|
|
சிலிக்கன் பள்ளத்தாக்கில் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன். தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான். ஷாலினி ஸ்டேன்·போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இப்போது நேனோடெக் நாடகத்தின் முடிச்சை சூர்யா எப்படி அவிழ்த்தார் என்று பார்ப்போம். சூர்யாவின் கம்ப்யூட்டர் குகையில் மூலையிலிருந்த ஒரு சோஃபாவில் ஓர் ஈரத் துணியைக் காயப் போட்டது போல் தளர்ந்து படுத்துக் கொண்டு காலாட்டியபடி ஒரு வீடியோ கேமை விளையாடிக் கொண்டு, அவ்வப்போது ஒரு சேண்ட் விச்சைக் கடித்துவிட்டு, பக்கத்தில் அலுமினியம் கேனில் இருந்த பெப்ஸி கோலாவையும் உறிஞ்சிக் கொண்டிருந்தான் கிரண்.
கம்ப்யூட்டரில் எதையோ தட்டிக் கொண்டு மின்வெளியில் உலாவிக் கொண்டிருந்த சூர்யா கிரணைப் பார்த்து "எப்படித்தான் அந்த சக்கரைத் தண்ணியைக் குடிக்கறயோ! கோக்கோ கோலா க்ளாஸிக்கில இருக்கற உறைப்பான சுவையே வராது அதுல!" என்றார்.
கிரண் முகத்தைச் சுளித்துக் கொண்டு, "யக்! கோக் க்ளாஸிக்! அது உங்களை மாதிரி அரைக் கிழங்களுக்குத்தாம்பா புடிக்கும். நாங்க எல்லாம் பெப்ஸி ஜெனரேஷன்" என்று சொல்லி விட்டு வீடியோ கேமில் எதையோ செய்ய வேண்டித் திடீரெனத் திரும்பியவன் படாரெனக் கேனைத் தட்டித் தன் மடியில் பெப்ஸி அபிஷேகம் செய்து கொண்டு, குதித்தெழுந்து மடியில் அந்த ஈரமும் குளிரும் கொடுத்த அவஸ்தையால் ஒரு வினோத மான நடனம் ஆடுவது போல் சுற்றிச் சுற்றிக் குதித்தான். தன்னையும், கேனையும், உலகத்தையும், இன்னும் சம்பந்தமில்லாத யார் யாரையோவையும் பிரசுரிக்க முடியாத கண்ட கண்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டான்.
கிரண் பட்ட அஷ்டகோணல் அவஸ்தையைக் கண்டு சூர்யாவுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது. அதைக் கண்ட கிரணுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "உங்களுக்கு என்ன, தமாஷா இருக்கு, சிரிச்சுட்டுப் போயிடுவீங்க. இந்த பேன்ட் போன வாரந்தான் இருநூறு டாலர் குடுத்து நார்ட்ஸ்ட்ராம்லேந்து வாங்கிட்டு வந்திருக்கேன். இப்பவே பாழாப் போச்சு!"
சூர்யா இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டி அமைதிப் படுத்தினார். "சாந்தி, சாந்தி! சரி, சிரிக்கலை, நிறுத்திடறேன். நீ ஆடற ஆதிவாசி டான்ஸைப் பாத்தாத்தான் அடக்க முடியலை, அவ்வளவுதான், ஸாரி!"
சூர்யாவின் ஆதிவாசி வர்ணனையைக் கேட்டு கிரணுக்கும் சிரிப்பு வந்து விட்டது. "சரி விடுங்க. ஆனா, இந்தப் பேன்ட்டை இவ்வளவு விலைக்கு விக்கறாங்களே, இந்த மாதிரி கோலாவையோ காஃபியையோ கொட்டிக்கிட்டா கறை விழாத மாதிரி துணி கண்டு புடிச்சு அதுல செய்யக் கூடாதோ!" என்றான்.
சூர்யா வியப்புடன், "கிரண், என்ன? உனக்குத் தெரியாதா? இந்த மாதிரி லேட்டஸ்ட் விஷயம் எல்லாம் நீதான் முதல்ல பாத்து எனக்கு சொல்லுவே. நீ சொல்ற மாதிரி ஸ்டெயின்ஃப்ரீ துணி வந்தாச்சே" என்றார்.
கிரண் "அது அந்த ஸ்காட்ச்-கார்ட் (scotch guard) துணி சொல்றீங்களா? அது உடுத்திக்கிற துணிக்கு ஒத்து வராது. ஸோஃபா, கார் ஸீட் அந்த மாதிரி சங்கதிகளுக்குத்தான் சரி" என்றான்.
சூர்யா தலையசைத்தார். "சே, சே! அது இல்லப்பா... நான் இப்ப புதுசா வந்திருக்கற நேனோடெக்ல செய்யற துணி பத்தி சொல்றேன். கொஞ்ச நாளுக்கு முன்னால தான் ஒரு பத்திரிகையில படிச்சிக் கிட்டிருந்தேன்."
கிரண் வியந்தான். "நேனோடெக்கா? அது கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்டதுன்னு இல்லே நான் கேள்விப் பட்டிருக்கேன். அதுல எப்படி துணி?"
சூர்யா தலையாட்டினார். "நானும் அப்படித்தான் நெனச்சுக் கிட்டிருந்தேன். ஆனா நேனோடெக் எங்கெல்லாமோ பயன்படுது. இந்தத் துணி விஷயத்துல கூட! நூல்களில எண்ணை, தண்ணி இதெல்லாம் ஒட்டாம மிதக்கறா மாதிரி ஒரு விதமான மூலக்கூறு (molecule) கலந்து செய்யறாங்க. அந்த விதமான நூலில நெய்ஞ்ச துணிகள் மேல இந்தக் கோலா மாதிரியான திரவங்களைக் கொட்டினா அப்படியே வழுக்கி விழுந்துடும். துணி ஈரம்கூட ஆகாது. அந்த மாதிரி துணியில, லீவைஸ், டாக்கர்ஸ் மாதிரி ஆடைகள்கூடச் செஞ்சு விக்கறாங் கன்னு போட்டிருந்தது."
கிரண் சிலாகித்துக் கொண்டான். "ஆஹா! நான் எவ்வளவு பேன்ட் ஷர்ட் நாசம் பண்ணியிருக்கேன், தெரியுமா? இனிமே கவலையே இல்லை. பெப்ஸி அரக்கனின் துணிக்கறைக் கொடுமை ஒழிந்தது!"
சூர்யா தொடர்ந்தார். "அது மட்டுமில்லை. இந்த ஸாக்ஸ், ஷர்ட் இதுல எல்லாம், வேர்வை நாத்தம் வராம கூட செய்யறாங்களாம்."
கிரண் ஆனந்தத்தின் எல்லையையே அடைந்து விட்டான். "பிரமாதம் போங்க. இனிமே ஷுவைக் கழட்டினா சுத்தி நாறிடப் போகுதோங்கற பயத்துலயே நாள் பூராக் கஷ்டப் படவேண்டியதில்லை. அங்கங்க கழட்டிக் காலுக்குக் கொஞ்சம் ஒத்திக்கலாம்."
சூர்யா மேலும் வேறு ஏதோ சொல்ல வாய் திறந்தார். தொலைபேசி அலறியது. சூர்யா அதை எடுத்து "ஹலோ, சூர்யா பேசறேன்" என்றார். தொலைபேசியில் பதிலுக்குக் குரல் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு கணம் ஒரு கனிவான பாவனை தோன்றி, கிரண் பார்ப்பதைக் கவனித்ததும் மறைந்து விட்டது. கிரணிடம் "இது ஷாலினி" என்று கூறிவிட்டுக் அவள் சொல்வதைக் கேட்கலானார்.
சூர்யாவின் முகத்தில் தோன்றி கணநேரத்தில் மறைந்துவிட்ட கனிவைக் கிரண் கவனித்து விட்டான். வீடியோ விளையாட்டுக்களில் சுற்றுப்புறம் யாவிலுமிருந்து திடீரெனத் தோன்றும் எதிரிகளைச் சுட்டுப் பொசுக்கிப் பழகியவனல்லவா? அவன் பார்வைக்குத் தப்பவில்லை "ஆஹா! சூர்யா, உங்களுக்கும் ஷாலினி மேல் ஈர்ப்பு இருக்கு. இருந்தாலும் மறைச்சுக்கிட்டு, உங்களையும் அவளையும் ஏமாத்திக்கறீங்களே, ஏன் சூர்யா?" என்று கேட்டு விடத் துடித்த வாயை, நாக்கைக் கடித்து அடக்கிக் கொண்டான். "சே! இந்த ஷாலினி சுத்த மோசம். சூர்யா கிட்ட இதைப்பத்திப் பேசவேணாம்னு என்னைக் கட்டிப் போட்டுட்டா. இல்லன்னா, அப்படியே..." அவன் எண்ணம் சூர்யாவை எப்படியெல்லாம் விளாச வேண்டும் என்று கற்பனைப் பிரவாகம் எடுத்தது.
"...ஓகே, உடனே புறப்பட்டு வறோம். கிரண், ஏய் கிரண். என்ன பகல் கனவு, புறப்படு. ஷாலினிக்கு எதோ உதவி வேணுமாம். பாலோ ஆல்டோல ஸ்டேன் ·போர்ட் கிட்ட போகணும்." சூர்யாவின் குரல் மீண்டும் அவனை நனவுலகுக்கு மீண்டும் படாரென இழுத்தது. "உக்கும். ஷாலினி கூப்பிட்டுட்டாளாம். வாரிக் கட்டிக்கிட்டு ஓடறதப் பாரு. கொஞ்சம் வெளிப்படையா மனசுக்குள்ள இருக்கறத அவகிட்ட சொல்லிட்டா என்ன?" என்று மனத்துக்குள் கருவிக் கொண்டு அதற்குள் வெளியில் விரைந்து விட்ட சூர்யாவைத் தொடர்ந்து ஓடினான்.
தன் புதிய போர்ஷா பாக்ஸ்டர்-எஸ்ஸின் கதவைத் தூரத் திறக்கும் சாவியால் பீப் எனத் திறந்தான். சூர்யா நேராக பயணிப் பக்கத்தில் சென்று அமர்ந்து விட்டார். "உக்காந்துட்டாரு அர்ஜுனன், நான்தான் பார்த்தசாரதி! யாரு இந்தக் கதையோட துரியோதனன்?" என்று தன் அமர்சித்ரகதா மகாபாரதத்தை மனத்துக்குள் உருட்டிக் கொண்டு கிரண் ஓட்டுனர் இருக்கையில் பாய்ந்து, அதே வேகத்தில் வண்டியை வாயு வேகத்தில் கிளப்பினான். அந்த வேகத்தில் சூர்யாவின் தலை இருக்கையில் மோதவே அவர் "கிரண், ராக்கெட் வேகத்தில கிளப்பியே ஆகணுமா என்ன? போற வழியில பத்து சிகப்பு விளக்கில நிப்போம். அப்பா! மண்டையையே உடைச்சுடுவே போலிருக்கு" என்று கடிந்தார்.
"ஸாஆஆர்ர்ர்ரி! ஈஷ்" என்று போலியாக மன்னிப்புக் கோரினான் கிரண். "வேணும்னா, உங்க தலைக்கும் ஆகறா மாதிரி ஒரு ஸீட் பெல்ட் போட்டுடலாமா? உங்களுக்கு வயசாயிடுச்சு சூர்யா, அவ்வளவுதான். அதான் என் வேகம் தாக்குப்புடிக்க முடியலை" என்றான்.
சூர்யாவுக்குச் சிரிப்பு வந்து விட்டது. "சரிடா மகனே, சரி. அப்படியே எனக்கு ஒரு கைத்தடியும் வாங்கிக் குடுத்துடு. உன் மண்டையிலே அழுத்திப் புடிச்சுட்டுத் தள்ளாடி நடக்கறேன். சரி பாத்து ஓட்டு. எங்கயாவது மரம், மான், மத்த கார் மேல எல்லாம் உன் வீரத்தையும் வேகத்தையும் காட்டிடாதே" என்றார்.
கிரண் பதிலுக்குச் சின்னக் குழந்தை போல் "வெவ்வே!" என்று பழித்துக் காட்டிவிட்டு, "சரி போகட்டும், ஷாலுவுக்கு என்ன பிரச்சனையாம்? அவசரமா வரச் சொன்னாளா?" என்று கேட்டான்.
சூர்யா, "ரொம்பத் தலைபோற அவசரம் ஒண்ணுமில்லை. ஆனா யாரோ அவளோட நெருங்கிய சினேகிதருக்கு எதோ பிரச்சனைன்னு வர சொல்லியிருக்கா அவ்வளவுதான். 280 ஃப்ரீவேயிலிருந்து ஸ்டேன்·போர்டுக்கு ஸேன்ட்ஹில் ரோடுல போறச்சே வழியில இருக்கு இந்த நேனோஜென் லேப்ஸ்ங்கற கட்டிடம். இதோ நம்பர்." அவனிடம் ஒரு சிறிய போஸ்ட்-இட் சீட்டைக் கொடுத்தார்.
கிரண் ஒரு புருவத்தை உயர்த்தினான். "நேனோ... ஜென்னா? அப்படின்னா இப்ப புறப்படறத்துக்கு முன்னாடி பேசிக்கிட்டிருந்தோமே..." |
|
சூர்யா தலையாட்டினார். "ஆமாம், அதேதான். பிரமாதமான கோ-இன்ஸி டன்ஸ், இல்லையா? எனக்கும் ஒரே ஆச்சர்யமாத்தான் இருந்தது."
கிரண், ஒரு கையை மேலும் கீழும் மெள்ள உதறிக் கொண்டு பயப்படுவது போல் பாசாங்கு செய்தான். "ஊ... ஊ... ஸ்பூக்கி! பூச்சாண்டி! சூர்யாவுக்கும் ஷாலுவுக்கும் எதோ எக்ஸ்ட்ரா ஸென்ஸரி பர்ஸெப்ஷன் (ESP) தொடர்பு இருக்கு. இது தெய்வீகமா இல்லை பயங்கரமா? பார்வையாளர்களே நீங்களே முடிவு செய்யுங்கள். இன்று இரவு 8 மணிக்கு, உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக, சன் டி.வி.யில் அதிரடிக் காட்சி!" என்று தன் தந்தை பார்க்கும் தமிழ் டி.வி. யில் கேட்டதைப் போல் அறிவித்து நையாண்டி செய்தான்.
சூர்யா முறுவலுடன் செல்லமாக அவனை அடிப்பது போல் கையை உயர்த்தினார். கிரண் பயப்படுவது போல் பதுங்கிக் கொண்டான். அதே நேரத்தில் காரையும் படுவேகத்தில் ட்ரைவ் வேயில் ஸ்க்றீச் எனத் திருப்பி சூர்யாவையும் பக்க வாட்டில் சரிந்து விழ வைத்து ஒரு பெரிய குலுக்கலுடன் நிறுத்தி விட்டு அட்டகாசமாகச் சிரித்தான். "இது எப்படி இருக்கு? வந்து சேந்தாச்சு, எழுந்து உங்க எலும்பையெல்லாம் திருப்பி ஒட்டிக்குங்க" என்றான்.
சூர்யா பொய்க் கோபம் காட்டினார். "சே, நீ திருந்தவே மாட்டப்பா. இப்படியே பண்ணிக்கிட்டிரு, பாரு, ஒரு நாள் பாரு நிஜமாவே உன் எலும்பையெல்லாம் ரோட்லேந்து பொறுக்கிச் சேத்து ஒட்ட வேண்டியிருக்கும்."
கிரண் அலட்சியமாக, "என் போர்ஷாவும் பீமர் z8-ம் ஓட்டினேன்னா அந்தக் சான்ஸேயில்லை. உங்க யப்பி செடான் களில சத்தியமா இப்படி ஓட்ட மாட்டேன், கவலை வேண்டாம்" என்று நக்கலாகக் கூறிவிட்டு, முன்னாலிருந்த கட்டிடத்தைப் பார்த்து முகம் சுளித்துக் கொண்டான். "அய்யே, இது என்ன ப்ளெயினா கவர் மென்ட் கட்டிடம் மாதிரியில்லே இருக்கு? நேனோடெக்னா சும்மா பளபளன்னு டின்ட் கண்ணாடி வச்சு ஜிகினாவா இருக்கும்னு பாத்தேன்."
சூர்யா தலையசைத்து மறுத்தார். "இல்லை கிரண். ஒரு நிறுவனத்தோட ஆரம்பக் காலத்துல கட்டிடத்துல பணம் போட்டா அதோகதிதான். அதோட தொழில் நுட்பத்துக்குத்தான் பணம் போடணும். உனக்குத் தெரியுமா, HP ஆரம்பிச்சது ஒரு கராஜுலதான். Apple கூட. இன்னும் பலப் பல நிறுவனங்கள் அப்படித்தான். தாம் தூம்னு பணம் செலவழிச்ச டாட்காம் எல்லாம் இப்ப பாம் தெரியும் இல்லையா? கட்டிடம் வெளியில எப்படி இருக்குங்கறது முக்கியமே இல்லை. உள்ள யார் இருக் காங்க, எப்படி வேலை செய்யறாங்கன்னு பாரு."
இந்தப் போதனை கிரணுக்குச் சுருக் கென்று உறைத்தது. சூர்யா சொன்னதின் உண்மையை உணர்ந்தாலும் காட்டிக் கொள்ள விருப்பமில்லாமல் விளையாட்டாக உதறினான். "தாம், தூம், காம், பாம்! சூர்யா அவர்களே, என்ன வார்த்தையில அடுக்கு வரிசை விளையாடுது? பேஷ்! ஆனா பாருங்க, ஆழமா மட்டும் பாக்க எனக்கு இன்னும் வயசாகல, கொஞ்ச நாளு மேல் அழகையும் ரசிக்கறேனே விட்டுடுங்க சாமி" என்றான்.
அவன் முகம் காட்டிய சிந்தனைகளை கணப் பொழுதில் கண்டு கொண்டுவிட்ட சூர்யா, இன்னும் அவனுக்குப் போதனை அவசியமில்லை என்று உணர்ந்து கொண்டு "சரிப்பா, ரசி, ரசி... ஆனா இப்ப நடக்கற காரியத்தைப் பார்க்கலாம்" என்று வேக மாகக் கட்டிடத்துக்குள் தன் நீளக் கால் களை வீசி நடந்து விரைந்தார். கிரண் அவர் பின் "அப்பா, ரோட்ரன்னர் தோக்கறா மாதிரி நடக்கறதைப் பாரு! இந்த வேகத்துக்கு நமக்கு ஒரு பவர் ஸ்கூட்டர்தான் வேணும்" என்று மனத்துக்குள் திட்டிக் கொண்டே ஓடினான்.
நிறுவனத்தின் அழைப்பறையில் சுமார் இருபது வயது இருக்கக் கூடிய, கண்ணைப் பறிக்கும் அழகான இளசு "வெல்கம் டு நேனோஜென். வாட் கேன் வீ டூ ஃபார் யூ?" என்று காது திகட்டும் இனிமையுடன் கூவியது. கிரண் அப்படியே கரைந்து உடனே தன் கவர்ச்சிப் புன்னகையுடன் அவளைக் கண்ணாலேயே காதலிக்கத் துவங்கினான்.
சூர்யா இனிமேல் அவனை நம்பிப் பயனில்லை என அந்த வரவேற்பழகியிடம் "நாங்கள் ஷாலினியைப் பார்க்க வந்திருக்கிறோம். சூர்யா என்று அறிவியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். கிரணிடம் பதிலுக்குக் கண்காதல் நடத்திக் கொண்டிருந்த இளசு வேண்டா வெறுப்பாக, கண்ணை எடுக்காமல் தொலைபேசியில் இனிமையாகக் கிண் கிணித்தது. கிரண் மேலும் சொக்கினான். "அப்பா! உங்க குரல் எவ்வளவு இனிமை" என்றான். இளசு சொக்கலாகத் "தேங்க்ஸ்" என்றது. கண்காதல் தொடர்ந்தது.
அவர்கள் வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்த ஷாலினி கட்டிடத்தின் அழைப்பறைக்கு ஓடி வந்தாள். சூர்யாவைக் கண்டதும் எப்போதும் போல் அவள் நெஞ்சில் நேசம் பொங்கி முகத்தில் பிரகாசித்தது. சூர்யாவின் பின் நின்ற கிரண் அவள் முகத்தில் பிரதிபலித்த உணர்ச்சிகளைக் கண்டு தலையை மெல்ல ஆட்டி கண்ணையும் கையையும் சூர்யாவின் பக்கம் காட்டி மெளனமாக ஊக்குவித்தான். ஆனால் சூர்யாவின் சோகத்தைத் தெரிந் திருந்ததாலும், தன் மனத்தில் ஓடிய எண்ணங்களைச் சொல்லத் துடித்தாலும் சொல்லும் நேரம் அதுவல்ல என்பதை உணர்ந்திருந்ததாலும் அடக்கிக் கொண்டாள். தன்னை ஊக்குவித்த சகோதரன் கிரணையும் வேறு யாருக்குமே தெரியாத அளவு மிக சன்னமான தலையசைப்பால் மறுத்து அடக்கினாள்.
கிரண் மனத்துக்குள் "சே! இவங்க புரிஞ்சுகிட்டு சேரறத்துக்குள்ள நான் தாத்தா ஆயிடுவேன் போலிருக்கு" என்று சலித்துக் கொண்டான்.
தமக்கை, தம்பிக்குள் நடந்த இந்த குறுநாடகத்தை சூர்யா கவனித்தாரோ, இல்லையோ ஆனால் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. எதுவும் தப்பாத அவருடைய கூரிய பார்வைக்கு இந்த உணர்ச்சி நாடகம் தப்பியிருக்குமா என்ன? காலம் காட்டும் வழி என்னவோ, பிறகு பார்ப்போம் - இப்போது சூர்யா அவிழ்க்க வேண்டிய நிகழ்காலப் புதிர் என்னவென்று கவனிப்போம்.
சூர்யா வழக்கம் போல் கறார் பிஸினஸ் மயமாக "ஷாலினி, இந்தக் கேஸ்ல முன்னடியா சம்பந்தப் பட்டவங்களோட பேசறத்துக்கு முன்னாடி, அதைப் பத்தி கொஞ்சம் விவரம் சொல்லிடேன்" என்றார்.
ஷாலினி "சரி, உள்ள வாங்க, சொல்றேன்" என்று அழைத்துச் சென்றாள். கிரண் கடைசியாக வாசல் இளசுக்கு ஒரு காதல் புன்னகையை வீசி விட்டு, பிறகு வந்து பார்க்கிறேன் என்று சுட்டி விரலைச் சுழற்றி ஒரு சைகை காட்டி அவளின் சம்மத முறுவலை வாங்கித் தன் இதயத்தில் சேமித்துக் கொண்டு உள்ளே நடந்தான்.
ஷாலினி ஒரு பெருமூச்சுடன் தன் உணர்ச்சிகளைத் தள்ளி வைத்து விட்டு விவரிக்க ஆரம்பித்தாள். "நேனோஜென் ஓர் ஆரம்ப நிலை நிறுவனம். நேனோடெக்னா என்னன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்..." ஒரு கணம் கேள்விக் குறியுடன் நிறுத்தினாள்.
சூர்யா "பொதுவா ரொம்ப மேலாகத் தெரியும். இப்ப அதுபத்தி ரொம்ப வேணாம். என்ன பிரச்சனைன்னு கொஞ்சம் சொல்லு. தொழில்நுட்பம் பத்தி அப்புறம் இன்னும் விவரமா தெரிஞ்சுக்கலாம்" எனத் தூண்டினார். கிரணும் தலையாட்டி ஆமோதித்தான்.
ஷாலினி தொடர்ந்தாள். "இந்தக் கம்பனி நேனோடெக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உடல்நலம் சம்பந்தப் பட்ட கருவிகளை உருவாக்கறத்துக்காக நிறுவப்பட்டது. தொழில்நுட்பமும் நல்லாத்தான் வளர்ந்தது. ஆனா சில நாளுக்கு முன்னாடியிலிருந்து நிலைமை கொஞ்ச கொஞ்சமா மோசமாயிட்டிருக்கு. நல்லா வேலை செய்யுதுன்னு நினைச்ச கருவிகள் தவறான முடிவைக் குடுத்திட்டிருக்கு. நிறுவியவர் பால் ஜென்னிங்ஸ். ஆரம்ப மூலதனம் போட்டவர் பீட்டர் ஸ்டம்ப். அவங்க ரெண்டு பேர்தான் உங்களுக்காகக் காத்துகிட்டிருக்காங்க. இந்த மாதிரி திடீர்னு எல்லாம் தவறாப் போகறது யாராவது வேணும்னே செய்யற சதியாத்தான் இருக்கும்னு ரெண்டு பேரும் சந்தேகிக்கறாங்க. அதைப் பத்தி ஆராய்ஞ்சு கண்டு பிடிக்கத்தான் உங்களை வரவழைச்சிருக்காங்க."
கிரண் குதூகலித்தான். "ஆஹா, அதுக் கென்ன? கண்டு புடிச்சிட்டாப் போச்சு. நம்ம சூர்யா ஒரு நாலு பேரைக் கூப்பிட்டு ஒரு குடாய் குடாய்ஞ்சாத் தானா முடிச்சு அவுந்துக்குமே! இல்லன்னா நம்ம ஃப்ரென்ட் மார்க் ஹாமில்டன்தான் இருக்காரே. அவரைக் கூப்பிட்டு முட்டிக்கு முட்டி தட்டச் சொன்னாப் போச்சு. கக்கிட மாட்டாங்க!"
ஷாலினி கிரணை அடக்கினாள். "சே, சே. அப்படி முடியாது கிரண். சூர்யாவைக் கூப்பிட்டதே பொத்திவச்சு சத்தமில்லாமக் காரியத்தை முடிக்கணும்னுதான். உள்ளாட் களைப் பத்தி வெளிப்படையா விசாரிச்சு இங்க வேலை செய்யற தலை சிறந்த விஞ்ஞானிகள் மேல குற்றம் சாட்ட விரும்பலை. மூலதனமிட்டவங்களுக்கும் தெரியாம செய்யணும்னு பாக்கறாங்க. சூர்யா அமுக்கமா ஆராய்ஞ்சு எந்த அளவுக்குக் கண்டு புடிக்க முடியும்னு பாக்க நினைக்கறாங்க. அதுல தெரியற விஷயத்தை வச்சு மேல் நடவடிக்கையைப் பத்தி யோசிக்கலாம்னு இருக்காங்க. அதுனால நீங்க விசாரிக்கற மாதிரி இல்லாம, நீங்களே நேனோடெக் பத்தித் தெரிஞ்சுக்கறதாக இங்க வந்திருக்கறா மாதிரி நடிக்கணும். தீவிர விசாரணையில இறங்கக் கூடாது."
கிரண் சோகமாகத் தலையாட்டினான். "சரிதான். ஆரம்பமே அபஸ்வரமா இருக்கே. ரெண்டு கையையும் பின்னால கட்டிட்டு புதையலைத் தோண்டி எடுன்னா எப்படி? இது நடக்கறா மாதிரி சங்கதியா எனக்குத் தோணலை. விட்டுடலாம்" என்றான்.
சூர்யா மறுத்தார். "இல்லை கிரண். அவங்க மனப்பான்மை எனக்குப் புரியுது. நான் அவங்க நிலைமைல இருந்தா நானும் அப்படித்தான் சொல்லியிருப்பேன். அப்படி வெளிப்படையா விசாரிக்கறதா இருந்தா அவங்க போலீஸையே கூட்டிருக்கலாமே? நாம அமுக்கமாக் கண்டு புடிப்போம்னு ஷாலினி உறுதி குடுத்ததுனால நம்ம மேல நம்பிக்கை வச்சிருக்காங்க. அதைக் கலைச்சிடாம, ஷாலினியுடைய வாக்கை நாம காப்பாத்தணும். நாம முடியாதுன்னு போயிட்டோம்னா அவங்களுக்கு உதவி கிடைக்காம எப்படிக் கஷ்டப்படுவாங்க? ஷாலினி மேலயும் அவங்களுக்கு மனத் தாங்கல் வரும். அவங்க கேட்டபடியே செஞ்சு நம்மால எவ்வளவு முடியும்னு பாக்கலாம். அதுல தெரியறத வச்சு என்னும் தீவிரமான, வெளிப்படையான விசாரணையில இறங்கணுமா, வேணாமான்னு அவங்களே முடிவு செஞ்சுக்கட்டும்."
ஷாலினி மிக்க நன்றி கலந்த நேசத்துடன் சூர்யாவை நோக்கி ஒரு கனிவுப் புன்னகை வீசி விட்டு, "ஆமாம் கிரண், சூர்யா சொல்றது ரொம்பச் சரி. முடிஞ்சதைப் பாக்கலாம், ப்ளீஸ்!" என்றாள்.
கிரண் பெருமுச்சு விட்டான். "சரி, சரி, பெரிசுங்க சொல்றீங்க, கொஞ்சம் பாத்துடுவோம். வாழ்க்கையில ஒரு சேலஞ்ச் இருந்தாத் தானே விறுவிறுப்பும் இருக்கு. நடங்க" என்றான்.
மூவரும் பால், பீட்டர் இருவரும் காத்துக் கொண்டிருந்த அறைக்கு விரைந்தனர்.
அறிமுகங்கள் முடிந்ததும் சூர்யா அவர்கள் இருவரையும் நோட்டமிட்டார். நிறுவனத்தின் நிலைமையைப் பற்றிய கவலை அவர்கள் முகத்தில் படிந்து, அவர்களை மிகவும் வாட்டியிருப்பது நன்றாகத் தெரிந்தது. இருவரும் வாட்ட சாட்டமான உடல் வாகுடன் ஆஜானுபாகுவாகத் தோற்ற மளித்தாலும் கவலையால் குன்றிப் போய்த் தொய்ந்த குரலும் பலகீனமான கை குலுக்கலுமாய் வரவேற்றனர். பூடகமான துப்பறிவால் சூர்யாவால் என்ன சாதித்து விட முடியும் என்ற சோகம் கலந்த அவநம்பிக்கை அவர்கள் குரலிலும் தோரணையிலும் பிரதிபலித்தது.
ஆனால், சூர்யா அடுத்து வீசிய வேட்டுக்கள் அவர்களின் அவநம்பிக்கையைத் தகர்த்து, தோரணையை நிமிர்த்தி, எதிர்பார்ப்பில் திளைக்க வைத்தன.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|