|
|
|
அன்புள்ள சிநேகிதியே:
'குழந்தை வளர்ப்பில் குழந்தைகள்போல் சண்டை போடும் பெற்றோர்கள்' என்பதுபற்றி இந்தத் தென்றல் இதழில் என் கருத்துக்களை எழுதுவதாகச் சொல்லியிருந்தேன்.
இப்போதெல்லாம் கட்டாயத் திருமணம் அதிகமில்லை. காதல் திருமணங்கள்தான் பெரும்பாலும். கல்வியும் தொழிலும் இருவருக்கும் சமமாக அமைய, தன்னம்பிக்கையும் தனிமனித சுதந்திரமும் எதிர்காலத்தைத் தங்கள் வழியில் உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற மனப்பாங்கைக் கொடுக்கிறது. நண்பர்கள்போல் வாக்குவாதம் செய்துகொண்டு, கேலி செய்துகொண்டு அருமையாகத்தான் ஒருமித்து வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். காதல் குறைவதில்லை. குடும்பத்தில் மூன்றாவது முக்கியமான நபர் வருகையையும் தீர்மானம் செய்கிறார்கள். இன்பமும், எதிர்பார்ப்பும் கூடுகிறது. அந்த நல்லசெய்தி தெரிந்ததும், பாசம் இன்னும் பெருகுகிறது. தங்கள் வாரிசைச் சுமந்துகொண்டிருக்கும் மனைவி ஒரு பெருமூச்சு விட்டாலே, கணவன் அதிர்ந்துபோகும் அளவுக்கு அக்கறைப்படுகிறான். இன்பம், ஆர்வம், இனந்தெரியாத பயம். அந்த நாள் நெருங்கி நெருங்கி ஒருவழியாக சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி உதயம் - அந்த உயிர்.
உயிரின் உணர்வாய் அந்த அழுகை. பிஞ்சுக்கைகள்; பிஞ்சுக்கால்கள். உடல் நெளிகிறது. மனதுக்குள் ஏற்படும் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் விவரிக்க முடிவதில்லை. உள்ளே குழைந்து கிடந்த பாரங்கள் விலகி, மனம் லேசாகிறது. ஆனந்தக்கண்ணீர். என் உயிர், என் உடல், என் உதிரத்தின் பங்கு. என் வாரிசு, என் பெயரை நிலைநாட்டப் பிறந்தவன்(ள்). முற்றிலும் புதிய அனுபவம். இன்பம், பெருமை, பயம். உடலிலுள்ள ஒவ்வோர் அணுவும், ஒவ்வொரு நொடியும், அந்தப் புதியநபரைப் பற்றித்தான் சதா ஒரு anxiety. பக்கத்தில் பெற்றோர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டாலும், 'அது அவர்கள் காலம்' என்று மனம் எதையும் நம்பமறுக்கிறது.
தும்மினால் Google, இருமினால் E.R! மனைவி தாயாக மாறும்போது, கணவன் முதலில் மிகவும் ஒத்துழைக்கிறான். தன் குஞ்சின் பாதுகாப்பை நினைத்து அவனும் பயந்துகொண்டு இயல்புக்குமாறாக நிறைய உதவுகிறான். எத்தனை 'parenting classes' ஒன்றாகப் போய்விட்டு வந்தாலும், நல்ல தூக்கத்தில் குழந்தை அழுதால் மனம் முரண்டுபிடிக்கிறது. நல்ல கேம் பார்க்கும்போது, நனைந்த குழந்தையை மாற்றப் பிடிப்பதில்லை. இப்படிச் சில்லறை விஷயங்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. வயது ஆக, ஆகப் பொறுப்புகள் பெரிதாகிக்கொண்டே போகின்றன. குழந்தை சிரிக்கும்போது, விளையாடும்போது என்ன ஆனந்தம்! பசியில் அலறும்போதோ, அடிபட்டு வலியில் துடிக்கும்போதோ எவ்வளவு சகிப்புத்தன்மை வேண்டியிருக்கிறது! "முன்பெல்லாம் 'வெளியில் போய்ச் சாப்பிட்டு வரலாம்' என்றால் ஐந்து நிமிடத்தில் ஆர்வத்துடன் கூடவரும் மனைவி, இப்போது எல்லாவற்றிற்கும் சுணங்குகிறாள்" - இது கணவனின் புலம்பல். "வீட்டுக்கு வந்தவுடன், நாள்முழுவதும் குழந்தையுடன் நான் போராடிக் கொண்டிருக்க, அதைப்பற்றிக் கண்டுகொள்ளாமல், ஒரு கையில் ரிமோட், இன்னொரு கையில் சாப்பாட்டுத் தட்டுடன் T.V. முன்னால் நேரத்தைக் கழிக்கிறான்" - இது மனைவியின் குறை.
குழந்தைகள் வளர, வளரப் பொறுப்புகள் இருவருக்கும் பிரம்மாண்டமாகத் தெரிய ஆரம்பிக்கிறது. தொழிலில் ஏற்படும் நிர்ப்பந்தங்கள், உடலில் ஏற்படும் அலுப்பு, உறவுகளில் ஏற்படும் மனச்சோர்வு எல்லாம் சேர்ந்து பளுவை இறக்கிவைக்கத் தெரியாத இயலாமையில் இருவரும் தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபடுகிறார்கள். இருவருமே குழந்தைமேல் அளவுக்குமீறிய பாசமும், அக்கறையும் செலுத்துகிறார்கள். இருந்தாலும் குழந்தையின் வழியாக அவர்கள் உலகத்தைப் பார்க்கும்விதம் மாறுபட்டு வரும்போது, நிறைய விரிசல்கள். ஒரு குழந்தை தன் வரவால் தாய்க்கும் தந்தைக்கும் நடுவே இடைவெளியை ஏற்படுத்துகிறதா அல்லது அன்னியோன்னியத்தை வளர்க்கிறதா என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவுக்கு அவர்களுக்குள் கருத்தொற்றுமை விதவிதமாக வளருவதை நான் கண்டிருக்கிறேன். 'குழந்தை பிறந்தபிறகும் அவர் மாறவில்லை' என்று மனைவி குறைசொல்ல, "குழந்தை பிறந்த பிறகு, அவள் பெரிதாக மாறி விட்டாள், She is totally a different person, என்னைக் கண்டுகொள்வதே இல்லை" என்று கணவன் புகார்சொல்ல, எனக்கு ஒன்று புரிந்தது. சில குடும்பங்களில் குழந்தையே உலகமாகிவிடுகிறது ஒரு தாய்க்கு. தன்னையும், தன் மனைவியையுமே உலகமாகக் கருதிய கணவன், தந்தையாகும்போது குழந்தையையும் சேர்த்துக்கொள்கிறான். அந்தத் தந்தையின் உலகத்தில் 3 பேர். எப்போது குழந்தை வளர்ப்பு என்பது ஒரு ஆர்வமாகத் தெரியாமல், கடமையாகத் தெரிகிறதோ, அந்தக் கடமை எப்போது சுமையாகத் தெரிகிறதோ, அங்கே துளிர்க்கின்றன 'என்', 'உன்' என்ற சொற்கள். |
|
"என்னை நம்புவதில்லை அவள். நான் எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கிறாள். டயப்பரைச் சரியாக மாற்றத் தெரியவில்லை என்று கேலிசெய்கிறாள். இவளுக்கு, ஒரு கார் டயரை மாற்றத்தெரியுமா என்று கேட்டுப்பாருங்கள். அவரவருக்குத் திறமையுள்ள வேலைகளைத்தான் நன்றாகச் செய்யமுடியும். அதற்காக நான் முற்றிலும் பெண்ணாக மாறமுடியுமா என்ன?" என்று என் பக்கமே பார்த்துக்கொண்டு பதில் சொன்னார் ஒரு கணவர். இதுபோன்ற வாதங்கள் முற்றி, ஒருவர் குடும்பத்தை, குலத்தை, கலாசாரத்தை மற்றவர் இழிவாகப் பேசி, குத்திக்குதறி, விபரீத விளைவுகளுக்குப் போய்விடும் நிலைமையும் சில குடும்பங்களுக்கு வந்து, பிரிந்தும் போய்விட்டிருக்கிறார்கள். மிகவும் வருத்தமான நிலை.
பெயர் வைப்பதில் ஆரம்பிக்கிறது இந்த வாதம். முதல் குழந்தையாக இருந்தால், பெண்கள் இந்த விஷயத்தில் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடுகிறார்கள் (இது என்னுடைய அனுபவம்). கொஞ்சம், கொஞ்சமாக அந்த வெற்றியால் அந்தக் குழந்தையுடன் நிறைய நேரம் செலுத்திய உரிமையால், எது நல்லது, எது கெட்டது என்று தாய் தீர்மானித்துவிடுகிறாள். இது பொதுவாக நடப்பதுதான். இருந்தாலும், குழந்தையை மையமாக வைத்து தன் நடத்தையை அடக்கி ஆள்கிறாள்; அன்பு மறைந்து போய்விட்டது; ஆதிக்கம் அதிகமாகிறது என்று கணவன் நினைக்க ஆரம்பிக்கும்போது, பிரச்சனைகள் கிளம்புகின்றன. குழந்தை வளர, வளர விரிசல்களும் அதிகம். அந்த 5-6 வயது குழந்தையை நீதிபதி நாற்காலியில் வைத்து, தங்கள் புகார்களைச் சொல்லி நியாயம் கேட்கும் பெற்றோர், குழந்தையைத் தூதுவராக்கி ரகசியம் அறிந்துவரச் சொல்லும் பெற்றோர், கோபித்துக்கொண்டு பேசாமல் குழந்தைகளைச் செய்தியாளர்களாக உபயோகப்படுத்தியவர்கள் என்று பட்டியல் விரிந்துகொண்டே போகிறது.
மொத்தத்தில் குழந்தைகளை ஆதாரமாக வைத்துத்தான் வாழ்க்கையின் பயணத்திட்டத்தை நிறையப் பேர் போடுகிறோம். இந்தப் பயணத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இருக்கின்றன:
1. ஓர் இலக்கை நோக்கித்தான் போய்க் கொண்டிருப்போம். ஆனால், அந்த இலக்கை அடையமுடியுமா என்பது நம்முடைய தயார்நிலையையும், சகிப்புத்தன்மையையும் பொறுத்தது. 2. இதுபோன்ற பாதையில் பலர் போவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் பாதை நம் இருவருக்கும் புதிது. நமக்கு மட்டுந்தான் சொந்தம். 3. பாதை நேராக இருப்பதுபோலத் தோன்றும். திடீரென்று குறுகும், வளையும். அதற்கேற்றாற்போல வேகத்தை அனுசரிக்க வேண்டும். 4. எந்த சிக்னலும் இருக்காது. இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் மாறாது. பச்சை, பச்சையாகவே இருக்கலாம். சிகப்பு மறையாமல் பயமுறுத்தலாம். 5. பயணம் செய்பவர்கள் மூன்றுக்குமேல் இருந்தாலும் ஓட்டுநர் உரிமை முதல்பாகப் பயணத்தில் நம் இருவருக்கு மட்டுந்தான் உண்டு. எப்படி ஓட்டுவது என்ற அறிவுரையைப் பிறர் கொடுக்கமுடியுமே தவிர, நம் இடத்தில் உட்காரமுடியாது.
பொதுவில், இந்தப் பயணம் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க என்னுடைய கருத்துக்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமா? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். குழந்தை வளரட்டும். Stay tuned.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|
|