|
நிம்மதியின் நிழலில் |
|
- |நவம்பர் 2006| |
|
|
|
என்னடா சொல்றே நீ! நீ சொல்றது நிஜமா?.. என்னால் நம்பவே முடியலையேடா'' ஏர்போர்டின் வாயிலில் நின்றபடி கேட்டாள் சந்தியா.
தூரத்தில் கார்ட்டை தள்ளியபடி வந்து கொண்டிருந்தார் ஞானவேல்.
''ஏம்பா! உங்களுக்குதான் உடம்பு சரியில்லேயே.. பின் ஏன் சிரமப்படணும்? பேசாம... ரெட்சர்ட் போட்ட.. ஹெல்ப் மன் ஒருவனை வைத்து கொள்ளுவதுதானே ஏன் இப்படி சிரமப்படனும்..'' என்றான் விச்சு.
லால் ஏஞ்சல்ஸ் விமான நிலைய வாசற் படியில் மூவரும் நின்றிருந்தனர்.
''அடபோடா! அவன் என்ன 10 டாலர் கேட்கிறான். இதுக்கு போய் 460 ரூபா எவனாவது கொடுப்பானா? எல்லாம் போதும்... போதும்...!'' என்றார்.
''அய்யோ உங்களை திருத்தவே முடியாதப்பா! என்று சொல்லி கொண்டே தள்ளுவண்டியை... தன் கைக்கு மாற்றி கொண்டான். நிஜமாகவே கனம் அதிகமாகத்தான் இருந்தது. ரோடை கிராஸ் செய்து கார்பார்கிற்கு இருவரையும் அழைத்து போனான்.
சந்தியாவிற்கோ.. அமெரிக்கா மண்ணை மிதித்ததுமே, விச்சு சொன்ன செய்தி ரொம்ப ஷாக்காக இருந்தது. கடவுளே... இது உண்மையாகிவிட கூடாது..! என்று மனம் வேண்டி கொண்டது.
இது ஒன்றும் தெரியாதவராக பையனிடம் ஜாலியாக பேசியபடி வந்து கொண்டிருந்தார் ஞானவேல்.
சந்தியாவின் ஒரே ஆசை மகன் விச்சு. விச்சுவை அமெரிக்கா அனுப்பவே இஷ்டப்படலே சந்தியா. ஆனால் ஞானவேல் தான். அவளை சமாதானப்படுத்தி..' 'என்னடி இது.. திரைகடலோடியும் திரவியம் தேடு..ன்னு நம்ம பெரியவா சொல்லுவா... இதிலென்னடி கஷ்டம்.. நன்னா உலக அறிவு வளரட்டு மேன்னு..'' அறிவுரை சொன்னார்.
''என்னம்மா.. பேசவே மாட்டேங்கறே? வாயடைச்சு போய் உட்கார்ந்துட்டே.. ஊரை பார்த்துண்டு வாம்மா..!'' காரை ஒட்டிக் கொண்டே அம்மாவை ஓரக்கண்ணால் பார்த்தான்.
களையிழந்து.. கண்ஓரத்தில் கண்ணீர் திரண்டு வந்தது சந்தியாவிற்கு.
பாவம் அம்மா.. வந்ததும் தான் இதை சொல்லியிருக்ககூடாது என்ன அவசரம் எனக்கு?
வந்ததும் வராததுமாய் இதை போய் சொல்லி கொண்டு..'' என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
ஆனாலும்.. எல்லா வீடுகளிலும் பையனோ.. பொண்ணோ.. அம்மாவிடம்தானே ஓட்டுதல். தன் மனகுறை நிறைகளை சொல்லி ஆறுதல் தேட... தாய் என்ற அந்த சுமைதாங்கியிடம் தானே... மனபாரத்தை இறக்கி வைக்க முடியும். அந்த கணக்கில் தாய் பசுவை கண்ட கன்று குட்டியானான் விச்சு.
அப்படி என்ன சொன்னான்? இந்த விச்சு..
ஒரே பையனுக்கு கோயம்புதூர் மில்ஓனர் பெண் ஸ்ரீநிதியை அழகாக, கிரேண்டாக கல்யாணம் செய்து கொடுத்தாள் சந்தியா. ஒரு வருடம் இன்னும் முடியகூட இல்லை.
ஆனால் அதற்குள் அவளுக்கு விச்சுவிடம் இருந்து விவகாரத்து கேட்டாளாம். இது பெற்றவளுக்கு அதிர்ச்சி இல்லாமல் எப்படி இருக்கும்? இதை உடனே கேட்டிருந்தால் ஞானவேலுக்கு இரண்டாவது ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். அதான் விச்சு சொல்லவில்லை.
''என்னடா நீ மட்டும் வந்துட்டே.. என் மாட்டுப்பொண் ஸ்ரீ எங்கே? அவளையும் அழைச்சுண்டு வந்திருக்கலாமே'' என்று சந்தர்ப்பம் தெரியாமல் வாய்விட்டார் ஞானவேல்.
அம்மாவும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வீடு வந்துவிட்டது. கார் கேரஜில் நிறுத்தினான். ஆடமாட்டிக்காக ஷட்டர் திறந்து கொண்டது. அதனை பார்த்து, ''ஊம்.. இப்படியெல்லாம் பசங்க.. சோம்பேறியாகிட்டாங்க இந்த காலத்தில்..'' என்றார்.
இங்கிதம் தெரியாத கணவரை ஒருமுறை முறைத்தாள் சந்தியா.
சந்தியாவின் கண்களில் தெரிந்த எச்சரிக்கை சிக்னலை புரிந்து கொண்டு மெளனமானார் ஞானவேல்.
''பத்ரகாளி!'' என்று முனகி கொண்டே வீட்டிற்குள் சென்றார்.
வேறு சந்தர்ப்பம் இருந்தால் இதற்கு ஒரு குட்டிசண்டையே வந்திருக்கும் இருவருக்கும்.
அறையை விட்டு... வெளியில் வராமலே இருந்தாள் ஸ்ரீநிதி.
ஐந்து பெட்ரூம் கொண்ட அந்த பெரிய வீடும்.. அதில் உள்ள சோபா.. பர்னிச்சர்களும்.
அழகான தோட்டத்தையும் கண்டு இவ்வளவும் தன் பையன் அமெரிக்கா வந்து சுயமாக சம்பாதித்து அவன் காசில் வாங்கி போட்டது!'' என்ற பெருமையைகூட அனுபவிக்க முடியாமல் அந்த தாய் மனம் தவித்தது. |
|
மிகப் பெரிய 60 இஞ்ச் டிவியையும் அதன் பேராக தியேட்டரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஞானவேல்.
அம்மா.. நீ ரெஸ்ட் எடு! இன்னிக்கு ஒன்னும் சமைக்க வேண்டாம்.. நான் இந்தியன் ரெஸ்டாரண்டில் போய் ஏதாவது சாம்பார், பொரியல் வாங்கி வந்துவிடுகிறேன். பிரிட்ஜில் சாதம் இருக்கு.. மைக்ரோவோவில் சூடாக்கி கொள்ளலாம்..'' என்று சொல்லி கிளம்பினான் விச்சு.
''ஏண்டா... மேலே அவள் ரூமுக்கு போய் நான் பார்க்கட்டா... பேசட்டுமா?'' என்றாள் சந்தியா.
''போ! போய் பேசு! ஆனா.. நான் சொன்னவிஷயத்தைப் பற்றி ஒன்னும் பேசிவிடாதே! ஜாக்கிரதை!'' என்று சொல்லி புறப்பட்டான்.
தன் பெட்டியை திறந்து தன் மருமகளுக்காக ஆசை ஆசையாய் சென்னை சரவணாவில் வாங்கி வந்த பட்டு சேலையையும், சுடிதார் செட், பிரின்ஸ் ஜுவல்லரி ஷோகேசை அலங்கரித்த டாலர் செயினையும் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.
மெல்ல கதவை... தட்டினாள். ''யாரது?'' என்ற குரல் பிசிறில்லாமல் வந்தது.
''நான்தாம்மா..'' என்றபடி உள்ளே வந்த சந்தியாவை பார்த்ததும், ''ஓ... நீங்களா...? என்றபடி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தாள் ஸ்ரீநிதி.
மாமியார் மாமனார் ஊரிலிருந்து வருவதுகூட தெரியாமல் படுக்கையில் உறங்கும் மருமகளின் திமிர்தனம் எரிச்சல் மூட்டியது சந்தியாவிற்கு. வெளிக்காட்டாமல்..
''ஏம்மா.. ஸ்ரீ என்னாச்சு? உடம்பு சரியில்லையா? என்ன.. உன் மாமா ஏர்போர்ட்டில் இருந்து கேட்கிறார்.. ஏன் ஸ்ரீ வரலைன்னு..'' என்றாள்.
''ம்.. ஆ..மா..ம். தலைவலி.. அதான்..'' என்று சமாளித்தாள்.
''இதோ இந்த கலர் புடவை உனக்கு பிடிச்சிருக்கா? இந்த மாலை உன் கழுத்துக்கு.. பாந்தமா இருக்கும்..'' என்று மாலையை கழுத்தில் வைக்க போனாள். கழுத்தில் தாலிசரடை காணாமல் திகைத்தாள்.
'எங்கேம்மா தாலி?''
''ம்.. உறுத்ததுண்டு.. கழட்டி தலைகாணி அடியில் வச்சேன்..'' வேண்டா வெறுப்பாக எடுத்து அணிந்து கொண்டாள்.
*** வந்த ஒருவாரமாக ஓடியாடி வேலை செய்யும் மாமியாரையும், எச்சில் தட்டைகூட கழுவாமல் எழுந்து செல்லும் மாமனாரையும், தன் புருஷனின் அதட்டலையும், உருட்டலையும் கண்டு பதறாமல் பணிவிடை செய்யும் தன் மாமியாரையும் கண்டு அதிசயித்தாள் ஸ்ரீநிதி.
திடீரென்று உடம்பு முடியாமல் சோர்ந்த அம்மாவை எமர்ஜென்சிக்கு அழைத்து போனான் விச்சு. விச்சு வீட்டில் வந்து சொன்ன சேதியைகூட கேட்டு ஸ்ரீநிதியே ஆடிபோனாள்.
அத்தைக்கு ஹார்ட் அட்டாக் இரண்டு மணிநேரத்தில் ஆபரேஷன் என்று.. சொல்லி வீடே ஆடிபோனாலும் தென்றல் தமிழ் நாளிதழை எடுத்து சுவாரஸ்யமாக படித்துக் கொண்டு இருக்கும் தன் மாமனாரை கண்டு விக்கித்து போனாள் ஸ்ரீநிதி.
ஆபரேஷன் செய்ய சம்மதம் என்று கையெழுத்தை டிவி முன்னால் அமர்ந்து பார்த்துக் கொண்டே போட்ட இந்த மனிதரா என் மாமனார். வியந்து போனாள்.
அன்று தான் வைரஸ் ஜுரம் என்று படுத்த போது.. மருந்து மாத்திரை.. ரசம் சாதம் ஊட்டிவிட்டு... உடல் முழுதும் வலிக்கு பேண்டேஜ் போட்டு மசாஜ் செய்த விச்சு எங்கே இவர் எங்கே?
ஏதோ ஆபீஸ் பார்ட்டி இரண்டுக்கும் தன்னை அழைத்து போகாததால் மனம் வெறுத்து...
விவகாரத்துக்கு லாயரை போய் பார்த்த தன்னையும், உயிருக்கு போராடும் மனைவியை ஆஸ்பத்திரியில் போய் பார்க்காமல் இந்த மாமனாருக்காக திருமாங்கல்யத்தை கண்ணில் ஒற்றி கொண்டு ஓடி ஓடி வேலை செய்யும் தன் அத்தையையும் எண்ணி பார்த்தாள். 40 வருட இல்லற வாழ்க்கை என்ற மாட்டு வண்டியை சண்டி மாடான ஜோடி மாட்டோ டு இழுத்து செல்லும் தன் மாமியாரின் பொறுமை. பூமி தாயையும் வென்று விடும் என்று எண்ணிக் கொண்டாள்.
ஸ்ரீநிதி லாயரிடம் தான் கொடுத்த ஸ்டேட்மெண்ட் பேப்பரை கிழித்து குப்பை கூடையில் போட்டாள்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்த சந்தியா ஓடி ஓடி தனக்காக வேலை செய்யும் மருமகள் ஸ்ரீநிதியை கண்டு ஆச்சர்யப்பட்டாள்.
''அத்தை இனி வாக்கிங் போவதை தவிர ஒரு வேலையும் நீங்க செய்ய கூடாது. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். விச்சு! டாக்டர் கொடுத்த மருந்தை என்னிடம் கொடுங்கள்...
வேளா வேளைக்கு அத்தைக்கு நானே கொடுத்திடறேன். நீங்க ஆபீஸில் இருந்து வந்ததும் அத்தையை வாக்கிங் அழைச்சிட்டு போங்க..!'' என்ற கட்டளையை புன்னகையோடு, 'சரிம்மா.. ஸ்ரீ..'' என்ற தன் மகனின் முகமலர்ச்சியை கண்டு அந்த தாயுள்ளம் நிம்மதி பெற்றது.
குருபிரியா |
|
|
|
|
|
|
|