தாய்மை உள்ளம்
|
|
|
|
இன்று எப்படியாவது அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும் என மனதிற்குள் தீர்மானித்துக்கொண்டாள் மாலா. முதன்முதலாக கோபாலுடன் சினிமாவுக்குப் போகும்போது யாரும் பார்த்துவிடுவார்களோ என பயமாக இருந்தது. போகப்போக கொஞ்சம் தைரியம் வந்தது. காந்தி மண்டபம், பறங்கிமலை போன்ற இடங்களில் அவனுடன் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தாள்.
இப்போதெல்லாம் அவனுடன் பைக்கில் போகும்பொழுது யாராவது பார்க்க மாட்டார்களா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. தானாக அப்பாவுக்கு விஷயம் தெரிந்தால் அவர் கேள்விகளுக்கு பதில் சொல்வதோடு வேலை முடிந்திருக்கும். இப்போதோ என் ஆஃபீஸில் வேலை செய்யும் கோபாலை எனக்கு பிடித்திருக்கிறது என்று ஆரம்பித்து, கல்யாணம் என்றால் அவனோடுதான் என்று முடிக்க வேண்டும். கொஞ்சம் கஷ்டம்தான்.
அப்பாவுடைய கோபம் அவளுக்குப் புதியதல்ல. ஐந்து வருடங்களுக்கு முன் அவர் கொண்டுவந்த வரனைப் பிடிக்கவில்லை என்று சொன்னபோது ஆரம்பித்த போராட்டத்திலிருந்தே பழகிவிட்டது. அப்போது மாலா டிகிரி முடித்துவிட்டு சி.ஏ. சேர்ந்திருந்தாள். பெண்பார்க்க வந்த பையனைப் பார்த்தபோது பிடிக்கவில்லை. அழகாக இருக்கவேண்டாம். ஆனால் அவனைப் பார்க்கவே சகிக்கவில்லை. எனவே பேசாமல் தலையைக் குனிந்துகொண்டே எப்படியோ சமாளித்துவிட்டாள். அவனுடன் வந்தவர்கள், "படித்திருந்தாலும் நல்ல அடக்கமான பெண்" என்று 'சரி' சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அப்போது ஆரம்பித்த சண்டைதான்....
பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு? ஆனால் அப்பா "அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணில் மட்டுமே இருக்கிறது" என்பார்.
இதுதான் எங்கள் சண்டையின் சாராம்சம். ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது சரிதானோ என்று தோன்றுகிறது. கோபால் இரண்டு வருடத்துக்கு முன் எங்கள் ஆஃபீஸில் சேர்ந்தபோது அவனை எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கவில்லை. ஆனால் அவனுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது அவனைப்பற்றி நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. போகப்போக அவன் அழகாக இருக்கிறான் என்றுகூடத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. |
|
பேசாமல் அப்பாவிடம் சண்டை போடாமல் சரணடைந்துவிடலாம் என்று தோன்றியது. வந்த வரன்களை அழகாக இல்லை என்று மறுத்ததற்கு அவரிடம் ஒட்டுமொத்தமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அதன் பின் கோபாலைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் மாலா.
நல்லவேளை, சாப்பிட்டு முடித்தவுடன் அப்பா அவராகவே கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார். பின் அவள் சொன்னதை எல்லாம் அவர் பொறுமையாகக் கேட்டார். கோபாலின் குலம் கோத்திரம் பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லை.
எரிமலை வெடிக்கப் போகிறதா? ஐந்து வருடத்துக்குமுன் நான் வேண்டாம் என்ற கிருஷ்ணனைப்பற்றி அவர் பேச ஆரம்பித்தார். அது தான் மன்னிப்புக் கேட்டுவிட்டேனே, பின் எதற்காக அதையே திரும்பவும்?
அவர் தொடர்ந்தார், "அந்த கோபாலகிருஷ்ணன் உன்னோடு பழக ஆரம்பித்தவுடன் என்னை வந்து பார்த்தார். உன்னைப் பெண் பார்த்த உடனேயே உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள..."
என் காதில் அதற்குமேல் ஒன்றும் விழவில்லை.
"அன்னிக்கே தலையை ஆட்டியிருந்தால் இப்போ பேரனுக்கு ஸ்கூல் போற வயசாயிருக்கும்" என்று சமையல் கட்டிலிருந்து அம்மா முனகியது மட்டும் தெளிவாகக் காதில் விழுந்தது.
நித்யா ராஜ், காலேஜ் ஸ்டேஷன், டெக்சஸ் |
|
|
More
தாய்மை உள்ளம்
|
|
|
|
|
|
|