Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | கவிதைப் பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
சொத்துரிமை!
ஊரான்
- ரம்யா கார்த்திகேயன்|செப்டம்பர் 2019||(1 Comment)
Share:
கண்டதும் காதலா என்றால் கட்டாயம் இல்லை என்று சொல்வேன். அவனை முதலில் என் தோழி ரமா வீட்டில் சந்தித்தேன்.

ரமா என் கல்லூரித் தோழி. நான் மதுரையில் +2 முடித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்காகச் சென்னை வந்தவள். முதல் வருடம் எல்லோரும்போல நானும் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். ஆனால் இரண்டாவது வருடம் ஹாஸ்டல் ஜெயிலைவிட இருமடங்கு கொடுமையாக இருந்தது. சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்க ஆசை. எப்படியோ அப்பா அம்மா சம்மதத்துடன் கல்லூரி அருகில் ஒரு தங்குமிடம் கிடைத்தது. ரமாவின் பெற்றோர் என் பாதுகாவலராக நியமிக்கபட்டனர். அதுவே எங்கள் இருவரின் நீண்டகால நட்பிற்குப் பாலமாக அமைந்தது.

கல்லூரி 3 மணியோடு முடிந்து விடும். கையோடு ரமா வீட்டுக்குப் போய் ஒரு ரவுண்டு சாப்பிட்டுவிட்டு, மாலையில் பகுதிநேர வேலைக்குப் போவதுதான் எங்கள் வழக்கம். அந்தமாதிரி ஒரு நாள் ரமா ஸ்கூட்டியை உதைக்கும்போது ராகேஷ் வந்தான்.

ரமாவும் ராகேஷும் ஒரே பள்ளி. தவிர இருவரும் அதே தெருவில் கிட்டத்தட்ட இருபது வருடமாக இருந்து வருகிறார்கள். அதனால்தானோ என்னவோ அவளுக்கு அவன்மேல எந்தவிதமான ஈர்ப்பும் இல்லை. ஆனால் எனக்கோ பார்த்த முதல் சந்திப்பிலேயே அவனுடன் நிறையப் பேசணும், பழகணும்னு தோன்றியது..

"இங்க என்ன பண்ற" என அவனைக் கேட்டாள் ரமா. "இந்தக் கவரை அங்கிள்கிட்டக் குடுக்கச் சொன்னார் எங்கப்பா" என்று சொல்லி விட்டு யார் இந்த புது நபர்னு பார்த்தான். "ஹேய் உஷா, என்னோட சிநேகிதன் ராகேஷை மீட் பண்ணு" என்று ரமா அறிமுகப்படுத்தினாள். "ஹை, என் பேர் உஷா" என்று தயங்கினேன். "அவ அப்படித்தான்... ஊரான் இல்ல!" என்று கிண்டலடித்தாள். என்னைப் பட்டிக்காடு என்று சொல்வதில் அவளுக்கு ஒரு சந்தோஷம். "ஏய் ரொம்பப் பேசாதடீ. மதுரக்காரிகிட்ட மல்லுக்கு நிக்காத" என்று சீண்டினேன். "ஓகே கேர்ள்ஸ். உங்க சண்டை அப்புறம் இருக்கட்டும். நான் வர்றேன். ஸீ யூ ஊரான்" என்று சொல்லிவிட்டு பைக்கில் பறந்தான்.. ஊரான் என்ற வார்த்தை வாழ்க்கைல முதல்முறையாக அழகாகத் தெரிந்தது.

அப்படியே ECRல ராகேஷ் பைக் ஓட்ட, அவனை அணைத்தபடி "பார்த்து முதல் நாளே..." மனது சிறகடித்தது. ஓகே ஓகே... முதல் வரி அபத்தமான பொய். அது கட்டாயம் கண்டதும் காதல்தான். ஒரு நொடிகூட இல்லை, அதுக்குள்ள "எப்படி டீ உன்னால மட்டும் பாக்குற பசங்ககூட எல்லாம் டூயட் பாட முடியுது"ன்னு பொறாமையில் சீண்டினாள் ரமா. "வா நேரம் ஆச்சு. பண்றது பார்ட் டைம் வேலை. அதுக்கும் பார்ட் டைம் போனா சங்குதான்" என்று இழுத்தாள்.

கல்லூரியில் கம்ப்யூட்டர் வகுப்பு நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று எத்தனை ஆண்களைச் சந்தித்து இருக்கிறேன். இருந்தும் யாரிடமும் தோன்றாத இனம்புரியாத இன்பம் அவனைப் பார்த்த நொடியில் வந்தது. ஏதோ சாக்குச் சொல்லி அடிக்கடி ரமா வீட்டுக்குப் போகத் தொடங்கினேன். சாதாரணமாக சனி, ஞாயிறுகளில் சந்தி சாய்ந்து எழும் நான், இப்போதெல்லாம் பொழுது விடியுமுன் ரெடியாகி அங்கு ஆஜராகி விடுகிறேன். கேட்டா சேர்ந்து படிக்கிறோம்னு சொல்லுவேன். இப்படியாகச் சில நாட்கள் சென்றன.

ஒரு நாள் ரமா வீட்டிலிருந்து கிளம்ப நேரம் ஆனது. அப்போது பார்த்து நம்ம ஹீரோ வந்தான். "தம்பி இது நம்ம ரமாவோட ஃப்ரெண்டு . இன்னிக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு. 10 மணிக்குள் போகலேன்னா தங்கும் விடுதியில பிரச்சினை பண்ணுவாங்க. இவள கொண்டு விட்டுடேன்" என்று ஆன்ட்டி சொல்ல ஆயிரம் பட்டாம்பூச்சி என்னைச் சுற்றிப் பறக்க தொடங்கின. "இருக்கட்டும் ஆன்ட்டி. இன்னைக்கு ஒரு நாள்தான. நான் பேசிக்கிறேன். தேவை இல்லாம அடுத்தவங்கள தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்காரு," கொஞ்சம் எடுத்து விட்டேன். "இல்லம்மா. ரொம்ப நேரம் ஆச்சு. நீயும் டயர்டா இருப்ப. தெரிஞ்ச பையன்தான்" என்று ஆன்ட்டி சொல்லிவிட்டுச் சென்றார். தலையசைத்து, பை எடுத்துக்கொண்டு வாசலுக்குப் போனேன். பின்னாடி ஓடிவந்து என் ஜடையை இழுத்து "ம்ம்ம்ம்ம் மஜா மாடி டி... இதுக்குதான இவ்வளவு நாள் அடி போட்ட" என்று குறும்பாகச் சிரித்தாள் என் அன்புத் தோழி.

அந்தப் பதினைந்து நிமிட பைக் பயணம்... தெரு விளக்குகளுக்கு நடுவே சில்லென வீசும் காற்று என என்னை அறியாமல் அவன் தோள்மீது தலை சாய்த்தேன். ஒரு கார் கம்பெனியில் வேலை என்று அறிந்துகொண்டேன். அவன் பேசியதில் அதுமட்டும்தான் நினைவில் இருந்தது. "இடம் வந்தாச்சு ஊரான். இறங்கு" என்று மெதுவாக என்னை உலுக்கினான். "தேங்க்ஸ்" என்று கூறி இறங்கினேன். அத அப்படியே கொஞ்சம் பெரிய மெசேஜா டைப் பண்ணி இந்த நம்பருக்கு அனுப்புன்னு சொன்னான். அரைத் தூக்கத்தில் "ம்... என்ன சொன்ன?" திரும்ப கேட்டேன். "ஏய் லூசு உன் ஃபோன் நம்பரைக் குடு" என்றான். அவ்வளவுதான்... வானத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தேன்.
மூன்று வருடங்கள் உருண்டோடின. எங்கள் காதலும்கூட. அப்போதுதான் முதல்முறையாக அவன் அலுவலக வேலையாக ஆறு மாதம் வெளிநாடு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. எனக்குச் சிறிதும் ஆர்வம் இல்லை. "ஆறு மாசம் உன்ன பார்க்காம எப்படி இருப்பேன்!" என நானோ ஒரே டிராமா. ஆனால் அவன் தெளிவாக இருந்தான். "இப்ப இருக்கிற நிலமைல ஆன்சைட் வாய்ப்பு யாருக்கும் கிடைக்கிறதில்ல. ஆறு மாசம்தானே. நம்ம காதல் எவ்வளவு ஸ்ட்ராங்குனு கண்டு புடிச்சிரலாம் அதுக்குள்ள" என்றான். "ஆமா அப்படியே பத்து பேர காதலிச்சிருக்காரு... ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு இருக்கேன். பத்திரமா வெச்சிக்கோ" எனச் சொல்ல, இறுக அணைத்தான்.

இரண்டு பேரும் காதலர்கள்னு சொல்லிக்கொள்வதோட சரி. எனக்கும் இருபத்தி இரண்டு வயசாச்சு. ஓரிரு வருடத்துல வீட்டுல கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சுடுவாங்க. நேரம் பார்த்து எஸ்கேப் ஆய்டுவானோ என்றெல்லாம் மனதில் சஞ்சலம்.

ராகேஷ் செல்ல வேண்டிய நாளும் நெருங்கியது. விமான நிலையத்தில் வழி அனுப்பிவிட்டு கையில் செல்ஃபோனுடன் சோஃபாவில் சாய்ந்தேன்.

"இம்மிக்ரேஷன் ஆச்சு" என்ற செய்தி தூக்கத்தைக் கலைத்தது.

லேசாகக் கண்களைத் துடைத்தேன். "செக்யூரிட்டி முடிந்ததும் சாப்பிடு" என்றேன்.

"Ok madam. Done" என்ற பதில் கோபம் தந்தது.

"அதுக்குள்ள தமிழ் மறந்து போயிடுச்சா. ஒரு வார்த்தைலதான் பதில் சொல்லுவியா?" சீறினேன்.

சிறிது நேரத்தில் "Security done" என்றது.

"இன்னும் எவ்வளவு நேரத்துல போர்டிங்? கொஞ்ச நேரம் பேசுவியா? கூப்பிடட்டுமா?" என்றேன். ஐந்தா அல்லது ஐம்பது நிமிடம் ஆயிற்றா... தெரியவில்லை.

"சாரி டா. இங்க பக்கத்துல ஒரு அங்கிள்கூட பேசிட்டே உன் செய்தி பார்க்கல" என்றான்.

ரொம்ப முக்கியம்... கோபம் தலைக்கேறியது. சரி இப்போ சண்டை வேண்டாம் - என்னை சமாதானப் படுத்திக் கொண்டேன். "சரி... உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன். லவ் யூ" என்றேன்.

"விமானத்துல நுழைஞ்சாச்சு. உன்னோட பர்ஸுல ஒரு கவர் இருக்கும் பாரு. பை" என்று வந்தது பதில். ஒரு 'லவ் யூ டூ' கூட சொல்லமுடியல என்ற கோபம், ஏமாற்றம் கண்களை முட்டிக்கொண்டு வெள்ளமாகப் பெருக்கெடுத்தது.

ஓடிச் சென்று பர்ஸைத் திறந்தேன். 'என் அன்புக்கு உரியவளுக்கு' என்று எழுதிய கவர். கைகள் படபடக்கத் திறந்தேன். "இருபத்தைந்து ஆண்டுகள் பெற்றோரின் அரவணைப்பில், நண்பர்கள் புடைசூழ வாழ்ந்து வந்தேன். இருப்பினும் காதல் என்ற சொல்லிற்கு முதல் விளக்கமாக நீ அமைந்தாய். ஆறே மாதம் எனக்காகக் காத்திருப்பாயா? ஊரான் பொண்ண நகரப் பொண்ணா மாத்திடலாம். என்னை மணந்து கொள்வாயா? ஒருவேளை நீ இல்லை என்று சொன்னால் இங்கேயே ஒரு வெள்ளைக்காரியோட செட்டில் ஆய்டுவேன். என்ன சொல்லப் போகிறாய்?"

கண்களில் வெள்ளம் கரை புரண்டோட, கடிதத்தை அணைத்தபடி தலை அசைத்து ஆமோதித்தேன்
.
ரம்யா கார்த்திகேயன்,
நேப்பர்வில், இல்லினாய்
More

சொத்துரிமை!
Share: 




© Copyright 2020 Tamilonline