நாடு அதை நாடு
|
|
|
ஹட்ஸன் நதி வெயிலில் மினுமினுத்தது. அமிழ்ந்து அமிழ்ந்து மிதக்கும் பாட்டில்கள்.. உலகைக் காப்பாற்ற அறிவிப்புச் செய்தி ஏதுமின்றி. சிகரெட்டுத் துண்டுகள்...கருகும் நுரையீரல் ரகசியங்களைப் பரிமாறிச் சிரித்துக் கொண்டு. ஆறடுக்கு பீர் பாட்டில்களைச் சுற்றி வைத்திருந்த பிளாஸ்டிக் வளையங்கள்.. இப்போது பறவைகளின் தற்கொலைக்கு வசதியான தூக்கு வளையமாய். மனிதர் அளவிலும் அவை வந்தால் வசதி. கழிவு எண்ணெய்ச் சிதறல்களின் கண்ணைப் பறிக்கும் வர்ண ஜாலங்கள்....தூரத்தே வளையும் அரை வானவில்லைக் கிரகணிக்கும் வக்கிர ஆபாசமாய். ஆழத்தில் நிறைய சடலங்களும் வாணிகக் கப்பல்களும் புதைந்திருக்க வேண்டும். அழுகிக் கொண்டு. காலமின்றி அழுகிக் கொண்டு.
ஆனால் இந்த நதி அவற்றைச் சாகடித்த நதி இல்லை. இது புதிது. ஒரு நொடிப்பொழுதுக்கு முன் அவள் பார்த்த நதி இப்போது கடலில் சங்கமித்திருக்கும். ஒரு புது ஹட்ஸன். ஒவ்வொரு மைக்ரோ செகண்டிலும் ஒரு புது ஹட்ஸன். அப்படியென்றால், இந்த உலகத்தில் மொத்தம் எத்தனை நதிகள் இருக்கின்றன, குழந்தைகளே? கடவுளே. இன்னும் கணக்குப் பாடம் சொல்லித் தந்த அந்த கன்னிகாஸ்திரீயின் குரல் ஞாபகம் இருக்கிறது. சின்னப் பூனை மயிர் மீசையுடன். எப்போதோ விட்டு வந்த தாய் நாட்டில்....இந்தியாவில்.
நியூயார்க் மாநகரத்தின் விளிம்புக்கோடுகள் நதிக்கு அக்கரையில்.... வானில் உயர்ந்து, மத்தியான வெட்கையில் நடுங்கும் கானல் நீரினூடே மங்கலாய்த் தெரியும் ·பிராய்டியன் லிங்க ஸிம்பாலிஸமாய். எத்தனையோ திரைப்பட டைரக்டர்களின் கேமராக் கண்கள் வேட்கையுடன் தழுவிக் காதலித்த நியூயார்க் நகர விளிம்புக்கோடுகள்.
இக்கரையிலிருந்து பார்க்கையில் அந்நகரத்தில் பொதிந்திருக்கும் உயிர்த் துடிப்பு தெரியவில்லை, உணர முடிந்தது. க்ரீன்விச் வில்லேஜிலிருந்து ஜாஸ் இசை மிதந்து வருவது போலிருந்தது. பிரபல கார்ட்டியேர்'ஸ் நகைக்கடையில் கனவுகள் கண்களில் மிதக்கக், கல்யாண மோதிரத்தின் வைர ஒளிக்குக் காத்திருக்கும் இளசுகளின் சிரிப்புக் கிணுகிணுப்பு கேட்பது போல் இருந்தது. ஜாக்ஸன் ஹட்ஸில் எண்ணெயில் பொரியும் ஸமூஸாவின் மணத்தை நுகர்வது போலிருந்தது. அந்த மணம் 'அவனை' உடனே ஞாபகமூட்டியது. நுகர்ச்சியிலும் மறைந்திருக்கும் 'அவன்'. எதிலும் ஒளிந்திருக்கும் 'அவன்'. எங்கும் நிறைந்திருக்கும் 'அவன்'.
அவள் டீ-ஷர்ட்டுக்குள் கள்ளத்தனமாய்ப் புகுந்து, சிரித்துக் கொண்டே வெளிவந்த இளங்காற்று காதுவரை நீண்டிருந்த அவள் தலைமுடியைக் கலைத்து அவள் நினைவுகளைக் கோதியது.
இந்நேரத்தில் இந்த பாலிஸேட்ஸ் பார்க்கில் யாரையும் காணவில்லை. அவர்களுக்கு வயதாகும் போது அவர்களைக் கைகழுவப் போகும் இந்தச் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பாடு பட்டு உழைத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் இருபது வருடம் கழித்து ஏதாவது ஒரு டிவி ஷோவில், நாடு முழுதும் பார்த்து ரசிக்கத் தங்கள் குடும்பத்தைக் குறை சொல்லப் போகும் குழந்தைகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருப்பார்கள். அல்லது உழைக்க வேண்டியவர்களும் ஊட்ட வேண்டியவர்களும் பிணைந்து கொண்டிருப்பார்கள்.....உழைக்காமல், ஊட்டாமல்.
உன் பார்வை கோணல் என்பதால் ஊரெல்லாம் கோணலா, தாயே? அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
அது திங்கள்கிழமை. அதனால்தான் யாரும் இல்லை அக்கம்பக்கம். சனி, ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கையை மிகையாக அனுபவித்து விட்டோம் என்ற குற்ற உணர்வு. அதற்கு ஈடுகட்ட திங்களில் மிதமிஞ்சிய உழைப்பு. குற்ற உணர்வின் அடிப்படையில் ஏற்படும் உழைப்புத் தத்துவம். ஆஹா, இதுவே உண்மைத் தத்துவம்! மீண்டும் வந்த சிரிப்பு வந்த வேகத்திலேயே நின்றது.
திடீரென்று அந்த உணர்வு மீண்டும் ஏற்பட்டது.
அவளது புலன்கள் கூர்மையாகின. அவற்றின் கூர்முனையால் பிரபஞ்ச விரிப்பையே இரு பாகங்களாகக் கட்டியிருக்கலாம், ஒரு நட்சத்திரம் கூட வெட்டு விரிசலின் வழியே நழுவி விடாமல்.
காற்று அவளைச் சுற்றி பெரும் அருவியாக நுரைத்துக் கொண்டிருந்தது ஒரு துளி சப்தம் கூட இல்லாமல். சூரியனின் வெண்கதிர் அந்த அருவிக்குள் புகுந்து ஏழு வர்ணங்களாகப் பிரிந்து வெவ்வேறு விதமாக மாறி மாறி இணைந்தது புதுப் புது ரங்கோலிகளாய். நதி கரை மீது மோதும் மெல்லிய அலைகள் அந்தரத்தில் நிழலாடும் பெரும்பறவைகளின் சிறகடிப்புச் சப்தமாய். பக்கத்தில் பூத்துக் குலுங்கிய டாக்வுட் மரத்திலிருந்து மல்லிகையின் மணம் மயக்கியது.
அந்த நதிப்பறவைகளின் சிறகு-நிழலில் மல்லிகை வாசனையோடு கலெய்டாஸ்கோப் போல் நிறம் மாறிக் கொண்டிருக்கும் காற்றருவியின் குமிழிக்குள் அவள் சுதந்தரத்தின் பூரணத்தை உணர்ந்தாள். சுதந்தரத்தின் தித்திப்பு அவளுள் பெரும் பரவசமாய்ப் பரவியது. அவளைப் பிணைத்திருந்த மெல்லிய தளைகள் அவளினின்று விலகி வீழ்ந்தன.
இந்த நிலை நாளாக ஆக அடிக்கடி ஏற்படுகிறது. தனக்கு வெளியே தான். இல்லை, அவளே அவளுக்குள் விரிந்து உணரும் நிலை....ஐம்புலன்களால் உணர்ந்து புலன்களுக்குள் கட்டுப்படாத பிரபஞ்சத்தின் உண்மையை அனுபவிக்கும் விடுதலை.
அந்தக் கணம் கடந்து விட்டது. 'அவனால்' மட்டுமே அனைத்தையும் கடந்த இந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்கு இது புரிய முடியாது. இந்தப் பரிபூரண சுதந்தரம், மதமோ போதைப்பொருளோ தரும் மிதப்பில் சிலருக்கு ஏற்படலாம். எதுவுமே இன்றி அவளுக்கு.......அவள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.
அவள் ரமேஷிடம் இது பற்றிப் பேச முயன்றாள். அவனுக்குப் புரியவில்லை.
"சுதந்தரமா இருக்கா? செல்லம், நீ இத்தன வருஷமா சுதந்தர சிட்டாத்தான் இருந்திருக்கே. இதுல என்ன புதுசு?"
"ரமேஷ், இது வேற. இது பூரண சுதந்தரம். தி அல்ட்டிமேட் ·ப்ரீடம்." |
|
ரமேஷ் திரும்பி அவளை உற்றுப் பார்த்தான். அவன் நோயாளிகளைப் பரிசோதனை பண்ணுவது மாதிரி.
"மஞ்சும்மா, நீ சந்தோஷமா இருக்கியா?"
கேள்வி அவளை உலுக்கியெடுத்தது. அவன் கண்ணுக்கு வேறு எதுவும் தெரிகிறதா?
"நான் சந்தோஷமாத்தான் இருக்கேன் ரமேஷ். நீ, நம்ம பையன் அருண், பொண்ணு ஸ்ரீ. மதிப்புள்ள உயர்மட்ட வேலை. கனவான்னு சில சமயம் என்னையே கிள்ளித்தான் பார்க்க வேண்டியிருக்கு."
ரமேஷ் அவளை நோக்கிக் கைகளை விரித்து அழைத்தான். அவள் அவனது கைவட்ட அணைப்புக்குள் ஒடுங்கிச் சிலிர்த்தாள். நிலம் மறைந்து அலை அலையாய் உடல் அணுக்கள் உயிர்த்தன. ஆழ்கடலின் இன்னிசை ஆரோகணமாய் ஒலித்து அமைதிக்குள் அமிழ்ந்தது.
"இருவது வருஷம். ஒவ்வொரு தரமும் முதல் தரம் மாதிரி, புதுசா." அவளது இதழ்களில் நடுங்கும் புன்னகை ஓரத்தை அவன் முத்தமிட்டான்.
இருபது வருட மணவாழ்க்கை. நாற்பது வயது. இன்னும் புதிதாய் அவள்..... தோற்றத்தில், உணர்வுகளில், வாழ்வின் வெற்றிகளில். அவளுக்கு உலகின் உச்சியில் அமர உரிமை இருக்கிறது. அமர்ந்துதானே இருக்கிறாள்!
உண்மையிலா? நீ உலகின் உச்சத்தில்தான் இருக்கிறாயா, மஞ்சு?
அப்படியென்றால் 'அவன்' உன் வாழ்வில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
அவள் எழுந்து தன் காரை நோக்கி நடந்தாள். அந்தி வேளையின் நிழல்கள் ஹட்ஸன் நதி மேல் நீண்டு கிடந்தன. இதுவரை அங்கே இருந்திராத ஒரு புது ஹட்ஸன். அவளைப் போலவே.
காஞ்சனா தாமோதரன் |
|
|
More
நாடு அதை நாடு
|
|
|
|
|
|
|