதான் சூர்யா' என்று சிலாகித்துவிட்டுச் சொன்னார். 'அதுல ஒரு நுணுக்கம் இருக்கு. இயற்கை வாயுங்கறாங்களே, அதனுடைய நல்ல பண்புகள் உள்ள வாயுக்களை, செயற்கை யாவும் தொடர்ந்து உற்பத்தி செய்ய இப்போ பல நுட்பங்கள் வந்திருக்கு. உதாரணத்துக்கு ரெண்டு மட்டும் சொல்றேன். ஒண்ணு பசுமாடுகள் போன்ற கால்நடைகளின் சாணத்தை அப்படியே அடைச்சு வச்சு அதிலிருந்து வெளிவிடப்படும் வாயுவை எரிபொருளாப் பயன்படுத்தறது.'
முரளி ஆமோதித்தார். 'யெஸ், யெஸ்! இந்தியாவுல பல வருஷங்களா இதை கிராமங்களில சிறிய அளவுல செய்யறதா நான் கேள்விப்பட்டிருக்கேன். பயோகேஸ் இல்லன்னா கோபர்கேஸ்னு சொல்லுவாங்க.'
அவர் வாய் மூடுமுன், மார்க் சொன்னதை நினைத்தே சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கிரண் வெடிச் சிரிப்புடன் இடைபுகுந்தான். 'ஆஹா, பிரமாதம்! நிஜமான புல்ஷிட்டை வச்சே உலகத்துக்கு சுத்த சக்தி எடுக்கற நுட்பம். அது எனக்கு இன்னும் பல நல்ல யோசனை களைத் தருது. உலகத்துல அரசியல்வாதிங்க சும்மாப் பேசிப் பேசி, புல்ஷிட்டும் வெறும் உஷ்ணக் காத்துமா வெளியில விட்டு, பூமி பூரா நாறடிச்சு, வெப்பத்தையும் ஏத்திக் கிட்டிருக்காங்களே? அந்த புல்ஷிட்டை வச்சு சுத்த சக்தியை உற்பத்தி பண்றா மாதிரி ஒரு நுட்பம் கண்டு பிடிச்சுட்டா, கோடி கோடியா சம்பாதிக்கறதோட, புவிச்சூழலுக்கும் நல்லது பண்ணிடலாமே! இது எப்படி இருக்கு?'
கிரணின் கற்பனையைக் கேட்டு மார்க்கும் முரளியும் அடக்க முடியாமல் சில நிமிடங்கள் சிரித்தனர். உணர்ச்சிகளால் மிகவும் பாதிக்கப்படாத சூர்யாவைக் கூட அந்த நகைப்புச் சூறாவளி ஆக்கிரமித்துவிட்டது.
மற்றவர்களுக்கு முன் சுதாரித்துக் கொண்ட சூர்யா மீண்டும் தற்சமய விஷயத்துக்கு வந்தார். 'அது சரி மார்க், சுத்தமா எரிபடக் கூடிய வாயுவை ரெண்டு விதமாத் தயாரிக்கலாம்னு சொன்னீங்களே. அந்த இன்னொண்ணு என்ன?'
மார்க் ஒரு நையாண்டிப் புன்னகையுடன், 'ஓ, அதுவா! அதுதான் நிலக்கரி' என்றார். |
|
மார்க் எதிர்பார்த்தபடியே, மற்ற மூவர் முகத்திலும் ஒரு பெரிய கேள்விக்குறி படர்ந்தது. மார்க் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். 'என்ன! கரியமில வாயுதானே புவி வெப்பத்துக்குப் பெரும் மூல காரணமே! கரி எப்படித் தூய எரிபொருளாக முடியும் என்கிறீர்களா? சரிதான். கரியை நேரடியாக எரித்தால்தான் பெரும் மாசு வெளிப்படும். அதுக்குப் பதிலா, இயற்கை வாயுவை திரவமாக்குவது (Liqufied natural gas or LNG) மாதிரி, கரியிலிருந்தும் ஒருவிதமான எண்ணெயை வெளியெடுத்து, அதையே பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. இதற்கு 'கரித்திரவம்' (coal-to-liquid) என்றுப் பெயர். அந்தத் திரவமும், அதை ஆவியாக்கி எடுக்கற வாயுவும் இயற்கை வாயுவைப் போலவே நல்லா தூய்மையா எரியுது.'
கிரண் பரபரத்தான். 'இது ரொம்ப நல்லதாச்சே. அமெரிக்காவில, இந்தியா, சீனா போல உலகத்துல நிறைய இடங்களில கரி நிறையக் கிடைக்குதுன்னு வர்த்தக ரீதியா எனக்குத் தெரியும். அதை நான் ரொம்ப இகழ்ச்சியாத்தான் நினைச்சுக் கிட்டிருந்தேன். இப்ப நீங்க சொல்றதைப் பாத்தா அதையும் சுத்த சக்தி மூலதன ரீதியா இனிமே நினைக்க வேண்டியதுதான் போலிருக்கு. இப்பவே நான் எங்க ஆளுங்களுக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பிச் சுடறேன்' என்று தன் PDA-வை எடுத்தான்.
மார்க் கையைத் தூக்கிக் காட்டி அவனை நிதானப்படுத்தினார். 'அமைதி, அமைதி! அது இன்னும் அவ்வளவு பிரமாதமான நிலைக்கு வந்துடலை. இன்னும் அந்த திரவம் உற்பத்தி செய்யறதுல மாசு வெளியிடப்படுது. அதையும் சுத்தமாக்க நுட்பங்கள் இருக்கு. அதைத் தீவிரமா ஆராய்ஞ்சுக்கிட்டிருக் காங்க. இன்னும் சில வருஷங்களில வந்துடும்னு நம்பறேன். அப்ப சூரிய சக்தி, மற்றும் ஸெல்லுலோஸிக் எத்தனாலோட இதையும் ஒரு தொடர்ந்து பயன்படக் கூடிய சுத்த சக்தி வகையில சேத்துக்கலாம்' என்றார்.
முரளி குழம்பினார். 'நிலக்கரியும் இப்ப எவ்வளவு இருந்தாலும் ஒரு காலத்துல தீர்ந்துதானே போகணும். எப்படித் தொடர்ந்து பயன்பட முடியும்?' என்றார்.
சூர்யாவே இடைபுகுந்து விளக்கினார். 'நிலத்துல இருக்கற கரி தீர்ந்து போனாலும், காட்டுத் தீ, மர அடுப்பு போலப் பல விதங்களில கரி உற்பத்தி ஆகுது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்னு சொல்றார் போலிருக்கு...' என்றார்.
மார்க் 'பிரமாதம் சூர்யா! நூத்துக்கு நூறு கரெக்ட்' என்று பாராட்டினார். 'உலகத்துல கரி பலவிதமா ஓரளவு உற்பத்தியாகிக் கிட்டுத்தான் இருக்கும். அதை இப்படிப் பயன்படுத்திக்கலாம். ஆனா முர்லி சொல்றதும் ஓரளவுக்குச் சரிதான். உலக சக்தித் தேவையளவை வச்சுப் பார்த்தா, கரி மூலமா கிடைக்கற சுத்த சக்தி ஒரு காலத்துல மிகச் சிறியளவுதான் இருக்கும். அதுனால தான் சூர்ய சக்தி போன்ற அளவில்லாத சுத்த சக்தி நுட்பங்கள் இன்னும் சிறந்தது.'
கிரண் மேலும் ஆட்சேபித்தான். 'ஆனா, மரத்தை எரிச்சா, கரிவாயு உற்பத்தி ஆகுதே? அதை என்ன பண்றது?'
மார்க் மெள்ள யோசனையுடன் தலை யாட்டிக் கொண்டுத் தொடர்ந்தார். 'சரிதான் கிரண். இதுவரைக்கும் சுத்தமான சக்தி அல்லது மாசு குறைந்த எரிபொருட்கள், மற்றும் எரிபொருள் தேவையைக் குறைக்கும் நுட்பங்களைப் பத்தித்தான் பேசிக் கொண்டிருந்தோம். இப்ப நீ கேக்கறது, அதோட நேர் எதிர்த்திசை. அதாவது, எவ்வளவு குறைச்சாலும், வெளியிடப்படும் மாசை, சுற்றுச் சூழலை நாசமாக்காம புவி வெப்பம் அதிகரிக்காம, எப்படித் தடுக் கறதுன்னு. அதுக்கும் நுட்பங்கள் இருக்கு. அது ஒருவகை கார்பன் அடைப்பு (sequestration).'
சூர்யா ஆவலுடன் 'ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே. அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்' என்றார்.
அதை விவரிப்பதற்காக மார்க் வாய் திறப்பதற்கு முன் ஆராய்ச்சிக் கூடத்தின் நடுவிலிருந்து ஒரு வெடிச்சத்தம் கேட்கவே அனைவரும் திடுக்கிட்டு அங்கே பார்த்தனர்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|