|
|
|
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவருக்கு உதவுகின்றனர். கிரண் வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். சூர்யாவால் உதவ முடியுமா என்று மேரி அவநம்பிக்கை காட்டவே சூர்யா இரண்டு யூக வேட்டுக்களை வீசி நம்பிக்கை துளிர்க்க வைக்கிறார். குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்...
★★★★★
சூர்யா வீசிய இரண்டு யூக வேட்டுக்களால் மலைத்துப் போய் சூர்யாவின் திறமையில் சற்று நம்பிக்கை வளர்த்துக் கொண்ட மேரியை மற்றொரு யூக வேட்டை வீசி அதிரச் செய்தார் சூர்யா: "மேரி, இந்தத் திருட்டு விஷயமா உங்க குழுவிலேயே ஒருவரைச் சந்தேகிக்கறீங்க போலிருக்கு. ஒரு குறிப்பிட்ட குழு உறுப்பினரையா அல்லது பொதுவா குழுவில யாரோ ஒருவர்னு சந்தேகிக்கிறீங்களா?"
அந்தக் கேள்வி மேரியை உலுக்கிவிட்டது! "எ... எ... எப்படி அதை நீங்க யூகிக்க முடியும். முன்ன யூகிச்சதாவது என் கணிணிகளில எதையோ பாத்துட்டு யூகிச்சீங்க, அது சரி. இது எப்படி! நான் நினைக்கறதை யாருக்கும் தெரிவிக்கலையே!"
சூர்யா முறுவலுடன் விளக்கினார். "நீங்க சொல்றது சரிதான். இது பதிக்கப்பட்ட விவரத்தை வச்சு யூகிக்கலை. நீங்க மேற்கொண்ட நடவடிக்கையையும் இன்னும் முக்கியமா மேற்கொள்ளாத நடவடிக்கையையும் வச்சுத்தான் கணிச்சேன்."
மலைத்துப் போன மேரி அத்துடன் குழப்பத்தையும் சேர்த்துக் கொண்டாள்! "அது என்ன மேற்கொண்ட மேற்கொள்ளாத நடவடிக்கைகள், புரியலையே?"
ஷாலினியும் தலையாட்டியபடி கேட்டாள், "ஆமாம் சூர்யா! எனக்கும் முழுசா புரியல. மேரி என்னிடம் பேசியதை மேற்கொண்ட நடவடிக்கைன்னு கோடி காட்டறீங்க போலிருக்கு. ஆனா மேற்கொள்ளாதது என்ன!"
கிரண் ஒரு கையை உயர்த்தித் துள்ளிக் குதித்தான்! "ஊ... ஊ...! பிக் மீ! நான் சொல்றேன், நான் சொல்றேன், ப்ளீஸ் சூர்யா!"
சூர்யா புன்னகையுடன் தலையட்டி, கை சைகையால் கிரணைத் தொடருமாறு தூண்டினார். கிரண் தனக்குப் புரிந்ததை விளக்கினான்,
"மேரி, நீங்க இந்தத் திருட்டைப் பத்தி உடனேயே போலீஸுக்குப் புகார் செய்யாம ஷாலினிக்குக் கோரிக்கை அனுப்பியதைத்தான் சூர்யா மேற்கொள்ளாத நடவடிக்கைன்னு குறிப்பிடறார் போலிருக்கு."
சூர்யா கை தட்டினார். "சபாஷ் கிரண்! பழக்க தோஷத்துல உனக்கும் யூகத் திறமை கொஞ்சம் வளர்ந்திருக்கு போலிருக்கு!"
கிரண் ஷாலினியைப் பார்த்து "இப்ப என்ன சொல்றே?! பாரு சூர்யாவே என் யூகத் திறமையைப் பாராட்டிட்டாரு!" என்று கொக்கரிக்கவே ஷாலினி முகத்தைச் சுளித்துக் கொண்டு பழித்தாள்! "வெவ்வே! ரொம்பத்தான் அலட்டிக்காதே! எதோ ஒரு குருட்டு யோகத்துல ஒரு யூகம்!"
சூர்யா இடைமறித்தார். "சரி, சரி விஷயத்துக்கு வருவோம். மேரி நீங்களே சொல்லுங்க. ஏன் புகார் குடுக்காம ஷாலினிக்குச் செய்தியனுப்பினீங்க? உள்நபர் பத்திய சந்தேகந்தானே – அது என்னன்னு கொஞ்சம் வெளிப்படையா சொன்னா மேற்கொண்டு விசாரிக்க உதவும்."
மேரி கை கொட்டிப் பாராட்டினாள். "உங்க யூகம் சரிதான்... நாம ஆராய்ச்சிக் கூடத்துக்குள்ள போகலாம். அங்க உங்களுக்கு நான் என் சந்தேகத்தைப் பத்தி மேற்கொண்டு விளக்கம் சொல்றேன்."
நால்வரும் உள்கதவைத் திறந்து கொண்டு நுழைந்தனர். மேரி முதலில் உள்ளே நுழைந்து வலப்புறம் ஒருபக்கமாக நின்று, பவ்யமாகக் குனிந்து வலக்கையை கீழ்பக்கமாக விரித்துக் காட்டி வரவேற்றாள். "வாருங்கள் வாருங்கள், எங்களுடைய அற்புதமான குவான்ட்டம் ஒளிக்கணினித் தயாரிப்புக்கான ஆராய்ச்சிக் கூடத்துக்கு நல்வரவு! உங்களால் வெகுவிரைவில் என் பிரச்சனை நிவாரணமாகட்டும். முதலில் ஆராய்ச்சிக் கூடம் முழுவதையும் ஒரு கண்ணோட்டம் விடுங்கள். அதன் பிறகு விவரமாக விளக்குகிறேன்" என்றாள்.
அங்கு அவர்கள் கண்டது ஒரு களேபர கனவுலகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆராய்ச்சிக் கூடத்தின் நடுவில் வட்டமாகப் பல குவான்ட்டம் கணினிகள் அமர்த்தப் பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை, ஒவ்வொன்றும் ஒரு மொத்த பூஜ்ய (absolute zero) வெப்பநிலைக்கு வெகு அருகில் இருக்குமாறு குளிர்மைப் படுத்தப்பட்ட பளபளவென மின்னும் தாமிர உருளிக்குள் கட்டமைக்கப் பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி மார்கழிப் பனிபோல் குளிர்ப்படலம் சூழ்ந்திருந்தது.
ஆனால் அதே வட்டத்தில் ஓரிரு கணினிகள் மொத்த பூஜ்ய அளவுக்கு குளிர்படுத்தப் படவில்லை. சென்னையில் அறைகளுக்கு குளிர்பதனம் செய்யப் படுமல்லவா, அது போன்ற குளிரூட்டிகளால் சற்றே குளிர்படுத்தப் பட்டு பனிப்படலம் சூழாமல் வெறுமனே காட்சியளித்தன!
கிரண் ஷாலினியிடம் முணுமுணுத்தான். "ஹே ஷால்! பாத்தியா அந்த ரெண்டு கம்ப்யூட்டர் மட்டும்?! கவர்ச்சியான ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட் நீச்சலுடைக் காலண்டர் மாடல் மாதிரி பனி ஆடை போத்திக்காம வெளிப்படையா இருக்கு. வெக்கமே இல்லை அதுங்களுக்கு!"
ஷாலினி அடக்க முடியாமல் களுக்கென்று சிரித்தாலும் பட்டென்று அவன் தோள்பட்டை மேல் தட்டி உஷ் என்று விரலை உதட்டின்மேல் வைத்துக் காட்டி அடக்கினாள்.
அதைக் கவனித்த மேரி என்ன என்று வினாவவும் கிரண் முந்திக் கொண்டு, அதை ஆங்கிலத்தில் விளக்கவும் மேரி ஹா ஹாவென அடக்க முடியாமல் சிரித்து விட்டு "நீ சரியான கோமாளிதான் கிரண்! ஐ லைக் இட்!" என்று சொல்லவும் கிரண் ஷாலினியை ஒரு கையால் இடித்து, "பாத்தியா, பாத்தியா, அய்யாவோட காமெடி மகாத்மியத்தை!" என்றான்.
ஷாலினி தலையில் அடித்துக் கொண்டு, "ஓ மை காட்! மேரி நீ வேற இவனை ஊக்குவிக்காதே! அப்புறம் இவன் அடிக்கற அறுவை ஜோக்குல நம்ம கழுத்தெல்லாம் ரணகளந்தான்!" என்றார். மேரி கலகலவெனச் சிரித்துவிட்டு, "சரி சரி, அந்தக் கணினி வட்டம் இருக்கட்டும், அதைச் சுத்தி இருக்கறதையெல்லாம் பாருங்க, அப்புறம் விளக்கறேன்" என்றாள்.
சூர்யா அவர்கள் பேசிக் கொள்வதை உதாசீனம் செய்துவிட்டு ஆராய்ச்சிக் கூடத்தின் மற்ற அம்சங்களை மிகக் கவனமாக உற்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்.
அவர்களின் தலைக்கு மேல் சதுரம் சதுரமாக அமைக்கப் பட்டிருந்த அகலமான அலுமினியக் கம்பிப் பாலங்கள் மேல் பல ஒளிசெல் இழைகள் (thin fiber optic cables) பல திசைகளிலும் குறுக்கும் நெடுக்குமாக பின்னிப் பரவியிருந்தன. சட்டென்று பார்ப்பதற்கு ஒரு ஜன்னல் திரையை ஒளி மயமாக்கி மேலே போர்த்தியிருந்தது போலிருந்தது.
பக்கச் சுவர் ஒன்றில் முழுவதும் அந்த ஒளிசெல் இழைகள் பிணைக்கப் பட்ட மின்வலைச் சாதனங்கள் வரிசையாக அணி அணியாகப் பொருத்தப் பட்டிருந்தன.
கணினிகள் இடையிலும் அவற்றுக்குள்ளே உள்ள பாகங்களிடையிலும் ஒளிசெல்லும் இழைகள் மட்டுமல்லாமல், லேஸர் கதிர்களே நேரடியாகப் பாய்ச்சப் பட்டிருந்தன. தகவல் பரப்புவதற்காக மட்டுமன்றி, குவான்ட்டம் கணினியின் தகவல் துண்டின் நிலையைக் (Qubit state) கண்டறியவும், வேண்டிய நிலைக்கு மாற்றவும்கூட லேஸர் கதிர்கள் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருந்தன.
அந்தக் கணினிகளைச் சுற்றி ஆராய்ச்சியாளர்கள் கண்களை லேஸர் கதிர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான கண்ணாடிகளை அணிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருந்தனர்.
ஆராய்ச்சிக் கூடத்தில் அவர்கள் மேற்கொண்டு கண்டது என்ன என்பது பற்றியும், குவான்ட்டம் கணினி நுட்பத்தைப் பற்றியும் மேரி என்ன விவரித்தாள் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.
(தொடரும்) |
|
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|