|
|
|
அன்புள்ள சிநேகிதியே
வணக்கம். என் வயது 39. என் கணவரின் வயது 42. திருமணமாகி 12 வருடங்கள். திருமணம் ஆனபோது உடனே கர்ப்பமானேன். அவர் 6 வார லீவில் இந்தியா வந்திருந்தார். போகும்போது, அதுவும் அமெரிக்காவில் எல்லாம் புதிது, எப்படிச் சமாளிப்பது என்று பயந்து, இங்கே வருவதற்கு முன்பே கருவைக் கலைத்துவிட்டேன். அப்புறம் மேல்படிப்பு, வேலை என்று மிகவும் கவனமாக இருந்து, மூன்று வருடங்களாகத்தான் குழந்தையை வரவேற்கத் தயாரானோம். ஆனால், அதற்கு அதிர்ஷ்டமில்லை. சமீபத்தில், ஏன், தத்தெடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. என்னுடன் பணிசெய்யும் சிலர் என்னை ஊக்குவித்தனர்.
இந்த வயதுக்குமேல் சிகிச்சை எடுத்துக்கொண்டு, அப்புறம் ஆரோக்யமான குழந்தையைப் பெற்றெடுக்கும்வரை பயந்து, எதற்கு என்று தோன்றியது. தத்தெடுப்பதைப்பற்றி சீரியஸாக நினைக்கத் தொடங்கிய சமயத்தில், வீட்டுக்கு வந்து தங்கிய உறவினர் ஒருவர் எங்கள் மனதைக் கலைத்துவிட்டுப் போய்விட்டார். எப்படிப் பாசம் இல்லாமல் குழந்தை தன்னைப் பெற்ற தாய், தந்தையைப் பார்க்க ஆரம்பித்துவிடும்; அனாதையில்லத்தில் இருந்து எடுத்து வளர்த்தால், அதன் மரபணுக்கள் எப்படியிருக்குமோ என்றெல்லாம் மனதில் சந்தேகத்தை விதைத்துவிட்டுப் போய்விட்டார். எங்களுக்கு நல்லது செய்கிறேன் என்கிற நோக்கத்தில்தான். மறுபடியும் நமக்கே பிறந்த குழந்தையாக இருந்தால் நன்றாகத்தானே இருக்கும், அப்படி ஒன்றும் வயதாகவில்லையே என்று நினைக்க ஆரம்பித்தேன். நான் மாற்றி, மாற்றி யோசிப்பதால் எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வருகிறது. எங்களைப் போன்றிருந்த நண்பர்கள் எல்லாருக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்தாகிவிட்டது. பார்ட்டியில் எல்லோரும் தங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசுவதுபோல எனக்குத் தோன்றுகிறது. சிலசமயம் 'குழந்தை வேண்டும் என்கிற வெறி' தோன்றுகிறது. அப்புறம் என்னையே சமாதானம் செய்து கொள்கிறேன். டிப்ரெஷன் வந்துவிடுகிறது.
உங்கள் அனுபவத்தில், குழந்தையைத் தத்தெடுப்பது நல்லதா, இல்லை இன்னும் கொஞ்சநாள் பொறுத்துப் பார்க்கலாமா? எது நல்லது என்று சொல்லமுடியுமா? சிறுவயதில் குழந்தைகளிடம் நான் அவ்வளவு ஒட்டுதலோடு இருந்ததில்லை. கல்யாணம் ஆகி 7-8 வருடம் கூட அதிகம் கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் பழகிவந்த குடும்பங்களின் Priorities மாறிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் வந்துவிட்டது. இரண்டு பேரும் புரொஃபஷனல்ஸ். நன்றாக முன்னுக்கு வந்துவிட்டோம். ஆனால், இப்போது ஒரு வெற்றிடம். நான் ஒரு வலுவான முடிவை எடுக்க உதவியாக ஆலோசனை ஒன்று கூறுங்கள்.
இப்படிக்கு ................... |
|
அன்புள்ள சிநேகிதியே...
எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. மிகமிகக் கடினம். This is a personal decision. உங்களுக்கு இரண்டு வழியும் தெரிகிறது. எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் சவால்கள் இருக்கத்தான் செய்யும். குழப்பம் பயத்தை அதிகரிக்கிறது. பயமும் குழப்பத்தை அதிகரிக்கிறது. எந்த முடிவு எடுத்தாலும், நான் 'பெற்றெடுத்தேன்' எனக்கே உரிமை என்ற நினைப்போ, இல்லை 'நான் வளர்த்தேன். என்னிடம்தான் பாசம் காட்டவேண்டும்' என்ற எதிர்பார்ப்போ இல்லாமல், ஒரு குழந்தைக்குப் பாசம், பாதுகாப்புக் கொடுத்து அவனை/அவளை வளரவிடுங்கள். வளர்க்காதீர்கள். குழந்தை வளர்ப்பைப்பற்றி நான் ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை இந்தப் பகுதியில் எழுதிவிட்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு என் வாழ்த்துக்கள்.
நீங்கள் நல்ல தாயாக இருப்பீர்கள்.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|