Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் - 17)
- கதிரவன் எழில்மன்னன்|ஜனவரி 2016|
Share:
குட்டன்பயோர்க் நிறுவனத்தின் முழு அங்கப் பதிப்புச் சாதனையைப் பெருமிதத்துடன் அகஸ்டா விவரித்து முடித்தபின், அப்படியானால் அதில் என்ன பிரச்சனை என சூர்யா வினவியதும், முற்றும் நிலைகுலைந்தே போனாள் அகஸ்டா. ஷாலினியின் அணைப்புடன் கூடிய ஆறுதலில் சற்றுச் சுதாரித்துக் கொண்டு பிரச்சனைய விளக்க ஆரம்பித்தாள்.

"முழு அங்கப் பகுதிகளை மூல உயிரணுக்களைக் கொண்டே பிணைத்து துரிதமாகப் பதிக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த எங்கள் நுட்பத்தைப்பற்றிக் கூறினேன் அல்லவா? அதுவே எங்கள் பிரச்சனையாகவும் வந்து வாய்த்துவிட்டது!"

"என்ன? உங்கள் வெற்றியே தோல்வியாகிவிட்டதா? ஒண்ணுமே புரியலே உலகத்துலே! ஒரே கன்ஃபூஸியஸா பேசறீங்களே? புரியறா மாதிரி கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!" கிரண் கேட்டான்.

கிரணின் வினோத வார்த்தைகளைக் கேட்டுச் சற்று முறுவலுடன் தலையாட்டி ஆமோதித்த அகஸ்டா மேலே விளக்கலானாள். "உண்மைதான் கிரண், வெற்றியே தோல்விக்கு அடிப்படையாயிடுச்சு! முதல்ல கொஞ்சநாள் சரியாத்தான் இருந்துச்சு. நிபுணர்கள் எல்லாம் ஒத்துகிட்டாங்க. மிருகங்களுக்கு அங்கமாற்ற சோதனைகூட செஞ்சோம் - அதுலயும் வெற்றிதான். அப்புறம் மனிதசோதனை சுற்றுக்கு ஆயத்தம் செஞ்சோம். எல்லாம் தயாராகி, மனித சோதனைக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தருணம் வந்தது. ஆனால்…" என்று கூறிய அகஸ்டா நிறுத்திவிட்டுக் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.

ஷாலினி அவளை மீண்டும் அரவணைத்து, முதுகில் லேசாகத் தட்டிக்கொடுத்து, "எங்கம்மா சொல்வா, வெண்ணை திரளும்போது தாழி உடஞ்சுதுன்னு... அந்தமாதிரி ஆச்சு போலிருக்கு... போனாப்போகுது என்ன ஆச்சுன்னு சொல்லுங்க. அப்பதானே சூர்யா விசாரணையை ஆரம்பிச்சு நிவாரணம் காண முடியும்?"

அகஸ்டா பெருமூச்செறிந்து கொண்டு தொடர்ந்தாள். "எல்லாம் நல்லாப் போயிட்டிருக்கச்சே திடீர்னு முழு அங்கங்களின் பல பகுதிகளை ஒண்ணா பிணைக்கற மூல உயிரணுக்கள் சரியா வளராமப் போயிடுச்சு. அங்கங்கள் சரியாப் பிணையாம அங்கங்கள் வேலைசெய்யாமப் போச்சு. பகுதிகள் மட்டும் மூல உயிரணுத் திரவங்களைக் கொண்டு பதிக்கறச்சே ஒவ்வொண்ணும் தனித்தனியா சரியா பதிக்கப்பட்டது. ஆனா ஒண்ணா சேர்க்க மூல உயிரணுத் திரவம் தடவிச் சேர்த்தால் அந்தப் பசைப்பரப்பு மட்டும் சரியா வளரலை. எங்க குழு முழுவதும் ஒண்ணா சேர்ந்து பல நாட்களாக ஆராய்ஞ்சும் ஒண்ணும் புலப்படலை. அப்பதான் ஷாலினி, உங்க குழுவில் ஒருத்தரை, எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்திச்சேன். அவர் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். என் முகவாட்டத்தைப் பார்த்து விசாரிச்சு பிரச்சனையைப் பத்தித் தெரிஞ்சதும், உன்னையும் சூர்யாவையும் பத்திப் பரிந்துரைச்சார். அப்பதான் உங்களை அணுகினேன்." மீண்டும் அகஸ்டா விசும்பினாள்.

ஷாலினி பச்சாதாபத்துடன் தலையாட்டி, எதையோ சொல்ல வாய் திறந்தாள். அதற்குள் கிரண் அவசரமாக இடைமறித்தான். "கவலையே வேணாம் அகஸ்டா. யாமிருக்க பயமேன்! என்ன பிரச்சனைன்னாலும் விசாரிச்சு கண்டுபிடிச்சு நிவர்த்திச்சுடலாம்!" அகஸ்டா விசும்பலை அடக்கிக்கொண்டு அவனைப் பார்த்துச் சற்று ஆறுதலுடன் முறுவலித்தாள். கிரண் உச்சிகுளிர்ந்து அகஸ்டாவை நோக்கி ஆறுதல் புன்னகை வீசினான்.

ஷாலினி "மேலே சொல்லுங்க அகஸ்டா..." என்றாள்.

"அப்புறம் ஒண்ணுமில்ல ஷாலினி. நான் உங்களை அழைச்சவுடனே நீங்க வந்துட்டீங்க. வர்றத்துக்குள்ள எங்களால ஒண்ணும் கண்டுபிடிக்க முடியல. ப்ளீஸ் சூர்யா, சீக்கிரம் இதைப்பத்தி கண்டுபிடியுங்க. உங்களால முடியும்" என்ற அகஸ்டா, ஆவேசத்துடன் மீண்டும் வலியுறுத்தினாள். "கண்டுபிடிச்சே ஆகணும் சூர்யா, இல்லைன்னா, குட்டன்பயோர்கின் முன்னேற்றங்கள் எல்லாம் வீணாப்போயிடும். அங்கங்கள் சீக்கிரம் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேரிடும். அது உலகத்துக்கே மிக சோகமான முடிவு..."

சூர்யா ஆழ்ந்த யோசனையிலிருந்தார். சில நொடிகளுக்குப் பிறகு நிதானமாக அகஸ்டாவை வினாவினார். "அகஸ்டா, அந்த நிலை வராது. எங்க அனுபவத்துல தெரிஞ்சதையெல்லாம் வச்சுப் பாத்தா, இந்த மாதிரி பிரச்சனையின் காரணத்தைக் கண்டறிஞ்சு நிவர்த்திக்க முடியும்னுதான் நினைக்கறேன். ஆனா அதுக்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கணிச்சாகணும்..."

சூர்யாவின் மென்மையான உத்தரவாதத்தால் சற்றே ஆறுதலடைந்த அகஸ்டா ஆவலுடன் கேட்டாள். "ஒரு முக்கியமான விஷயம்...? என்ன அது சூர்யா?"

அகஸ்டா அதிர்ச்சியடையும்படி ஒரு பதிலைச் சொன்னார் சூர்யா. "குட்டன்பயோர்க் ஏன் தோல்வியைத் தழுவவேண்டும். அந்தத் தோல்வியால் பலன் பெறுவது யார்? அப்படி உங்களுக்குத் தெரிஞ்சு யாராவது இருக்காங்களா?"

சூர்யாவின் கேள்வி நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் தாக்கவே அதிர்ந்த அகஸ்டா பதில் கேள்விகளை வீசினாள். "என்ன? குட்டன்பயோர்கின் தோல்வியால் பலனடைபவர்களா? எங்களுடைய உன்னத நோக்கம் நிறைவேறாமல் போகச் செய்வதில் யாருக்கு என்ன பலன் இருக்க முடியும்? அதுவும் எனக்குத் தெரிஞ்சு யார் இருக்கப் போறாங்க? என்ன இப்படிக் கேக்கறீங்க சூர்யா, புரியவே இல்லயே. அப்படி யாரும் இருக்கமாட்டாங்க. ஏதோ ஒரு வழிமுறைப் பிழைதான் காரணாமாயிருக்கணும் இல்லயா ஷாலினி?"
ஷாலினி பதிலளிக்குமுன் கிரண் இடைமறித்தான். "ஆஹா, பாவம் அகஸ்டா, இவ்வளவு வெகுளியா குழந்தை மனமா இருக்கீங்களே! எங்க அனுபவத்துல பார்த்தா, ஒவ்வொரு உன்னதமான நோக்கத்துக்கும் முட்டுக்கட்டயா வரது, அதைப்பத்தி நல்லா அறிஞ்ச திருட்டுக் கயவர்கள்தான்! ஷாலினி, அகஸ்டாவுக்கு நம்ம தூய தண்ணீரின் சங்கடம் பத்தி கொஞ்சம் அவுத்துவுடேன் பாவம், கொஞ்சம் உலகத்தைப்பத்திப் புரியட்டும்!"

ஷாலினி சோகம் கலந்த முறுவலுடன் தலையாட்டி ஆமோதித்து விளக்கினாள். "ஆமாம் அகஸ்டா, கிரண் சொல்றது ரொம்ப சரி. அந்த கேஸ்லயும் உங்க பிரச்சனை போல் மிக உன்னதமான நோக்கம் இருந்தது. ஆனால், பெரும்பாலும் யாரோ ஒருவருடைய பழிவாங்கல் அல்லது பேராசை போன்ற தீய எண்ணங்களால்தான் இத்தகைய முயற்சிகளுக்குப் பிரச்சனைகள் விளையுது. அதனால சூர்யா சொன்னபடி யோசிச்சுப் பாக்கறது நல்லது."

கிரண் தொடர்ந்தான். "அதாவது குட்டன்பயோர்கோட நெருங்கிய..."

சூர்யா குறுக்கிட்டார், "உஷ்... கிரண் அத்தோட நிறுத்திக்கறது நல்லது. அகஸ்டாவின் எண்ணம் ஒரே சந்தேகக் கோணத்தில் போய்விடாமல் இருப்பது நல்லது. நாம் தீர பல கோணங்களில் விசாரித்த பிறகே காரண கர்த்தாக்கள் யார் என்று கணிப்பது நல்லது. அகஸ்டாவுக்கு நாம் கூறியதுபற்றி துளிக்கூட தெரிந்திருக்கவில்லை; அப்படி இருக்கவே முடியாது என்று கூறுவதே ஒரு நல்ல விவரந்தான். சில சமயம், எதிர்மறையான விவரங்கள் கூட உதவும். நாம் பல கோணங்களில் யோசிக்க வேண்டியுள்ளது அல்லவா? அவற்றில் சில கோணங்களை பின்பற்றி ஆராய்வது அவசியமற்றது என்பதை அத்தகைய எதிர்மறை விவரம் உணர்த்துகிறது."

அகஸ்டா குழப்பத்துடன், "ஹூம்... என்ன சொல்றீங்க சூர்யா? எனக்கு தலைசுத்துது. கோணங்கள்? விசாரணை? எதிர்மறை விவரம்?! கொஞ்சம் புரியறா மாதிரி விளக்குங்களேன் ப்ளீஸ்!" என்றாள்.

ஷாலினி சிறு முறுவலுடன் முந்திக்கொண்டு தன் சூர்யாவைப்பற்றி விம்மிவந்த பெருமிதத்தோடு பதிலளித்தாள். "அகஸ்டா, அங்கதான் நிக்கறாரு சூர்யா! அவருக்குன்னு ஒரு வழிமுறை, ஒரு யூகத்திறமை இருக்கு. படக்குன்னு கிரண் மாதிரி தாவறதில்லை. நிதானமா பல விவரங்களை பலபேர்கிட்ட விசாரிச்சு பிறகு தன் கூர்மையான அறிவைக் கொண்டு பிரச்சனையின் மூலகாரணத்தைக் கச்சிதமா கணிச்சுடுவார். நீங்க வேணும்னா பாருங்களேன்."

சூர்யா தொடர்ந்தார், "அகஸ்டா, நாம அடுத்துச் செய்யவேண்டியது உங்கக் குழுவோட கலந்தாலோசிக்கறதுதான்."

அகஸ்டா சுதாரித்துக்கொண்டு சூர்யாவின் உறுதுணையைக் கொண்டு நிவாரணம் தேடும் உறுதியுடன் உரைத்தாள். "ஓகே, நான் உடனே என் குழுவைக் கூப்பிடறேன். நீங்க என்ன விசாரிக்கணுமோ செய்யுங்க. பிரச்சனை நிவாரணம் கிடைக்கறோதோட, உங்கத் திறனைப் பாக்கவும் எனக்கு மிக ஆர்வமா இருக்கு."

சூர்யா, "இல்லை அகஸ்டா, நான் சொன்னதை நீங்க வேறமாதிரி புரிஞ்சிகிட்டீங்கன்னு நினைக்கறேன். நான் உங்கக் குழுவினரை ஒரே சமயத்துல சந்தித்தால் சரிபட்டு வராது. இந்தப் பிரச்சனையைப்பத்தி அவங்க ஒவ்வொருவர் எண்ணங்களையும் தனித்தனியாத் தெரிஞ்சுகிட்டாதான், பல கோணங்களில் இருந்து ஆராயமுடியும். அதுக்கு ஏற்பாடு செய்யுங்க. அவங்கவங்க அலுவலக அல்லது ஆராய்ச்சி அறைகளுக்குப் போய் அங்கயே சந்தித்துப் பேசலாம். அப்பதான், அவங்களோட கருத்துக்களின் சூழல் பின்னணியைப் பத்தி அறிஞ்சுக்க முடியும். ஒரு முழுமையான கோணம் கிடைக்கும்."

அகஸ்டா தலையாட்டி ஆமோதித்தாள். "ஓ இப்ப புரியுது சூர்யா. பர்ஃபெக்ட்! நான் தனி நேர்முக சந்திப்புக்களுக்கு ஏற்பாடு செய்யறேன். முதல்ல யாரைச் சந்திக்கணும்?" யாரை முதலில் சந்திக்க வேண்டுமென்பதில் சூர்யா தெளிவாக இருந்தார்....

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline