|
|
அன்புள்ள சிநேகிதியே
எங்களுக்கு ஒரே மகன். மேல்படிப்புக்காக வந்தவன் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இரண்டு குழந்தைகள். நானும், என் மனைவியும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சில மாதங்கள் வந்து இருந்துவிட்டுத் திரும்புவோம். இப்போது கிரீன்கார்டு வாங்கிக் கொடுத்துத் தன்னுடன் நிரந்தரமாக நாங்கள் இருக்க வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து விட்டான் பிள்ளை.
நாங்கள் இங்கு வந்து 6 மாதங்கள் ஆகிவிட்டன. மருமகள் நல்ல மாதிரிதான். ஆனால், இந்த ஊர்ப் பெண்களைப் போல் தன் சுதந்திரத்திற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது என்று நினைப்பவள். என் மனைவி மிகவும் பாசம் கொண்டவள். எல்லோரையும் விழுந்து, விழுந்து உபசரிக்கும் குணம்.
எங்கள் செளகரியத்திற்காக, மகன் அவர்களுடைய வீட்டை ஒட்டி ஒரு சிறிய வீடு கட்டி, பூஜையறை உட்பட எல்லாம் செய்து கொடுத்திருக்கிறான். ஆனால், என் மனைவிக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை. தனிமையை அதிகம் உணருகிறாள். மருமகள் வேலைக்குப் போய்விடுகிறாள். பேரனும், பேத்தியும் இப்போது பெரியவர் களாகிவிட்டதால் (14, 13) பள்ளிக்கூடம், விளையாட்டு என்று எப்போதும் வேலையாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் முன்னால் இருக்கிறார்கள். பாட்டியுடன் தான் நேரத்தைக் கழிக்க முடிவதில்லை. 'ஹை!' என்று சொல்லிவிட்டுத் தங்கள் அறைக்குள் போய் அடைந்து கொள் கிறார்கள். இவள் ஆசை, ஆசையாகச் செய்து எடுத்துக்கொண்டு போகும் தின்பண்டங்கள் சீந்துவாரற்றுக் கிடக்கும்.
பிள்ளையின் குடும்பத்துடன் ஒன்றாக இருந்து காலத்தைக் கழிக்கப் போகிறோம் என்ற கனவுடன் வந்தவளுக்கு இந்த இடம் நரகமாகத் தெரிகிறது. பையனைப் பார்ப்பதும் அரிதாக இருக்கிறது. அவனுக்கு உயர்ந்த வேலை. இரவு 10 மணிக்கு மேல்தான் வருகிறான். ஒரு வார இறுதி என்று வந்தால் குழந்தைகள் விருப்பப்பட்ட இடத்திற்குப் போகிறார்கள். ஒரு தடவை அவர்களுடன் போனோம். அந்தக் குளிரும், சாப்பாடும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களும் அதற்குப் பிறகு கூப்பிடவும் இல்லை. ஏதேனும் மருத்துவரைப் பார்ப்பதானால் மருமகள் அழைத்துக் கொண்டு போகிறாள். பையன் பக்கத்து வீட்டிலிருந்து, தொலைபேசியிலேயே விசாரித்து விடுவான்.
முன்பெல்லாம் நாங்கள் வந்த போது என் மகன் விடுமுறை எடுத்து வந்து எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்றான். அவன் மனைவியும் அவ்வப்போது எங்களுக்கு என்ன தேவை என்று கேட்டு வாங்கிப் போடுவாள். குழந்தைகளும் நாங்கள் சொல்லும் கதைகளை, கண்கொட்டாமல் ஆர்வத்துடன் கேட்பார்கள். இப்போது எல்லாமே மாறிவிட்டது. இந்தியாவில் எங்களுக்கு உறவினர் அதிகம் இல்லை. எங்கள் உலகமே இந்த மகன் தான். என் மனைவி தினமும் கண்ணீர் விடும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கே நம்மவர்கள் யாரும் அதிகம் கண்ணில் தென்படவில்லை. இந்தியா விற்குத் திரும்பினாலும் முதியோர் இல்லத்தில் தான் இருக்க வேண்டும். என்ன செய்வதென்றே புரியவில்லை. யாரையும் குறை சொல்லவில்லை.
இப்படிக்கு... |
|
அன்புள்ள சிநேகிதரே/பெரியவரே...
விருந்தினருக்கும், வீட்டு மனிதருக்கும் உள்ள வித்தியாசத்தைத்தான் நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். தன்னைப் பாசத்துடன் பேணி வளர்த்த பெற்றோரைத் தனியாக விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் உங்கள் மகன் உங்களை இங்கே வரவழைத்திருக்கிறார். அதற்கு அவர் மனைவியும் இசைந்திருக்கிறார். நிறையக் குடும்பங்களில் இது போன்று நடப்பதில்லை. நீங்கள் சொல்வது போல் யாரிடமும் குறை கண்டுபிடிக்க முடியாது.
தனிமை என்பது உணர்வில் இருக்கக் கூடாது. வீட்டு மனிதர்களாக நீங்கள் இங்கே வந்து இருக்கும் போது, அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இயந்திரகதியில் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அதனால் பாசம் குறைந்துவிட்டது என்று நினைக்க முடியாது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான், கடந்த 15-20 வருடங்களாக உங்கள் மகனை பார்க்க முடிந்தது. ஆனாலும் பெற்றோர் - பிள்ளை பந்தம் உறுதியாக இருந்த உணர்வு தானே உங்களுக்கு இருந்தது. அதனால், தனிமையை உணராமல் இருந்தீர்கள்.
வந்து சில மாதம்தானே ஆகிறது. கொஞ்சம், கொஞ்சமாக வெளியுலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டிய நிர்ப்பந்தங்கள் வந்து சேரும். இனிய இந்தியக் குடும்பங்களை எங்கேயாவது சந்திக்க நேரும். பக்கத்து ஊர்களில் கச்சேரி, நாட்டியம், வழிபாட்டுக்குழு என்று ஏதாவது நடப்பது தெரியவரும். கொஞ்சம் வெறுமை விலகும்.
நீங்கள் இருவரும் ஒரு அருமையான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். 'வானப் பிரஸ்த' நிலை. ஒருவர் துணையுடன், மற்றவர் தங்களை முழுமையாக உணரும் காலம். பிரச்சினைகள் அதிகம் இல்லை. சிறிது மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டால், மகன், மருமகள், பேரக் குழந்தைகளைப் பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி, சந்தோஷப்பட்டு தனிமையை உணராமல் இருக்கலாம். பாசத்தைப் பொழியும் உங்கள் மனைவிக்கு தொடாமல், தொடராமல் உறவுகளை அனுபவிக்கும் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்வது முதலில் சிறிது சிரமமாகத்தான் இருக்கும். ஆனால், பக்கத்தில் பக்கபலமாக, ஆதரவாக நீங்கள் இருந்து, ஒருவருக்கொருவர் அன்னி யோன்னியத்தை வளர்த்துக் கொள்ளும் போது, இந்தக் கருத்தை அவர் புரிந்து கொள்ளுவார். இந்தியா திரும்ப வேண்டுமா?
வாழ்த்துக்கள்
இப்படிக்கு சித்ரா வைத்தீஸ்வரன்
சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|