Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர்கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சிறுகதை
எது முக்கியம்?
- மருங்கர்|ஏப்ரல் 2023|
Share:
மினசோட்டா. காலை மணி 7. ஐஃபோன் அலாரம் சிணுங்கியது. சூரியன் இலக்கியாவின் பிரதான படுக்கையறையில் இருந்த திரைச்சீலையின் ஓரத்தில் இருந்த இடைவெளி வழியே சற்று எட்டிப் பார்த்தான்.

"இன்னிக்கு நம்மளைப் போல, சூரியனும் லேட் போல" என்று சிரித்துக்கொண்டே அருகில் இருந்த கணவன் மணிமாறனைப் பார்த்தாள். மோர்சிங் வாசித்துக் கொண்டு. சாரி, குறட்டை விட்டுக் கொண்டு இருந்தான் அவன்!

"மணி, மணி ஏழுடா. உனக்குப் போயி மணி என்று பேர் வச்ச உங்க அம்மாவை சொல்லணும்" என்று கத்தினாள்.

"ஐயோ, இன்னும் அரை மணி நேரத்துல ஆஃபீஸ் கால் இருக்கு" என்று சொல்லிக்கொண்டே தலைதெறிக்க பாத்ரூமுக்குள் ஓடினான்.

இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள். பெரியவன் ரோஹித் நடுநிலைப் பள்ளியிலும், சின்னவள் ரேணு தொடக்கப் பள்ளியிலும் படிக்கிறார்கள்.

கொரோனா அரக்கன் உலகெங்கும் தலைவிரித்து ஆடிக்கொண்டு இருந்த நேரம். அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் வீட்டில் இருந்து இயங்கியதால், இல்லத்தரசிகள் தமக்கு என்று இருந்த மதிய ஓய்வு நேரத்தைத் தொலைத்த நேரம்.

பக்கத்தில் இருந்த பசங்களின் அறைக்குச் சென்று ஒரு குரல் கொடுத்துவிட்டு, பாத்ரூமுக்குள் சென்றாள்.

மணி 7:25. சிறிது நேரத்தில் வெளியே வந்த அவள், பையனின் அறை இன்னும் இருட்டாகவே இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.

"டேய் ரோஹித்! 7:30க்கு நீ அட்டெண்டென்ஸ் கொடுக்கணும், இன்னும் தூங்கறே" என்று கத்தினாள். அவன் அலறி அடித்துக் கொண்டு, ஐபேடில் லாகின் செய்தான்.

"எப்படா பல் தேய்ப்ப?" என்றாள் குழப்பத்துடன்.

"இரும்மா, முதல் பீரியட் முடிஞ்சதுக்கு அப்புறம், எனக்கு சில நிமிட இடைவெளி கிடைக்கும்" என்றான்.

தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து, ரேணுவின் அறைக்குள் நுழைந்தாள். அவள் "அம்மா, உள்ளே வராதே, என் கிளாஸ் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே போர்வைக்குள் ஒளிந்து கொண்டாள்.

அதற்கு மேலும் அங்கே இருக்கப் பிடிக்காமல், மாடியில் இருந்து கிழே சென்றாள். ஆஃபீஸ் ரூமில் இருந்து, தலையில் ஹெட்செட் உடன் மணிமாறன் எட்டிப் பார்த்து "காபி அண்ட் ப்ரேக்பாஸ்ட், ப்ளீஸ்" என்று கெஞ்சினான். தலையை ஆட்டி ஓகே சொன்னாள். பசங்களுக்கு பிரெட், சாக்லேட் மில்க், மணிமாறனுக்கு பிரெட், காஃபி என்று ஒவ்வாரு ரூமுக்கும் சென்று கொடுத்தாள்.

'அப்பாடா' என்று ஓட்ஸ் மற்றும் காஃபியுடன் டைனிங் டேபிளில் உட்காரும் பொழுது, மாடியில் இருந்து அலறல்! "அம்மா, ஐபேட் சார்ஜர் எங்கே? நைட் சார்ஜ் பண்ண மறந்துட்டேன்" என்று ரேணுவின் குரல். திட்டிக்கொண்டே மாடிக்கு ஓடினாள். எல்லாம் சரிசெய்து, சில இந்தியா கால்களை முடித்து அப்பாடா என்று உட்கார்ந்த பொழுது மணி 9:45. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

மணி 10. "ஐயோ, இன்னும் இரண்டு மணி நேரத்துல சாப்பிட வந்துடுவாங்க" என்று சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் ஓடினாள். பசங்களுக்கு பாஸ்தா, தங்களுக்கு சாம்பார், முட்டைப் பொரியல் என சமைத்து முடிக்க கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி ஆனது. குழந்தைகள் இருவரும் வெவ்வெறு சமயத்தில் வந்து சாப்பிட்டனர். மணி கிடைத்ததை பிளேட்டில் போட்டுக்கொண்டு, மீண்டும் கான்ஃபரென்ஸ் காலில் ஐக்கியமானான். அவள் சாப்பிட்டு முடிக்க 2 மணி ஆனது. டிவி கொஞ்சம் பார்க்கலாம் என்று ஆன் செய்தாள். உள்ளிலிருந்து "சத்தம் அதிகமா இருக்கு" என்று மணியின் குரல்.

புளூடூத் ஹெட்செட்டைப் போட்டு கொண்டு ஐஃபோனில் பார்க்கவேண்டிய எல்லா சீரியல்களையும் பார்த்து முடித்தாள். கிட்டத்தட்ட 3:30க்கு பையனும், 4 மணிக்கு பெண்ணும் வெளிய வந்து "திங்க என்ன இருக்கு?" எனக் கேட்டனர்.

பேன்ட்ரியில் இருக்கு, நீங்களே போய் மேய்ந்து கொள்ளுங்கள் என்று அவர்களைப் பார்த்துக் கத்தினாள். டீ கேட்ட மணியை முறைத்த முறைப்பில், அவன் பயந்து, அவனே போய் டீ போட்டுக் கொண்டான். இன்னும் அவன், அவனது தாலியை, சாரி ஹெட்ஃபோனை, கழட்டவில்லை.

அவள் சோர்ந்து போய்விட்டாள். மற்ற வேலைகளைப் பார்க்க மாடிக்குச் சென்றாள். கிட்டத்தட்ட 6:30 மணி. டிவி சத்தம். கீழே வந்தாள், மணியும், பையனும் திங்கள் இரவு ஃபுட்பால் பார்க்க ரெடியாக இருந்தார்கள். அவள் கையில் சிறிய நோட் புத்தகம்.

"மணி, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், நான்..." என்று ஏதோ சொல்ல வருவதற்குள், "கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் கால்ல இருந்து, இப்பதான் வெளிய வந்தேன். கேம் ஸ்டார்ட் ஆகப் போகுது. அப்புறம் பேசலாமா" என்று சொல்லிவிட்டு ஃபுட்பாலில் மூழ்கினான். சற்று வருத்தத்துடன் மாடிக்குச் சென்றாள்.

வெளிவேலை கொஞ்சம் இருந்தது. மணியிடம் கேட்டுப் பிரயோஜனம் இல்லை என்பதால் தானே கிளம்பிச் சென்றாள். வீட்டுக்கு திரும்பி வரும்பொழுது மணி 9. நல்ல வேளை, அவன் பிஸ்ஸா வரவழைத்து இருந்ததால், டின்னர் செய்யும் கொடுமையில் இருந்து தப்பினாள். சாப்பிட்டு முடித்தவுடன், பசங்க வீடியோ கேம் யூ-ட்யூப் என மும்முரமாக இருந்தனர். மணி யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான். அவள் சமையலறையைச் சரிசெய்து, படுக்கைக்குச் செல்லும் பொழுது மணி 11.

சில காட்சி அமைப்புகள் மாறினாலும், மாநாடு படம் போல, இந்த நிகழ்வுகள் அவர்கள் வீட்டில், தினமும் 'ரிப்பீட்' ஆகும். கோவிடில் அதிகம் பாதிக்கப்படாதது யார் என்று பட்டிமன்றம் வைத்தால், அவள் முதலில் தன் பெயரையே சொல்லுவாள்.

அன்று வெள்ளிக்கிழமை மாலை. கோவிட் சமயம் ஆனதால், குழந்தைகளுக்கு 'ஸ்லீப் ஓவர்' கிடையாது. ஆன்லைன் கேமிங்கில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் மக்கள், வெள்ளிக்கிழமை இரவில் செய்ய நினைக்கும், ஒரு பொதுவான விஷயத்தைத்தான் இலக்கியா யோசித்தாள். வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்து, மணியுடன் புது தமிழ் படம் பார்க்கலாம் என யோசித்து, அவனிடம் பேசப் போனாள்.

"மணி, அமேசான் பிரைம்ல புதுப்படம் வந்திருக்கு. இப்பதான் சைனீஸ் உணவு ஆர்டர் செய்தேன். தலை படம் பார்க்கலாமா?" ஆசையுடன் கேட்டாள்.

"சாரி, உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். இன்னிக்கு ஒரு பெரிய ரிலீஸ் இருக்கு. கால் இன்னிக்கு நைட் முழுதும் போகும்." என்றான் கொட்டாவி விட்டபடி! அவனது பதிலைக் கேட்டு இலக்கியா கொஞ்சம்கூட ஆச்சரியப்படவில்லை. எதிர்பார்த்ததுதான்.

கொஞ்ச நேரம் கழிந்தது. அவள் ஆர்டர் செய்த உணவு வந்தது. அவளது பார்சலைப் பிரித்த பொழுது, வாட்ஸாப் செய்தி ஒன்று. அவளது கல்லூரி நண்பிகள் வீடியோ கால் மூலம் சந்திக்கலாமா என்று கேட்டு அனுப்பி இருந்தார்கள். தனியாகப் படம் பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை. உடனே சரி என்று பதில் அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். கோவிட் கால வாழ்க்கை, சினிமா, குழந்தைகள், கல்லூரி நாட்கள் எனப் பல விஷயங்களைப் பேசினார்கள். மணி ஃபோனில் சார்ஜ் இல்லை என்று சார்ஜரை எடுக்க மாடிக்கு வந்தான். அப்போது இலக்கியா பக்கத்து ரூமில் யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தான். அவள் கையில் ஒரு நோட்டுப் புத்தகம். யாருக்கோ அதில் உள்ளதைப் படித்துக் கொண்டிருந்தாள். யாரோ பாராட்டினார்கள். என்ன என்று பார்க்கச் சற்று ஆவலுடன் அந்த ரூமிற்குள் செல்லும் பொழுது, அவன் பணி இடத்தில் இருந்து அழைப்பு வந்தது.

"டூ மினிட்ஸ், ஐ வில் ஜாயின் த கால்" என்று சொன்னபடியே கீழே ஓடினான். அவனது வேலை மும்முரத்தில், அவன் பார்த்த விஷயத்தை முற்றிலும் மறந்து விட்டான்.

சில வாரங்கள் ஓடின. இந்தியாவில் இருந்து ஒரு ஃபோன் கால். பதட்டத்துடன் மணி அவளைப் பார்த்து,

"அம்மாவுக்கு இன்னும் இரண்டு வாரத்துல முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை. நாள் குடுத்துட்டாங்க. இங்க வேலை தலைக்கு மேல இருக்கு, நான்" என்று அவன் ஏதோ சொல்ல வரும்பொழுது, "நான்தான் தடுப்பூசி எல்லாம் போட்டுகிட்டேனே, நான் போகிறேன். ஆனா பசங்களை நீ எப்படி சமாளிப்பே. நீ உன் வேலைக்குள்ளே நுழைஞ்சுட்டேன்னா, உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு உனக்கே தெரியாதே?" என்று கவலையுடன் கேட்டாள்.

"தேங்க்ஸ் பா, பசங்களை நான் பார்த்துக்கிறேன். அது ஒரு பெரிய விஷயமா. அம்மாவுக்கு பாத்ரூம் கூட்டிட்டு போறது, டிரஸ் செஞ்சு விடறது எல்லாம் நீ போனாதான் சரியா இருக்கும்" என்று சமாளித்தான்.

பல ஆண்களுக்கு, தான் வேலை பார்க்கும் நிறுவனங்கள் தங்களால்தான் ஓடுவதாக ஒரு நினைப்பு. அம்மாவைக்கூடப் போய்ப் பார்க்க முடியவில்லை.

★★★★★


இலக்கியா இந்தியா போய் ஒரு வாரம் ஓடிவிட்டது. மணி எப்படியோ சமாளித்தான். பாதிவேளை வெளிச் சாப்பாடுதான். முதலில் சந்தோஷமாக இருந்த குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் போர் அடித்துவிட்டது. புகார் செய்ய ஆரம்பித்தனர். சமையலும் அலுவலக வேலையும் சமாளிக்க முடியாமல் திணறினான். அவளது அருமை அவனுக்குக் கொஞ்சம் புரிந்தது. ஆனால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இலக்கியாவிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

அவன் தலையில் தூக்கி வைத்து ஆடிய அலுவலகத்தில் இருந்து ஒரு பேரிடி இறங்கியது. கோவிட் சூழ்நிலை காரணமாக அவன் பணி நீக்கம் செய்யப்பட்டான். முதலில் கால் பண்ணி பேசியது இலக்கியாவிடம்தான். விஷயத்தைச் சொன்னவுடன், மனதில் உள்ள வருத்தத்தைக் காட்டாமல் ஆறுதலாகப் பேசினாள்.

"இலக்கியா, இவங்களுக்காக எத்தனை நாள் இரவு, பகல் பாக்காம வேலை செய்து இருக்கேன். என்ன காரணம் என்றும் சொல்ல மாட்டேங்கிறாங்க. வெவ்வேறு வயதினரையும், இனத்தவரையும் பணிநீக்கம் செய்த பட்டியலைக் காண்பிக்கிறாங்க. யாரும் அவங்கமேல கேஸ் போடக் கூடாதாம்! திருட்டுப் பசங்க. என் வயசுக்காரங்க பத்து பேரை வெளிய அனுப்பிச்சுட்டாங்க. நன்றி கெட்டவங்க" என்று புலம்பினான்.

"உங்களைப் போன்ற உழைப்பாளியைப் புரிஞ்சுகிற பக்குவம் அவங்ககிட்ட இல்ல. உங்க திறமைக்கு நான் அங்கே வருவதற்கு முன் ஒரு வேலை கிடைச்சிடும் பாருங்க" என்று மனம் ஆறுதல் அடையும்படி அவள் பேசினாள்.

"அம்மாகிட்ட வீடியோ கால்ல பேசறீங்களா?"

"போடு, அம்மாகிட்ட மனசு விட்டுப் பேசி ரொம்ப நாள் ஆச்சு. எத்தனை நாள் வேலை வேலைன்னு அம்மாவைப் புறக்கணிச்சு இருக்கேன்" என்று சொல்லி வருத்தப்பட்டான். ரொம்ப நேரம் அம்மாவிடம் பேசினான். அம்மா இலக்கியாவைப் பற்றி ஒரே பெருமையாகப் பேசினாள்.

சில நாட்கள் ஓடின. தனிமை அவனைக் கொன்றது. உயிரைக் கொடுத்து உழைத்த அலுவலகம், அவனை கொஞ்சம்கூட மதிக்காமல், வெளியே தள்ளியதை அவனால் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

மனதை வேறு பக்கம் திருப்ப நினைத்து, ரோஹித் அறைக்குச் சென்றான்.

"என்னடா, செய்யறே, டைம் இப்ப பத்து முப்பது. படுக்கிற நேரம் ஆச்சு."

"இன்னும் பத்து நிமிஷத்துல ஹோம் ஒர்க் முடிச்சுடுவேன்." என்று அவனைப் பார்க்காமல் ஐபேடைப் பார்த்தபடியே சொன்னான். அந்த அறையைவிட்டு கிளம்பும்பொழுது, பின்னிருந்து ஒரு குரல் "அப்பா, அம்மா இந்த மாசக் கடைசியில் வந்துடுவாங்க இல்ல?" அவனது குரலில் ஓர் ஏக்கம் தெரிந்தது.

"ஆமாம், அதுதான் பிளான். உனக்கு ஏதாவது தேவையா? அம்மா இந்நேரம் எழுந்து இருப்பா, பேசறியா?"

"சும்மாத்தான் கேட்டேன்" என்று சமாளித்தான்.

"ஓகேடா, உன் வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் படுக்கப் போ" என்று சொல்லும்பொழுது சில நினைவுகள் அவன் மனதில் ஓடின. ரோஹித்திற்கு ஒரு சிறிய பழக்கம். அவன் படுக்கப் போவதற்கு முன், அவன் அம்மா அவனது அருகில் உட்கார்ந்து சில நிமிடங்கள் பேசுவாள். ஏதாவது பேசுவார்கள். அவள் ஸ்கூல் பற்றி அவனிடம் கேட்பாள். சில சமயங்களில் அது ஒரு சண்டையில் கூட முடியும். ஆனாலும் அவனுக்கு அம்மாவிடம் பேசவேண்டும். அவன் இலக்கியாவை மிஸ் செய்கிறான், ஆனால் அவனது வயது அதைச் சொல்ல வெட்கப்படுகிறது என்று நினைத்துக்கொண்டே மாடியில் இருந்து கீழே இறங்கும்பொழுது, பக்கத்து ரூமில் இருந்து ரேணுவின் குரல் "அப்பா, நான் கேட்ட லிஸ்ட், அம்மா உன்கிட்ட அனுப்பிச்சாங்களா?"

"யேய், என்கிட்ட நேரடியா கேக்காம, அந்த லிஸ்ட் இந்தியா போய்ட்டு இங்க வரணுமா?" சற்று எரிச்சலுடன் கேட்டான். ஒரு பதிலும் இல்லை.

"நாளைக்கு வாங்கித் தாரேன்" என்றான். அதற்கும் பதில் இல்லை. இந்தக் காலத்துக் குழந்தைகள்!

கீழே சென்று டிவியை முடுக்கினான். தமிழ்ச் சேனல். "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று பாடியது. அந்தப் பாடலை இதற்கு முன் பலமுறை கேட்டுள்ளான். ஆனால் இன்றுதான், அந்தப் பாடலின் உண்மையான பொருள் அவனுக்குப் புரிந்தது. சட்டென்று மனதில் ஒரு பாரம். அதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்காமல் மாடிக்குச் சென்றான்.

அவர்களது படுக்கை அறையின் ஓரத்தில் ஒரு சிறிய மேசை. அதன் அருகில் அமர்ந்துதான் சில நாட்களாக, நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக்கொண்டு இருப்பாள். சில நாட்களாகத்தான் அந்தப் பழக்கம். அவனுக்குத் தெரிந்தவரை அவளுக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. என்னவாக இருக்கும்? ஆர்வத்துடன் மேசையின் இழுப்பறையைத் திறந்தான். அதில் அந்த நோட்டுப் புத்தகம். திறந்து பார்த்தான்.

இயற்கை, மலர்கள், மனிதர்கள், தாய்மை, மனைவி, காதல் என்று பல தலைப்புகளில் கவிதைகள்! அன்று இந்தக் கவிதைகளைத்தான் யாரிடமோ படித்துக் காண்பித்துக் கொண்டு இருந்தாள் போலும் என்று நினைத்தான். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னால் ஒரு தேதியிட்டு பனியைப் பற்றிய கவிதை. அந்தக் கவிதையை வாசிக்க ஆரம்பித்தான்.

இயற்கை என்னும் வானம் கட்டிய சேலையாக மேகம், அவளுடைய ஆடை மடிப்புகளிலிருந்து அசைந்து இறங்கும் பனித்துளி. அது எவ்வாறு அமைதியாக, மென்மையாக, மெதுவாக, மேகலா இருக்கும் வீட்டின் பின்பக்கம் இறங்குகிறது என்பதை வர்ணித்து இருந்தாள். தனது கவலையை அது எவ்வாறு கரைக்கிறது என்று அழகாக சொல்லி இருந்தாள்.

அற்புதமான கவிதை. இதைப் படித்துக் காண்பிக்கத்தான் அன்று தன் அருகில் வந்தாள் என்பது புரிந்தவுடன் தன்னையே நொந்துகொண்டான். அன்று அவளிடம் தான் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை. என்பதை நினைத்து வருத்தப் பட்டான். உடனே அவளைக் கூப்பிட நினைத்தான். ஆனால் இதுவரை அவளை ஒரு பொருட்டாக மதிக்காததற்கு மன்னிப்பை நேரில்தான் கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தான். ஆங்... அந்தக் கவிதைகளைப் பற்றியும் பேச வேண்டும்!

மறுநாள் மாலை. சூப்பர்பௌல் நாள். பசங்களோடு உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். விளையாட்டு ஒரு முக்கியமான சூழ்நிலையில் இருந்தது. அப்பொழுது இலக்கியாவிடம் இருந்து ஒரு வாட்ஸாப் கால் வந்தது.

பசங்கள் இருவரும் ஒரே குரலில் "அப்பா, அம்மாகிட்ட அப்புறம் பேசலாம்" என்று கத்தினர்.

மணி உரத்த குரலில் "பாவம், என்ன விஷயம் என்று தெரியல, பாட்டியை வச்சுக்கிட்டு அம்மா தனியா அங்க கஷ்டப்படுகிறாள். கேம் ரெகார்ட் மோடுலதான் இருக்கு. கொஞ்சம் நிறுத்தி வை. கொஞ்ச நேரத்துல பேசி முடிச்சுடறேன். உங்களாலே வெயிட் பண்ண முடியாதுன்னா, நீங்க பாருங்க. நான் ஹைலைட்ஸ் பாத்துக்கிறேன்" என்றான்.

'என்ன! நம்ம அப்பாதான் இப்படி பேசறாரா!' என்று நம்ப முடியாமல் பசங்க இருவரும் விழித்தனர்!

ஃபோனை எடுத்து காதில் வைத்தபடி "சும்மா வெட்டியாத்தான் இருக்கேன். நாம பேசலாம்" என்று சொல்லிக்கொண்டு மாடிக்குச் சென்றான் மணி.

அவனுக்கு வாழ்க்கையில் எது முக்கியம் என்று புரிந்த நாள் அது!
மருங்கர்
Share: 




© Copyright 2020 Tamilonline