Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 10)
- கதிரவன் எழில்மன்னன்|நவம்பர் 2018|
Share:
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகப்படுத்தினாள். என்ரிக்கே இயற்கையிலும், மனிதர்களின் தேர்ச்சி இனப்பெருக்கத்தாலும் (selective breeding) எப்படி மரபணு மாற்றங்கள் பரவுகின்றன என்றும் விவரித்தார். பிறகு க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் முடியும் என்று விளக்கினார். பிறகு, க்ரிஸ்பர் முறையுடன் பல்திறன் மூல உயிரணு நுட்பத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி எவ்வாறு மிருகங்களின் உடலில் மனித அங்கங்களை வளர்க்க முடியும் என்பதை விவரிக்க ஆரம்பித்தார். மேலே பார்க்கலாம்...

*****


சுண்டெலிக் கருவின் மரபணுத் தொடர்களைக் க்ரிஸ்பர் முறையால் வெட்டி எடுத்து அந்த இடைவெளியில் எலியின் பல்திறன் மூல உயிரணுக்களை நிரப்பி எலி அங்கங்களை வளர்க்கும் சாத்தியத்தை என்ரிக்கே விவரித்ததும், பன்றி உடலில் மனித அங்கம் வளர்க்க முயற்சி நடப்பதாக அவர் முன்பு கூறியதைச் சூர்யா நினைவு படுத்திக் கேட்டார்.

"சரியா ஞாபகத்துல வச்சுக்கிட்டு பாயிண்ட்டுக்கு வந்துட்டீங்களே சூர்யா, சபாஷ்! பன்றி விஷயத்தைச் சொல்றேன். சுண்டெலிக் கருக்களில் எலிகளோட மூல உயிரணு புகுத்தறாங்கன்னு சொன்னேன் இல்லயா? அந்த மாதிரி மரபணு மாறி வளரற உயிரின வகைகளுக்கு கிமெரான்னு பெயர். அதே வழிமுறையிலதான் பன்றி-மனித கிமெராகளுக்கும்! பன்றிக் கருக்களில் சில குறிப்பிட்ட மரபணு எழுத்துத் தொடர்களை க்ரிஸ்பர் முறையால வெட்டி எடுத்துட்டு அந்த இடைவெளியில மனித மூல உயிரணுக்களைப் புகுத்தி மனித மரபணு எழுத்துத் தொடர்களைப் பொருத்தறாங்க. அதுக்கப்புறம் கரு வளர்ந்து பிறக்கற பன்றி-மனித கிமெரா உடல்களில் மனிதத் திசுக்களும் அங்கங்களும் வளருது."

சூர்யாவுக்குக் குழப்பம். "மனிதர்களிடமிருந்து ஒரு அங்கத்தை எடுத்து மற்றொரு மனிதருக்குப் பொருத்தினாலே அங்க நிராகரிப்பு (organ rejection) அப்படின்னு அல்லோலகல்லோலப் படறாங்களே. அதுனாலதான் ஒரே மனிதரோட மூல உயிரணுக்களை வச்சு அவருக்கே அங்க உற்பத்தின்னெல்லாம் போன முப்பரிமாண கேஸ்ல சொன்னாங்க. இப்படி ஒரு பிராணியின் உடம்புல இன்னொரு பிராணியின் மூல உயிரணுவை நுழைச்சா நிராகரிக்காதா?"

என்ரிக்கே கைதட்டினார். "பிரமாதமான கேள்வி சூர்யா? என்ன ஷாலினி, இது உங்க துறையாச்சே, நீங்களே சொல்றீங்களா இல்ல நான்...?"

ஷாலினி கை தூக்கிக் காட்டினாள். "நோ ப்ராப்ளம் என்ரிக்கே இதுக்கு நானே விளக்கம் தர முடியும். சூர்யா, நீங்க கேட்டது சரியான கேள்விதான். ஆனா ஒரு அங்கத்தை எடுத்துப் பொருத்தறதும். மூல உயிரணுக்களைப் புகுத்தறதும் ஒரே மாதிரியில்லை. வேற்றார் அங்கம் பொருத்தறப்போ, அந்த அங்கம் பெறுபவரின் நோய் எதிர்ப்பு அணுக்கள் (immune cells) அதை எதிரியாகக் கருதித் தாக்குகின்றன. ஆனால் மூல உயிரணுக்களை ஒரு மிருகத்துக்குள் புகுத்தறப்போ அவை அந்த மிருக உடம்பின் அங்க உயிரணுக்களாகவே மாறி வளருவதால், நோய் எதிர்ப்பணுக்கள் அவற்றைத் தாக்கி நிராகரிப்பதில்லை... அப்படித்தானே என்ரிக்கே?"

"கரெக்ட் ஷாலினி, அதேதான்!"

சூர்யா மேற்கொண்டு கேட்டார். "சரி, அப்படியே இருக்கட்டும். அப்படி வளரும் பன்றியின் அங்கத்தை மனித உடம்பில் பொருத்தினால் நோய் எதிர்ப்பால் நிராகரிக்கப்படாதா?"

என்ரிக்கே மீண்டும் கைதட்டினார். "எங்கயோ போயிட்டீங்க சூர்யா! கனகச்சிதக் கேள்வி! ஆனால் இது இன்னும் ஆராயப்படாத அம்சம்! இதுவரைக்கும் பன்றி உடல்களில் மனிதத் திசுக்கள் வளர்க்கப் பட்டிருக்கே ஒழிய அவை இன்னும் மனித உடல்களில் பொருத்தப் படவில்லை. அவற்றை நிராகரிக்காமலிருக்கத் தேவையான ஆராய்ச்சியும் நடந்துகிட்டுத்தான் இருக்கு. பன்றிகளுக்கு இடையிலும், பன்றிகளிலிருந்து வேறு மிருகங்களுக்கும் வெற்றிகரமாக அங்க மாற்றம் நடந்திருக்கு. அதனால மனிதர்களுக்கும் அதைச் செய்ய முடியுங்கற நம்பிக்கை வளர்ந்துகிட்டிருக்கு. அந்தச் சோதனை செய்ய அரசாங்க அனுமதி கேட்டு, அதுக்கான முன் விசாரணை நடந்துக்கிட்டிருக்கு."
சூர்யா யோசனையுடன் தலையாட்டிவிட்டு மீண்டும் ஒரு கேள்வி எழுப்பினார். "அந்த அனுமதி கிடைச்சப்புறம் ஒரு மனிதருடைய மூல உயிரணுக்களால உருவான பன்றி அங்கம் அவருக்கு மட்டுந்தான் பொருந்துமா, இல்ல, யாருக்குப் பொருத்தினாலும் நிராகரிக்கப்படாம இருக்கமுடியுமா?"

என்ரிக்கே புளகாங்கிதம் அடைந்துவிட்டார். "இந்தக் கேள்வியாலேயே எனக்கு உங்கமேல நம்பிக்கை வானளாவ வளர்ந்துடுச்சு சூர்யா! எவ்வளவு கூர்மையான ஆராய்ச்சி அறிவு உங்களுக்கு! பிரமாதம்! இது எங்க துறையிலேயே படு சூடா விவாதிக்கப்படற கேள்வி. கிமெரா மிருகங்களுக்குள்ளேயே இப்படி மாற்று அங்கம் வளர்த்து வேறு மிருகத்துக்கு அங்க மாற்றம் செஞ்சாலும்கூட, இந்த நிராகரிப்பு விஷயம் தெளிவாகலை. கொஞ்சம் கொஞ்சமா நிராகரிப்புக் கால இடைவெளியை அதிகரிச்சிருக்காங்க. மூல உயிரணு எடுத்த அதே மிருகத்துக்கு அதன் பன்றி கிமெராவின் மாற்றங்கம் பொருத்தறப்போ நிராகரிப்பற்றுச் செயல்படும் காலம் நிறைய அதிகரிச்சுத்தான் இருக்கு. அதனால மனிதர்களுக்கும் ஒருவருக்கு அவருடைய மனிதக் கிமெரா அங்கங்களையே மாற்ற முடியுங்கற நம்பிக்கை வளர்ந்துட்டு வருது. எனக்கும்கூட அப்படிப்பட்ட நம்பிக்கை பலமா இருக்கு. ஆனா அதுக்கு இன்னும் பல படிகள் ஏறியாகணும்."

ஷாலினி உணர்ச்சி பூர்வமாக ஊக்குவித்தாள். "என்ரிக்கே உங்கள் நம்பிக்கை பலிக்கட்டும். அது மனித இனத்துக்கே மிக நன்மை தருவதாச்சே!"

கிரண் இடைபுகுந்தான். "இதெல்லாம் சரிதான் என்ரிக்கே, ஆனா, நான் எதோ செயற்கை டி.என்.ஏ, டிசைனர் குழந்தைகள்னெல்லாம் எதோ அரசல் புரசலா கேள்விப்பட்டேன். அதைக் கேட்டுட்டு, ஆஹா சிக்குன்னு ப்ரேஸிலியன் சூப்பர் மாடல் மாதிரி களங்கமே இல்லாத ஒரு பெண்ணை உருவாக்கலாமோன்னு ஜொள்ளு விட்டேன்!"

என்ரிக்கே அடக்க முடியாமல் அதிரடியாகச் சிரித்தார். "சரியான ஆளுப்பா நீ! நல்ல கேள்விதான் போ!"

ஷாலினி சீறினாள். "சே, என்ன கிரண், சகிக்கலை! எத்தனை உன்னதமான விஷயத்தையும் ஜொள்ளு லெவலுக்கே கொண்டு வந்துடறயே!"

கிரணோ அது கொஞ்சம்கூட உறைக்காமல், காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு, "யெஸ், ஜொள்ளு மாஸ்டர் கிரண் அட் யுவர் சர்விஸ்!" என்றதும் என்ரிக்கே மீண்டும் சிரிக்கலானார்.

சூர்யா ஆர்வத்துடன் தூண்டினார். "என்ரிக்கே, கிரண் சொல்றது நிஜமாவே நடக்குதா? இயற்கையில் உள்ள மரபணுத் தொடர்கள் மட்டுமல்லாமல் செயற்கையாவும் செய்ய ஆரம்பிச்சிருக்காங்களா?!"

என்ரிக்கே "அது ஓரளவுக்கு உண்மைதான் சூர்யா. நான் முதல்ல சொன்னேன் இல்லையா, மரபணு எழுத்துக்கள் A, C, G, T அதாவது நாலே நாலுதான்னு? ஆனா சமீபத்துல X மற்றும் Y என்கிற இன்னும் இரண்டு செயற்கை மரபணு எழுத்துக்களைச்சேர்த்திருக்காங்க. அவற்றை வச்சு வெற்றிகரமா மரபணுத் தொடர்களையும் உருவாக்கியிருக்காங்க!"

ஷாலினி அதிர்ந்துவிட்டாள்! "என்ன, என்ன, செயற்கையா மரபணு எழுத்துக்களை உருவாக்கியிருக்காங்களா? நான் அதுபத்தி எதுவும் படிக்கலயே. செயற்கை மரபணுத் துறையைச் சரியா கவனிக்கவேயில்லை. என் தப்புத்தான். என்ரிக்கே, இது என்ன மாதிரியான விபரீதத்துல போய் முடியப் போகுதோ!"

சூர்யாவும் கவலை காட்டினார். "ஆமாம் என்ரிக்கே. இப்ப இருக்கற நாலு மரபணு எழுத்துக்களும் அவற்றின் கோவைகளும், பல பில்லியன் வருடங்களாக நடக்கும் மருவலின் பலனாச்சே? அப்படி இருந்தும் புதுப்புது வைரஸ்கள், நோய் வகையறாக்கள் எல்லாம் உருவாகி உலகத்தையே ஆட்டி வைக்குதே. இப்படித் திடீர்னு புது மரபணு எழுத்துக்களுடைய உயிர்வகைகள் வந்தா இன்னும் என்னெல்லாம் நடக்குமோ?"

சூரியாவின் இந்த விபரீதக் கேள்விக்கு என்ரிக்கே அழகாகப் பதிலளித்தார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline