|
|
|
|
முன்கதை: ஷாலினிக்கு சக ஆராய்ச்சியாளரிடமிருந்து துப்பறிவாளர் சூர்யாவின் உதவிகேட்டு மின்னஞ்சல் வந்தது. சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் குட்டன்பயோர்க் என்னும் முப்பரிமாண உயிர்ப்பதிவு நிறுவனத்துக்கு விரைந்தனர்.அவர்களை வரவேற்ற அதன் நிறுவனர் அகஸ்டா க்ளார்க், உயிரியல் முப்பரிமாணப் பதிப்பால் மனிதர்களின் உள்ளகங்கங்களின் பற்றாக் குறையைத் தீர்க்க இயலும், ஆனால், திசுக்களை நிராகரிக்காமல் இருக்க ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமாகப் பதிக்க வேண்டியுள்ளது என விளக்கினாள். முப்பரிமாணப் பதிப்பால் முழு அங்கங்களை உருவாக்க வேண்டுமெனில் இன்னும் தாண்ட வேண்டிய தடங்கல்களை விவரித்தாள். முதல் தடங்கல், திசுக்கள் உயிரோடு செயல்படச் சத்தளித்து, வீண்பொருளகற்ற ரத்த ஓட்டம் தேவை; அதற்கு நாளங்களைப் பதிக்க வேண்டும். நாளமிடல் எனப்படும் அதற்கு, மெல்லிய ப்ளாஸ்டிக் இழைகள்மேல் நாளத்திசு அணுக்களைப் பதித்து, பிறகு இழைகளை எடுக்க வேண்டியுள்ளது என்று விளக்கினாள். ஆனாலும், முழு அங்கங்களைப் பதித்தல் மிகக்கடினம், அதுவும் மிக நுண்ணிய அங்கங்களைப் பதிப்பது இன்னும் கடினம் என்று கூறி, வியன்னாவில் ஒரு விஞ்ஞானக்குழு, நியூரான் உயிரணுக்களைப் முப்பரிமாணமாகப் பதித்து மூளையின் சில சிறுபகுதிகள் போல வேலை செய்யும்படிச் செய்துள்ளனர் என்று அகஸ்டா கூறினாள். ஆனால், அங்க நிராகரிப்பின்றி பதிப்பதற்கு அவரவர் மூல உயிரணுக்களைக் கொண்டு வளர்த்த திசுக்களால் அங்கம் பதிக்க மிக நேரமாவது ஒரு பெருந்தடங்கல் என்றும் விளக்கினாள். அப்படியானால், குட்டன்பயோர்க் எவ்வாறு அந்த மூன்று தடங்கல்களைத் தாண்டி முன்னேறியுள்ளது என்று சூர்யா வினவினார். பிறகு...
*****
முப்பரிமாணப் பதிப்பு நுட்பத்தின் மூலம், ஒவ்வொருவருக்கும் பொருத்தமாக, நிராகரிப்பின்றி அங்கங்களைப் பதிப்பதில் உள்ள பெருந்தடங்கல்களை அகஸ்டா விவரமாக விளக்கியதும், இத்தனை தடங்கல்களையும் குட்டன்பயோர்க் எவ்வாறு சமாளித்துள்ளது, அதற்கு மேலும் என்ன பிரச்சனை விளைந்துள்ளது, அதைப்பற்றி குழு விசாரணை நடத்தவேண்டும் என்று சூர்யா கூறவே, அகஸ்டா முதலில் குட்டன்பயோர்கின் நுட்பத்தைப் பற்றிப் பெருமிதத்தோடு, கனவுலகில் மிதந்தவாறு விவரிக்கலானாள். "சூர்யா, தடங்கல்கள் மூன்றுவகை என்று விவரித்தேன் அல்லவா?"
கிரண் வாய் பிளந்தவாறு இடைமறித்தான், "மூணு தடங்கலா சொன்னீங்க? நீங்க சொல்ற அழகைப் பாத்துக்கிட்டேயிருந்தேனா, மண்டையிலயே ஏறல. அது என்ன மூணு, சுருக்கா சொல்லிட்டு மேல போங்க?" அகஸ்டா நாணத்தோடு களுக்கினாள்! ஷாலினி கிரண் மண்டையில் தட்டினாள். "ஏற்கனவே மரமண்டை! ஆன்னு பாத்திட்டேயிருந்தா அவ்வளவுதான். இப்பவாவது கவனம் குடுத்துக் கேளு. நீங்க சொல்லுங்க அகஸ்டா."
அகஸ்டா தொடர்ந்தாள். "முழு அங்கப் பதிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக்கு வரணும்னா மூணு தடங்கல்களை நிவர்த்திச்சாகணும். முதலாவது தடங்கல், திசுவின் உயிரணுக்கள் வளர்வதற்காக ரத்த ஓட்டத்திற்கு நாளமிடல். சூர்யா சொன்னபடி, மிக மெல்லிய குழாய்களின் மேல் திசு வளர்த்து அதை ஓரளவுக்கு சமாளிச்சு நடைமுறைக்கு வந்தாச்சு."
கிரண் ஆவலுடன், "ஆங்! ஞாபகம் வந்துடுச்சு ... ஆவலில் ஓடிவந்தேன்!" என்று கல்யாணராமன் கமல்ஹாஸன் போல் பாடிவிட்டு, "மேல சொல்லுங்க. அடுத்தது?" என்று தூண்டினான். அகஸ்டா முறுவலுடன் தொடர்ந்தாள். "ரெண்டாம் முட்டுக்கட்டை அங்கத்திலிருக்கும் பலவகை உயிரணுக்களையும் சரியான இடங்களில், சரியான அளவுக்கு பதிச்சு வளர்க்கணும். அது இன்னும் ஆராய்ச்சிரீதியாவே ஓரளவுதான் நுட்பம் வளர்ந்திருக்கு. அங்கங்களின் பாகங்களைச் சிறிய திசுப்பரப்பளவில் வளர்க்க முடியுது. கண் ஒளித்திரை, மற்றும் மூளை நியூரான் இணைப்பு போன்றவைகளை விஞ்ஞானக் குழுக்கள் செஞ்சிருப்பதைப்பத்தி சொன்னேன்."
சூர்யா தலையாட்டிக் கொண்டு, "ரைட். இது கொஞ்சம் கஷ்டமான தடங்கல்னு தோணுது. கடைசித் தடங்கல், அங்கங்களைத் தனி நபருக்குப் பொருந்தும்படி பதிக்க..." என்று ஆரம்பித்தார்.
கிரண் தாவி இடையில் குதித்தான்! "ஓ, பிக் மீ, பிக் மீ! எனக்குத் தெரியும். அவங்க அவங்க மூல உயிரணுக்களை வச்சு திசு பதிச்சு செய்யணும், அதுக்கு ரொம்ப நாளாகுதுன்னு இப்பதான் விவரிச்சீங்க இல்லியா?"
அகஸ்டா கை தட்டினாள். "கிரண் பரவாயில்லயே! கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்க!" என்றதும் கிரண் பூரித்தான். ஷாலினி தோள்பட்டையில் முகத்தை இடித்துக் கொண்டு, "ஹுக்கும்! ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் அதைப்பத்தி பேசினோம். அதுகூட ஞாபகம் இல்லன்னா மூளையில திசு போதாது! கம்ப்யூட்டர் மெமரிதான் வக்கணும்!"
கிரணே பாராட்டினான். "குட் ஒன் ஸிஸ்! நீகூட ஜோக் அடிக்கற! பரவாயில்லை, ஏத்துக்கறேன்!"
சூர்யா, "சரி, மூணு தடங்கல்களைப்பத்தி சுருக்கமா திரும்பப் பாத்தாச்சு. முக்கிய விஷயம், அவைகளை நிவர்த்திக்கும்படி குட்டன்பயோர்க் என்ன செஞ்சிருக்குங்கறதுதானே, அதைப்பத்தி சொல்லுங்க!" என்றார். |
|
குட்டன்பயோர்க் நுட்பம் என்றதும், பெருமிதத்தில் மிதந்த அகஸ்டா விவரிக்கலானாள். "யெஸ்... சரியாச் சொன்னீங்க சூர்யா. நாளமிடல் ஓரளவுக்கு நடைமுறைக்கு வந்திடுச்சுன்னு ஏற்கனவே சொன்னேன். அதுனால, நாங்க அதைப்பத்தி அவ்வளவா ஆராய்ச்சி செய்யலை. எங்க நுட்ப முன்னேற்றங்கள் செயல்படும் முழுஅங்கப் பதிப்பு, மற்றும் அங்கப் பதிப்பை துரிதமாக்கல்."
ஷாலினி ஆவலுடன், "ஆஹா! கேட்க பரபரப்பா இருக்கு, மேல சொல்லுங்க!" என்றாள்.
அகஸ்டா பெருமையுடன், "நான் முழு அங்கப் பதிப்பைப்பத்தி ரொம்பநாளா ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருந்தேன். முதலில் வேறொரு நிறுவனத்தில் செஞ்சேன். ஆனா என் யோசனையின் மேல் அந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானிக்கு நம்பிக்கை வரலை. ஓரளவு அதில் முன்னேற்றம் காட்டியும் அவர் ஏத்துக்காம, என்னை வேற நுட்பத்தை ஆராயுமாறு வற்புறுத்தினார்..." என்றாள்.
சூர்யா இடைமறித்து, "நீங்க அந்த முன்னேற்றத்தை ஆராய்ந்தது நூவோஆர்கனா நிறுவனத்தில்தானே?" என்று கேட்கவும் அகஸ்டா ஆச்சர்யப்பட்டாள்.
"வாவ் சூர்யா, எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க? இதுபத்தி படம் எதுவும் என் முன்னறையில் நான் வைக்கலயே!"
"இது ஒண்ணும் என் பிரமாத யூகமில்லை அகஸ்டா. இந்தப் பெருமை கிரணுக்கே! அவனே சொல்லட்டும்!" என்றபடிக் கிரணைப் பார்த்தார் சூர்யா. அகஸ்டா வியப்புடன், "கிரண், உங்க யூகமா, எப்படி?" என்றாள்.
கிரணும் விளக்கினான். "யூகம்னு சொல்லிக்கறதுக்கில்லை. சூர்யா சொன்னபடி இதுல பிரமாதமா ஒண்ணுமேயில்லை. என் ஐஃபோன்ல ரெண்டு தட்டு தட்டினேன், உங்க சரித்திரத்தையே கக்கிடுச்சு. நீங்க நூவோஆர்கனாவில் ரெண்டு வருஷம் ஆராய்ச்சியாளரா இருந்ததையும், அங்க கல்லீரல் துண்டுகளை வளர்த்ததா ஆராய்ச்சிப் பத்திரிகைகளில் வெளியிட்டதாகவும் காட்டிடுச்சு. அப்புறம் என்ன? நான் சூர்யாவுக்கு சில நிமிஷம் முன்னாடிதான் அதை மின்னஞ்சல் அனுப்பினேன், அப்புறம் என்ன, அவருக்கு ரெண்டும் ரெண்டும் ஏழு, அவ்வளவுதான்!"
அகஸ்டா கலகலத்தாள். "நல்லாத்தான் இருக்கு இது! தகவல்துறையில உலகம் ரொம்பவே முன்னேறிடுச்சு. கிரண் உங்ககிட்ட நான் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அப்புறம், நான் காலேஜில் செஞ்ச விஷமங்களைக்கூட இணைய வலையில கண்டுபிடிச்சுடுவீங்க!"
கிரண் ஆவலுடன், "காலேஜில் செஞ்ச விஷமமா? அந்த வயசு விஷயம் சுவாரஸ்யமாத்தான் இருக்கும். நீங்களே சொல்லுங்க" என்றதும் அகஸ்டா நாணினாள். சூர்யா மீண்டும் இடைமறித்து, "அது சுவாரஸ்யந்தான், ஆனாலும், தற்கால சுவாரஸ்யத்துக்கு வருவோம். அகஸ்டா, அந்தத் தலைமை விஞ்ஞானி அனுமதியளிக்காததால நீங்க வெளியேறி குட்டன்பயோர்க் நிறுவினீங்கன்னு புரியுது. இங்க எப்படி முன்னேறிச்சுன்னு சொல்லுங்க."
அகஸ்டா பொங்கிய பெருமிதத்துடன் தொடர்ந்தாள். "குட்டன்பயோர்கில் நான் மட்டுமில்லாமல், அங்கப் பதிப்புத்துறையின் தலைசிறந்த பல நிபுணர்களைத் திரட்டி ஒண்ணு சேர்த்திருக்கேன். அவங்களோட ஒருங்கிணைந்த மூளைத்திறனாலதான் குட்டன்பயோர்க் நுட்பம் முன்னேறியிருக்கு."
கிரண் இடைமறித்தான். "தலைசிறந்த நிபுணர்களா? அப்படின்னா பணத்தைத் தண்ணிமாதிரி உறிஞ்சிகிட்டே இருக்குமே. அதுக்கான மூலதனத்தை எப்படித் திரட்டினீங்க?"
அகஸ்டா முறுவலித்தாள். "கிரண், உங்க தினவேலை பங்குச் சந்தை விற்றல், வாங்கல், மூலதனம்னு ஷாலினி சொன்னாங்க. அதுக்கு சரியான கேள்விதான் கேட்கறீங்க."
கிரணும் புன்னகைத்தான். "அதுவும் ஒரு கோணந்தான்னு வச்சுக்குங்களேன். குட்டன்பயோர்க் பங்குகள் முதல் பொதுவிற்பனைக்கு (Initial public offering – IPO) வந்தா அதுல நமக்கும் ஒரு வெட்டு கிடைக்குமான்னு அடிபோடறது நல்லதுதானே!"
அகஸ்டா கலகலவென சிரித்தாள். "சரியாப் போச்சு! சரி, அப்படி IPO போச்சுன்னா உங்களுக்கு நிச்சயம் முதல்ல சொல்லிடறேன், சரியா?" கிரண் கைவிரலை ஆட்டினான். "அ...அ...அ... வெறும சொல்லிட்டா போதாது, நண்பர் உறவினர் பங்குகள் குறைந்த, முதல்விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யணும், ஓகே?" அகஸ்டா சிரித்தாள். "ஓ, வாவ், அப்படியெல்லாம் வேற இருக்கா, நிச்சயமா செஞ்சுட்டாப் போச்சு. ஆனா கிரண், இப்போ இருக்கற நிலையில் இருந்து IPO போகணும்னா, நீ பத்தாண்டு கணக்கா காத்திருக்கணும்! அதுக்குப் பலப் பலப் படிகளையும் தடங்கல்களையும் கடக்க வேண்டியிருக்கு."
சூர்யா இடைமறித்தார். "ஆனா அகஸ்டா, கிரண் கேட்ட கேள்வி நம்ம விசாரணைக்கும் முக்கியமானதுதான். எப்படி நிதி திரட்டினீங்கன்னு கொஞ்சம் விளக்கறீங்களா?"
அகஸ்டா தொடர்ந்தாள். "ஆஹா, அதுக்கென்ன சொல்றேன்! நான் குட்டன்பயோர்க் ஆரம்பிக்கறச்சே ஒண்ணுமேயில்லை. வீட்டு கராஜிலதான் ஆராய்ச்சியறை, அலுவலகம் எல்லாமே. முதல்ல அலெக்ஸ் மார்ட்டன் என்ற இன்னொரு உயிரணு நுட்ப நிபுணரைச் சேர்த்துகிட்டேன். அவருக்கும் அங்கப் பதிப்புல உத்வேகம் மிக அதிகமாயிருந்திச்சு. ஆனா அவருக்கு நிறுவனம் நடத்துறதலயெல்லாம் ஆர்வமில்லை. ஆராய்ச்சிலயே ஆழ்ந்திருந்தார்.
நாங்க ரெண்டுபேரும் பக்க கன்ஸல்ட்டிங் செஞ்சு தினசரி செலவுகளுக்குச் சமாளிச்சுகிட்டு குட்டன்பயோர்க் ஆரம்பிச்சுட்டோம்! ஆனா முன்னேற்றம் ரொம்ப நிதானந்தான். துரிதப்படுத்தணும்னா, இன்னும் பலரைச் சேர்க்கணும். அப்படின்னா பல மில்லியன் டாலர் தேவைப்படும். எப்படி திரட்டறதுன்னு யோசிச்சு மண்டையை உடச்சுகிட்டேன். எனக்கோ அதுல துளிக்கூட பழக்கம் கிடையாது!"
ஷாலினி ஆர்வத்துடன் தூண்டினாள். "உம்... ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே? சொல்லுங்க, முன்பழக்கமில்லாம எப்படி அவ்வளவு நிதி திரட்ட முடிஞ்சது?" அகஸ்டா குட்டன்பயோர்கிற்காக முதலீடு திரட்டிய கதையையும், தனது உயிரியல் முப்பரிமாணப் பதிப்பு நுட்பங்களைப்பற்றியும் விவரித்தது பிரமிக்க வைப்பதாக இருந்தது....
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|