|
|
அன்புள்ள சிநேகிதியே,
எனக்கு வயது 72 ஆகிறது. என் மனைவிக்கு 69. என் ஒரே பையன் இங்கே இருக்கிறான். அவனைப் பார்க்க அமெரிக்காவுக்கு வந்தோம். தங்கியிருக்கிறோம். அவனுக்குக் கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிறது. நல்ல குடும்பத்துப் பெண். தெரிந்தவர்கள் ஜாதகம் பார்த்து ஒருவருக்கு ஒருவர் இஷ்டப்பட்டுத்தான் கல்யாணம் செய்தோம். அவளும் படித்தவள். என் பையனைவிடச் சற்று உயர்வுதான். இல்லையென்று சொல்லவில்லை. அவளுடைய அப்பா, அம்மா போன வருடம் இங்கே வந்துவிட்டுத் திரும்பியபோது எங்களிடம் சரியாகப் பேசவில்லை. உங்கள் 'பையன் போக்கு சரியில்லை. என் பெண் கஷ்டப்படுகிறாள். இது எங்கே கொண்டு முடியுமோ...' என்று ஒரு வார்த்தை சொன்னார்கள். நாங்கள் இவனை விசாரித்தோம். 'அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் என்ன குடிக்கிறேனா? வேறு யார் பின்னாலாவது சுற்றுகிறேனா? கொஞ்சம் வாக்குவாதம். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்' என்று சொன்னதால் மனது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவ்வப்போது ஏதேனும் மின்னஞ்சல்களுக்கு அவனும் பதில் அனுப்பியதால் பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நினைத்துதான் வயது முடியாவிட்டாலும் பையன், மருமகள்--குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டா என்ற நப்பாசை வேறு--இவர்களுடன் இருக்க இங்கு வந்தோம்.
ஆனால் இங்கே நிலைமை வேறாக இருக்கிறது. அவனுக்கும், அவளுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. மருமகள் எங்களுடன் சகஜமாகப் பேசுகிறாள். எல்லா இடத்திற்கும் கூட்டிக் கொண்டு போகிறாள். ஆனால், அவன் இருந்தால் அவள் கூட வருவதில்லை. இதற்கிடையில் இரண்டு பேரும் அவர்கள் அலுவலக விஷயமாக அவரவர் தங்கள் போக்கில் கிளம்பிப் போய்விடுகிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் என்ன பிரச்சினை என்று கேட்டுப் பார்த்தேன். அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. 'சின்னவர்கள் பிரச்னையைப் பற்றி இந்தக் கிழவனுக்கு என்ன தெரியும்' என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அந்தப் பெண்ணிடம் கேட்டால் 'உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் உங்கள் பையன் நடவடிக்கை கள் சரியில்லை. இது உங்கள் காலமும் இல்லை. இங்கே உங்கள் கலாசாரமும் இல்லை. அவனுடைய போக்கை மாற்ற முடியாது. நீங்கள் இதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். நாங்கள் எடுக்க வேண்டிய முடிவு' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள். அவனைத் தனியாகக் கூப்பிட்டுக் கேட்டால் 'அவளுக்கு வாய் ஜாஸ்தி. பெரிய வேலையில் இருக்கிறோம் என்ற கர்வம். அவளை வழிக்குக் கொண்டுவந்து விடுகிறேன். நீங்கள் எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள்' என்று சொல்லிவிட்டான்.
எனக்கும், என் மனைவிக்கும் ஒருநாள் போவது ஒரு யுகமாக இருக்கிறது. நான் படித்து, நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்றவன்தான். என் அனுபவத்தை வைத்துக் கொண்டு இவர்களுக்கு ஏதேனும் புத்தி சொல்லலாம் என்றால், முடியவில்லை. என் பையன் கொஞ்சம் முன்கோபி. ஆனால் தப்புத்தண்டா எதுவும் செய்கிறவன் இல்லை. நானும் அந்தக் காலத்தில் கோபக்காரனாகத்தான் இருந்திருக்கிறேன். ஆனால் என் மனைவி எதையும் அனுசரித்துச் செல்லும் சுபாவம் கொண்டவள். இப்போது எனக்குக் கோபம் வருவதில்லை. அவளுக்குக் கொஞ்சம் வருகிறது. எங்கள் மருமகள் நல்ல புத்திசாலித்தனமான பெண்; எங்களுக்குப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்கிறாள். ஆனால் அவர்களுக்குள் பெரிய திரை. எப்படி ஒன்று சேர்ப்பது என்று தெரியாமல் குழம்பித் தவிக்கிறோம். அவர்களுடன் உங்களால் பேசிப் பார்க்க முடியுமா? இல்லை, எனக்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? இதோ இன்னும் மூன்று வாரத்தில் கிளம்ப வேண்டி இருக்கிறது. அதைத் தள்ளிப் போடலாமா என்று நினைக்கிறேன்.
இப்படிக்கு ......... |
|
அன்புள்ள சிநேகிதரே/பெரியவரே...
படிப்புக்கும், தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்து பெண்கள் சமூகப்படியில் முன்னேறும் போது, உறவுகளில் அவர்கள் எதிர்பார்ப்பது சமத்துவமும், சம உரிமையும். விட்டுக் கொடுப்பதைவிட, விடாமல் பிடிப்பதை அவர்கள் ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறார்கள். அந்த மனப்பான்மையும், மனஉறுதியும் இன்றைய பெண்களுக்கு இருப்பது நல்லது.
அதேசமயம், அந்தத் திறமையை எதற்குப் பயன்படுத்திக் கொள்வது என்பதில்தான் அவர்களுக்குச் சிறிது direction இல்லையோ என்று நான் நினைக்கிறேன். உறவுகளை எப்படி பலப்படுத்துவது, அந்த உறவு நூல்கள் விழும்போது, எப்படி விடாமல் பிடிப்பது என்ற நுண்கலையைக் கற்றுக் கொடுக்கத் தனிப் பயிற்சி மையங்கள் பல இல்லை. இருந்தாலும், எந்த வகையில் ஒவ்வொரு குடும்ப மையத்தின் வாழ்முறைக்கும், குணாதிசயங்களுக்கும் ஏற்ப நெறிமுறைகள் சொல்லிக் கொடுக்கப்படும் என்று தெரியவில்லை.
ஏன் இப்படி எழுதிக் கொண்டே போகிறேன் என்றால், எனக்கும் உங்களைப் போல் ஒரே குழப்பமாக இருக்கிறது. மாதம் ஒரு செய்தியாவது மின்னஞ்சல், தொலைபேசியில் இளம் சமுதாயத்தினர், புதிதாகத் திருமணம் ஆனவர்களின் இடையில் இருக்கும் உறவு முறைகளைப் பற்றியும், கருத்து முரண்பாடு களைப் பற்றியும் தான் கேள்வி எழுப்பிப் பரிகாரம் கேட்கப்படுகிறது.
நீங்கள் எழுதியிருப்பது போல் பல இளவயதினர் பெரியவர்களின் தலையீட்டை விரும்புவதில்லை. யார், யாரை நோக அடித்திருக்கிறார்கள் என்பது, நமக்கு முழு விவரம் தெரிந்தாலும், வரையறை செய்ய முடியாது. இது 'individual perception'. ஆனால் ஒன்று, உறவு முறியும்வரை மணவாழ்க்கை சென்றிருந்தால்--அங்கே தொடர்ந்து சம்பவங்களின் கோர்வைக்கு அடிதளத்தில் இரண்டு மனங்கள் சுருங்கி, அடிபட்டு, அவமானப்பட்டு இருக்கும். நாம் (அதாவது நெருங்கிய உறவினர்) யாருக்கு ஆதரவு கொடுத்தாலும், மற்றவர் வார்த்தையைக் கக்குவார்கள். 'என்னால் பேசிப் பார்க்க முடியுமா' என்ற கேள்விக்கு பதில் 'என்னால் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மையை' ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம். காரணங்கள்:
நான் உங்களால் பரிந்துரைக்கப்பட்டவள். அது உங்களுடைய தலையீட்டுக்குச் சமம்.
என்னை எழுத்து மூலமாக அவர்களுக்குத் தெரியுமா? நான் அவர்களுடைய மதிப்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கிறேனோ? தெரியாது.
நாமே வலுவில் சென்று எடுத்துச் சொல்லும் எந்த ஆலோசனையும் எந்தப் பயனும் அளிக்காது.
கருத்து முரண்பாடுகள் இருக்கும் எல்லோரும் விவாகத்தை ரத்து செய்யும் அளவுக்குப் போவதில்லை. There is a problem of attitude. உங்கள் மகன் 'நான் அவளை வழிக்குக் கொண்டு வருகிறேன்' என்ற வார்த்தையே பல பெண்களுக்கு, ஆண்களின் ஏகாதிபத்தியத்தை உணர்த்துவதாகத் தோன்றும். வாக்கியங்களை எப்படிப் பிரயோகப்படுத்தினாலும், அதன் பொருளை உள்மனது எப்படி வாங்கிக் கொள்ளுகிறது என்பதில்தான் இருக்கிறது. சில சமயம் பிறர் சொல்வது 'சுருக்'கென்று மனதில் 'தை'க்கும். நாம் உடனே 'வெடு'க்கென்று ஒன்று சொல்வோம்; மறுபடி ஒரு 'சுருக்', ஒரு 'வெடுக்'. இப்படி உள்மனக் காயங்கள்.
ஒரு கண்ணாடி டம்ளர் கைதவறி விழுகிறது. ஆயிரம் சிதறல்கள். எவ்வளவு அவசரம், வேதனை இருந்தாலும் பொறுத்துக் கொண்டு மிக மிக ஜாக்கிரதையாகத் துகள்களை அகற்றுகிறோம். எங்கே ஒரு துகள் கையில், காலில் ஏறிவிடுமோ என்ற பயத்தில் பலமுறை சுத்தம் செய்கிறோம். 'டம்ளர்' மேலே கோபம் இல்லை. மறுபடியும் கண்ணாடி டம்ளர்களைத்தான் உபயோகிக்கிறோம். இன்னும் கொஞ்சம் கவனமாக அவற்றைக் கையாள் கிறோம். உடையும் இடங்களைத் தவிர்க்கிறோம். உடலுக்கு வேதனை கொடுக்கும் என்ற உணர்வில் நாம் பல இடங்களில் பாதுகாப்புடன் இருக்கும் போது, மனதுக்கு வேதனை தரக்கூடியது என்று தெரிந்தும் ஏன் விட்டுக்கொடுக்கத் தயங்குகிறோம்?
ஒரு விருந்தில் ஒருவர் அந்த வீட்டு அம்மாளிடம் ஏதோ விசாரித்துக் கொண்டு வந்தார். அந்தப் பெண்மணி சரியாக கவனம் செலுத்தவில்லை. மறுபடியும் அந்த நபர் அதே கேள்வியைக் கேட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த கணவர் எரிச்சலடைந்து, 'ஏய் எருமைமாடு. அவுங்க சொல்றது காதுல கேக்கல?' என்று சொன்னார். மனைவிக்கு 'சுருக்'கென்று தைத்தது. மறுகணமே சுதாரித்துக் கொண்டு, 'ஆமா. நேத்து ராத்திரி என்னருமை கன்னுக் குட்டின்னு' கொஞ்சினாரு. ஒரு நாள்லே நான் வளர்ந்து பெரிய எருமைக் கடாவாயிட்டேனாக்கும்' என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர். கொஞ்சம் டென்ஷன் அங்கே குறைந்தது. நகைச்சுவை உணர்ச்சி தாம்பத்தியத்தை அழகாக வளர்க்கும். ஆனால் அது இருவருக்கும் இருக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் இந்தியப் பயணத்தை தள்ளிப் போடாதீர்கள். உங்கள் மகன், மருமகள் இருவரும் படித்தவர்கள். திறமை கொண்டவர்கள். ஒரு காலகட்டத்தில் யாரேனும் ஒருவர் மனம் தளர்ந்து, மனம் திறந்து, விட்டுக்கொடுத்து மீண்டும் ஒன்றாக இணைய வாய்ப்புகள் ஏராளம். Help? என்ற குறியோடு இருங்கள். 'Pop-ups' பயன் தராது.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|