முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். சூர்யாவால் உதவ முடியுமா என்று மேரி அவநம்பிக்கை காட்டவே சூர்யா இரண்டு யூக வேட்டுக்களை வீசி நம்பிக்கை துளிர்க்க வைக்கிறார். பிறகு ஆராய்ச்சிக் கூடத்துக்கு சென்று பலதரப்பட்ட கணினிகளையும் அவற்றை இணைக்கும் லேஸர் ஒளிக் கதிர்களையும் கண்டு வியக்கிறார்கள். அதன்பின் குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதை அடுத்துப் பார்ப்போம் வாருங்கள்!
★★★★★
தங்கள் கண்முன் விரிந்த மாயாஜால ஒளிக்கதிர் உலகத்தை சூர்யா, கிரண், ஷாலினி மூவரும் கண்டு அசந்தே போனார்கள்! கிரண் வழக்கம் போல் குதூகலத்தோடு துள்ளினான்! "ஹே, ஹே, வாவ் மேரி! இது என்ன பிரமாதமான அசத்தலா இருக்கு! நான் எங்க நிதிநிறுவனத்தோட பல தகவல் மையங்களுக்குள்ள போய்ப் பாத்திருக்கேன். ஆனா இது அதையெல்லாம் லபக்குன்னு அள்ளி முழுங்கிடும் போலிருக்கே! என்ன இந்த லேஸர் கதிர்க் காட்சியெல்லாம்? முதலீட்டாளர் வந்தா மாயாஜாலம் காட்டி நைஸா அவங்களைத் தாஜா பண்ணி பணம் புடுங்கவா!"
ஷாலினி அவனைக் கடிந்து கொண்டாள், "கிரண், சே, என்ன பிதற்றல் இது? மேரியைப்பத்தி இப்படி அபாண்டமாப் பேசினா அவளுக்குச் சங்கடமாகாது?"
மேரி கலகலவெனச் சிரித்தாள். "பரவாயில்லை ஷாலினி! கிரண் சொன்னதுல ஓரளவு உண்மையும் இருக்கு! இப்படி லேஸர் கதிர்களை வெளியில் காட்டாம எல்லாத்தையும் பொட்டிக்குள்ள மூடி வச்சிருக்கலாந்தான். ஆனா உங்களை மாதிரி பார்வையிட வரவங்களுக்கு எங்க நுட்பத்தைப் பத்தி விளக்கறது இன்னும் கடினமாயிடும். கிரண் நீ சொன்ன முதலீட்டார்களுக்குக் கூடத்தான்!"
கிரண் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, ஷாலினியின் தோளில் தன் கைமுட்டியால் இடித்துக் கொக்கரித்தான். "உக்கும்! கேட்டுக்கோ ஷாலு! அய்யாவா, கொக்கா! அடிச்சேன் பாரு , அப்பா பாக்கற கிரிக்கெட்ல வராமாதிரி ஒரு அதிரடி ஸிக்ஸர்!"
மேரி மீண்டும் கலகலவெனச் சிரித்தாள்! "எனக்குக் கிரிக்கெட் பத்தி ஒண்ணும் தெரியாது. ஆனா நீ சொல்றத பாத்தா பேஸ்பால் ஆட்டத்துல வர ஹோம் ரன் மாதிரின்னு தோணுது. ஆனா உன் கருத்து அப்படியொண்ணும் பிரமாதமில்ல கிரண். ரொம்ப அலட்டல் வேண்டாம். எல்லாரும் அங்க பாருங்க, கருப்பா மூடி வச்சு வெறும் பொட்டி மாதிரியிருக்கில்ல. அதைத் திறந்து காட்டறேன் அதுக்குள்ளயும் இந்த மாதிரி லேஸர் கதிர்கள் பாயறதப் பாக்கலாம். ஆனா இப்படி கூடத்துல வெளிப்படையாக் காட்டினா இங்கேர்ந்தே விளக்கலாம் இல்லயா, அதுக்குத்தான் இப்படி!"
சூர்யா முறுவலித்தார். "ஆமாம் கிரண், கொஞ்சம் அடக்கியே வாசி, நல்லதுதான். மேரி, இங்கேர்ந்தே விளக்கலாம்னு சொன்னீங்களே, அப்படியே விளக்குங்களேன். ஆனா குவான்ட்டம் கணினிகள் எப்படி வேலை செய்துன்னு ஏபிஸிடியா முதல்லேர்ந்து விளக்கணும். நான் கொஞ்சம் இணைய தளங்களில படிச்சு தெரிஞ்சுகிட்டிருக்கேன். ஆனா நீங்க அடிப்படையிலேர்ந்து விளக்கினா உங்க நவீன நுட்பத்தைப் பத்தியும் இப்ப ஏற்பட்டிருக்கற பிரச்சனையைப் பத்தியும் நல்லாப் புரிஞ்சுக்க உதவியாயிருக்கும்."
அவர் தங்கள் நுட்பத்தைப் பற்றிக் குறிப்பிட்டதும் உற்சாகமடைந்த மேரி, உடனே பிரச்சனையைப் பற்றிக் குறிப்பிடவே உடைந்தே போனாள். அவள் முகம் தொய்ந்து போனதைக் கவனித்த ஷாலினி, மேரியின் அருகே விரைந்து சென்று அவளை ஒரு கையால் அரவணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினாள். "புரியுது மேரி, பிரச்சனையைப் பத்தி சொன்னவுடனே உன் மனம் ரொம்ப வேதனையடைஞ்சுடுச்சு. ஆனா பரவாயில்லை, அதை நிவர்த்திக்கணும்னா அதைப்பத்தி விளக்கினாத்தானே மேற்கொண்டு ஆராய்ஞ்சு முயற்சிக்க முடியும்!"
அவள் வார்த்தைகளால் சற்றே ஆறுதல் அடைந்த மேரி, குவான்ட்டம் ஒளிக் கணினிகளின் அடிப்படை நுட்பங்களை விவரிக்க ஆரம்பித்தாள். "பொதுவாகக் கணினிகள் பைனரி டிஜிட் எனப்படும் பிட் என்பதை அடிப்படையா வச்சுத்தான் செயல்படுது. அதைப்பத்தி உங்களுக்குத் தெரியுமா... இல்லை அதையும் விளக்கட்டுமா?"
கிரண் முந்திக் கொண்டு துள்ளினான்! "ஹையா! எனக்கு பிட், பைட், மெகாபைட், கிகாபைட் எல்லாமே நல்லாத் தெரியும்! நேரா குவான்ட்டத்துக்கு வண்டியை ஓட்டுங்க!"
மேரி முறுவலுடன் ஷாலினியை நோக்கினாள். "ஷாலினி நீ பயோடெக் துறையாச்சே, உனக்குப் பரவாயில்லயா?"
ஷாலினி முறுவலித்தாள். "அதுபத்தி கொஞ்ச நஞ்சமாவது தெரியாம இவங்க ரெண்டு பேரோடயும் எப்படி குப்பை கொட்டறது. நானும் ஏதோ அங்க இங்க படிச்சு ஓரளவு தெரிஞ்சுகிட்டிருக்கேன். பிட் விஷயத்தைப் பத்தி ரொம்ப விளக்க அவசியமில்லை."
சூர்யா முறுவலுடன் மேற்கொண்டு விவரிக்குமாறு சைகை செய்யவே, மேரி ஒரு மூச்சு வாங்கிக் கொண்டுத் தொடர்ந்தாள்: "ஓகே ஒரு அடிப்படைக்கு மட்டும் தற்கால பிட் கணினிகளைப் பத்தி மேலோட்டமா சொல்லிட்டுக் குவான்ட்டத்துக்குப் போறேன். நீங்க பயன்படுத்தற மடிக்கணினி, திறன்பேசி (smart phone) போன்ற அனைத்துமே கணித்துண்டு (பிட் அல்லது Bit) கணினிகள்தாம். அதாவது 0 அல்லது 1 என்ற இரண்டு எண்களை மட்டுமே ஒரு பிட் ஏற்றுக்கொள்ள முடியும். அதில் 16, 32 அல்லது தற்காலத்திம் மிக முன்னேறி 64 கணித்துண்டுகளை ஒரு கணினிப் பதிப்பானில் (Register) இணைக்கிறார்கள். ஒரு கணினியின் மத்திய இயக்கக் கருவியில் (central processing unit - CPU), அவ்விதமான பல பதிப்பான்கள் இருக்கும். அப்பதிப்பான்களில் உள்ள கணித்துண்டுகளை, கூட்டல், பெருக்கல் போன்ற பலவிதமான கணித கணிவேலைகள் (operations) மற்றும் அண்ட், ஆர், நாட், எக்ஸார் (And, Or, Not, Exor) போன்ற தர்க்கரீதியான (logical) கணிவேலைகள் மூலம் மற்றும் கட்டளைகளை (instructions or commands) கோவையாகச் செய்துதான் எல்லா பயன் நிரல்களும் (application programs) நடக்கின்றன – இணையம் உட்பட."
கிரண் பொறுமையின்றிப் பொறுமினான், "அதான் எனக்குத் தெரியுமே! குவான்ட்டம் கணினியில வேற எப்படி நடக்குதுன்னு..."
சூர்யா கையை உயர்த்திக் கிரணை அடக்கினார். "கிரண், குவான்ட்டம்ல எப்படி மாறுதுங்கறதுக்குத்தான் மேரி கணித்துண்டு கணினில எப்படி பயன் நிரல்கள் நடத்தப்படுதுன்னு சுருக்கமா சொல்லி அஸ்திவாரம் போட்டிருக்கா. அதுல சொன்ன ஒவ்வொரு குறிப்புக்கும் குவான்ட்டம் கணினியில எது ஒரே மாதிரி இருக்கு, எது வேறுபடுதுன்னு விளக்கறதுக்காக அந்த விவரங்களை நாம பட்டியல் போட்டு வச்சுக்கணும். சரியா மேரி?"
மேரி கைகொட்டி ஆரவாரித்தாள். "அப்படியேதான் சூர்யா. பிரமாதமா சொல்லிட்டீங்க. ஆனா நான் குவான்ட்டம் கணினில எப்படி வேறுபடுதுன்னு விளக்கறத்துக்கு முன்னால குவான்ட்டம் கோட்பாடுகளைப் பத்தி கொஞ்சம் விளக்க வேண்டியிருக்கு. அதைக் கட்டடத்தின் முதல்தளம்னு வச்சுக்கலாம். அதுக்கு மேல குவான்ட்டம் கணினியின் தளங்களை ஒவ்வொண்ணாக் கட்டலாம், என்ன?"
சூர்யா ஆமோதித்தார். "ரொம்பச் சரி, மேல சொல்லுங்க மேரி."
மேரி குவான்ட்டம் கோட்பாடுகளை எப்படி விளக்கினாள் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.
(தொடரும்) |