|
|
|
|
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். மூவரும் அக்வாமரீன் என்னும் நிறுவனத்துக்குச் செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் யாவ்னா என்ற இளம்பெண் மற்றும் நிறுவனரான தாமஸ் மார்ஷ் இருவரையும் சந்தித்தனர். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா சரியாக யூகித்துத் தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். யாவ்னாவும் தாமஸும், நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றியும் அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். அக்வாமரீனின் சொந்த நுட்பங்கள் சேர்க்கப்பட்ட உப்பகற்றல் தளம் பழைய தளங்களைவிடப் பலமடங்கு அதிக தூய நீரை, மிகக் குறைந்த செலவில், மிகச் சிறிய சாதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்து உலகின் தூயநீர்த் தேவையைப் பூர்த்திக்க முடியும் என்று கனவுலகில் சஞ்சரித்தார் தாமஸ்! அவரைப் பிரச்சனை என்ன என்ற சூர்யாவின் கேள்வி நனவுலகுக்கு ஈர்த்தது. மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்...
*****
அக்வாமரீனின் நுட்பங்களின் பிரச்சனையைப் பற்றிய சூர்யாவின் ஆழ்ந்த கேள்விகளும், திறன் மிகுந்த ஊகங்களும் தாமஸுக்குப் பெரிதும் வியப்பளித்து நம்பிக்கை ஊட்டவே, அப்பிரச்சனையின் மூல காரணத்தை எவ்வாறு கண்டறியப் போகிறார் என்று ஆர்வத்துடன் தாமஸ் எதிர்நோக்கலானார். தாமஸுடன் உரையாடுகையில் ஓரிரு முறை சூர்யாவின் முகத்தில் ஒருவிதமான ஒளி சட்டெனத் தோன்றி மறையவே, அவரைப்பற்றி நன்கறிந்த ஷாலினியும் கிரணும், அவர் எதோ முக்கியமான விவரத்தைக் கிரகித்துவிட்டார் எனத் தெரிந்தும், அதை அப்போதே கேட்பது சரியல்ல என்பதை உணர்ந்து பிறகு வினாவ மனத்தில் குறித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சிக் கூடத்தின் சாதனங்களை மின்திரைகள் மூலமாகக் கண்காணித்துக் கொண்டிருந்த மேல்தளத்தைப் பார்க்கவும், அக்வாமரீனின் நிர்வாகக் குழுவினர் மற்றும் மேல்நிலை ஆராய்ச்சியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று சூர்யா கூறவே, தாமஸ் யாவரையும் அவசரமாக மேல்தளத்துக்கு அழைத்துச் சென்றார்.
அந்தக் கூடத்தின் மூன்று பக்கத்திலும் சுவர்களுக்குப் பதிலாக பல மின்திரைகளே நிரம்பியிருந்தன. ஒரு பெரிய விமான நிலையக் கட்டுப்பாட்டு மையத்தின் முக்கிய மேற்பார்வைக் கூடம்போல் இருந்தது. ஒவ்வொரு மின்திரையிலும் அளவுகாட்டும் வட்டங்களும், சிவப்பு, பச்சை, மஞ்சள் எனப் பல நிறங்களில் மின்னிக் கொண்டிருந்த சின்னங்களும் நிறைந்திருந்தன. அவை நொடிக்கு நொடி மாறித் தற்சமயத்துக்கான அளவுகளையும் நிலைகளையும் காட்டின. அத்திரைகளின் முன்னால் நாற்காலிகளில் சிலர் அமர்ந்து கூர்ந்து கவனித்துக்கொண்டு, அவ்வப்போது தங்கள் கணினிகளில் சோதித்துக் கொண்டும் குறித்துக் கொண்டும் இருந்தனர்.
கிரண் கூடம் இருந்த அமைப்பையும் மின்னிக் கொண்டிருந்தத் திரைகளையும் பார்த்து அசந்து போய் கூவியேவிட்டான். "வாவ்! இவ்வளவு விஷயம் இருக்கா உப்பகற்றல் கண்காணிக்கறதுல! நான் அணுமின் நிலையத்துலகூட இவ்வளவு பார்த்ததில்லையே. பத்து போயிங் 747 காக்பிட் சேர்ந்தா மாதிரி இருக்கு. அணுசக்தியைவிட உப்பகற்றல் ரொம்ப காம்ப்ளிகேட்டடா என்ன? உங்க சாதனம் பாக்கறத்துக்கு என்னவோ தக்குணியூண்டா இருக்கு! ஒரு மின்திரை போதாதா? நிஜம்மா வேணுமா, இல்ல சும்மா ஒரு ஷோ எஃபக்டுக்காகவா!"
கிரண் கேள்விமேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போகவே, யாவ்னா அவனது முகத்தில் கண்கள் விரிந்து வாய் பிளந்த தோற்றத்தைக் கண்டு வாயைப் பொத்திக் கொண்டு களுக்கினாள். ஷாலினி பட்டென்று அவனைத் தட்டி கண்டித்தாள். "சே! என்ன கிரண் இது? விவஸ்தையே இல்லாம." ஆனால் தாமஸோ முறுவலித்தார். "இல்லை ஷாலினி, கிரண் சும்மா சீண்டலாக் கேட்டாலும் இது நல்ல கேள்விதான், விளக்கறேன். ஒரே ஒரு உப்பகற்றல் சிஸ்டம் மட்டும் இருந்தா இவ்வளவு மின்திரைகள் தேவையில்லைதான். ஆனா இங்க கீழ பாருங்க? எத்தனை சிஸ்டம் இருக்கு! ஒவ்வொரு உப்பகற்றல் சாதனத்துக்கும் அதன் நடப்பு முறைக்கும் பல நிலைகள் இருக்கு. அதுக்கெல்லாம் எந்த மாதிரி வேலை செய்யுதுன்னு கண்காணிப்பும் மேற்பார்வையும் அவசியமா இருக்கு. ஆராய்ச்சி சரியா செஞ்சு, தேவையான அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் தேவைப்பட்ட உடனே செய்ய வேண்டியிருக்கில்லையா? அதுக்குத்தான் இத்தனை திரைகள், அதுல இவ்வளவு சின்னங்கள்."
கிரண் தலை தாழ்த்தி ஏற்றுக் கொண்டான். "ஓ, ஐ ஸீ. ஓகே, ஓகே, இப்பப் புரியுது எனக்கு. அத்தனை சாதனங்களுக்கு இது வேண்டியதுதான்."
சூர்யா வினாவினார். "பார்க்க ரொம்ப பிரமாதமா இருக்கு தாமஸ். இந்தக் கூடம் அமைத்தவருக்கு என் கங்க்ராட்ஸ்! எங்க தொழிற்சாலையில கூட இவ்வளவு நேர்த்தியான கண்ட்ரோல் அறையமைப்பை நான் பார்த்ததில்லை. அது சரி, உங்க சாதனத்தைப் பத்தின விவரங்களைக் காட்டும் மின்திரை எங்கே? நான் அதைப் பார்க்கத்தான் இங்க வரணும்னு கேட்டேன்."
தாமஸ் முறுவலுடன், பெருமையாகச் சுட்டினார். "எங்க சாதனத்துக்கு ஒரு மின்திரை இல்லை சூர்யா, பலப்பல மின்திரைகள்! அதோ அங்க எதிர்ப் பக்கத்துல நடுவுல தனியா இருக்கே பல மின்திரைகள் அடங்கிய திரைச்சுவர், அதுதான் அக்வாமரீனின் சொந்தத் தனி நுட்பங்கள் அடங்கிய சாதனத்தை மேல்நோக்குவது. ஆனா ஒண்ணு – எங்க சாதனம் அளவில சிறிதா இருந்தாலும், மத்த சாதனங்களைவிட அதுக்குத்தான் இன்னும் திரைகள் அதிகம். அங்கேதான் எங்க பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் கூடி என்ன பழுதுன்னு ஆராய்ஞ்சுகிட்டிருக்காங்க." |
|
சூர்யா படுவேகமாக இரண்டே நொடிகளில் அங்கே சென்றடைந்து, அங்கிருந்தவர்களோடு சேர்ந்து திரையில் இருந்த விவரங்களைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தாமஸ் மெள்ள நகர்ந்து அங்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்குள் சூர்யாவின் மனதுக்குள் எதோ கேள்வி எழுந்து விட்டிருந்தது. தாமஸ் வந்தவுடன் அவர் எதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே சூர்யா பரபரப்புடன் அவரை இடைமறித்தார். "தாமஸ், இவங்க விவரங்களை எல்லாம் குறிச்சு முடிச்சாச்சுன்னா, எனக்காக ஒண்ணு செய்யணும். முடியுமா? கேட்கலாமா?"
தாமஸ் குழப்பத்துடன், "அப்படி என்ன செய்யணும் சூர்யா?" என்றார்.
சூர்யா தீவிர சிந்தனை கலையாமல், "நான் உங்க சாதனம் முதல் ஆரம்பத்திலேந்து வேலை செய்யறதைப் பார்க்கணும். அதுனால போன தடவை பழுதானதைப் பத்தின விவரத்தையெல்லாம் அவங்க குறிச்சு முடிச்சவுடனே, ரீஸெட் செஞ்சு திரும்ப ஆரம்பிக்கணும்."
யாவ்னா அவள் பங்குக்கு குழம்பினாள், "திரும்பி ஆரம்பிக்கணுமா? எதுக்கு?! அதுனால உங்களுக்கென்ன ஆதாயம்?"
சூர்யா விளக்கினார், "உங்க சாதனம் பழுதாகறப்போ சரியா அந்த நேரத்துல இந்தத் திரைகள் என்ன காட்டுதுன்னு நான் பாக்கணும். அதுக்குத்தான். பழுதாக ரொம்ப நேரமாகுமா?"
தாமஸ் பாராட்டினார். "ஆஹா, இது எனக்குத் தோணாமப் போச்சு பாருங்க. இது ஒரு நல்ல ஐடியா! இதுல வருந்தத் தக்கது என்னன்னா, பழுதாக அப்படி ஒண்ணும் நேரம் ஆகறதில்லை... சாதனம் ஆரம்பிச்சவுடனே சீக்கிரமே சிக்கல் வந்துடுது." என்று கூறிவிட்டு அங்கிருந்த ஒருவரின் தோளைத் தட்டி அழைத்தார். "ஜேம்ஸ் இங்க கொஞ்சம் வாங்க..." தாமஸ் நம் துப்பறியும் மூவரையும் ஜேம்ஸையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தார். "சூர்யா, இவர்தான் ஜேம்ஸ் கோவால்ஸ்கி. எங்க பிரமாதமான விஞ்ஞானிக் குழாமுக்கே தலைமை வகிக்கும் சிகரம்! உப்பகற்றல் முறையில எனக்குத் தெரிஞ்சதை விட இவர் மறந்ததே அதிகம்தான்னு சொல்லணும்! ஜேம்ஸ், இவர் சூர்யா. நம்ம சாதனம் கோளாறாகறத்துக்கு என்ன காரணம்னு கண்டு பிடிக்க யாவ்னா கூட்டிட்டு வந்திருக்கா... ஷாலினியும், கிரணும் அவருக்கு உதவியாளர்கள்."
ஜேம்ஸ் கோவால்ஸ்கி, தாமஸுக்கு நேரெதிராகத் தோற்றமளித்தார். குட்டையாக ஆனால் குறுகிய முருங்கைக்காய் போல் வெடவெடவென ஒல்லியாகத் தோற்றமளித்தார். தலையில் பக்கத்திலும் பின்னும் கொஞ்சம் முடி ஒட்டிக்கொண்டு சிலிர்த்ததே ஒழிய, தலை மண்டை உச்சியோ பளபளத்தது! மூக்கு சற்றே வளைந்து கருடன் போலிருந்தது! (தேவனின் சாம்பு போல என்று சொல்லலாமோ!)
கிரண் ஷாலினியிடம் கிசுகிசுத்தான். "ஏய், ஷாலு, இவரைப் பார்த்தா ரொம்பவே பாவமா இருக்கு இல்ல? சின்ன வயசுல ஒல்லிப் பிச்சானா இருக்கேன்னுட்டு வலுக்கட்டாயமா இழுத்து வச்சு எனக்கு அம்மா ஊட்டி விடுவா. அந்த மாதிரி இவருக்கு சாப்பாட்டைத் திணிச்சு விடலாம் போல இருக்காரே. அப்புறம், நான் முன்னால சொன்ன மாதிரி, தாமஸை உருக்கினா அஞ்சு ஜேம்ஸ் வார்த்துடலாம் போலிருக்கு..." என்று கூறிவிட்டு, மேலும் எதோ சொல்லப்போன கிரணை, அவன் கை மேல் படாரெனத் தட்டி ஷாலினி அடக்கினாள். ஆனாலும் கிரண் கூறியது காதில் விழுந்துவிடவே, அருகிலிருந்த யாவ்னா மீண்டும் களுக்கினாள். தாமஸ் அவர்களைப் பார்த்து முறைத்ததும், "ஒண்ணுமில்ல தாமஸ், ப்ளீஸ் ப்ரொஸீட்" என்று கூறிவிட்டு வாயைப் பொத்திக கொண்டு வேறு பக்கம் திரும்பி பெரும் பிரயத்தனம் செய்து அடக்கிக்கொண்டாள்!
தாமஸ் மீண்டும் ஜேம்ஸ் பக்கம் திரும்பி, "சூர்யா திறன் வாய்ந்தவர் ஜேம்ஸ். அவர் நம் சாதனம் எப்படிப் பழுதாகுதுன்னு பார்க்கணுங்கறார். கொஞ்சம் இப்ப காட்ட முடியுமா?" என்றார்.
ஆனால், ஜேம்ஸோ, தாமஸ் கூறியதைக் கேட்டதும் கடூரமாக முகம் சுளித்தார். "தாமஸ், எங்க திறமை வாய்ந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் குழு ரொம்பத் தீவிரமா இப்பக் கடைசியா ஆன பழுதை ஆராய்ஞ்சுக்கிட்டிருக்காங்க. அவங்களை இந்தத் தருணத்துல தொந்தரவு செய்யறது சரியில்லை. மேலும், இந்த மிகச் சிக்கலான உப்பகற்றல் சாதனத்துல பலப்பல மிக உயர்ந்த நுட்பங்கள் பிணைக்கப்பட்டிருக்கு. அதுல வந்துக்கிட்டிருக்கற பழுதின் மூலகாரணத்தை நம்ம தொழில்திறன் வாய்ந்த குழாமே இவ்வளவு நாளாக் கண்டறிய முடியலை. உப்பகற்றல் பத்தி ஒண்ணுமே தெரியாத யார் யாரையோ இப்படி திடீர்னு அழைச்சுட்டு வந்து இவர் கண்டு பிடிப்பார்ங்கறீங்களே! இது விலை நிர்ணயிக்க முடியாத, மிகத் தேவையான நேரத்தை விரயமாக்கறதா எனக்குத் தோணுது. அப்புறம் உங்கள் இஷ்டம்..." என்றார்.
கிரண் மிக உஷ்ணமாகப் பாய்ந்தான். "என்ன...! யார் யாரையோவா? நேரம் வீணாக்கறதா? யாரைப்பத்தி என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சுகிட்டு பேசுங்க..."
தாமஸும் தன் பங்குக்கு ஆள்காட்டி விரலை ஜேம்ஸ் பக்கம் ஆட்டியபடி உறுமினார். "ஜேம்ஸ், என்ன என் ஜட்ஜ்மென்ட்டையே சந்தேகிக்க ஆரம்பிச்சுட்டீங்களா? விஞ்ஞான ரீதியா வேணும்னா நீங்களும் உங்க குழுவும் பெரிசா இருக்கலாம். ஆனா மத்தபடி..."
சூர்யா அவசரமாகக் குறுக்கிட்டு இருவரையும் தணித்தார். "சே, சே, அவர் அப்படி என்ன தப்பா சொல்லிட்டார்? அவர் கேள்வி நியாயமானதுதானே? நாங்க ஒவ்வொரு கேஸ்லயும் சந்திக்காத கேள்வியில்லையே! Par for the course! கொஞ்சம் அமைதியா இருங்க விளக்கினாப் போச்சு!" என்று கூறிவிட்டு, வழக்கம் போல் ஜேம்ஸின் அவநம்பிக்கையைத் தகர்க்க ஒரு அதிர்வேட்டு வீசினார்.
சூர்யா ஜேம்ஸை அதிரவைத்து, தன்மீது முழு நம்பிக்கை வரவைக்கும் வகையில் கூறியது, அவரைப் பற்றி ஏற்கனவே உணர்ந்துவிட்ட தாமஸையும் யாவ்னாவையும் கூடப் பெருவியப்பில் ஆழ்த்தி, தாங்கள் நினைத்ததைவிடச் சூர்யா அதிகத் திறனுள்ளவர், தங்கள் பிரச்சனையை அவரால் நிவர்த்தித்துவிட முடியும் என்னும் மனச்சாந்தியையும் அளித்தது.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|