|
|
|
(சென்ற இதழ் தொடர்ச்சி)
நாம் சென்சிடிவாக இருந்து மனம் புண்படக் கூடிய நிலைமைகள்.
5. உள்ளூர்ப் பொது நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறோம். யாரோ எங்கோ தவறு செய்ய, ஒரு குளறுபடி. நம்மைக் குறை சொல்கிறார்கள் என்று நமக்கே சொன்னால்தான் தெரிய வருகிறது.
6. நமக்கு நெருக்கமானவர் என்று நாம் நினைப்பவர் நம்மைப் பற்றியே தவறாகப் பேசியிருக்கிறார்.
7. நம் மகிழ்ச்சியைத் தியாகம் செய்து குடும்பத்துக்கு நல்லது என்று நினைத்து ஒன்றைச் செய்துவிட்டு வந்தால், அதை சுயநலமாக நம்முடைய குடும்பத்தாரே நினைக்கிறார்கள்.
8. நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் வீட்டுக்கு வேறு வழியில்லாமல் ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டியிருக்கிறது. உபசரிப்பு சரியில்லை. சாப்பிடப் பிடிக்காமல் பசியுடன் வெளியேறுகிறோம்.
9. இரண்டு நண்பர்களுக்கிடையிலான விவாதத்தில் மாட்டிக் கொண்டு, ஒருவரை ஆதரிக்க மற்றவர் நம்மைக் குதறி விடுகிறார்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மொத்தத்தில், இந்த அதிர்ச்சி, குமுறல்களைத் தாண்டி நம்மைச் சமன் செய்து கொள்வதற்குக் கீழ்க்கண்டவை பயன்படும்:
| நம் மனதை சாட்சியாக வைத்து உளமாறச் செய்யும் எந்தச் செயலுக்கும் பிறர் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. | |
1. மனக்குலுங்கல், அதிர்ச்சி நாம் எதிர்பாராத சமயம் ஏற்பட்டால், உடனே தேற்றிக்கொள்ள முடியாது. கொஞ்சம் காயம் ஏற்படத்தான் செய்யும். உடம்புக்கு ஏதேனும் வியாதி, வலி வருவதுபோல, மனதுக்கும் ஏதேனும் வந்து கொண்டு தான் இருக்கும். உடல் காயத்துக்கு வெளியுதவி இருந்தால் போதும். ஆனால், உள்காயத்துக்கு அடிபடுவதும் மனம்தான். அதன் வலியைக் குறைப்பதற்கும் மனம்தான் முக்கியம். கொஞ்சம் அடி வாங்கிய மனதுக்கு உடம்பைப் போல் உடனே சிகிச்சை செய்ய முடியாது.
2. மனசாட்சி நெருடல் - நம் மனதை சாட்சியாக வைத்து உளமாறச் செய்யும் எந்தச் செயலுக்கும் பிறர் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனசாட்சியில் நெருடல் இருந்தால்தான் கஷ்டம். |
|
3. நாம் எதை, எவ்வாறு எண்ணுகிறோமோ, அதேபோல்தான் மற்றவர்களும் எண்ணுகிறார்கள் என்று நினைப்பதால் நம் எதிர்பார்ப்புகள் பொய்க்கின்றன.
4. நாம் எப்படிப் பிறருடைய அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோமோ, அதேபோல் நாம் அவர்களுக்குக் கொடுக்கிறோமா?
5. தவறு ஒன்று செய்கிறோம். தெரியாத தவறினால் ஏற்படும் அவமானம் வாழ்க்கைப் பாடமாகிறது. தெரிந்த தவறினால் ஏற்படும் அவமானம் குற்ற உணர்ச்சியைக் கொடுக்கிறது.
6. நம்வரையில் நாம் கற்பித்துக் கொண்ட நியாயங்களோ/நல்ல செயல்களோ, பிறருக்கு வேறு வகையில் புரிந்தால் - ஒன்று, நாம் அவர்களுக்கு சரியாகப் புரியவைக்கவில்லை என்று பொருள். அல்லது அவர்களுடைய உலக நியாயங்கள் வேறு.
7. ஓர் ஆத்ம திருப்திக்காக/கொள்கைக்காகச் செயல்படும்போது, யார் நம்மை இழிவுபடுத்த முடியும்? நம் மனம் சரியென்று சொன்னாலொழிய அதைப் புண்படுத்த யாருக்கும் அருகதையில்லை.
8. நம்முடைய கோட்பாடுகள், கொள்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாவற்றுக்கும் எதிர்மாறான போக்கு உடையவர்கள் தான் நம் வாழ்க்கையில் சில சமயம் முக்கிய அங்கம் வகிப்பார்கள். எல்லோருமே சென்சிடிவ் டைப்தான். இந்த முக்கிய நபர்களிடம் இருக்கும் முரண்பாடுகள்தான் நம்மை 'de-sensitive' செய்ய உரம் போட்டு வளர்க்கிறதோ என்னவோ?
9. சென்சிடிவ் ஆக இருப்பதில் தவறில்லை. பிறருடைய உணர்ச்சிகளையும் நாம் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது அல்லவா?
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|