Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
சிறுகதை
ஜோசியம்
- |மார்ச் 2009|
Share:
Click Here Enlargeஎன் மனைவிக்கு ஜோசியம், ஜாதகம், எண் ராசி, பெயர் ஜோசியம், கிளி ஜோசியம், எலி ஜோசியம் எல்லாவற்றிலும் அதீத நம்பிக்கை. எனக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் அவள் விஷயத்தில் குறுக்கிடும் தைரியம் எனக்கில்லை. ஊரிலுள்ள அத்தனை ஜோசியர்களும் அவளுக்கு அத்துப்படி. அவர் இதைச் சொன்னார், இவர் இந்தப் பரிகாரம் சொன்னார் என்று ஏதாவது ஒரு கோவிலுக்கு தினமும் கையில் எண்ணெய்க் கிண்ணமும், அர்ச்சனைத் தட்டுமாக அலைந்து கொண்டிருப்பாள். அப்படி நான் அவளுக்கு வாழ்க்கையில் என்ன குறை வைத்தேன் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.

இப்படித்தான் ஒருநாள் அரக்கப் பரக்க ஓடி வந்தாள் என் மனைவி. "கீழத் தெருவில ஒரு ஜோசியர் புதுசா வந்திருக்காருங்க. அவர் சொன்னது அப்படியே பலிக்குதாங்க. கூட்டம் அலை மோதுதாம்."

"அப்புறமென்ன? நீ போய்ப் பார்த்துட வேண்டியது தானே. உனக்குத் தெரியாமல் அவர் எப்படி இந்த ஊரெல்லையை மிதித்தார்?" என்றேன்.

"சும்மா கேலி பேசாதீங்க. நாளைக்கு நாம இரண்டுபேரும் அவரைப் பார்க்கப் போறோம்" என்றாள், அவளே முடிவெடுத்தவளாக. "என்ன, விளையாடுறியா? நீ வேணா போய்க்கோ, என்னை இந்த வம்பிலெல்லாம் மாட்டாதே!" என்று தீனமான குரலில் சொன்னேன். பிறகு, அவள் பேச நான் மௌனமாயிருக்க- நான் மௌனமாயிருக்க, அவள் பேச என்று கடைசியில் வழக்கம்போல் அவள் கட்சிதான் வென்றது.

அடுத்த நாள் அந்த வாக்குப் பொய்க்காத ஜோசியர் ஐயாவை தரிசிக்கப் போனோம்.

அவர் என்னிடம் கிளம்பும்போது சொன்னார், "கூடிய விரைவில் ஒரு மரணம் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள்" என்று.
அது என்னவோ அப்படி ஒரு கூட்டம்! இந்தக் காலத்தில் எதற்குத்தான் கூட்டமென்று விவஸ்தை கிடையாதே! என் மனைவி முன்னாலேயே பெயரைக் கொடுத்திருந்தாள் போலிருக்கிறது. எட்டாவது நம்பர் கிடைத்திருந்தது. பார்த்துவிட்டு வருபவர்கள் முகங்களிலெல்லாம் ஒரு பரவசம்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு எங்கள் முறை வந்தது. உள்ளே சென்றோம். அந்த 'ஐயா' ராஜராஜேஸ்வரி படத்தின் முன் ஒரு யோக முத்திரையில் அமர்ந்திருந்தார். நெற்றியிலே பட்டையாக விபூதி, வேஷ்டி சட்டையுடன் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தார். சாதுவான முகம். வயது நாற்பது, நாற்பத்தைந்துதான் இருக்கும்.

கும்பிட்ட எங்களை அமரச் சொன்னார். சாதாரணமாகவே ஜாதகம் பார்த்துச் சொல்பவர்களுக்கு வருபவர்களது எண்ணப் போக்கு தெரியும். எந்தக் கஷ்டமும் இல்லாமல் சவுகரியமாக இருப்பவர்கள் அவர்களிடம் வரமாட்டார்கள். பெண்ணின் கல்யாணம், பையனின் படிப்பு, கணவனின் வேலை அல்லது குணமாகாத வியாதி இப்படி ஏதாவது பிரச்சினையிருந்தால்தான் அவர்களை அணுகுவார்கள் என்பது ஜோசியக்காரர்களுக்குத் தெளிவாகவே தெரியும். நம்மிடம் இருந்து வார்த்தையைக் கொடுத்து வாங்கி ஆருடம் சொல்வார்கள்.

மனைவிக்கு அவர் சொன்ன பலன்களைக் கேட்டுப் பரம சந்தோஷம். பரிகாரங்களை மறக்காமல் கேட்டுக் கொண்டாள். நான் என்னவோ வழக்கம் போல் இதுவும் ஏமாற்று என்ற எண்ணத்துக்கு ஏற்கனவே வந்திருந்தேன். என் அவநம்பிக்கையை ஊகித்தவர்போல அவர் என்னிடம் கிளம்பும்போது சொன்னார், "கூடிய விரைவில் ஒரு மரணம் நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக இருப்பீர்கள்" என்று.

எனக்கு என்னவோ திகீரென்றது. "நான் ஒரு மரணத்திற்குக் காரணமாக இருப்பேனா!"
நான் சொல்வது நடந்ததும் நீங்களே என் வீட்டுக்கு வந்து சொல்வீர்கள் பாருங்கள்" என்று ஜோசியர் அன்று சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது
எனக்கு ஒரு மூட்டைப் பூச்சியைக்கூட நசுக்க தைரியம் கிடையாது. ரத்தத்தைப் பார்த்தால் வடிவேலு பாஷையில் 'அப்படியே அழுதுடுவேன்'.

நான் சற்றே நகைக்க, அவர் சொன்னார். "என்ன, நம்பவில்லையா? அது நடந்ததும் நீங்களே என் வீட்டுக்கு வந்து சொல்வீர்கள் பாருங்கள்."

இது நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதமாகி விட்டது. ஜோசியர் ஐயா சொன்னதை நான் ஏறத்தாழ மறந்தே போய்விட்டேன்.

அன்று காரியாலயத்துக்கு ஏற்கனவே 'லேட்' ஆகி விட்டது என்று ஸ்கூட்டரை வேகமாகச் செலுத்திய வேளை, நெரிசலான அந்தச் சந்திப்பில் காத்திருந்த பின் பச்சை விளக்கு தெரிய வேகமாகக் கிளப்பினேன். அப்போது இடதுபுறத்திலிருந்து வந்த மொபெட் என் வாகனத்தின்மீது இடிக்க நான் எப்படியோ சமநிலை தவறாமல் தப்பினேன். ஆனால் இடித்தவர் நிலை தடுமாறிக் கீழே விழ, பின்னாலிருந்து வந்த கார் திடீர் பிரேக் பிடிக்காமல் அதன் சக்கரம் கீழே விழுந்திருந்தவரின் மேல் ஏற, எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. ஆசாமியின் முகத்தைத் தவிர மற்ற பகுதிகள் பெரும் சேதம். சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

அந்த முகம் - "அடப்பாவி!!!"

கூட்டம் கூடியிருந்து எட்டியிருந்து 'த்சோ' சொன்னது.

இவர் சாவுக்கு நான் காரணமாயிருந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு என்னிடம்.

கூட்டத்தில் ஒரு குரல் "யாரோ பாவம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர் வீட்டில் செய்தி சொல்லுங்களேன்" என்றது. நான் விரைந்தேன் செய்தி சொல்ல.

"நான் சொல்வது நடந்ததும் நீங்களே என் வீட்டுக்கு வந்து சொல்வீர்கள் பாருங்கள்" என்று ஜோசியர் அன்று சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

டி.எஸ். பத்மநாபன்
Share: 




© Copyright 2020 Tamilonline