விகடனும் குமுதமும்
|
|
|
|
|
நர்சிங் ஹோம் வாசலில் இருந்த பெஞ்சில் அமர்ந்து பட்டினத்தார் பாடல்களைப் படித்துக் கொண்டிருந்தார் ரகுபதி.
"என்ன சார். இங்க இருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டே சங்கர் அங்கே வந்தான்.
"என்ன சங்கர் ரொம்ப நாளா ஆளைக் காணல. இந்தியா போயிருக்கீர்னு நெனச்சேன். உங்க அம்மாவுக்கு ஏதோ பிரச்னை... இங்க நர்சிங் ஹோமில இருக்கிறதா சொன்னாங்க. அம்மாவைப் பார்க்கலாம்னு வந்தேன். டிரஸ் மாத்திட்டிட்டு இருக்கோம், வெளியே காத்திருங்கன்னு நர்ஸ் சொன்னாங்க, அதான் இங்க வந்து உட்கார்ந்தேன்" என்றார் ரகுபதி.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
"அம்மாவுக்கு திடீர்னு ஸ்ட்ரோக் வந்துடுத்து. மூளையில ரத்தக்குழாய் ஒடஞ்சிடுத்தாம். மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க. இடதுமூளை பாதிக்கப்பட்டிருக்காம். பக்க வாதம் வந்து வலது பக்கமே சுரணையில்லாம போயிடிச்சு. நினைவுகள் கூட முக்காவாசி அழிஞ்சு போச்சு" சங்கர் மிகுந்த வருத்தத்துடன் சொன்னான்.
"வயித்துக்கு என்ன ஆகாரம் தராங்க?"
"பால் மாதிரி திரவமா கொடுக்கறாங்க. அதைக்கூட வாய் வழியாக் கொடுக்க முடியல. கொடுத்தா முழுங்கமுடியல. அது வயத்துக்குப் போகாம நுரையீரலுக்குப் போயி இன்ஃபெக்ஷன் வந்து நிமோனியால கொண்டு போயிடும்னு பயந்து வயிற்றில ஓட்டை போட்டு குழாய் வழியா பம்ப் வெச்சு கொடுக்கறாங்க.
"பேச முடியுதா?"
"பேச வாயைத் திறக்கறாங்க. உதடு அசையுது. சவுண்டு மெல்லிசா வருது. ஆனா சொல்றது தெளிவாப் புரியல"
"எழுதிக்காட்டினா புரிஞ்சிக்க முடியுதா?"
| ஒரு புத்தகத்தில பல பக்கங்களைக் கிழிச்சு எறிஞ்சிடாறாப்பல, கொஞ்சம் நினைவு ஒட்டியிருக்கு. மூளையில பாதிக்கப்பட்ட இடத்தில மறுபடியும் ரத்த ஓட்டம் ஏற்பட்டா ஒருவேளை நினைவு திரும்பலாம். | |
"எழுத்தை எழுதப் படிக்க முடியல. பேப்பர்ல எழுதிக் காட்டினா பார்த்துட்டுத் திருப்பிக் கொடுத்துடறாங்க. சரியா சாடையும் காட்டத் தெரியல "
"நர்சிங் ஹோம்லதான் தனியா இருக்காங்களா?"
"ஆமா. தினமும் நானும் தங்கைகளும் அடிக்கடி வந்து பார்த்திட்டுப் போறோம்"
"அவசியம் வந்து பார்த்துக்கணும். முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே, அன்னையிட்ட தீ அடிவயிற்றிலேனு சொல்றாரு பட்டினத்தார். நமக்குப் பசி, தாகம்னு உணர்வுகள் ஏற்படக் காரணமா இருந்தவள்னா தாயார். அவசியம் வந்து பார்த்துக்கணும். சித்தர் பாடல் கேட்டிருக்கீங்களா?
ஐயிரண்டுதிங்கள் அங்கமெலாம் நொந்துபெற்றாளை பையலென்றபோது பரிந்தெடுத்துச் செய்யவிரு கைப்புறத்திலேந்தி பால்தந்தென் பசிதீர்த்தாளை எப்பிறவியில் காண்பேன் இனி.....
தாய்க்குச் சேவை பண்ணக் கொடுத்து வெச்சிருக்கணும். ஆமா, உங்களுக்கு டாக்டர் மாருதி ராவைத் தெரியுமா?"
"கேள்விப்பட்டிருக்கேன். பழக்கம் இல்ல."
"அவர் பெரிய ஸ்பீச் தெராபிஸ்ட். பேச்சுக்குறைகள் எல்லாம் சரி செஞ்சுடுவார். அவர்கிட்ட பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கங்க. அவரால ஏதாச்சும் செய்ய முடியும்னு தோணுது."
"நன்றி. போய்ப் பார்க்கிறேன்."
"இப்ப நீங்க பேஷண்டைப் பார்க்க உள்ள போகலாம்" என்றாள் அங்கு வந்த நர்ஸ்.
"வாங்க ரகுபதி சார். உள்ள போகலாம்"
உள்ளே படுக்கையில் இருந்தாள் சங்கரின் தாய். உடல் பலவீனமாக இருந்தாலும் முகத்தில் தெளிவு இருந்தது. சங்கரைப் பார்த்ததும் முகத்தில் ஒரு புன்சிரிப்பு வந்தது. ஏதோ சொல்வது போல் உதடுகள் அசைந்தன. வார்த்தை தெளிவாக இல்லை.
"என்னம்மா வேணும்? கை வலிக்குதா?" என்றான் சங்கர்.
பதில் இல்லை.
"சரியா தூங்கினியா? ஏதாவது வேணுமா?"
பதில் இல்லை.
இடது கையை நீட்டி அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
"பார்த்தீங்களா சார். என்னைப் பார்த்ததும் ஏதோ பேச வராங்க. புரியல."
"அம்மா, ரகுபதி சார் வந்திருக்கார் பாரு"
அவள் கண்கள் ரகுபதி பக்கம் பார்த்தன. யார் என்று யோசிப்பது போல் தோன்றியது.
ரகுபதியையும் சங்கரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
"அம்மா. இவரைத்தெரியல?"
"சங்கர், கவலைப்படாதீங்க. நினைவு அழிஞ்சு போச்சு. ஒரு புத்தகத்தில பல பக்கங்களைக் கிழிச்சு எறிஞ்சிடாறாப்பல. கொஞ்சம் நினைவு ஒட்டியிருக்கு. மூளையில பாதிக்கப்பட்ட இடத்தில மறுபடியும் ரத்த ஓட்டம் ஏற்பட்டா ஒருவேளை நினைவு திரும்பலாம். நான் அப்புறமா வரேன். மனசை உழப்பிக்காதீங்க. முடிஞ்சா டாக்டர் ராவைப் பாருங்க"
***** |
|
டாக்டர் மாருதி ராவ் சங்கரின் தாய் இருந்த அறைக்குள்ளே வந்த போது இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
"நான் டாக்டர் மாருதி ராவ். இது சங்கர் அம்மாதானே?
"இது எங்கம்மாவும்தான். சங்கர் எங்க அண்ணாதான். நான் மாலதி, இவ உமா. அம்மா, இது டாக்டர். உன்னைப் பார்க்க வந்திருக்கார்"
அம்மாவின் கண்கள் டாக்டரை ஒரு நிமிஷம் சலனமின்றிப் பார்த்தன.
டாக்டர் பையிலிருந்து சிறிய மைக்ரோஃபோன் போல ஒரு கருவியை அம்மாவின் அருகில் வைத்தார். "அம்மா பேசுவீங்களா"
"டாக்டர் கேட்கறார்ம்மா பேசு பார்க்கலாம்."
பதில் இல்லை. மாலதியின் கையைப் பிடித்துக் கொண்டாள். பிறகு உமாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
"எங்களை அடையாளம் தெரியறாப்பல இருக்கு. ஆனா பேச்சு இல்ல. அண்ணாவைப் பார்த்தா மட்டும் பேச்சு வரது. ஏன்னு தெரியல"
"நாங்க ஆயிரம் செஞ்சாலும் அம்மாக்குப் பிள்ளை மேலதான் பாசம் போல இருக்கு"
"சங்கர் எப்ப வருவார்ம்மா?"
| அம்மாவால வாயில தனக்குனு ஒரு சொட்டுக் கஞ்சி சாப்பிட முடியல. தன்னைப்பத்திக் கவலைப்படல. இந்த நிலைமையிலயும் என்னைப்பத்திக் கவலைப்பட்டு விசாரிக்கறாங்க. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? | |
"இதோ வர நேரம்தான்" என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தபோது சங்கர் உள்ளே வந்தான்.
"டாக்டர், ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? வழியில ரோட்ல ஒரு ஆக்சிடெண்ட். வழியை அடைச்சுட்டாங்க. அதான் நேரமாயிட்டது"
"தட்ஸ் ஆல் ரைட். அம்மாகிட்ட போங்க"
சங்கர் அம்மாவின் அருகில் போனான். அவனைப் பார்த்ததும் ஒரு புன்னகை. அவள் கைகள் முன்னோக்கி நீண்டன. வாயில் ஏதோ சொல்ல முயன்று லேசாக சத்தம் வெளிப்பட்டது.
"அம்மா நீ சொன்னது புரியல. இரைஞ்சு சொல்லு பார்க்கலாம்"
வாய் திறக்கவில்லை. எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
"அம்மா எங்கிட்டப் பேசு" என்று அருகில் போனாள் மாலதி. பலனில்லை.
"இங்க உமா இருக்கா பாரு. உமா அம்மாகிட்ட வா. உங்கிட்ட பேசறாளா பாரு. எங்ககிட்ட பேசாம என்னம்மா உன் பிள்ளைகிட்ட மட்டும் பேச்சு?"
உமா வந்ததும் அவள் கையைப் பிடித்துக் கொண்டாளே தவிர பேச்சில்லை.
டாக்டர் தன் உபகரணங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார். "ஓகே சங்கர், நான் அப்புறம் உங்களுக்கு போன் பண்ணறேன்"
*****
மறுநாள் டாக்டர் ராவ் சங்கரை அழைத்தார்.
"சங்கர், உங்களுக்கு நேரம் இருந்தா என் ஆபீசுக்கு வரீங்களா? ரெகார்ட் பண்ணின உங்க அம்மா பேச்சு சவுண்டைப் பெரிசாப் பண்ணினா நல்லாக் கேக்குது. என்ன சொல்றாங்கனு எனக்குத் தெளிவா இல்ல. எனக்குத் தமிழ் அவ்வளவா வராது."
சங்கர் அவர் அலுவலகத்துக்குப் போனான்.
"கவனமா கேளுங்க. என்ன சொல்றாங்கனு புரியுதா பாருங்க. பின்னணியில கொஞ்சம் சத்தம் இருக்கலாம். இந்த பட்டனை அமுக்கினா மறுபடியும் கேக்கலாம்" என்று சொல்லி அவன் காதில் ஒரு இயர்ஃபோனை மாட்டினார்.
ஒரு சிறிய டேப்பை எடுத்து ப்ளேயரில் போட்டு மின் இணைப்பு கொடுத்தார்.
சங்கர் கேட்டான். பட்டனை சில முறை அமுக்கி திருப்பித் திருப்பி கேட்டான். அவன் கண்ணில் நீர் வடிந்தது.
"என்ன சொல்றங்கனு புரியுதா?"
"புரியுது டாக்டர். நீ சாப்பிட்டாச்சானு கேட்கறாங்க டாக்டர். நான் சாப்பிட்டாச்சானு அக்கறையாக் கேட்கறாங்க டாக்டர்"
"அதான் தாய்ப்பாசம்கிறது"
"அப்ப ஏன் டாக்டர் மாலதியையும் உமாவையும் கேட்காம என்னை மட்டும் கேட்கிறா?"
"அவங்க பெண்ணுங்க. அவங்களுக்கு சமைக்கத் தெரியும். சமச்சு சாப்பிட்டிருப்பாங்கனு தெரியுமா இருக்கும் "
"அம்மாவால வாயில தனக்குனு ஒரு சொட்டுக் கஞ்சி சாப்பிட முடியல. தன்னைப்பத்திக் கவலைப்படல. இந்த நிலைமையிலயும் என்னைப்பத்திக் கவலைப்பட்டு விசாரிக்கறாங்க. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் டாக்டர்?" என்று குலுங்கிக் குலுங்கி அழலானான் சங்கர்.
எல்லே சுவாமிநாதன் |
|
|
More
விகடனும் குமுதமும்
|
|
|
|
|
|
|