Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
நேனோடெக் நாடகம் (பாகம் - 3)
- கதிரவன் எழில்மன்னன்|மே 2004|
Share:
முன்கதை: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகி விட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர்.

மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு நேனோடெக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நேனோ தொழில்நுட்பம் ஒன்று காரணம் விளக்க முடியாதபடி தோல்வியடைகிறது. அதனால் நிறுவனமே மூழ்கிவிடக் கூடிய நிலை. அதை நிறுவிய பால் ஜென்னிங்ஸ், மற்றும் மூலதனமிட்ட பீட்டர் ஸ்டம்ப் இருவரும் பெரும் சோகத்தில் உள்ளனர். அங்கு நிபுணராக அவ்வப்போது யோசனை கூறும் ஷாலினி, விளக்கம் காண சூர்யாவை அழைத்திருக்கிறாள்.

தன் நேனோ தொழில் நுட்பக் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்த பால், தங்கள் செல்லக் குழந்தை யின் விஷம விளையாட்டுக்களைப் பற்றி மாற்றாரிடம் தம்பட்டம் அடிக்கும் பெற்றோரைப் போல் பெருமையுடன் பேச ஆரம்பித்தார். "சூர்யா, கிரண், நேனோடெக் பற்றி உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு தெரியும்?"

கிரண் முந்திக் கொண்டு, "ஆஹா, தெரியுமே, இன்னிக்கு ஷாலினி கூப்பிடறத்துக்கு முன்னாடிதான் கறை படியாத பேன்ட்ஸ் பத்தி பேசிக்கிட்டிருந் தோம்!" என்றான்.

பீட்டர் இடை மறித்து, அலட்சியமாக தள்ளுவது போல் கையை வீசினார். "சே, சே, அதெல்லாம் ரொம்ப எளிதான குழந்தை விளையாட்டுன்னு சொல்லலாம். இன்னும் எவ்வளவோ பிரமாதமான விஷயமெல்லாம் இருக்கு."

சூர்யா "நான் எலக்ட்ரானிக்ஸ் துறையில இன்னும் ரொம்ப சின்னதான சிப்ஸ் செய்ய நேனோடெக் உதவும்னு கூட படிச்சிருக்கேன். ஆனா அதுக்கு மேல ஆழமா தெரியாது" என்றார்.

பால் உற்சாகமாகத் தொடர்ந்தார். "நிச்சயமா எலக்ட்ரானிக்ஸ¤க்கு நேனோடெக் பயன் படுத்தப் படும். இது வரைக்கும் மைக்ரோடெக்குல செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் தூக்கி சாப்பிடற அளவுக்கு செய்ய முடியும். மாலிக்யூல் அளவுல ட்ரேன்ஸிஸ்டர்கள் செஞ்சு கண்ணால பாக்க முடியாத அளவுக்கான சர்க்யூட் எல்லாம் செய்யறாங்க."

கிரண் தாங்க முடியாமல் குறுக்கிட்டான். "மாலிக்யூலில எலக்ட்ரானிக்ஸா! எப்படி அது செய்ய முடியும்? நம்பவே முடியலையே. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க" என்றான்.

பால் புன்னகைத்தார். "உண்மைதான். நம்பவே முடியாத படியான பல சாதனைகளைக் கூடிய சீக்கிரம் நேனோடெக் அளிக்கப் போகுது" என்று கூறிவிட்டு, ஏதோ தானே அந்த சாதனை செய்து விட்டது போன்ற பெருமிதத்துடன் நேனோ எலக்ட்ரானிக்ஸின் விந்தையை விவரித்தார்.

"உங்களுக்கு மோர் விதி (Moore's law) பத்தித் தெரியுமா?"

கிரண் "எனக்கு எங்க அம்மா செய்யற மோர்க் குழம்பு பத்திதான் தெரியும். ரொம்ப ருசி!" என்றான்.

சூர்யாவும் தலையசைத்துக் கொண்டு "கேள்விப் பட்டிருக்கேன். ஆனா விவரம் தெரியாது. எதோ மைக்ரோ ப்ராஸஸர் வேகத்தைப் பற்றி இல்லையா?" என்றார்.

பீட்டர் "பொதுவா சிலிகான் சிப்ஸ் பற்றிய விதி. ப்ராஸஸர்களுக்கும் பொருந்தும், மெமரி சிப்களுக்கும் பொருந்தும்" என்றார்.

பால் விளக்கினார். "Intel நிறுவனத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான கார்டன் மோர் கூறிய விதி அது: இன்டெக்ரேடட் சர்க்யூட் எனப்படும் சிப்களில் உள்ள ட்ரேன்ஸிஸ்டர்கள் ஒரு சதுர மில்லிமீட்டரில் அடுக்கப் படக்கூடிய அளவு, ஒவ்வொரு 18 மாத காலத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என்று கூறினார். அந்த விதிப்படியே தற்போது வரை நடந்து வருகிறது. கம்ப்யூட்டர், வீடியோ கேம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் மேலும் மேலும் சக்தி அதிகரிக்க மோர் விதிப்படியே சிலிகான் தொழில்நுட்பம் வளர்வதுதான் காரணம்."

பீட்டர் குறுக்கிட்டு, "அந்த விதிப்படிதான் மெமரி சிப்களும் ஒரு கிகாபிட் (gigabit) அளவுக்கு வளர்ந்திருக்கு" என்றார்.

கிரண் "என் முதல் கம்ப்யூட்டர்ல ஒரு மெகாபைட் தான் இருந்தது, சுத்த மோசம்!" என்றான். சூர்யா முறுவலுடன் "நான் படிக்கறச்சே நாலு கிலோபைட் உள்ள மைக்ரோ கம்ப்யூட்டர் செஞ்சேன்!" என்றார்.

கிரண் முகத்தை சுளுக்கிக் கொண்டான். "அய்யே, சீ! நாலு கிலோ பைட்ல என்ன செய்யும்?

வெறும் கூட்டல் கழித்தல் கேல்குலேட்டர் கூட அதைவிடப் பெரிசு!" என்றான்.

பீட்டர் புன்னகையுடன் "மோர் விதி ஊதாரி ப்ரோக்ராமர்களுடைய நண்பன்! ஆனாலும் பெரும் பலம் வாய்ந்த ப்ரோக்ராம்களையும் PC-களில் ஓட வாய்ப்பளிச்சிருக்கு. அந்த விதிப்படி சிலிகான் துறை வளரலேன்னா PC-களில வீடியோ ப்ளேயர்கள், பேச்சு மூலமா ப்ரோக்ராம்களோட உரையாடறது இதெல்லாம் செஞ்சிருக்கவே முடியாது" என்றார்.

பால் தொடர்ந்தார். "ஒவ்வொரு வருஷமும் சர்க்யூட்டில இன்னும் சின்ன சின்னதா ட்ரேன்ஸிஸ்டர்கள் செய்யறதுனால மோர் விதி உண்மையாவே இருந்துக்கிட்டிருக்கு. ஆனா, இப்பப் பயன் படுத்தற சர்க்யூட் தொழில்நுட்பம் மாத்தப்படலேன்னா, மோர் விதி இன்னும் சில ஆண்டுகளில் வலுவிழக்க வாய்ப்பிருக்கு. ஏன்னா ஒரு அளவுக்கு மேல தற்போதைய தொழில் நுட்பம் ட்ரேன்ஸிஸ்டர்களைச் சிறிதாக்க முடியாது" என்றார்.

கிரண் 'க்றீச்' என்று உச்ச ஸ்தாயியில் வீறிட்டான். "ஐயையோ! அப்ப எனக்கு இன்னும் சக்தி வாய்ந்த வீடியோ கேம் வராதா? 3D ஹோலோக்ரா·பிக் விளையாட்டு வரும்னு வாயில ஜொள்ளு விட்டுக்கிட்டு காத்துக் கிட்டிருக்கேனே!"

பால் சிரித்து விட்டார். "கவலைப் படாதே கிரண். நேனோ டெக் டு த ரெஸ்க்யூ. உன் 3D ஹோலோக்ராமைக் காப்பாத்தக் கூடிய நேனோ எலக்ட்ரானிக் தொழில் நுட்பம் வந்துக் கிட்டிருக்கு" என்றார்.

கிரண் "அப்பாடா! தப்பிச்சேன்" என்று பெருமூச்சு விட்டான்.

சூர்யா வினவினார். "நேனோடெக்ல அப்படி என்ன வித்தியாசமா செஞ்சு இன்னும் சின்னதாக்க முடியும்?"

பீட்டர் பதிலளித்தார். "ஸெமை-கன்டக்டர் சிப் துறையில, நேனோடெக்னா ஒரே ஒரு தொழில்நுட்பம், அதை இப்படித்தான் செய்யணும்னு சொல்ல முடியாது. ஒரு நேனோமீட்டர்லிருந்து சில நேனோ மீட்டர்கள் வரையிலான அகலத்துல ட்ரேன்ஸிஸ்டர்கள் செய்யக் கூடிய பல தொழில் நுட்பங்களுக்குப் பொதுவா நேனோடெக்னு சொல்றாங்க."

பால் தொடர்ந்தார். "ஒரு விதம் வந்து இப்ப செய்யற சிப் சர்க்யூட்டுகளையே இன்னும் சிறிதான அகலத்துல செய்யறத்துக்கான மாலிக்யூல் அல்லது இன்னும் அணுவளவில சேர்த்து செய்யற நுணுக்கங்கள். இப்ப சிலிகான் மேல மூடுதிரை (mask) வச்சு செய்யறாங்க. ஆனா ஓரளவு அகலத்தை விடச் சின்னதானா அப்படி செய்ய முடியாது. வேற விதமான உற்பத்தி முறைகள் வேணும். அணுக்களை யும் மாலிக்யூல்களையும் வேணுங்கற மாதிரி படிய வைக்கணும்."

பீட்டர் குறுக்கிட்டு, "ஆமாம். சில வருஷத்துக்கு முன்னாடி கூட நீங்க பேப்பர்ல படிச்சிருக்கலாம்: IBM விஞ்ஞானிகள் பல அணுக்களை வரிசைப் படுத்தி எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வழியாப் பாத்தா, I, B, M-ங்கற எழுத்துக்கள் தெரியறா மாதிரி செஞ்சிருந்தாங்க. அந்த வழிமுறை இன்னும் சிப் செய்யற அளவுக்கு வளறல. ஆனா அந்த மாதிரி செய்ய முடியும்னு காட்டினாங்க!"

கிரண் குதூகலித்தான். "வாவ்! அணுக் களால எழுதறாங்களா? பிரமாதம் போங்க! பணம் குடுத்தா K, I, R, A, N -- அப்படின்னு எழுதித் தருவாங்களா? அதை என் சாவிக் கொத்துல போட்டுக் கிட்டு என் க்யூட்டீஸ் கிட்ட காட்டினா..."

ஷாலினி கடிந்து கொண்டாள். "சே, கிரண்! உனக்கு எதுல விளையாடறதுன்னு விவஸ்தையே இல்லயே. மேல சொல்லுங்க. எனக்கே இப்பத்தான் இந்த விவரம் எல்லாம் தெரியும்."

பீட்டர் தொடர்ந்தார். "ஆனா இது வரைக்கும் பார்த்ததுல கரித்தூள் குழாய் கள்னு ஒரு தொழில் நுட்பந்தான் நேனோ எலக்ட்ரானிக்ஸ¤ல ரொம்ப பலன் தரும்னு நம்பிக்கை அளிச்சிருக்கு."

கிரண் ஹோ, ஹோ-வென பலமாகச் சிரித்து விட்டான். மற்ற நால்வரும் அவனைப் பார்த்து கோபத்துடனும் குழப்பத்துடனும் விழிக்கவே, சுதாரித்துக் கொண்டு விளக்கினான். "ஓ, ஸாரி. நீங்க கரித்தூளுன்ன உடனே எனக்கு ஷாலினி அப்பப்ப சமையல் பண்றேன் பேர்வழின்னு பாத்திரத்தையும் சாப்பாட்டையும் கரித் தூளாக்கறது ஞாபகம் வந்திடுச்சு, அவ்வளவு தான். அடக்க முடியலை."

ஷாலினிக்கும் சிரிப்பு வந்து விட்டது. "நிஜந்தான். சமையலில நான் ரொம்ப மோசம்! கிரண் கூட என்னை விட நல்லாச் சமைப்பான்!" என்றாள்.

பீட்டர் புன்னகையுடன் "கிரண், கரித்தூள்னா நீ நினைக்கறா மாதிரி சாதாரண கரிப்பொடி இல்லை. கார்பன் நேனோ ட்யூப்ஸ¤ன்னு மிக மிக சிறிய அளவில, சில கார்பன் அணுக்களின் அகலம் அளவே உள்ள குழாய்கள். நம் தலைமுடியை விட 100,000 மடங்கு மெல்லிசானது!" என்றார்.

பால் தொடர்ந்தார். "அந்தக் கார்பன் குழாய்களை ஒண்ணு மேல இன் னொண்ணு குறுக்கா வச்சு ட்ரேன்ஸிஸ்டர் கள் செய்ய முடியும்னு கண்டு பிடிச்சிருக் காங்க. அது மட்டுமில்லாம, அதை நீளமா ஒயர் மாதிரி வளர்த்தா, இப்ப பயன் படுத்தற தாமிரம், அலுமினியம் போன்ற உலோகக் கம்பிகளை விட நல்லா மின்சாரத்தையும் செலுத்த முடியும். அதுனால ரெண்டு விதமா கார்பன் நேனோ குழாய்களை வச்சு சிப் செஞ்சா இப்ப செய்யற சிப்ஸை விட நூறு மடங்கு சின்னதாவும் ஆயிரம் மடங்கு வேகமாவும் செய்ய முடியும். மோர் விதி இன்னும் பலப் பல ஆண்டுகளுக்கு உண்மையா நிலைச்சிருக்கும்!"

பீட்டரும் தொடர்ந்து விவரித்தார். "வேகம் மட்டுமில்லை. அதுல விவேகமும் இருக்கு. அந்தக் கரிக் குழாய்களைப் பயன் படுத்தினா, மின்சாரமும் ரொம்பக் கம்மியாத் தேவைப் படுது. எலக்ட்ரான்கள் நீள வாக்கில மட்டுமே போகக் கூடியதா அந்தக் குழாய்கள் அமைஞ்சிருக்கறதால, கரென்ட் ரொம்ப லீக் ஆகறதில்லை. அதுனால வருங்காலத்துல வரும் சின்னச் சின்ன சிப்ஸ், ரொம்ப எலக்ட்ரிக் பவர் இல்லாம வேலை செய்யலாம். சூடும் ரொம்பக் குறைச்சலாகும். அது மட்டுமில்லாம, வெளி பேட்டரி இல்லாமலேயே அசைவில அல்லது சுற்றுப் புற மின்காந்த அலைகளால (electromagnetic waves) உற்பத்தியாகற மிகச் சிறிய அளவு மின்சாரத்துலயே கூட வேலை செய்ய முடியும்."

பால் முத்தாய்ப்பு வைத்தார். "இந்த நேனோ எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பங்களால அதுனால நம்ம பயன் படுத்தற எல்லா கருவிகளிலயும், துணி மணிகளிலயும் ஏன் நம்ம உடம்புலயே கூட அந்த மாதிரி சிப்களை பல இடங்களில பதிச்சு ரேடியோ அலைகளால வேலை செய்ய வைக்க முடியும்!"

கிரண் எக்காளத்துடன், "ஏய்! பேட்டரி ஸெல்லே இல்லாமயா! வாவ்! நான் அதுலயே ஒரு லட்சம் பணம் மீத்திடலாம்! உடம்புல சிப் பதிக்கலாங்கறது, நான் பாத்த ஒரு படம் Enemy of the State மாதிரி இருக்கு. வில் ஸ்மித்தும் ஜீன் ஹேக்மன்னும் நடிப்பு பிரமாதம் போங்க! அதுல வில் ஸ்மித் துணி, பேனா எல்லாத்துலயும் சிப் வச்சு அவர் எங்க இருந்தாலும் ஸேடலைட் வச்சு கண்டு பிடிச்சிடுவாங்க!" என்றான். பிறகு அதன் முழு விளைவையும் புரிந்து விடவே, "அய்யய்யோ! அப்படின்னா நான் என் பாஸ் கிட்டேந்து ஒளிஞ்சிகிட்டு சூர்யாவோட சுத்த முடியாதே?! எங்க இருந்தாலும் புடிச்சிடுவாரே?! போச்சுடா!" என்றான்.

பால் ஆமோதித்தார். "அந்த மாதிரி வர ரொம்ப நாளாகாது. இப்பவே RFID-ன்னு ஒரு தொழில் நுட்பத்தை வச்சு கிட்ட தட்ட அந்த மாதிரி ஆரம்பிச்சாச்சு. நேனோவால இன்னும் பிரமாதமா ஆயிடும். அதுவும் இந்த கார்பன் குழாய் நல்லா பலன் குடுத்துட்டா நூறு மடங்கு பெரிய மெமரிகளும், ஆயிரம் மடங்கு வேகமான CPU-க்களும் வந்துடும்."

கிரண் குதூகலித்தான். "கேட்க ரொம்ப மாயா ஜாலமா இருக்கு! இந்த மாதிரி டெக்னாலஜில செய்யற சிப்கள் எப்ப வீடியோ கேம்ல வரும்?!"

ஷாலினி சிரித்தாள். "நீ எப்பவும் கேம்லயே குறியா இரு! எதாவது உருப்படியான பயனைப் பத்திக் கேக்கறதில்லை?!"

பால் புன்னகையுடன் தொடர்ந்தார். "இதெல்லாம் இப்ப லேப்ல ரொம்ப ரொம்ப ஆரம்ப நிலையில தான் இருக்கு. பலப்பல வித்தையால தற்போதைய சிலிகான் சிப் தொழில்நுட்பத்திலயே மோர் விதிப்படி இன்னும் நிறைய ட்ரேன்ஸிஸ்டர்களை அடக்க முயற்சி நடந்துகிட்டிருக்கு. அதிலயே இன்னும் பத்து வருஷத்துக்காவது காலம் தள்ளுவாங்க. உண்மையான கார்பன் ட்யூப் போன்ற நேனோடெக் சிப்கள் பெருமளவில் பயன்படறது அதுக்கப்புறந்தான். ஆனா அது தேவையாகறப்போ உடனே பயன்படுத்தப்படும். அதுனால, கிரண், உனக்கு ஹோலோக்ரா·பிக் கேம் நிச்சயமா கிடைக்கும் கவலைப்படாதே. என்ன, சில வருஷம் காத்துக் கிட்டிருக்கணும், அவ்வளவுதான்!"

கிரண் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சோகமாக, "அது வறத்துக்குள்ள எனக்கு வயசாகி வெறுத்து சன்யாஸியாயிடுவேன் போலிருக்கே, நேனோடெக் வேகமே இல்லை, சுத்த ஸ்லோ, ஹ¥ம்!" என்று சலித்துக் கொண்டான்!"

பீட்டர் "கிரண், நேனோ டெக்னா எலக்ட்ரானிக்ஸ் மட்டுமில்லை, இன்னும் நிறைய இருக்கு. இப்பவே பயன்படுது."

கிரண் "இது டி.வி.யில வர கின்ஸ¥ கத்தி விளம்பரம் மாதிரின்னா இருக்கு! பட் வெயிட்! தேர் ஈஸ் மோர்! இ·ப் யூ ஆர்டர் ரைட் நெள..."

சூர்யா குறுக்கிட்டு "நேனோடெக் இப்பவே எதுல பயன்படறதுங்கறது பத்தி..."
கிரண் குதித்தான். "எனக்கு ஒண்ணு தெரியுமே, காத்தால பேசிக்கிட்டோமே. கறை படியாத பேன்ட்ஸ்! அதானே?"

பீட்டர் புன்னகையுடன் "தட் ஈஸ் ஸோ... லாஸ்ட் மன்த்! அது பழங்காலக் கதையாப் போச்சு! அந்த மாதிரி நேனோ கோட்டட் துணிகளில வாசனை வராத ஸாக்ஸ், சுருங்காத, கசங்காத காட்டன் துணிகள், இயற்கையா மென்மையாத் தோணற செயற்கை நைலான் துணிகள், இப்படிப் பலப்பல விஷயங்கள் ஏற்கனவே வந்து கிட்டிருக்கு. போட்டுக்கற உடைகள் மட்டுமில்லாம, கீழ விரிக்கற கம்பளம், படுக்கைகள் இதுக்கெல்லாமும் பயன் படுத்த ஆரம்பிச்சிருக்காங்க..." என்றார்.

சூர்யா தற்போதைய விஷயத்துக்கு வந்தார். "சரி, நேனோடெக் மின்னணு துறைக்கும் துணிமணி உற்பத்திக்கும் எப்படி பயன் படும்னு தெரியுது. ஆனா நீங்க செய்யறது மருத்துவ பயோ-டெக் இல்லையா. அது உயிர்-ரசாயன இயல் (Bio Chemistry) இல்லையா?! அதுக்கு எப்படி பயன் படுத்த முடியுது?" என்று வினாவினார்.

ஷாலினி புன்னகையுடன் குறுக்கிட்டாள். "இது பொதுவான, ஆனா தவறான கருத்து. மருத்துவ பயோடெக் துறை இப்ப உயிர்-ரசாயனத்தைத் தாண்டி எங்கயெல்லாமோ போயாச்சு! மாலிக்யூலர் ஸெல் பயாலஜி, ஜெனடிக் எஞ்சினீயரிங், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ ஸர்ஜரி, பயோ இன்·பர்மேடிக்ஸ் இப்படி எதெல்லாமோ வச்சு வளர்ந் திருக்கு. இப்ப நேனோடெக்கையும் எப்படி பயன் படுத்தலாம்னு ஆராய்ச்சி நடக்குது. அதுனாலதான் நான் இவங்களோட சேர்ந்து உதவி செஞ்சுக்கிட்டிருக்கேன்."

பால் பலமாகத் தலையாட்டி உற்சாகமாக ஆமோதித்தார். "ஆமாம் சூர்யா! மருத்துவத் துல நேனோடெக் பயன் படுத்த நிறைய வாய்ப்பிருக்கு! இந்தத் துறையோட சாராம்ஸமே சாதனங்களை மிகவும் சிறியதாக்கறது தானே?! இப்பக் கூட உடம்புல சிப்களைப் பதிக்கறது பத்தி பேசினோம். அந்த மாதிரி இருந்தா, நோயாளிகள் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் அவங்களோட மருத்துவர்கள் தூரத்திலிருந்தே அவங்க உடம்பின் வெப்ப நிலை, இரத்தத்தில என்ன இருக்கு இந்த மாதிரி எல்லாத்தையும் கண்டு பிடிச்சிடலாம் இல்லயா?!"

பீட்டர் குறுக்கிட்டு, "அது மட்டுமில்லை. மிகச்சிறிய கேமராக்களை உடம்புக்குள்ள செலுத்தி X-Ray, CatScan இதாலெல்லாம் பாக்க முடியாத இண்டு இடுக்கையெல்லாம் பாக்கலாம். அது மட்டுமில்லை. Biopsy இல்லாமலேயே, சின்ன சின்ன ஸெல் சாம்பிள்களை சேர்த்து வெளியக் கொண்டு வர மாதிரியும் மிகச் சிறிய கருவிகள் செய்யலாம்." என்றார்.

கிரண் முகத்தைச் சுளுக்கி, "அய்ய்யே! அது எந்த விதமா வெளியில வரும்னு நினைச்சா ...
யக்!" என்றான். ஷாலினி "சே!" என்று அவன் முதுகில் ஒரு போடு போட்டாள்!

சூர்யா குறுக்கிட்டு, "ரொம்ப ·பேஸி னேட்டிங்காத்தான் இருக்கு! கற்பனையே பண்ணிப் பாக்க முடியாத படியான விஷயங்களெல்லாம் சாத்தியமாகக் கூடும்னு தெரியுது. அதெல்லாம் தெரிஞ்சதுனால, நீங்க உங்க லேப்ல என்ன செய்யறீங்கன்னு சொன்னீங்கன்னா இப்ப இன்னும் நல்லா புரியும். சொல்லுங்க!" என்றார்.

பால், தேள் கொட்டியது போல் உதறிக் கொண்டு கனவுலகிலிருந்து கொடிய நிஜ நிலைமைக்குத் திரும்பினார். முகத்தில் மீண்டும் கவலை ஏறியது. "ஓ! ஸாரி! அதை சொல்ல ஆரம்பிச்சுட்டுதான் நாங்க எங்க எல்லாமோ போயிட்டோம். எங்களுக்குக் கவனமூட்டினதுக்கு நன்றி. சொல்றேன்." என்றார்.

பீட்டரும், "ஆமாம். நம்ம நிலைமைக்குத் திரும்பலாம்! பால் நீங்க சொல்லுங்க. நான் அவசரமா பாத்ரூம் போக வேண்டியிருக்கு! காத்தால ரொம்ப கா·பி, ஸாரி! இதோ ஒரு நிமிஷத்துல திரும்பிடறேன்" என்று சொல்லி அவசரமாக விரைந்தார்.

கிரண் புன்னகையுடன் எதோ சொல்ல ஆரம்பிக்க வாயைத் திறந்தவன், ஷாலினி யின் முகப் பாவனையிலிருந்த எச்சரிப்பை கவனித்து படக்கென்று மூடிக் கொண்டான்!

பால் தொடர்ந்தார். "நாங்க இங்க ரெண்டு மாதிரியான ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக் கோம். ரெண்டும் ஸெல் அளவில மருத்துவம் செய்யறத்துக்கான விஷயம். முதலாவது பாதிக்கப் பட்ட ஸெல்களுக்கு மட்டும் மருந்து செலுத்தக் கூடிய தொழில் நுட்பம். ரெண்டாவது பீட்டர் ஏற்கனவே சொன்ன மாதிரி ஸெல்கள் மேல ஆபரேட் செய்யறது. ஆனா, பயாப்ஸி இல்லாம ஸெல்களைச் சேர்க்கறது மட்டுமில்லை. ஸர்ஜரி செய்ய முடியாத அளவுக்கு சில ஸெல்களே பாதிக்கப் பட்ட இடத்துக்குள்ளே புகுந்து பாதிக்கப் பட்ட ஸெல்களை மட்டும் கொன்று நேனோ-ஸ்ர்ஜரி செய்யறது."

கிரண் புகுந்து "வாவ்! நினைச்சுப் பாத்தா மாலிக்யூல் அளவிலான நர்ஸ், ஸர்ஜன்ன்னு சொல்லலாம் போலிருக்கே?! ரொம்பச் சின்னவங்க. ரொம்ப சாப்பாடு, துணிமணி செலவாகாது!" என்றான்.

பால் சிரித்துக் கொண்டு, "நல்ல ஜோக்தான்! ஆனா கிட்டத் தட்ட நிஜம்னே சொல்லலாம்! இந்தத் தொழில் நுட்பத்தை இப்ப செய்ய முடியாத அளவுக்கு மிகக் குறுகலான இடங்களில மருந்து ட்ரீமென்ட், ஸர்ஜரியெல்லாம் செய்யக் கூடிய மருத்துவர் கள்னே சொல்லலாம்!" என்றார்.

ஒரு பேப்பர் டவலில் கையைத் துடைத்துக் கொண்டே திரும்பிய பீட்டரும், "ஆமாம். அந்த மாதிரியான வானுயர வருங்கால நோக்குனால தான் பால் இந்த லேப் ஆரம்பிக்க நான் உதவினேன். இது மட்டும் சரியா வேலை செஞ்சிடுச்சின்னா..." என்று சொல்லிக் கொண்டே வார்த்தைகள் கடைசியில் மழுங்கி அவரும் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டார்.

கிரண் மனதுக்குள், "போச்சுடா! இது நேனோ விஞ்ஞானிங்க வியாதி போலிருக்கு! அவங்க தொழிலைப் பத்தி பேச ஆரம்பிச்சா தியானத்துல இறங்கிடறாங்க! எர்த் காலிங் பீட்டர், ஹலோ!" என்று நினைத்துக் கொண்டான்.

சூர்யாவும் ஒரு முறை கனைத்து பீட்டரை நனவுலகுக்குக் கொண்டு வந்தார். "வேலை செஞ்சிடுச்சுன்னான்னு சொன்னீங்க. ஆனா முதல்ல செஞ்ச ப்ரோட்டோ டைப் வேலை செஞ்சுதுன்னீங்களே? அது எப்படி வேலை செஞ்சுது, எப்படிக் கெட்டுப் போச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க" என்றார்.

பாலின் முகத்தில் மீண்டும் சோகத் திரை விழுந்தது. நினைத்துப் பார்க்கவே கசந்த விஷயங்களைப் பற்றிக் கூற வேண்டியிருந்த தால் தோன்றிய வெறுப்பை விழுங்கிக் கொண்டு சூர்யாவுக்கு பதிலளித்தார். "ஆமாம், ரொம்பப் பிரமாதமாவே வேலை செஞ்சுச்சுன்னே சொல்லலாம். அப்புறம் திடீர்னு பொசுக்குன்னு காரணம் தெரியாம உருக்குலைஞ்சுப் போச்சு. ஹ¥ம்..." ஒரு நீளமான சோகப் பெருமூச்சு விட்டு விட்டுத் தொடர்ந்தார். "வாங்களேன் என் லேப்ல போய்க் காட்டறேன்." என்றார்.

ஷாலினி, "நல்ல யோசனை. பாத்தா விளங்கறா மாதிரி சொன்னாப் புரியாது. வாங்க போகலாம்." என்றாள்.

சூர்யாவும், "ஆமாம், அங்கயே ஆரம்பிக்கலாம். அப்பதான் அது கெட்டுப் போகக் கூடிய சுற்றுச் சூழல் காரணங்களும் எனக்குத் தெரிய வரும் என்றார்."

ஐவரும் பாலின் விஞ்ஞான ஆராய்ச்சி அறைக்கு நடந்தனர். அதை அறை என்று அழைக்கலாமே ஒழிய, உண்மையில் பிரும்மாண்டமான கூடம் போல் விஸ்தாரமாக விரிந்திருந்தது. அதில் அமைக்கப் பட்டிருந்த பெரும் கருவிகளும், ஆராய்ச்சி மேஜைகள் மேல் பரத்தப் பட்டுக் கிடந்த பல்வாறான, பளப் பளக்கும் சிறு கருவிகளும் கிரணுக்கு பெரும் ஆவலை ஏற்படுத்தின.

பால் தன் கண்டு பிடிப்புக்கள் எப்படி வேலை செய்தன, எப்படித் தவறிப் போயின என்று விளக்க ஆரம்பித்தார். அவர் விளக்கிய விந்தைகளை விட, அதன் பிறகு வெகு விரைவில் சூர்யா கண்டு பிடித்த துப்புக்களும், அவற்றால் அவர் கணித்த யூகங்களும் இன்னும் வியப்பளித்தன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline