|
|
ஏப்ரல் 28 - டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நினைவு நாள்
டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் அவர்களைத் 'தமிழ்த்தாத்தா' என அவரின் தமிழிலக்கியப் பணியைச் சிறப்பித்து அழைப்பது போலவே அவரின் தமிழிசைப் பணியையும் நினைவுகூர்ந்து தமிழிசைத் தாத்தா எனவும் கூறலாம். அவரது தமிழிலக்கியப் பணிகளும், இசைப்பணிகளும் பண்டைய தமிழிசையைப் பற்றிய பெருமையான செய்திகளை அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகின்றன.
தமிழ்த் தாத்தாவின் சீரிய பணியான தமிழிலக்கியப் பதிப்புகளின் வாயிலாக சங்க காலத்தில் பண்ணும், பாடலும் பண்பட்டு வளர்ந்த நிலையிலிருந்தன என்பதனையும் அக் காலத்திய இசைக்கருவிகளைப் பற்றிய செய்திகளையும், சிலப்பதிகாரத்தினின்றும் நம் பண்டைய தமிழிசையின் வளர்ச்சி பண்ணமைப்பு, பாடலமைப்பு, இசைக்கருவிகள் அவற்றை இசைக்கும் முறைகள், வளர்ந்தோங்கியிருந்த தமிழிசையின் இலக்கணங்கள், ஆளத்தி வகைகள், தாள வகைகள், அலகுகள், இசை நரம்புகள், உள்ளோசைகள் ஆகியவற்றினைப் பற்றிய அரிய செய்திகளையும், காப்பிய நூல்களான மணிமேகலை, பெருங்காதை, சீவகசிந்தாமணி ஆகியவற்றில் காணப் பெறும் இசை பற்றிய செய்திகளையும் தமிழிசை பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு அறிமுகம் செய்தவர் எனக் கூறலாம்.
பண்டைய தமிழிசை நூல்கள் பலவும் மறைந்து பட்டன. ஆதலால் தமிழிசையைப் பற்றிய ஆராய்ச்சிப் பணிக்குத் தமிழிலக்கிய நூல்களே பெரிதும் உதவுகின்றன. உ.வே.சா. வின் தமிழிலக்கியப்பணி தமிழிசைக்கும் அவர் ஆற்றிய பணியாகும், இதனைத் தமிழிசை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் நன்கறிவர். இவரின் மாணாக்கரான திரு. கி.வா. ஜகன்னாதன், 'சங்க காலத் தமிழ்ச்சோலை பல காலம் இருப்பது தெரியாமல் இருந்து வந்தது. மீண்டும் தமிழ்நாட்டில் சங்கத்தமிழ் மணத்தினைப் பரப்பியவர் டாக்டர் உ.வே.சா அவர்கள்'' எனக் கூறுகிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களையும் காப்பியங்களையும் காலத்தின் அழிவினின்று மீட்டுத் தந்து பழந்தமிழிசை பற்றிய ஏராளமான செய்திகளை அறிவதற்குத் துணை புரிந்து தமிழ் இசைப்பணி ஆற்றியதோடு மட்டுமல்லாமல் தமிழ்ப் பாடல்களை இயற்றிய தமிழிசை வல்லுநர்களான கோபாலகிருஷ்ண பாரதியார், கணம் கிருஷ்ண அய்யர், மஹா வைத்யநாத அய்யர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்று நூல்களையும் அளித்து அக் காலத்திய
இசைக் கலைஞர்களைப் பற்றியும் இசை விற்பன்னர்களின் சமூக, கலாச்சார மரபுகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்திருப்பதன் வாயிலாக இசைப்பணியையும் ஆற்றியுள்ளார். இவர் அக் காலத்தில் வாழ்ந்த சுமார் நானூறு வித்வான்களைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். இவர் கோபாலகிருஷ்ண பாரதியாரின் படைப்பான 'நந்தனார் சரித்திரம்' எனும் நூலை சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்து அந்நூலில் இசை, இலக்கியம் ஆகியவற்றின் சிறப்புகளை விரிவாக எடுத்துக்காட்டி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாகவே எழுதியிருப்பதும் இவரின் சிறந்த தமிழிசைப் பணியாகும்.
'சங்கீத மூம்மணிகள்' எனும் அவரது நூலின் முகவுரையில் ''என் முன்னோர்கள் சங்கீதத் தொடர்புடையவர்கள் ஆதலினாலும், என்னுடைய தந்தையாரும் சிறிய தந்தையாரும் சங்கீதத்திலேயே தங்கள் வாழ்நாளை ஈடுபடுத்தியவர்கள் ஆதலினாலும் இளமையிலிருந்தே சங்கீத சம்பந்தமான விஷயங்களையும், சங்கீத வித்வான்களைப் பற்றிய செய்திகளையும் நான் அறிவதற்கு வாய்ப்பிருந்தது எனவும் நானும் இளமையிற் சங்கீதப் பயிற்சி பெற்றவன் ஆதலின், தமிழ்த் தெய்வத்தின் வழிபாடு செய்து வரும் காலத்திலும் சங்கீதத்தை மறந்தேன் அல்லேன்'' எனக் கூறுகிறார். நாவுக்கரசரின் 'தமிழோடிசை பாடல் மறந்தளியேன்' எனும் வரியினை நினைவு படுத்துகின்றது. இவர் பதிப்பித்த பல தமிழ் நூல்களுள் 'தமிழ் விடு தூது' எனும் நூல் தமிழின் பெருமையை மிகச் சிறப்பாக எடுத்துக்கூறும்.
டாக்டர் உ.வே.சா. அவர்களுக்குத் தமிழே உயிர் என்பதை விட தமிழே உயிரினும் மேலானது என்பதனை அவர், நாடொறும் இறைவனை வேண்டிப் பாடிய பாடலினின்றும் அறியலாம். இப்பாடலை இவர் வேகடை அல்லது பியாகடை எனப்படும் ராகத்தில் அமைத்துப் பாடி வந்தார் என அறிகிறோம். இவ்வாறு வேகடை ராகத்தில் இவர் இப் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதினின்றும் இவரது இசைத் தேர்ச்சியினை அறிகிறோம். இவர் பாடிய இப்பாடல்,
இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தமென்றாலும் வேண்டேன் உதிப்பித்த பன்னூல் உளிர அடியேன் பதிப்பிக்கவே கடைக்கண் பார்
இவர் வேகடை எனும் ராகத்தின் பெயரை இணைத்து இச் சொற்றொடர்க்கு அழகு சேர்த்து இசை இலக்கணத்துடன் பாடியதினின்றும் இவரது தமிழ்ப்பற்றும் இசைத் தேர்ச்சியும் நன்கு புலனாகின்றது. இவர் தன் ஏழாவது வயதில், 'தீயினில் மூழ்கினார், திரு நாளைப் போவார்' எனும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கானடா ராகப் பாடலை முதன்முதலில் ஒரு திருமணத்தில் பாடக் கேட்டு அப் பாடலைச் சிறப்பாகப் பாடியதைக் கேட்டு இவரது தந்தையார் முறைப்படி இவருக்கு இசைப்பயிற்சி அளித்ததாக அறிகிறோம். இதனை டாக்டர் உ.வே.சா. அவர்கள் இசை கற்பதற்கு எனக்கு முதல் காரணமே நந்தனார் சரித்திர கீர்த்தனை எனக் கூறுகிறார். இவரின் தேர்ந்த இசையறிவு தமிழிலக்கிய நூல்களினின்றும் இசை பற்றிய ஆராய்ச்சிக் கருத்துக்களைச் சிறந்த முறையில் எடுத்துக் கூறவும், இசை நூல்கள், கீர்த்தனைகள் வாயிலாக எடுத்துக் கூறவும் பெரிதும் உதவியது. சான்றாகப் பெருங்காதையில் 'நாரத கீதக் கேள்வி' எனும் நூல் நாரதசிக்ஷ¡ எனும் வடமொழி நூலைக் குறிக்கின்றது என்பதாகக் கூறியிருப்பது, உதயணனுடைய கோடாபதி எனும் யாழைப் பற்றிக் குறிப்பிடும்போது தெய்வப்பேரியாழ் (1:48:104) என்பது உதயணனது வீணையின் பெயரென்று கூறுவதினின்றும் இவருடைய இசையறிவும் இலக்கியத் தேர்ச்சியும் எவ்வாறு இணைந்து தமிழிசைப் பணி ஆற்றுதற்கு உதவியது என்பதை அறியலாம்.
திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாயன்மார்அறுபத்துமூவர் ஆகியோரைப் பற்றியும், கோபாலகிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை ஆகியோரின் பணியைச் சிறப்பித்துப் பாக்களையும், கந்த புராண கீர்த்தனை, திருப்புகழ் பதிப்பு ஆகிய நூல்களுக்குச் சிறப்புப் பாயிரங்களையும் பாடி தம்முடைய தமிழிசைப் பணி ஆற்றியுள்ளார்.
தேவார திருப்பதிகங்களில் உள்ள ஈடுபாடு உவமை காண ஒண்ணாதது. தேவார பாராயணம் செய்து வரும்போது அந்தந்தப் பதிக சந்தத்தில் தாமும் பாடல்களை எழுதி வந்தார். சில சமயங்களில் பாராயணம் செய்த பதிகத்தின் உள்ளுறையை வைத்துப் பாடினார். தேவாரம் பாடிய பெருமக்களைப் பாராட்டி உருகிப் பாடிய பாடல்களில் தேவாரத்தின் சொல்லும் பொருளும் கலந்திழைந்திருக்கின்றன என இவரின் மாணாக்கரான திரு. கி.வா. ஜகன்னாதன் குறிப்பிட்டுள்ளார். சான்றாக இவர் தாண்டக வேந்தர் நாவுக்கரசர் பெயரில் இயற்றிய பாடல்,
இன்றே பெரும்பயனை எய்தினேன் பாடல் வகை இன்றே எலாமும் இயம்பினேன் - இன்றே நடராசன் நல்லருட்கு நானிலக்கம் ஆனேன் திடராசன் சொல்லரசைச் சேர்ந்து.
இவரின் இசை ஆராய்ச்சியினை நன்கு விளக்குவது இவர் 1929-ம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் சென்னை Y.M.C.A. மண்டபத்தில் கோடைக்கால இந்திய சங்கீதப் பள்ளிக்கூடத்தின் ஆதரவில் 'பண்டைத் தமிழரின் இசையும் இசைக்கருவிகளும்' எனும் தலைப்பில் ஆற்றிய உரையாகும். இக் கட்டுரை உ.வே.சா அவர்களின் நல்லுரைக்கோவை 3ம் பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பண்டைய காலத்தில் தமிழ்ச்சங்கங்களில் மூன்று தமிழினையும் ஆராய்ந்த செய்திகளையும் இசைத்தமிழ்ச் சங்கங்கள் தனியாக அமைக்கப்பட்டுப் பல இசை வல்லுநர்கள் இசைத்தமிழை வளர்த்து வந்தனர் எனும் செய்தியினையும் 'ஏழிசைச்சூழல்புக்கோ' என வரும் திருச்சிற்றம்பலக் கோவையாரால் இசைச் சங்கங்கள் இருந்தன எனவும், தமிழிசையின் அமைப்பு, அதன் பாங்கு, தமிழிசை இலக்கணம், இசைக் கருவிகள் ஆகியவைகளைப் பற்றிக் குறுந்தொகை, கலித்தொகை, பெருங்காதை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கல்லாடம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றில் காணப்படும் சான்றுகளை மேற்கோள் எடுத்துக் கூறி விளக்கியுள்ளார்.
இன்றைய கர்நாடக இசையின் வரலாற்று நூல் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுவது போல் இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இவ்வாராய்ச்சிக் கட்டுரை தமிழிசைக்கு ஆற்றிய பெரும் பணிகளுள் ஒன்றாகும். கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் சில காலம் இசை பயின்று இசையில் நன்கு தேர்ச்சி பெற்றதினால், தமிழிலக்கியங்களில் உள்ள இசை பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து கருத்துக்களை கூறும்பொழுதும், கட்டுரைகள், நூல்கள் ஆகியவற்றை வெளியிடுங்காலும் அவை Scholartic tradition எனப்படும் இலக்கிய மரபுகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல் Performing tradition அல்லது பாடி வரும் மரபு அல்லது -சைக்கும் வழி மரபினையும் கருத்தில் கொண்டு தமிழிசை பற்றிய மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நூல்களையும் குறிப்புகளையும் இசை உலகிற்கு வழங்கியுள்ளார்.
அச்சில் வெளிவராத கோபாலகிருஷ்ண பாரதியாரின் திருநீலகண்ட நாயனார் சரித்திரம், இயற்பகை நாயனார் சரித்திரம் ஆகிய நூல்களினின்று சில கீர்த்தனைகளையும், கனம் கிருஷ்ணய்யர் அவர்களின் பாடல்களையும் முதன்முதலில் வெளியிட்டுள்ளார். மேலும் சில தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றித் தமிழிசைக்குத் தொண்டாற்றியுள்ளார். தமிழ்க் கீர்த்தனைகளைப் பற்றி அவர் அரிய கருத்துக்களை கூறியுள்ளார். ''கீர்த்தனைகளை இயற்றுவதற்கு சங்கீதப்போக்கு நன்றாகத் தெரிய வேண்டுமென்று கோபால கிருஷ்ண பாரதியாரும் வையை இராமசாமி அய்யரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல்லவிக்கும் அநுபல்லவிக்கும் உள்ள
இயைபு, சரணங்களின் பொருளும், பல்லவியின் பொருளும் தொடர்ந்து நிற்றல், சரணங்களில் முடுக்கு அமைய வேண்டிய முறை முதலிய செய்திகளை அவர்கள் மூலமாகவும் அனுபவத்தினாலும் அறிந்து கீர்த்தனைகளை இயற்றலானேன்'' என 'என் சரித்திரம்' நூலில் கூறுகிறார்.
இவரின் முதற் கீர்த்தனை முருகப்பெருமான் மீது பாடப்பட்டது. ஐந்து கீர்த்தனைகளை ஒரு தொகுப்புக் கீர்த்தனைகளாக முருகன் பெயரில் இயற்றி 1891-ம் ஆண்டு வெளியிட்டார். பிறகு பல கீர்த்தனங்களைப் பிற கடவுள்கள் பெயரிலும் இயற்றியுள்ளார். இவருடைய கீர்த்தனைகளின் அமைப்பு பல்லவி, அநுபல்லவி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சரணங்களை உடையனவாக உள்ளது. டாக்டர் உ.வே.சா. அவர்கள் அவிநாசி கருணாம்பிகையின் பெயரில் பரஸ் ராகத்தில் இயற்றியுள்ள பாடல்:
பல்லவி
காத்தருள வேண்டுமம்மா அடியேனைக் காத்தருள வேண்டுமம்மா
அநுபல்லவி
காத்தருள வேண்டும் வஞ்சர்கடை அணுகாமலே என்றும் (கா) |
|
சரணம்
போற்று மார்க்கண்டனுக்காகக் கூற்றை உதைத்தோர் வலத்தை ஏற்றுரை சாம்பலி உன்றன் ஆற்றலை நன்றாக இன்று கண்டேன் கண்டேன் கண்டேன் அனுதினமும் (கா) காசியென்றே சொல்லுமவி நாசி மாத்தலத்தை விசு வாசி யேனின் பாத மலர் நேசி யேருனன்றாலும் நீயே தஞ்சம் தஞ்சம் தஞ்சம் அனுதினமும் (கா)
இப்பாடலின் அமைப்பு முத்துத்தாண்டவர், கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோரின் கீர்த்தனங்களை ஒத்து அமைந்துள்ளது. சான்றாக பல்லவியின் 'காத்தருள வேண்டும்' எனும் வரியை அனுபல்லவியில் திரும்பவும் பாடியிருப்பது முத்துத் தாண்டவரின் கீர்த்தனையினைப் பின்பற்றியும், ஒரு வரியில் பல்லவியை அமைத்திருப்பது கோபால கிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனை அமைப்பை ஒத்தும் அமையப் பெற்றுள்ளது. இவ்வாறு இவரின் கீர்த்தனை அமைந்திருக்கும் பாங்கு டாக்டர் உ.வே.சா. அவர்கள் தமிழிசையின் performing tradition அல்லது இசை வழி மரபினுக்கு இவர் தொடர்ந்து ஆற்றி வந்த பணியினை எடுத்துக் காட்டுகின்றது. டாக்டர் உ.வே.சா. அவர்கள் தமிழ்க் கீர்த்தனைகளின் அமைப்பைப் பற்றிக் கருத்துக் கூறும்பொழுது 'தமிழ் கீர்த்தனைகளில் பெரும்பாலானவை இயற்றமிழ் இலக்கண அமைதியில்லாதனவாக இருக்கின்றன, கீர்த்தனங்களை இயற்றும் பல சங்கீத வித்வான்கள் எதுகையும் மோனையும் பொருத்தமாக இருந்தால் போதுமென்ற அளவிலேயே கீர்த்தனங்களை அமைத்துள்ளனர். வெகு சிலரே இயற்றமிழ் அறிவும் நன்கு பெற்று நன் மணம் பெற்ற பொன் மலர் போன்ற கீர்த்தனைகளை இயற்றியுள்ளனர்' எனக் கூறியுள்ளார். டாக்டர் உ.வே.சா. அவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு இயற்றமிழுடன் கூடிய சிறந்த தமிழிசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.
ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழிசைச் சங்கத்தினைச் சென்னையில் தொடங்கும்பொழுது பல இசைவாணர்களும், இசை ரசிகர்களும் தமிழ்ப் பாடல்கள் மட்டும் பாடி இசைக்கச்சேரிகள் செய்ய முடியுமா? பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப் பாடல்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன என பல எதிர்ப்புகளும் மறுப்புகளும் எழுந்த காலத்தில், பரிபாடலிலிருந்து பாபநாசம் சிவன் வரையில் இயற்றப்பட்டுள்ள பாடுவதற்குரிய பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களின் பட்டியலையே தமிழிசைச் சங்கத்திற்கு அனுப்பியுள்ளார். இசை ஆராய்ச்சிக் கட்டுரைகள், இசை நூல்கள், இசை பற்றிய குறிப்புகள், விளக்கங்கள் வாயிலாகவும் பாக்கள், கீர்த்தனைகள் ஆகியவை வாயிலாகவும் தமிழிசைக்கு சீரிய பணியாற்றியுள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் டாக்டர் உ.வே.சா அவர்களுக்கு 'மஹாமஹோபாத்யாய' எனும் சிறப்புப் பட்டம் வழங்கிய விழாவில் டாக்டர் உ.வே.சா அவர்கள் பணிகளைச் சிறப்பித்துப் பாடிய பாடலினின்றும் சில வரிகளை நினைவுகூர்வோம்.
குடந்தை நகர் கலைஞர் கோவே பொதியமலை பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வரிசையில் துதியறிவாய். அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றி துவங்குவாயே
டாக்டர் எஸ்.ஏ.கே. துர்கா |
|
|
|
|
|
|
|
|