Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
தர்மராஜன்
- ச. சுரேஷ்|ஜூலை 2023|
Share:
"அலமு, அப்படியே பார்க்வரை ஒரு நடை நடந்து போய்ட்டு வந்துடறேன். ஏதாவது காய்கறி வேணுமா?"

மனைவியிடம் சொல்லிக்கொண்டு கடையம் ஸ்ரீனிவாச வெங்கடராம சுப்பிரமணியன் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினார்.

"இன்னைக்கு ஒண்ணும் வேண்டாம். ஒருவேளை மெதுபாகற்காய் கண்ல பட்டா ஒரு கால் கிலோ வாங்கிண்டு வாங்கோ."

கடையம் ஸ்ரீனிவாச வெங்கட ராம சுப்பிரமணியன் காலில் செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

இப்படி ஒவ்வொரு முறையும் "கடையம் ஸ்ரீனிவாச வெங்கட ராம சுப்பிரமணியன்" என்ற அவருடைய முழுப்பெயரையும் குறிப்பிட்டால் கதை சொல்லும் எனக்கும், கதையைக் கேட்கும் உங்களுக்கும் விரக்தி உண்டாகும். ஆகவே, அவரைச் சுருக்கமாக 'கிச்சா' என்றே அழைக்கலாம்.

சீனு, வாசன், வெங்கட், ராம், சுப்பு, ரமணி, மணி, என்று எவ்வளவோ சாத்தியங்கள் இருக்க ஏன் கிச்சா என்ற பெயர் என்று கேட்கிறீர்களா? இவ்வளவு பெரிய பெயரை வைத்த எஸ்.வி.ஆர்.எஸ்ஸின் பெற்றோர் வீட்டில் சுருக்கமாக - ஆனால் ஆசையாக - கிச்சா என்று அழைக்கத் துவங்கினர். அவருடைய நீளமான பெயரில் வைப்பதற்கு விட்டுப்போன பெருமாளின் திருநாமத்தின் சுருக்கமே நாளடைவில் அவருடைய செல்லப் பெயராகவும், குடும்பத்தார் அழைக்கும் பெயராகவும் மாறியது.

கிச்சா ரிடையர் ஆவதற்கு முன் அவருடைய சென்ட்ரல் கவர்மெண்ட் உத்தியோகத்தில் (தாம்பரத்தில் போஸ்ட் மாஸ்டர்) எஸ்.வி.ஆர்.எஸ். என்று அபிமானத்துடன் அழைக்கப்பட்டார்.

ரிடையர் ஆனபின் இப்பொழுது அவர் பெரும்பாலும் கிச்சாதான். கிச்சாச் சித்தப்பா, கிச்சா மாமா, கிச்சா அத்திம்பேர், கிச்சாப் பெரியப்பா என்று குடும்பத்தினரால் உறவு முறையையும் சேர்த்து அழைக்கப் படுவார். அவருடைய ஒன்றுவிட்ட அண்ணன் கிருஷ்ணஸ்வாமியின் சுருக்கப்பட்ட பெயரும் கிச்சாதான். இருவரும் சேர்ந்திருந்தால் எஸ்.வி.ஆர்.எஸ்.ஐ 'கடையம் கிச்சா' என்று கூப்பிடுவார்கள்.

அகஸ்மாத்தாக அவரைக் காணும் பழைய ஆஃபீஸ் நண்பர்கள் மட்டும் அவரை எஸ்.வி.ஆர்.எஸ். என்று அழைப்பார்கள்.

கிச்சா தன்னுடைய சகதர்மிணியிடம் கூறியபடி "ஒரு நடை" நடப்பது அண்ணா பூங்காவில்.

என்றும்போல் அன்று காலையும் அண்ணா பூங்கா ஜே ஜே என்றிருந்தது. அத்துடன் காலையின் அமைதியைக் குலைத்தவாறு பலத்த சைரனுடன் ஆம்புலன்ஸ் ஒன்று பார்க் அருகிலிருந்து கிளம்புவதைக் கிச்சா கவனித்தார்.

"ஹும், யாருக்கு என்ன போறாத காலமோ" என்று எண்ணிக்கொண்டே கிச்சா பார்க்கை அடைந்தார்.

பொதுமக்களுக்குத் தமது உயிர்மீது அபரிதமான பற்றுதல் உண்டானது எப்பொழுது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தடுக்கி விழுந்தால் ஹார்ட் அட்டாக், ஆஞ்சியோ, ஸ்டென்ட் என்று ஒவ்வொரு குடும்பத்திலும் சம்பவங்கள் பரவத் தொடங்கியிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்திய பயம் ஒவ்வொருவரையும் உடல்நலன்மீது கவனம் கொள்ளத் தூண்டியது. இருக்கும்வரை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசை, பலருக்கு வெறியாகவே மாறிவிட்டது. அதன் விளைவாக இப்பொழுதெல்லாம் குசலம் விசாரிக்கும் சமயம் கொலஸ்ட்ரால் நம்பர் பற்றியும், A1C நம்பர் பற்றியும் பேசாமல் ஒரு சம்பாஷணை நடப்பது அபூர்வமாகிவிட்டது.

கிச்சா போஸ்ட் ஆஃபீஸில் வேலை செய்யும் சமயம் காலை எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை 'பீக் டைம்'. அந்த இரண்டு மணி நேரமும் பேருந்துகளும், எலக்ட்ரிக் ரயில் வண்டிகளும் கூட்டம் ரொம்பி வழியும். ட்ராஃபிக் ஜாம் என்பது தண்ணீர் பட்ட பாடு.

ரிடையர் ஆன பின் கிச்சாவின் 'பீக் டைம்' காலை ஆறிலிருந்து ஏழுவரை. அப்பொழுது தான் கொலஸ்ட்ரால் மீதும், சர்க்கரை வியாதியின் மீதும் பிரும்மாண்டமான போர் தொடுக்கப்படும். சூரியோதயத்திற்குச் சற்று முன்பே தொடங்கும் இந்தப் போரின் 'பீக் டைம்' காலை ஆறிலிருந்து ஏழுவரை. போர் நடைபெறும் களம் ஒவ்வொரு பகுதியிலும் சென்னை மாநகராட்சி செப்பனிட்டுப் புதுப்பித்திருக்கும் பூங்கா. அவற்றில் கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள அண்ணா பூங்காவும் ஒன்று.

அண்ணா பூங்காவின் சக்ரவியூகம் போன்ற அமைப்பு, இந்தப் போருக்கென்றே அழகாக அமைக்கப்பட்டது போன்று தோன்றினால் ஆச்சரியமில்லை. பூங்காவின் நடுவில் உடல்பயிற்சி செய்ய பாரலல் பார், ஸ்விங் வாக் போன்ற அமைப்புகள். யோகம் செய்ய வசதியாகப் பளிங்குக் கற்கள் பதித்த ஒரு மண்டபம். இவற்றைச் சுற்றி சுமார் 160 மீட்டர் சுற்றளவுள்ள ஒரு வட்டமான, சிமெண்ட் பாதை. இந்த சிமெண்ட் பாதையில் ஒரு மைல் தூரம் நடக்கவென விறுவிறுவென்று பத்து ரவுண்ட் போகும் காலாட்படை வீரர்களே அதிகம்.

பூங்காவிற்குள் இருக்கும் சிமெண்ட் பாதையில் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். கிச்சாவைப்போல கூட்டத்தை விரும்பாதவர்கள் நடப்பது வட்டமான பூங்காவைச் சுற்றி வரும் பார்க் வ்யூ அவென்யூவில். சுமார் 240 மீட்டர் சுற்றளவுள்ள பார்க் வ்யூ அவென்யூவில் ஏழு ரவுண்ட் நடந்து ஒரு மைல் தூரத்தை கடப்பார்கள் இந்த இரண்டாவது வகை வீரர்கள்.

அதே ஒரு மைல் தூரத்தை மூன்றே ரவுண்ட் செய்து விரைவில் கடக்க விரும்பும் இளவட்டங்கள் பார்க் வ்யூ அவென்யூவையும் சுற்றி வரும் சர்க்குலர் அவென்யூவில் ஓடியும், வேகமாக நடந்தும் வருவது வழக்கம். முதல் இரண்டு வகை வீரர்களுடன் ஒப்பிட்டால் இந்த மூன்றாவது வகைப் போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவானதே.

எந்த வகை வீரராக இருந்தாலும் அன்றைய போரை முடித்தவுடன் பெரும்பாலமான வீரர்கள் இறுதியில் பார்க் வ்யூ அவென்யூவிற்கு வருவார்கள். ஒருசிலர் அங்குள்ள கைவண்டிகளில் அன்றைய சமையலுக்குத் தேவையான கறிகாய் வாங்குவார்கள். மற்றும் சிலர் தங்களுடைய உடலுறுப்புகளை மேற்கொண்டு வலுப்படுத்தும் மூலிகைச் சாறு ஏதாவது ஒன்றைப் பருகுவார்கள்.

அருகம்புல், கீழ்வா நெல்லி, வாழைத்தண்டு, இஞ்சி, கற்றாழை, நெல்லிக்காய், முடக்கத்தான் கீரை இப்படிப் பலதரப்பட்ட சாறுகளும் கிடைக்கும் மணிகண்டனின் கடை அண்ணா பூங்காவைச் சுற்றிவரும் பார்க் வ்யூ அவென்யூவில் ஞாற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வழக்கமாக இருக்கும்.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட பென்ச் ஒன்றின் மீது பழைய இரண்டு லிட்டர் கோக்/பெப்ஸி/லிம்கா/ஃபாண்டா ப்ளாஸ்டிக் பாட்டில்களில் பல்வேறு மூலிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றை நிரப்பி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் விநியோகம் செய்யத் தயாராக இருப்பார் மணிகண்டன். எந்தச் சாறாக இருந்தாலும் ஒரே விலைதான் - கப் ஒன்று இருபது ரூபாய். மணிகண்டனின் கடையில் கிடைக்காத மூலிகைச் சாறு இருப்பதற்கு வாய்ப்பேயில்லை.

உடல் நிலையைப் பொறுத்தவரை கிச்சா ஒரு 'பார்டர்லைன் கேஸ்'. அதாவது அவருக்குப் பெரிய உபாதை ஒன்றுமில்லை என்றாலும் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை முதலிய தொந்தரவுகளெல்லாம், 'எப்படியும் உள்ளே நுழைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போகப்போகிறது' என்று பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தன. மூன்று மாதத்திற்கு முன் கிச்சாவின் குடும்ப டாக்டர் நிரஞ்சன் சொல்லிவிட்டார் "ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், A1C இவற்றின் எண்ணிக்கை கீழே வராவிட்டால் தினம் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று.

கிச்சாவுக்கு மாத்திரை என்றால் சிம்ம சொப்பனம். என்ன செய்வது என்று யோசித்த கிச்சா, இறுதியில் போர் வீரர்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குச் செல்லும் முன் அவரவர் உபாதைகளுக்கு ஏற்ப 'ஹெல்த் டிரிங்க்' பருகும் குழுவில் கடந்த மூன்று மாதங்களாக தினந்தோறும் தவறாமல் ஆஜராகத் தொடங்கினார்.

அன்றைய நடையை முடித்துவிட்டு கிச்சா மணிகண்டனின் கடைக்கு வந்தார்.

கொஞ்சம் இஞ்சிச்சாறு கலந்த அருகம்புல் ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் இவற்றை மாற்றி மாற்றி அருந்துவது கிச்சாவின் வழக்கம்.

"கொஞ்சம் கம்மியா இஞ்சிச்சாறு விட்டு ஒரு அருகம்புல் ஜூஸ் கொடுப்பா, மணி."

"ஷுகரை கம்மி செய்வதற்கும், உடல் பருமனை குறைப்பதற்கும் அருகம்புல் ஜூஸ் உதவுவது போல வேறு ஒன்றும் உதவாது."

கிச்சா தன்னிடம் பேசிய மனிதரை கவனித்தார். வழக்கமாக அண்ணா பார்க் போர்க்களத்தில் அவரை இதுவரை பார்த்தது கிடையாது. இருந்தாலும் அவருடைய முகம் ஏதோ பரிச்சயமானது போலிருந்தது.

"அதனாலென்ன? இரண்டு வார்த்தை பேசினால் தப்பு ஒன்றுமில்லையே" என்று நினைத்தவாறு கிச்சா பதில் சொன்னார். "எனக்கு வெயிட் ப்ராப்ளம் ஒண்ணுமில்லை. ஆனால் ஷுகர் ப்ராப்ளம் வரப்போறதுன்னு டாக்டர் ஒரேயடியா பயமுறுத்திண்டு இருக்கார். அதான் மூணு மாசமா ரெகுலரா சாப்பிட்டுண்டு வரேன்."

கிச்சாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்த அந்த மனிதரின் முகம் பிரகாசமானது.

"நீங்க எஸ்.வி.ஆர்.எஸ். தானே?"

கிச்சாவைப் பார்த்துப் புன்னகைத்தவாறு அவர் கேட்டார். "ஆமாம். ஆனா நீங்க? உங்களை அடையாளம் தெரியலையே..."

"அதற்குள் மறந்துவிட்டீர்களா? நான்தான் தர்மராஜன். தியாகராய நகர்ல உங்க வீட்டுக்கு வந்திருக்கிறேன், எஸ்.வி.ஆர்.எஸ்."

"தியாகராய நகர் வீட்டுக்கா? அங்கேயிருந்து நாங்க கிளம்பி ரொம்ப வருஷம் ஆயிடுத்தே..."

"சுமார் பத்து வருடங்களுக்கு முன் வந்ததாக ஞாபகம். அப்பொழுதுதான் உங்க அப்பா அனந்த நாராயணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்கமான மனிதர், உங்களுடைய அப்பா."

"அவர் தவறிப்போய் கிட்டத்தட்ட பத்து வருஷமாச்சே. அதுக்கப்புறம்தான் நாங்க கோடம்பாக்கத்துக்கு ஜாகை மாறினோம்."

அதை ஆமோதித்தவாறு தலையை அசைத்தார் தர்மராஜன்.

"தற்செயலாக இன்று உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம், எஸ்.வி.ஆர்.எஸ்." என்று கூறியவாறு தர்மராஜன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார்.

கிச்சாவின் மனதில் பளிச்சென்று மின்னல் போல் 'தர்மராஜனை வீட்டிற்கு அழைக்கவேண்டும்' என்ற எண்ணம் தோன்றியது.

முன்பின் சரியாகத் தெரியாத மனிதரை வீட்டுக்கு அழைப்பது பொதுவாக நடப்பது இல்ல. இந்த எண்ணம் எப்படி வந்தது, ஏன் வந்தது என்று கேட்டால் கிச்சாவினால் கோர்வையாக பதிலளித்திருக்க முடியாது.

கேள்விக்கு விடை தெரிந்தால் தானே பதிலளிக்க முடியும்?

"ஆத்துக்கு வந்து ஒரு கப் காப்பி சாப்பிட்டுப் போகணும். உங்களோட முகம் எனக்குப் பிடி படலை. ஒரு வேளை அலமுவுக்கு... அவதான் என்னோட தர்மபத்தினி... அவளுக்கு என்னைவிட மெமரி பவர் ஜாஸ்தி. அவளுக்கு ஞாபகம் இருக்குமோ, என்னவோ."

"ரங்கராஜபுரத்தில் ஒரு முக்கியமான வேலை இருக்கிறதே, எஸ்.வி.ஆர்.எஸ்."

"இங்க பக்கத்துலதான் இருக்கு நம்ம ஆம். டைரக்டர் காலனி பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்துல. பத்து வருஷத்துக்கு முன் நம்மாத்துக்கு வந்த உங்களைப் பாத்தேன்னு அவகிட்ட சொன்னா, 'என்ன மனுஷர் நீங்க? அவர் யார், என்ன, ஏதுன்னு ஒண்ணும் தெரிஞ்சுக்காம இப்படி அசமஞ்சமா வந்து நிக்கறேளே'ன்னு என்னை ஒரு வழி பண்ணிடுவா அலமு. ஒரு பத்து நிமிஷமாவது வந்துட்டுப் போகணும்."

கிச்சாவின் வற்புறுத்தல் தரும் அன்புத் தொல்லையைத் தட்ட முடியாமல் தர்மராஜன் பதில் அளித்தார். "நீங்கள் இவ்வளவு சொல்வதானால்... சரி. ஒரு நிமிடம்."

தர்மராஜன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு பழைய, பாடாவதி செல்ஃபோனை எடுத்து யாரையோ கூப்பிட்டார். "குப்தா, உன்னால் ரங்கராஜபுரத்திற்கு போக முடியுமா? அண்ணா பார்க் அருகில் என்னுடைய பழைய நண்பர் எஸ்.வி.ஆர்.எஸ்ஸைப் பார்த்தேன். வீட்டிற்கு அவசியம் வரவேண்டுமென்று வலுக்கட்டாயமாக அழைக்கிறார்."

"..."

"அதை நான் பார்த்துக்கொள்கிறேன். தேங்க்ஸ், குப்தா."

செல்ஃபோனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டே தர்மராஜன் சொன்னார், "டைரக்டர் கோவில் பிள்ளையாரை பார்த்துவிட்டு அப்படியே உங்களுடைய வீட்டிற்குப் போகலாம். என்ன, எஸ்.வி.ஆர்.எஸ்… கிளம்பலாமா?"

அருகம்புல் ஜூஸுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு கிச்சா தர்மராஜனுடன் கிளம்பினார். தர்மராஜன்தான் முதலில் பேசினார்.

பூங்காவில் என்ன கும்பல்? தினம் இவ்வளவு கூட்டம் இருக்குமா?"

"மழைக்காலத்தைத் தவிர வேறே எல்லா சமயத்திலும் ஒரே கூட்டம்தான். என்னைப் பொறுத்தவரை இது ஒரு போர்க்களம் சார். ஷுகர், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் - இதுபோல பல உபாதைகள் மீது மக்கள் தொடுக்கும் போர்."

"அருமையான உவமை."

"என்ன பண்ணினாலும் என்ன பிரயோஜனம்? யார் யாருக்கு என்ன எழுதியிருக்கோ அதுதானே நடக்கறது. என்ன நான் சொல்லறது?"

"நூற்றில் ஒரு வார்த்தை. இதையெப்படி மறுக்க முடியும்?"

"காலைல நான் வந்தபோது ஒரு ஆம்புலன்ஸ் கத்திண்டே போச்சு. என்னன்னு விஜாரிச்சேன். யாரோ ஒருத்தருக்கு எக்சர்சைஸ் பண்ணிண்டு இருக்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துடுத்தாம். என்ன கொடுமை பார்த்தேளா? "

"அவருக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதானோ, என்னவோ?"

"என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். தினம் வாக்கிங், அருகம்புல் ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ் எல்லாம் குடிச்சாலும், டக்குன்னு என்னோட அப்பா போன மாதிரி நானும் போக மாட்டேன்னு என்ன நிச்சயம்?"

"இந்த பூலோகத்தில் பிறந்த எல்லோரும் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் போகத்தானே வேண்டும்? பூலோக வாழ்க்கை யாருக்குத்தான் சாஸ்வதம்?"

தர்மராஜன் கடைசியாகக் கூறிய மறுமொழி கிச்சாவை மௌனமாக்கியது.

கேள்விக்கு பதில் கேள்வியாக அவர்களிடையே நடந்த சம்பாஷணை நின்றது.

தர்மராஜனை அவருக்கு அடையாளம் தெரியாவிட்டாலும் என்னவோ வெகு நாட்கள் பழகிய நண்பர் போல்தான் இருந்தது அவருக்கு. மீண்டும் ஒருமுறை தன்னை அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்க வேண்டுமென்று தோன்றியது கிச்சாவிற்கு.

"தர்மராஜன், திரும்பவும் கேக்கறேனேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது. நாங்க தியாகராய நகர்ல இருக்கும்போது நீங்க என்ன விஷயமா வந்திருந்தேள்?"

கேள்வி கிச்சாவின் நுனிநாக்கில் இருக்கும் அதே சமயம் பிள்ளையார் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். "வாருங்கள். கோவிலுக்குள் 'ஒரு நடை' நடந்துவிட்டு வரலாம்" என்று தர்மராஜன் கூறினார்.

சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.

"இன்னும் உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா? என்ன எஸ்.வி.ஆர்.எஸ்.? உங்களுடைய ஞாபக சக்தி அவ்வளவு மோசமா?"

"நீங்க எஸ்.வி.ஆர்.எஸ்.னு என்னைக் கூப்பிடறதைப் பார்த்தால் போஸ்ட் ஆஃபீஸ் பழக்கமோன்னு தோணறது. ஆனா உங்களுக்கு அப்பாவையும் நன்னா தெரிஞ்சிருக்கு."

தர்மராஜன் புன்னகைத்தார். கிச்சா கூறியபடி கோவிலுக்கு மிகவும் அருகிலிருந்த அவருடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

"உள்ளே வாங்கோ. வெல்கம் டு அவர் ஹம்பிள் அபோட். உக்காருங்கோ" தர்மராஜனை உள்ளே அழைத்தார் கிச்சா. தர்மராஜன் உள்ளே வந்தபின் வழக்கம்போல் வாசற்கதவை மூடித் தாழிட்டார்.

அலமு உள்ளே சமையலறையில்தான் இருக்கவேண்டும் என்று அவளை உரக்கக் கூப்பிட்டார். "அலமு, ஒரு நிமிஷம் வெளியே வரையா?"

"மெதுபாகற்காய் கிடைச்சதா?" என்று கேட்டுக்கொண்டே, புடவைத் தலைப்பால் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்தவாறு வெளியே வந்த அலமு தர்மராஜனைப் பார்த்தாள். அவளுடைய கண்கள் ஆச்சரியத்தினால் விரிந்தன.

"வாங்கோ, வாங்கோ. நீங்க எப்படி இங்கே... திடீர்னு?"

"அண்ணா பூங்கா அருகில் உங்களுடைய கணவரைத் தற்செயலாகப் பார்த்தேன். அவசியம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கையோடு இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்."

அர்த்தம் புரிந்ததுபோல் அலமு புன்னகைத்தாள். "இவருக்கு காப்பி கலக்க புது டிகாக்‌ஷன் இப்பத்தான் போட்டேன். நீங்களும் ஒரு வாய் சாப்பிடுங்கோ. ஒரு நிமிஷம்."

தர்மராஜனுடைய பதிலுக்குக் காத்திராமல் சமையல் அறைக்குள் சென்றாள் அலமு. கிச்சாவின் குழப்பம் மேலும் அதிகரித்தது. தர்மராஜனை நன்றாகத் தெரிந்தது போலப் பேசுகிறாளே அலமு... எப்படி சாத்தியம்? கையில் இரண்டு டபரா டம்ளரில் காஃபியுடன் வெளியே வந்த அலமு, ஒன்றை தர்மராஜனுக்கும், மற்றொன்றைக் கிச்சாவிற்கும் கொடுத்தாள்.

கிச்சா அலமுவின் முகத்தை கவனித்தார்.

இதுவரை பார்த்திராத ஒரு தேஜஸ் அலமுவின் முகத்தில் பிரதிபலிப்பது போலிருந்தது கிச்சாவிற்கு. அலமு தர்மராஜனைப் பார்த்துச் சொன்னாள்.

"இட்லி பண்ணியிருக்கேன். பத்து நிமிஷம் இருந்தேள்னா ஒரு தேங்காய் சட்னி பண்ணிடறேன். டிபன் பண்ணலாம்" என்றாள்.

தர்மராஜன் அலமுவைக் கனிவுடன் பார்த்தார்.

"அவ்வளவு அவகாசம் இல்லை. கிளம்பணும்" என்றார்.

அவர் சொல்வதைப் புரிந்து கொண்டது போல் அலமு, "அப்ப ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்கோ. ஸ்வாமிக்கு நைவேத்தியம் பண்ணிடறேன்" என்றாள்.

சரி என்று ஆமோதித்து தர்மராஜன் லேசாகத் தலை அசைத்தார். கிச்சா அதைக் கவனிக்கவில்லை. அலமு தர்மராஜனுடன் பேசிய விதம் அவருக்குக் குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தது.

"எதற்காக ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்துவிடுகிறேன் என்று தர்மராஜனிடம் சொல்லிவிட்டு இப்படி சமையலறைக்குள் ஓட வேண்டும்?"

அவர்களுடைய சிறிய பிளாட்டில் பூஜை அறை சமையலறையின் ஒரு ஓரத்தில் இருக்கும். சமையலறை உள்ளிருந்து மணி அடிக்கும் சத்தம் வந்தது.

திடீரென்று பூஜை மணியும், ஒன்றிரண்டு பாத்திரங்களும் கீழே விழுந்தது போல் சத்தம் வந்தது.

"அலமு, கீழே என்ன விழுந்தது?" என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்கு விரைந்தார் கிச்சா.

ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்தபடி அலமு, இரண்டு கைகளாலும் இடது மார்பைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்து கிடந்தாள்.

அவளுடைய வலதுபுறம் பூஜை மணி உருண்டு விழுந்திருந்தது. நைவேத்தியம் செய்ய வைத்திருந்த தட்டும், அவற்றில் இருந்த பழங்களும் அங்கும் இங்கும் உருண்டு சென்றிருந்தன. பால் கிண்ணம் கவிழ்ந்து பால் கொட்டியிருந்தது.

"அலமூ..."

கிச்சா கதறியது எட்டு ஊர்களுக்குக் கேட்டிருக்கும்.

"அலமு... அலமு..."

கிச்சா விம்மிக்கொண்டே வெளியே ஹாலுக்கு வந்தார்.

ஹால் காலியாக இருந்தது. தர்மராஜன் அங்கே இல்லை.

வாசற்கதவும் உள்புறம் தாழிட்டிருந்தது.

பைத்தியம் பிடித்தவர் போல இங்கும் அங்கும் ஓடினார் கிச்சா. என்ன செய்வதென்று தெரியாமல் பால்கனியைத் திறந்து வெளியே பார்த்தார்.

ரோடில் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.

மெதுவாக ஒரு எருமைக்கடா நடந்து செல்வது கடையம் ஸ்ரீனிவாச வெங்கட ராம சுப்பிரமணியனின் கண்களில் படவில்லை.
ச. சுரேஷ்,
சாரடோகா, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline