Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஒரே ஒரு சின்ன உதவி
- தங்கம் ராமசாமி|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeவெள்ளிக்கிழமை மாலை. அவனவன் காரில் வீட்டிற்குப் பறக்கிறான். செல்பேசி காதில் ஒலிக்க "என்ன?" என்றான் ரவி எரிச்சலுடன். கூப்பிட்டது அவன் மனைவி கோமதிதான்.

"பால் முழுக்கத் தீர்ந்துடுத்து. வரவழியில் காஸ்ட்கோவில் நாலு பால் மட்டும்...'' கோமதி சொல்லி முடிப்பதற்குள் ''வாட்! நாலு பாலா? பைத்தியமா புடிச்சிருக்கு, நாலு பாலை வச்சிகிட்டு என்ன செய்யப்போறே?'' என்றான் ரவி.

''கஷ்டம்! என்ன கேள்வி கேக்கறீங்க. வாரக் கடைசி இல்லையா. உங்க அருமைத் தங்கை குடும்பத்தோட வரப்போறதா போன்ல சொன்னது ஞாபகம் இல்லை? அவ குழந்தைங்க பால்லேயே முழுகி எழுந்திருக்குமே...''

''சரி சரி, போதும். நாலுபால்தானே. வாங்கிட்டு வரேன்.'' படக்கென்று போன் ஒயரைக் காதிலிருந்து எடுத்தான்.

நாலு அடிகூடக் கார் நகர்ந்து இருக்காது, திரும்பவும் போன். ''ஒண்ணு விட்டுப் போச்சு. நல்ல காரட், கீரை வாங்கிடுங்க. உங்க பட்டாளங்க வந்தா கீரை காரட்டுனு உயிரை வாங்குங்க.''

அப்பப்பா, இந்தப் பொம்பளைங்களுக்குப் புகுந்த வீடுன்னா எப்படியெல்லாம் பேசத் தோணுது! ''சரி வை போனை சிக்னல்ல இருக்கேன்."

ரவி காஸ்ட்கோவில் நுழையும்போது மறுபடியும் போன்.

''ஐயோ! என்ன இப்படி டிரபிள் கொடுத்திட்டே இருக்கே.'' ஆத்திரத்துடன் சீறினான்.

''ஆமா பெரிய டிரபிள்.. ஒவ்வொருத்தர் வீட்டுக்கு என்னென்னவோ செய்யறாங்க. கடையில இருக்கறதை வாங்கி கார்ல போட்டுகிட்டு வர கஷ்டமாக்கும்.''

''நான்சென்ஸ். என்ன வேணும்?''

''காஸ்ட்கோவில் மீடியம் சைஸ் ஸ்வெட்ஷர்ட் ரொம்ப நல்லா இருக்காம். நல்ல கலர்ல எனக்கு ஒரு செட் வாங்கி...''

''இதோபார், ஸ்வெட்ஷர்ட் மண்ணாங்கட்டி! மனுஷன் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்தமான்னு இல்லாம, சும்மா தொண தொணன்னுட்டு.'' எரிச்சலுடன் கூறினான்.

''ஆகா! ரொம்ப வேலை செஞ்சு கிழிச்சிட்டீங்க.''

''ஸ்டுபிட்! வை போனை.''

ஒருவாறு வீடு வந்து சேர்ந்தான். மனைவி கோமுவின் குரல் ''ஐயையோ, முக்கியமா ஒண்ணு மறந்துட்டேன்... துவரம்பருப்பு ஆயிடுத்து. காரை எடுத்திட்டுப் போய் ஒரு சின்ன பாக்கெட் இண்டியன் ஸ்டோர்ல...''

''ஏய். என்னை என்ன நினைச்சிட்டே. ஆபீஸ்லேர்ந்து வரவனுக்கு ஒரு காபி டிபன் கொடுக்கத் துப்பில்லை.'' எரிந்து விழுந்தான்.

''வெரி சாரி. இதோ ஒரு நொடியில காபி கொண்டு வர§ன்... இதென்ன ஒரு பர்சன்ட் மில்க் வாங்கிட்டு வந்திருக்கீங்க... முன்னே பின்னே வீட்டுக்கு வேலை செஞ்சிருந்தா இல்ல தெரியும். எல்லாமே நானே...''

''போதும், நிறுத்து. ஏதோ வாங்கிட்டேன். உடம்புக்கு நல்லதுதானே. செலவழிச்சிட்டுப் போயேன். சரி கொண்டா காபியை.''

காபியைக் கையில் கொடுத்த கோமு, ''சொன்னா கோவிச்சுக்கப்படாது போற வழியில இந்த கேசட்டுகளை டிராப் பண்ணிடுங்க ப்ளீஸ். டியூ டேட் ஆயிடுத்துன்னா அபராதம் கட்டுங்கறான்.''

''அம்மா பரதேவதே! எல்லாத்தையும் ஒரே மூச்சில் சொல்லிடு. உனக்கு இதுவே ஒரு கெட்ட பழக்கம். ஒரு வேலைன்னுட்டு ஒன்பது வேலை வாங்குவே. பகல் முழுக்க என்னதான் செஞ்சிட்டிருக்கே?''

''சரி விட்டுடுங்க... நீங்க ஒரு வேலையும் செய்ய வேண்டாம். இந்த வீட்டுக்கு வண்ணாத்தியா, டிரைவரா, சமையல்காரியா இருந்துட்டுச் சாகறேன்.'' கண்களைக் கசக்கினாள்.

''கோமு, ஆ ஊன்னா இது ஒரு வார்த்தை ரெடியா வச்சிருப்பே... ஊர்ல உலகத்தில இல்லாத என்ன பெரீசா கிழிக்கறே? ஒவ்வொருத்தி ஆபீஸ் போய் சம்பாதித்து குடும்பத்த ஈடுகட்டறா. நீ என்ன பெரிய இவ...''

''அதான் உங்ககிட்ட எதையாவது சொன்னா நான் சம்பாதிக்கலைன்னு குத்திக் காட்ட வேண்டியது அது கிடக்கட்டும்... முடிஞ்சா இண்டியன் ஸ்டோர்ல குண்டு வெல்லம்கூட வாங்கணும் பொங்கல் வருதே...''

''உன்னோட பிளஸ் டூ பெயில் படிப்புக்கு எவன் உத்தியோகம் குடுப்பான்" மெல்லிய குரலில் தனக்குள் முணுமுணுத்தவன், "சட்... குண்டு வெல்லம் கொழுக்கட்டை வெல்லம். பேச்சைப்பாரு. எல்லா வேலையையும் வாங்கின அப்பறமும் கழுத்து மட்டும் குறை. உங்களையெல்லாம் வைக்கிற இடத்தில வைக்கணும்'' பற்கைளைக் கடித்து ஒரு முறை முறைத்தான்.

''இப்போ என்ன. நான் வேணா காரை எடுத்திட்டுப் போறேன். ராத்திரிக்கு குருமாவும் சப்பாத்தியும் செஞ்சிடுங்க... ஒவ்வொரு வேலைக்கும் உங்களைக் கெஞ்ச வேண்டியிருக்கு... சீ! என்ன பொம்மனாட்டி ஜன்மம் எடுத்தேனோ.''

''நீ ஒண்ணும் போக வேண்டாம். கை கால் அலம்பி முகம் கழுவிட்டுப் போறேன்.''
"ஏங்க டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டீங்களா? இந்த ரவை உருண்டையை மட்டும் கூடமாடப் புடிச்சுக் குடுங்களேன். எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன்.''

''அறிவு கெட்ட முண்டம். என்னை என்ன நினைச்சே? இண்டியன் ஸ்டோருக்குப் போங்கறே, ரவை உருண்டைங்கறே. மனுஷன் உயிரை வாங்கறே கொண்டா ரவையை...''

''வறுத்து எல்லாம் வச்சிட்டேன். கொஞ்சம் மிக்சியில நைசா அரைச்சு... கையில பாழாய்ப் போன மருதாணியை தெரியாம இட்டுக்கிட்டேன் ஒண்ணும் செய்ய முடியாம...''

''என்னது ரவையைப் பொடிக்கணுமா? தலையெழுத்து! எங்கே கொண்டா...''

''அதோ மேல் ஷெல்புல. கஷ்டம்... அது வறுக்காத ரவை. வறுத்தது வேற பேசின்ல இருக்கு. உங்ககிட்ட சொல்றதுக்கு நான் தனியா டானிக் சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கணும். தொண்டைத் தண்ணி வத்தி, கடவுளே! நீங்க ஒரு ஹெல்ப் பண்றதுக்குள்ளே பத்து ஆள் மெனக்கிட வேணும்போல இருக்கு. குருடன் தண்ணிக்குப் போன கதைதான்...''

''கோமு உருண்டை புடிங்கறே. ஒரு பக்கம் இண்டியன் கடை, கேசட் கடை இன்னும் என்ன பாக்கி! எனக்கு முக்கியமான வேலை இருக்கு. ஒரே ஆபிஸ் டென்ஷன்ல இருக்கேன். இதோ பாரு உருண்டை புடிச்சிட்டேன்.''

''கஷ்டமே! இது என்ன சின்னதும் பெரிசுமா! பார்க்க சகிக்கலை. எல்லாம் ஒங்க அருமைத் தங்கை பட்டாளங்களுக் காகத்தான் பாடாய்ப் படறேன்.''

''நான்சென்ஸ். நான் இனிமே ஒண்ணுமே செய்ய மாட்டேன்.''

உடை மாற்றிக் கொண்டு கிளம்பும் சமயம்.

''இன்னும் ஒண்ணு மறந்துட்டேன். இந்த கிரைண்டர் தூக்க முடியலை.. கொஞ்சம் எடுத்து பிளக் பண்ணி அரிசியை போட்டுடுங்க. அது பாட்டுக்கு ஓடிட்டு இருக்கும். நாளைக்கு அவங்க வரச்சே மாவு இருந்தால் செளகரியம்தானே. பாழாய்ப் போன மருதாணி!''

அரிசியைப் போட்டுவிட்டு ரவி கிளம்பும் போது ''நாளைக்கு கார்பேஜ் டிரக் வரும். அப்படியே அந்த டப்பாவை வாசல் பக்கம் தள்ளி வச்சிடுங்க. முறைக்காதீங்க, என் கையில் மருதாணி.''

"பிடுங்கல்...'' கோபத்துடன் கார்பேஜ் வைத்துவிட்டு ஒருவாறு கிளம்பிச் சென்றான். வரும் வழியில் போன், ''என்ன?''

''என்னங்க அப்படியே பீட்ஸா ஹட்டில் ஒரே ஒரு பீட்ஸா மட்டும் வாங்கிட்டு வந்துருங்க... ராத்திரிக்கு ஒண்ணும் பண்ண டைமே இல்லை.. ப்ளீஸ் எனக்காக...''

''இத்தனை வேலை செய்யறதெல்லாம் யார் கணக்கோ? சரியான நச்சுப்பிடுங்கல் கேஸ். வை போனை...'' பற்களைக் கடித்தான்.

வீடு வந்து சேர்ந்தான்.

''முதுகுவலி பிளக்கிறது. ஏதாவது ஆயிண்ட்மெண்ட் இருந்தா கொண்டா கோமு.''

''இங்கேயும் அதே கேஸ்தான் எனக்கும் உடம்பு முழுக்க வலிதான். நீங்க சொல்றீங்க. நான் வாய்விட்டுச் சொல்லாம இருக்கேன்.''

இரவு கோமுவின் அம்மா போனில் கூப்பிட்டுப் பேசினாள்.

''அட அம்மா! எப்படியிருக்கே. ஐயோ கேக்காதே அம்மா. காலையிலேர்ந்து வீட்டுவேலை சொல்லி முடியாது. ரவை உருண்டை புடிச்சு, இட்டிலிக்கு அரைச்சு, பால், காய்கறி வாங்கி ஹ¥ம்... நாளைக்கு இவரோட தங்கை வாஷிங்டனில் இருந்து வராளே குழந்தைகளோட... அப்பா! கும்பல்தான்... வேலைதான்! எனக்கு மூச்சுவிடக் கூட நேரமில்லை.. ஒரு கைக்கு ஹெல்ப்புன்னு ஈ காக்கைகூட இல்லை... பாரு கார்பேஜ் டிரம்கூட வைக்க ஆள் இல்லை. உன் மாப்பிள்ளையா! போறுமே உன் மாப்பிள்ளை. துரும்பு எடுத்து அசைக்கணுமே. ஒரு வேலைக்கும் லாயக் கில்லை. வேறென்ன பண்றது. நான் இந்த வீட்டுக்கு உழைக்கத்தானே பொறந்திருக் கேன். சரி விடு தலையெழுத்து...''

ரவி இவள் பேசுவதைக் கேட்டபடி மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டான்.

தங்கம் ராமஸ்வாமி
Share: 




© Copyright 2020 Tamilonline