|
|
|
அன்புள்ள சிநேகிதியே
சென்ற 'தென்றல்' இதழில் ஒரு மருமகள் தன் மாமியார் சொத்து எழுதி வைக்காததால் இங்கு அழைத்து வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்தைப் பற்றிப் படித்தேன். எனக்கு சொத்தே எதுவும் வேண்டாம். என்னைப் பிடுங்காமல் இருந்தால் சரி என்கிறாற் போல எனக்கு ஒரு மாமியார். அவ்வளவு நொச்சு. எனக்கு சில சமயம் பைத்தியமே பிடித்துப் போய்விடும்போல் இருக்கிறது. எங்களுடன் ஆறு மாதமாகத் தங்கியிருக்கிறார். இந்தியாவில் இருப்பது போல இங்கே அதிகாரம் செய்ய விரும்பு கிறார். பிள்ளைகள் என் பேச்சையே கேட்பதில்லை. அவர் சொல்வதை எங்கே கேட்கப் போகிறார்கள்?
'பிள்ளைகளைச் சரியாக வளர்க்கவில்லை', 'பெரியவங்களுக்கு மரியாதை கிடையாது' என்று தினத்துக்கு ஒரு விமர்சனம். யாருக்காவது உடம்பு சரியில்லை என்று கொஞ்சம் சமைத்து எடுத்துச் சென்றால் 'மத்த நண்பர்கள் பார்த்துக்க மாட்டாங்களா? நீ ஏன் ஓடறே?' (என் பெயரில் அவ்வளவு கரிசன மாம்). 'அவனுக்கு சாப்பாடே சரியில்லை. நீ வேலைக்குப் போகாட்டி என்ன?' (பிள்ளைப் பாசம்). உடம்பு பெரியதாக இருப்பதால் எழுந்து நடமாடி உதவி செய்வதில்லை. நானும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் கொஞ்ச நேரம் வாயை மூடிக் கொண்டிருந் தால் பரவாயில்லை.
என் கணவரிடம் புகார் செய்தால், 'அம்மா குணம் அப்படி. நான் பொறுத்துக் கொள்ள வில்லையா? நீயும் பேசாம அசட்டை செஞ்சுடு' என்கிறார். இவராலும் பிரயோசனம் இல்லை. என் பெண்ணுக்கு இன்னும் வயது வர வில்லை. பையன் கேட்கவே கேட்டு விட்டான், 'பாட்டி எப்போது இந்தியா திரும்பப் போகிறாள்?' என்று. என்ன செய்வதென்றே புரியவில்லை. நான் கல்யாணம் முடிந்து நேரே அமெரிக்கா வந்துவிட்டதால் எப்போதோ விடுமுறையில் போகும்போது கொஞ்ச நாள்தான் அவருடன் கூட இருந்து பழக்கம். இப்போது எனக்கு ஒரு கசப்பு வந்துவிட்டது. தொணதொணப்பு பொறுக்காமல்தான் மாமனார் போய்ச் சேர்ந்துவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. என்னைப் போல் இப்படிக் கஷ்டப்படுகிறவர்கள் எப்படிச் சமாளிக்கிறர்கள் என்று தெரியவில்லை. பொய் சொல்லவில்லை. சில சமயம் கடுமையாகக்கூட அவருடன் பேசியிருக் கிறேன். அப்போது பெரிதாக அழுது கொண்டே சாப்பிடாமல் படுத்து விடுவார். கெஞ்சிக் கூத்தாடி, மன்னிப்புக் கேட்டுச் சாப்பிட வைத்து... முடியவில்லை என்னால்!
இப்படிக்கு... அன்புள்ள சிநேகிதியே
இதே நிலைமையில் பல பேர் இருக்கிறார் கள் என்கிற பிரக்ஞை உங்களுக்கு இருப்பது பெரிய விஷயம். நிறையப் பேர் தங்களுக்குத் தான் அப்படிக் கஷ்டங்கள் வந்து வாய்க் கின்றன என்ற சோகத்திலேயே சோர்ந்து விடுவார்கள். உங்களுக்கு சங்கடமான நிலைமைதான். உங்கள் மாமியார் சிறிது படித்தவரா, வயதில் நிறைய மூத்தவரா, அவரை வைத்துப் பாதுகாப்பதில் உங்கள் பங்கு என்ன? உங்கள் கணவருக்கு வேறே சகோதர, சகோதரிகள் இருக்கிறார்களா? இந்த விவரங்கள் இல்லாததால் என்ன, என்ன ஆலோசனை தருவது என்பதில் எனக்குக் கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது.
இப்போதுள்ள நிறைய மாமியார்கள் மிகவும் இங்கிதமாக நடந்து கொள்கிறார்கள். தங்கள் வரம்புக்கு வெளியே வர மாட்டார்கள். மாமியார் மருமகளிடம் சிறிது தோழமையே இருக்கும். கல்லூரிக்குப் போய் படித்துத்தான் இந்த இங்கிதம் இருக்க வேண்டும் என்று இல்லை. நிறைய வெளியில் வந்து பார்த்து, கேட்டு வந்த படிப்பினைதான். அனுபவம் தான்.
உங்கள் மாமியாருக்கு அந்த அனுபவம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் உங்கள் கணவர் சொல்லுவது போல அவருடைய குணத்தை மாற்ற முயற்சி செய்தாலும் பலன் அதிகம் இருக்காது. |
|
ஒன்று செய்யலாம். அவர் எதுவும் வேலை செய்யாமல் இருப்பதால், பேசிக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. அவரிடம் ஏதேனும் வேலை கொடுத்துப் பாருங்கள். உட்கார்ந்த படியே செய்யும் வீட்டு வேலைகள் நிறைய இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. இரண்டாவது 'மௌன நேரம்' என்று ஒரு நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 5 நிமிடத்தில் தொடங்கி 10, 15 என்று அதிகமாக்கிக் கொண்டு போங்கள். இந்த உத்தி எவ்வளவு பலனைத் தரும் என்று உங்களுக்கே தெரியாது. மௌனம் நிரம்ப ஆன்ம பலத்தைக் கொடுக்கும். முதலில் உங்கள் மாமியார் எதிர்த்தாலும், அவர் சொல்ல வேண்டியதை அந்த நேரம் கழித்துச் சொல்லச் சொல்லுங்கள். பாதி விஷயம் அவருக்கே மறந்துவிடும். மூன்றாவது அவர் உங்கள் கணவரை உங்களுக்குக் கொடுத் தவர். வேறு வழியே இல்லை. வயது ஆக ஆக இன்னும் attenion seeking ஆகத்தான் மாறுவார்கள். அது உங்கள் அம்மாவாக இருந்தாலும் சரி. வீட்டுக்குள் நுழையும் போதே அந்தக் குரல் கேட்டாலே நெற்றிப் பொட்டு சுருங்கிப் போகிறது. அந்த negative vibration நமக்குள்ளேயே ஏற்படுவது. அதை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் போதும். (மற்ற பிரச்சனைகள் தானாக மறையும்). எப்படி என்று கேட்கிறீர்களா? உங்களுக்குத் தானே முழுதாக உங்களைப் பற்றி தெரியும்? நம்மையே நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. பிறரை மாற்ற எப்படி முடியும்? கொஞ்சம் சிந்தியுங்கள்.
தொணதொணக்கும் மாமியார்தான். ஆனால் கொடுமைக்காரர் அல்ல. அவர் உங்களை நம்பி இருக்கிறார். நீங்கள் அவரிடம் இல்லையே. அப்போது, who is in control? டி.வி. ஓடிக் கொண்டே இருக்கும். பேசிக்கொண்டே சிலர் இருப்பார்கள். நாம் கவனம் செலுத்தாமல் நம் வேலையைச் செய்கிறோம் தானே. அதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மறக்காதீர்கள், உங்கள் மௌன நேரத்தை.
இந்தப் பகுதியில் நீங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி விட்டீர்கள். பதில்கூட எதிர்பார்க்க வில்லை என்று நினைக்கிறேன். பாருங்கள், எல்லாம் பழகிப்போகும்.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|