Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
சிறுகதை
செவிலித்தாய்
இரண்டு கைகள்
- மு தனஞ்செழியன்|ஜூலை 2021|
Share:
சகுந்தலா எப்போதும்போல வங்கிக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவள் வைத்திருந்த கூடையில் நீண்டநேரமாக பேங்க் பாஸ்புக்கைத் தேடினாள். அது எங்கேயோ அடியில் போய் மாட்டிக்கொண்டது. கிடைக்காததால் புலம்ப ஆரம்பித்து விட்டாள். "எங்கே போச்சுன்னு தெரியலையே, காலையில சுந்தரி அம்மாகிட்ட முன்னூறு ரூவாய் வாங்கி அந்த புக்கு உள்ளதான வச்சேன்! எங்கம்மா! போச்சு அதுக்குள்ள". புலம்பிக்கொண்டே ஒரு கையைப் பையின் அடியாழம்வரை செலுத்தி அலசினாள். ஒரு வழியாக அது கையில் தட்டுப்பட்டது.

அன்று ஆகஸ்ட் பதினைந்து, வங்கி விடுமுறை எனப் பலர் கூறியும் நம்பாமல் சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களைத் தன் கைத்தடியால் வழிமறித்தாள். அவளுக்கு அப்படி ஒரு பணத்தேவை. முதியோர் உதவித் தொகையை வாங்குவதற்குத் தான் வங்கிக்குப் போகிறாள். வேகமாக வந்த ஒரு கேடிஎம் பைக் மட்டும் நின்றது. சகுந்தலாவுக்கு வயது எண்பது. எதற்கும் பயப்படமாட்டாள். பைக் நின்றவுடன் வேகமாய் அதில் ஏறுவதற்கு ஆயத்தமானாள்.

ஒரு வழியாக ஏறி பைக்கின் 'முதல்மாடிக்கு' சென்றுவிட்டாள். "ம்... போங்க ராசா" என்று குரல் கொடுத்தாள். வண்டி கிளம்பியது மிதமான வேகத்திலேயே சென்றது. சகுந்தலா மெல்லப் பேச ஆரம்பித்தாள். "எங்க ராசா வேலை செய்யுறீங்க?"

வாகன ஓட்டி பதில் சொல்லவில்லை. கட்டுமஸ்தான உடம்புடன் முழுக்கை சொக்காய் அணிந்து, முழங்கை வரையிலும் மடித்துவிட்டு இருந்தார். கால்சராய் அணிந்திருந்தார், கருப்பு நிற நாட்டாமை தோல் செருப்பு மாட்டி இருந்தார். மிடுக்கான ஆள்போலத் தோற்றமளித்தார். தலைக்கவசம் இருந்ததால் முகத்தை அடையாளம் காண முடியவில்லை. இளைஞர் என எண்ணிப் பேசிக் கொண்டிருந்தாள்.

தலைக்கவசத்தில் இருந்த தலை ஆறுமுகம்; அறுபது வயது. பார்ப்பதற்கு முப்பதைப்போலத் தெரியும். தினமும் உடற்பயிற்சி செய்வார். எப்போதும் மிடுக்காய் உடை அணிவார் யாரிடம் பேசினாலும் கம்பீரம் குறையாமல் ஒரு கர்ஜனை போல இருக்கும். அந்த ஊரில் எங்கேயாவது தப்பு நடந்தால் அதை முதல் ஆளாகத் தட்டிக்கேட்க அங்கே ஆறுமுகம் இருப்பார்.

எட்டயபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டு டி. சண்முகபுரம் இருந்தாலும். அந்த ஊருக்கு இவருதான் காவல்காரர். எல்லாப் பிரச்சனையும் மக்கள் இவர்கிட்டதான் கொண்டுபோவாங்க. சில பிரச்சனைகளை இவரே தட்டிக்கேக்க கிளம்பிடுவாரு.

அன்றைக்கும் அப்படித்தான். ஒரு பிரச்சினைக்காகத் தனது கேடிஎம் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிருந்தார். அப்பொழுதுதான் வழியில் சகுந்தலா வழிமறித்தது. அதற்கு உதவி செய்யவே ஏற்றிக்கொண்டார். அன்றைக்குச் சுதந்திர தினம் என்பதால் திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்தனர். மது விற்போரைத் துவம்சம் செய்வதற்காக வண்டியில் சென்று கொண்டிருந்தார் ஆறுமுகம்.

வேதாளம்போல வண்டியில் ஒட்டிக்கொண்ட சகுந்தலா இடைவிடாமல் தனது வாயால் ஆதங்கங்களைக் கொட்டிக் கொண்டிருந்தாள். "மூணு மாசமா பென்சன் வரலை ராசா. பேங்குக்குப் போய்க் கேட்டா அந்த வெடக்கோழி எல்லாம் ஒரு பதில்கூடச் சொல்ல மாட்டேங்குது. இன்னைக்குப் போய் புகார்… எல்லாத்தையும் ஒரு பிடி பிடிக்கிறேன் பாரு."

"அஸ்கா அஸ்கா கம்மாறு, அதுக்கா பயப்படும் சிட்டுக்குருவி. என்ன யாருனு நினைச்சாங்க தும்பகாளி பெண்ணுடா" என்று ஆறுமுகத்திடம் அடுக்குமொழி வசனங்களை அள்ளித் தெளித்தாள்.

'அங்க பேங்க்கே இல்லையே! இந்த அம்மா யாரைப் போய்ப் பிடிக்கப்போகுது?' என்று ஆறுமுகம் மனதில் எண்ணிக்கொண்டார். அதற்குள் பேங்க் வந்துவிட்டது. வண்டியை நிறுத்தினார். இரண்டு பெரிய மொக்கைப் பூட்டுக்கள் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் சகுந்தலாவுக்கு அதிர்ச்சி.

ஆறுமுகம் தலைக்கவசத்தை கழட்டாமல் உள்ளேயே சிரித்துக்கொண்டார். அசடு வழிந்த சிரிப்புடன் சகுந்தலா திரும்பி "என்ன ராசா பேங்க் இல்லையா?" என்றாள்.

ஆறுமுகம் தலைக்கவசத்தைக் கழட்டினார். முக இறுக்கத்துடன் சகுந்தலாவைப் பார்த்தார். சகுந்தலாவிற்கு மேலும் அதிர்ச்சி. 'ஆத்தி இது கட்டப்பஞ்சாயத்து, இவ்வளவு நேரமா இவுக வண்டிலையா வந்தோம்?' என்று எண்ணினாள். அதற்குள் ஆறுமுகம் ஹெல்மட்டை மீண்டும் தலையில் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார் வேட்டையாடுவதற்காக.

வண்டி ஒரு மூத்திரச் சந்துக்குள் போனது. அங்கேதான் சாராயம் விற்கிறார்கள். வண்டியை ஸ்டாண்டு போட்டுவிட்டு காலை ஸ்டேரிங் முன்பக்கமாகப் வீசி ஸ்டைலாக இறங்கினார் ஆறுமுகம். சாலையில் கிடந்த செங்கற்களைக் கால்களால் சுண்டினார் அது காற்றில் மேலே.. எழும்பி கையை வந்து அடைந்தது. குறிபார்த்து எறிந்ததில் விற்றுக் கொண்டிருந்தவன் கையும் பாட்டிலும் சேர்ந்தே உடைந்தன.

"டேய் ஆறுமுகம் டா..." என்று ஒருவன் கத்த அனைவரும் ஓட்டம் எடுத்தனர். ஓடியவர்களை விடாமல் துரத்திக்கொண்டு ஆறுமுகம் ஓடினார். ஓடிக்கொண்டிருந்த அனைவரும் இளவட்டம், ஆறுமுகத்தைத் தவிர. முன்னால் ஓடிக்கொண்டிருந்த ஒருவனின் காலைப் பார்த்து ஒரு கொம்பை வீசினார். அவன் சில்லுவாய் சேதாற ரத்தம் கொட்டக் கீழே விழுந்தான். அனைவரும் நின்று, திரும்பி வந்து ஆறுமுகத்தைச் சுற்றிக்கொண்டனர். ஆறுமுகம் கையில் வைத்திருந்த சிலம்பக் குச்சியைச் சுழற்றி அனைவருக்கும் தன் மொழியிலேயே பதில் சொன்னார்.

அவர்களிடமிருந்த மது விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு போய் அன்றைக்கு யார் யாரெல்லாம் மது வாங்கினார்களோ அவர்களின் வீட்டிலிருந்த அன்னையர்களிடமும் அவர்களின் மனைவி மக்களிடம் அந்தப் பணத்தை ஒப்படைத்தார்.

★★★★★


ஆறுமுகம் யாரிடமும் அதிகம் பேசமாட்டார். ஒத்தக்கை வாத்தியார்தான் ஆறுமுகத்தைத் தூக்கி வளர்த்தவர். வாத்தியாருக்கு மனைவி கிடையாது. அவர் மனைவி யாருடனோ ஓடிவிட்டதாக ஊர் ஜனங்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவரோ திருமணமான இரவில் அந்தப் பெண்ணை அவள் காதலித்தவனுடன் அனுப்பி வைத்திருந்தார். இந்த ரகசியம் வாத்தியார், ஆறுமுகத்தைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்களை மெட்ராஸ் செல்லும் பேருந்தில் ஈரால்லிருந்து ஏற்றிவிட்டார்.

முதலிரவுக்கு அணிந்திருந்த வளையல் சப்தங்களுடன் பேருந்தின் ஜன்னல் வழியாக அவள் கை அசைத்தாள். அதை பார்த்துவிட்டு வாத்தியார் திரும்பினார்.

★★★★★


ஒரு அம்பாசிடர் சாலையோரம் ஒதுங்கி நின்றது. அதன் ஜன்னலை இறக்கிவிட்டுத் தங்க வளையல்கள் அணிந்த ஒரு கை வெள்ளையாகத் துணி சுற்றப்பட்ட ஏதோ ஒரு மூட்டை போன்ற ஒன்றை அந்த மரத்தடியில் தூக்கி வீசியது. உடனே மூட்டையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது.

வாத்தியார் அது என்னவென்று பார்ப்பதற்கு ஓடிச் சென்றார். நெற்றியில் திருநீறு பூசி, அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கையில் தூக்கினார். திரும்பிப் பார்த்தார் அம்பாசிடர் கிளம்பியிருந்தது. "இன்றிலிருந்து நீயும், நானும்தான் துணை" என்று ஆறுமுகத்தைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு ஊருக்குள் நடந்தார். பொழுது விடிந்தது.

வாத்தியார் தனது திருமண அனுபவத்தை ஆறுமுகத்திற்குச் சொல்லியே வளர்த்தார். "உங்கம்மா உன்னைப் புரிஞ்சுக்காம தூக்கிப் போட்டுட்டா. நான் கெட்டிக்கிட்டு வந்தவ என்னப் புரிஞ்சுக்காம தூக்கிப் போட்டுட்டா. நாம ரெண்டு பேருமே ஒண்ணுதான்."

ஆறுமுகம் அதைக் கேட்டு வளர்ந்ததால் திருமணம் செய்துகொள்வதில் ஈடுபாடு இருக்கவில்லை. ஆனால் ஊரில் பெண்களுக்கு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஆறுமுகம் உடனே ஓடி வருவார்.

தன் அன்னையின் முகத்தை யாருமே பார்த்ததில்லை, வாத்தியார்கூட அன்று அந்தக் காரில் இருந்தவளின் முகத்தைப் பார்த்ததில்லை என்பதால் ஆறுமுகத்தின் அன்னை யார் என்பது யாருக்குமே தெரியாது.

டி. சண்முகபுரத்தில் இவர்கள் இருவரின் ஆரம்பகால வரலாறு பல கட்டுக்கதைகளுடன் இருந்தது. பிறகு ஆறுமுகமும், வாத்தியாரும்

அந்த ஊருக்கு நல்லது செய்வதைப் பார்த்து அந்தக் கதைகள் எல்லாம் காணாமல் போயின.

ஊர்க் கிழவர்கள் எப்போதும் இருக்கும் மடத்தில் யாராவது, "ஏண்டா ஆறுமுகம் எப்பப் பாத்தாலும் ஊர் வம்புகெகெல்லாம் போறே" என்று கேட்கும் போது கர்ஜனையான குரலில் ஒரு பதில் வரும் "நாளைக்கு உனக்கு ஒரு பிரச்சனைனாலும் நேந்தே வருவேன், அப்போ நீ இதேமாதிரி கேப்பியான்னு தெரியாது. ஆனா நே வருவேன்" என்று கூறிவிட்டு ஆறுமுகம் வேகமாய்க் கிளம்பிவிடுவார்.

ஆறுமுகம் போனபின்பு "ஆமா இப்படி வீராப்பு பேசினா இவனுக்கு எவன் பொண்ணு கொடுப்பான்? அதான் இன்னும் ஒண்டிக்கட்டையா, சண்டியர் மாரி அலையுறான். வாத்தியார்கிட்ட கத்துக்கிட்ட கம்புச் சண்டையை வச்சுக்கிட்டு ஆடு துள்ளுது டோய்" என்பார்கள். ஊர்க் கிழவர்கள் வாய்ச்சவடாலில் வல்லவர்களே கூட்டத்தில் ஒரு கிழவர் "அவனுக்கு ஏண்டா பொண்ணு இல்ல? இந்தா இருக்கானே முருகேசன் இவன் பொண்ணுக்கு 52 வயசு ஆகுது. செவ்வாய் தோஷமுன்னு எந்தப் பயலும் கட்டிக்க மாட்டேங்குறான். அவளை இவனுக்குக் கட்டி வச்சிடலாம்" என்றார்.

"நீ சொல்றதெல்லாம் சரிதான் கொஞ்சம், மூக்குப்பொடி கொடு" என்று கையை நீட்டினார் முருகேசன். மூக்குப்பொடி டப்பாவைத் தட்டிக்கொண்டே "அவன்கிட்ட யாரு கல்யாணத்தைப் பத்தி கேக்கிறது, அடிச்சி கிடிச்சி போடப்போறான். கம்முனு கெடம்யா" என்றார்.

இன்னொரு கிழவர் "எலே அவன் இத்தனை நாள் வாத்தியார் சொல்லைக் கேட்டு நடந்தான்லே. இப்பத்தேன் அவர் இல்லல்ல. நாம் சொன்னாக் கேட்பாம்லே" என்றார்.

"இத்தனை நாள் இதுகளை ஜோடி சேக்கணும்ன்னு நமக்கு விளங்காமப் போச்சுப்பா.."

"அதுக்கு எல்லாம் கால நேரம் கூடி வரணும்யா. என்னதான் பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தாலும், பத்திக்கிற நேரத்தில்தான் பத்திக்கும்" எனப் பேச்சு போனது.

"ஊரக் காப்பாத்துற ஆறுமுகம் ஒன் பொண்ணக் காப்பாத்த மாட்டானா? வீட்டிலேயே வச்சுகிட்டு இருக்க விளக்கெண்ணெய்" எனக் கூட்டத்தில் முருகேசனுக்கு வசவு விழுந்தது.

"இப்ப என்ன வயசு ஆயிடுச்சின்னு..?" என்று முருகேசன் இழுத்தார்.

"அது இல்ல. அவளுக்கு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து வேலைக்குச் சேரச் சொல்லி கார்டு இப்பத்தான் வந்திருக்கு. அதுக்குள்ள கல்யாணம் பண்ணா எப்படினுதான் யோசிக்கிறேன். வேற ஒண்ணும் இல்ல."

"அட அந்தக் கார்டத் தலையைச் சுற்றித் தூக்கி போடுடா. இப்ப வேலைக்குச் சேந்து... எப்படியும் அடுத்த ஆறு வருஷத்துல புள்ள வெளிய வந்துடுவா அதுக்கு எதுக்குடா வேலைக்குப் போய்க்கிட்டு. பேசாம நம்ம ஆறுமுகத்துக்குக் கல்யாணம் பண்ணி வை. அவன் எல்லாத்தையும், பாத்துகிடுவான். வேணுமுன்னா உன்னையும் சேர்த்து பாத்துகிடுவான்" என ஒருவர் சொன்னார்.

உடனே ஆறுமுகம் வெடுக்கென்று "பிச்சை எடுத்தாலும் வடக்குத் தெருவில் பிச்சை எடுப்பேனே தவிரச் சம்பந்தி வீட்டில் எடுக்க மாட்டான்யா.." என்று ஒரு பதில் கூறினார்.

ஒருவழியாக முருகேசன் மகள் வள்ளியம்மாளுக்கும் ஆறுமுகத்துக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. டி. சண்முகபுரம் திருவிழாக் கோலமாக மாறியது.

அந்த ஊரின் மூத்த பண்ணை வீட்டுக்கார சகுந்தலா, அவளுடைய அப்பா தும்பகாளி இருவரும் முன்பெல்லாம் பண்ணை வீட்டில் இருப்பார்கள். அப்போது பண்ணை வீடு, தோட்டம் துறவு, அம்பாசிடர், ஏக்கர் கணக்கில் நிலம் எனப் பல சொத்துக்கள் இருந்தன. இரவோடு இரவாக எல்லாவற்றையும் விற்றுவிட்டு மெட்ராசுக்குத் தொழில் செய்யப் போனார்கள் தொழில் சரிவர நடக்கவில்லை.

பணத்தையும் அப்பா தும்பகாளியையும் இழந்து சகுந்தலா மட்டும் அந்த ஊருக்குத் திரும்பி வந்தார். இன்று அன்றாட வாழ்வுக்கே முதியோர் உதவித் தொகையை என்னும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இருந்தாலும் அந்த ஊரில் சகுந்தலாவுக்கு மரியாதை குறையவே இல்லை. அதனால் சகுந்தலாவைத் தாலி எடுத்துக் கொடுக்கச் சொல்லி திருமணம் நடந்து முடிகிறது.

"இந்தா ராசா.." எனத் தாலியைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்துத் தந்து, மாப்பிள்ளை ஆறுமுகத்தின் நெற்றியில் திருநீறு பூசினாள் சகுந்தலா...
மு தனஞ்செழியன்
More

செவிலித்தாய்
Share: 




© Copyright 2020 Tamilonline