|
|
|
அன்புள்ள சிநேகிதியே, (12 வருடங்களுக்குப் பிறகு தொடர்புகொண்டார் ஒரு வாசகி. அதைப்பற்றிப் பகிர்ந்துகொள்கிறேன்) இரண்டு தினங்களுக்கு முன்னால் தொலைபேசியில் ஒரு வாய்ஸ் மெயில். எனக்கு அந்த எண்ணைப் பார்த்து யார் என்று புரிபடவில்லை. வாய்ஸ் மெயில், ".... பேசுகிறேன். உங்களுடன் தொடர்புகொள்ள மிகவும் டெஸ்பெரேட் ஆக இருக்கிறேன். ரொம்ப முயற்சி செய்து உங்கள் நம்பரை கண்டுபிடித்தேன். கண்டிப்பாக உங்களுடன் பேசவேண்டும். உங்கள் குரலைக் கேட்க வேண்டும்." அந்தக் குரல், அந்தப் பெயர் அடையாளம் காட்டியபின் எனக்குப் புரிந்தது. பிறகு அவள் என்னிடம் தொடர்பு கொண்டாள்.
12 வருடங்களுக்கு முன்பு அவள் இங்கே மேற்படிப்புக்காக வந்தாள். திருமணமாகி இரண்டு வருடங்கள் இருக்கும். கணவருக்கும் இவளுக்கும் இடையில் ஒரு திடீர் பிளவு. "நான் இவனைவிட்டுப் பிரிந்துவிடப் போகிறேன். எனக்கென்று தொழில் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. இவனை நம்பி நான் இங்கே வரவில்லை" என்று என்னிடம் கொட்டித் தீர்த்தாள். கணவனிடமும் நான் பேசினேன். அவன் தனது குமுறலை வெளியிட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு வந்து இருவரும் திரும்ப ஒன்றாக வாழ இசைந்தார்கள். அவள் பட்டப்படிப்பு முடித்தவுடன் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிவிட்டார்கள்.
என்னிடம் மிகவும் பாசமாக இருப்பாள். வருடத்திற்கு ஒருமுறை ஃபோன் செய்வாள். அப்புறம் என் குடும்ப, சமூக, கமிட்மென்ட்களால் தொடர்பு விட்டுப் போய்விட்டது.
பல வருடங்களுக்குப் பிறகு அந்த வாய்ஸ் மெயிலில் என்னால் எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை. மறுபடியும் ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என்று யோசித்தேன்.
ஆனால், அவள் மீண்டும் நேற்று என்னுடன் பேசியபோது அந்த உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. 9 வயது, 6 வயதில் இரு குழந்தைகள். கணவர் மிக மிக அன்பு, பொறுப்பு, அக்கறை. மற்ற உறவுகள் (கணவரைச் சேர்ந்த, சகோதரர்களைச் சேர்ந்த) எல்லாமே மிகவும் இனிமை. பெரிய வீடு வாங்கி கடனும் கட்டி முடித்தாகிவிட்டது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். குழந்தைகளை அறிமுகம் செய்துவைத்தாள். 12 வருடங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட நிலையிலிருந்து தான் evolve ஆகியிருப்பதை விளக்கிச் சொன்னாள்.
இது ஒரு நல்ல Case Study. தென்றல் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியம் நன்றாக இருந்து, அழகாக உறவுகள் மலரட்டும், பெருகட்டும். மற்ற சுகங்கள் தொடரட்டும். |
|
|
|
|
|
|
|
|
|