|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே,
அவசரமாக உங்கள் ஆலோசனை தேவை. பிரச்சனை என்னையோ, என் குடும்பத்தினரையோ பொறுத்தது அல்ல. என் மகள் வீட்டிற்கு வந்திருக்கிறேன். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். பெண், மருமகன் இருவரும் வேலையில் இருக்கிறார்கள். வீடுகட்டி அடுத்த மாதம் கிரகப்பிரவேசம். ஆகவே, நானும் சம்பந்தியும் வந்திருக்கிறோம். இரண்டு கணவர்களும் Thanks Giving சமயத்தில் வருவார்கள். நான் கணவருடன் திரும்பிவிடுவேன். அவர்கள் குளிரைப் பொறுத்துக்கொண்டு, ஆறுமாதம் இவர்களுடன் தங்கி, வீட்டை ஒழுங்குபடுத்திக் கொடுத்துவிட்டு வருவார்கள். இதுதான் என்னைப்பற்றிய செய்தி.
நாங்கள் குடியிருக்கும் மூன்றாவது பிளாக்கில் ஓர் அழகான பெண் இருக்கிறாள். திருமணமாகி இரண்டு வருடம்தான் இருக்கும். தமிழ் கொச்சையாகப் பேசுகிறாள். நான் குழந்தைகளுடன் பார்க்கில் இருந்தபோது அவளே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தாள். கண்களில் அத்தனை ஒளி. பேசும்போதே ஒரு ஆர்வம். எனக்கு அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது. முதல் பத்துநாள் நன்றாகப் பொழுதுபோனது. என் வீட்டிற்குக் கூப்பிட்டேன். அவள் தயங்கி மறுத்துவிட்டாள். பிறகு அவளை ஒரு மாதம் காணவில்லை. அவள் வராமல் எனக்கு அந்தப் பார்க்கில் நடக்கவே போரடித்தது. ஒருநாள் அவளுடைய அபார்ட்மென்டைத் தேடிப்பிடித்துப் போனேன். வயதான அம்மா ஒருவர் கதவைத் திறந்தார்கள். நெற்றியில் பொட்டு இல்லை. கையில் ஒரு புத்தகமும், ஜபமாலையும் இருந்தது. அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. நான் சுதந்திரமாக உள்ளே நுழைந்து என் சின்னத்தோழியைப் பற்றி விசாரித்தேன். அவர்கள், "வெளியே போயிருக்கிறாள். எங்கே என்று தெரியாது" என்று ஒற்றை வார்த்தையில் ஆங்கிலத்தில் பதில் சொன்னார். என்னுடன் உட்கார்ந்து பேச அவர் சௌகரியமாக உணரவில்லை என்பதைப் புரிந்துகொண்டு என் பெயரைமட்டும் சொல்லிவிட்டு உடனே கிளம்பிவிட்டேன். மனதில் ஒரு மாதிரியான சங்கடம். என்னவென்று சொல்லத் தெரியவில்லை. எனக்கு அந்தக் குடியிருப்பில் யாரையும் தெரியாது. யாரிடம் அந்தப் பெண்ணைப்பற்றி விசாரிப்பது?
மறுநாள் வழக்கம்போல் சின்னப் பேத்தியை அழைத்துக்கொண்டு போய் அந்தப் பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆன்டி என்று பின்னாலிருந்து ஒரு மெலிதான குரல். என் தோழி இருந்தாள். அவள் கண்களில் அந்த வழக்கமான ஒளி இல்லை. முகத்தில் புன்னகை இல்லை. நெற்றியில் பொட்டு இல்லை. எனக்கு ஒரு வினாடி பகீரென்று இருந்தது. "உங்களிடம் நிறையப் பேசவேண்டும். ஆனால் நேரம் அதிகம் இல்லை. நான் சொல்வதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று சொல்லி என் கையைப் பிடித்துக்கொண்டாள்.
அவளுடையது காதல் கல்யாணம். அவள் சுத்த மத்தியதர பிராமணக் குடும்பம். கணவன் வேறுமதம், அவன் அம்மா தீவிர கிறித்துவர். மதம் மாறினால்தான் திருமணம் என்ற நிர்ப்பந்தத்தால் அவள் குடும்பத்தைவிட்டு ரகசியமாக வெளியேறி மதம்மாறித் திருமணம் செய்துகொண்டாள். இங்கே வந்து சேர்ந்துவிட்டாள். குழந்தை பிறந்தால் பெற்றோர்கள் மன்னித்து விடுவார்கள் என்று சில தோழிகள் அறிவுரை சொன்னார்கள். ஆகவே, குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள். Dependent விசாவில் வந்ததால், இவளால் வேலைக்குப் போகமுடியவில்லை. ஒருவர் வருமானத்தில் சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கணவன் சொல்லிவிட்டான். வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று காலையில் போனால் இரவு 9-10 மணிக்குத்தான் திரும்பி வருவான். பணத்தில் மிகவும் சிக்கனமாக இருக்கிறான். இவளுக்கென்று சொந்தமாகக் கார் இல்லை. கிரெடிட் கார்டு வசதி கொடுக்கவில்லை. "நீ மதம் மாறிவிட்டாய். நீ கோவிலுக்குப் போகக்கூடாது. தெரிந்தால் அம்மா கோபித்துக் கொள்வார்கள்" என்று சொல்லிவிட்டான். அப்படியும் அவள் இரண்டு, மூன்றுமுறை மற்றத் தோழிகளுடன் போய்விட்டு வந்திருக்கிறாள். அவர்களுக்கும் தெரியாது, இவள் மதம்மாறிய விஷயம். அழகாக ஸ்லோகம் எல்லாம் அவர்களுடன் சேர்ந்து சொல்லியிருக்கிறாள். வீட்டில் நிறையக் கடவுள் பொம்மைகள் வைத்திருக்கிறாள். அவள் கணவன் நல்லவன். சிலதையெல்லாம் கண்டு கொள்ளாமல்தான் இருந்திருக்கிறான். அவனுக்கே சிலசமயம் இவள் வீட்டில் தனிமையில் இருப்பதைப் பார்த்து பாவமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால், அவன் அம்மாவின் கண்டிப்பில் வளர்ந்தவன். அம்மாவை ஏமாற்றிவிட்டு அப்பா வேறு துணையுடன் போய்விட்டார் என்று அம்மாவின்மேல் பாசம், மரியாதை எல்லாம் உண்டு.
அவன் அம்மா திடீரென்று கிளம்பி வந்திருக்கிறாள். அவர்கள் சர்ச் ப்ரோக்ராம் இருந்திருக்கிறது. அதை முடித்துக்கொண்டு இரண்டு மாதம் இவர்களுடன் தங்க வந்திருக்கிறாள். வந்தவுடன் இந்தக் கடவுள் பொம்மைகளைப் பார்த்து ஒருமாதிரி ஆகியிருக்கிறது. ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், இவள் எங்கோ பக்கத்தில் மளிகை வாங்க வெளியில் சென்றபோது, இவளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்ல தோழி வந்திருக்கிறாள். தெரியாமல் எல்லா நிகழ்வுகளையும் சொல்லியிருக்கிறாள். அந்த அம்மாவிற்கு அதிர்ச்சி. அதிலிருந்து மருமகளிடம் பேசவில்லை. கணவனுக்கும் கோபம். அம்மாவிற்குப் பொய்சொல்லி ஏமாற்றுவது பிடிக்கவே பிடிக்காது. அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்ற அளவுக்கு மிகவும் வெறுப்பாக, கோபத்தை மௌனத்திலேயே காட்டுபவர். அதுவும் மதம் அவருக்கு ஒரு பெரிய விஷயம். இந்தப் பெண்ணிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நல்லவேளை ஒரு காலேஜில் கோர்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறாள். எவ்வளவு நேரம் அங்கே இருக்க முடியுமோ இருந்துவிட்டு மெள்ள நடந்து வீட்டிற்கு வருகிறாள். யாரிடமும் பேச்சு வைத்துக்கொள்வதில்லை. Facebook-ஐத் தவிர்க்கிறாள். பழைய தோழிகளிடம் ஆலோசனை கேட்டிருக்கிறாள். அவர்களுக்கும் மதம் பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை. "'உன் மாமியார் பழைய காலம். நீ நல்ல பெண். அவர் செய்வது சரியாக இல்லை. உன் கணவரிடம் பேசிப்பார்' என்று ஏதோ சொல்லி சமாதானமாகப் பேசுகிறார்கள் Concrete ஆக எந்த வழியும் காட்டவில்லை" என்று கண்களில் நீர்பொங்க என்னைக் கட்டிக்கொண்டாள். எனக்கு மிகவும் உருகிப் போய்விட்டது. பாவம், என் பெண்ணைவிட மிகவும் சிறியவள். எல்லாரும்தானே இந்தக் காலத்தில் ஜாதி, மதம் பார்க்காமல் காதல் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஒரு அவசரத்தில் எப்படியாவது அவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக மத நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டுவிட்டாள். அதன் பின்விளைவுகளை யோசித்துப் பார்க்கவில்லை. எனக்கு எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் அவள் செய்தது தவறு என்று நினைக்கலாம். ஆனால், அந்தப் பெண் அவ்வளவு துறுதுறு. மலங்கும் கண்கள். ஆசை ஆசையாகச் கொச்சைத் தமிழில் பேசுவாள். யாருக்கு அவளைப் பார்த்தாலும் பிடிக்கும். நான் அந்த மாமியாரிடம் பேசிச் சமரசம் செய்யலாமே என்று என் பெண்ணிடம் கேட்டேன். அவள் பிரயோசனம் இல்லை என்கிறாள், உங்கள் கருத்து?!
இப்படிக்கு ................... |
|
அன்புள்ள சிநேகிதியே
எனக்கு இதைப் படித்தவுடன் பல பல வருடங்களுக்கு முன்பு எங்கள் தோழிகளின் வட்டத்தில் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது. பெரியவர்களின் நோக்கில் நாங்கள் பார்க்கவில்லை. "Love" ஒரு "excitement." "Inter-Caste/Religion" ஒரு "curiosity". ரகசியத் திருமணம், பெற்றோர் எதிர்ப்புத் திருமணம் ஒரு த்ரில். அருமைத்தோழி காதலில் கசிந்துருகி, பெற்றோர்கள் வில்லி, வில்லன்களாக இருக்க, நாங்கள் எங்கள் மானசீகமான ஆதரவைத் தெரிவித்தோம். அவளுடன் சென்று மதம்மாறித் திருமணம் செய்துகொள்வதை அங்கீகரிக்க தைரியம் இல்லை. ரகசிய வாழ்த்துக்கள் உண்டு. எல்லாம் முடிந்து திரும்பி வந்தவுடன், எங்கள் வட்டத்தில் இல்லாத எனக்குமட்டும் நெருங்கிய தோழி, இந்தப் புதிதாகத் திருமணம் செய்த தோழியைப் பார்க்கும் விருப்பத்தைத் தெரிவித்தாள். காரணம், அவள் மதத்தில் இதுபோன்ற மதம் மாறியவர்களைப் பார்ப்பது மிகவும் நல்லதாம். அவர்கள் சந்திப்பு முடிந்ததும், என்னுடைய திருமணம் செய்த தோழி, "சாயந்திரம் என்னுடன் கோவிலுக்கு வருகிறாயா?" என்று கேட்டாள். நான் ஆச்சரியப்பட்டேன். "எதற்கு?" என்று கேட்டேன். நான் "இவனைத் திருமணம் செய்து கொண்டால், பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன்" என்றாள். நாங்கள் அந்த நேர்த்தியை முடித்துவிட்டு வந்தோம்.
இந்த விஷயத்தை நான் ஏன் விவரிக்கிறேன் என்றால் 20-25 வருடங்களாக பழகிப்போன உணவு, கற்ற கலைகள், வாழ்ந்த இடங்கள், பழக்க வழக்கங்கள், கேட்ட இசை, பார்த்த படங்கள், சென்ற இடங்கள், பண்டிகைகள் என்று எத்தனையோ தடயங்களை பதித்து உணர்வுகளை உசுப்பி விடுகின்றன. ஒரு புதிய வாழ்க்கைக்குத் தயார்செய்து கொள்ளும்போது, எது முக்கியமோ அதற்குமட்டும் வளைந்து கொடுத்துவிட்டு மற்றவற்றை எளிதாக எடுத்துக் கொள்வது மனித சுபாவம். உங்கள் இளம் தோழியின் கணவருக்கும் மதம் பெரிதாகத் தெரிந்திருந்தால் முதலிலேயே கண்டித்து இருப்பார். தன் தாயின்மேல் இருக்கும் மரியாதையும் பாசமும்தான் அவரது மதமாக இருந்திருக்கின்றது. அதேசமயம் மதக் கோட்பாடுகள், நம்பிக்கைகள் வலுவாக இருக்கும் அந்தத் தாயிடம் "சின்னப்பெண் தெரியாமல் செய்துவிட்டாள்" என்று உங்களைப்போல் ஒரு புதியநபர் எந்த வகையில் நியாயம் கேட்க முடியும்? காரணம், உங்கள் தோழிக்கு மாறிய மதத்தில் எத்தனை நம்பிக்கை இருக்கிறது என்று உங்களுக்கே தெரியாது என்று நான் நினைக்கிறேன். இங்கே தன்மகனைத் திருமணம் செய்துகொள்ள அந்தப்பெண் இந்த வழியைத் தேர்ந்தெடுத்து தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று இந்தத் தாய் நினைக்கிறாள். இந்த முடிச்சுக்களையெல்லாம் அவிழ்க்க நிறைய நேரம் தேவை. முதலில் அந்தத் தாயிடம் நீங்கள் நட்புறவை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பெண்ணின் எண்ணங்களை, நம்பிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் கணவரின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் ஆதங்கமும் ஆர்வமும் புரிகிறது. அந்த அம்மாவும் சீக்கிரம் கிளம்பிவிடப் போகிறார். நீங்களும் வேறுவீடு குடிபோகப் போகிறீர்கள். இந்த நிலையில் அந்தப் பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, அந்த மாமியாரிடம் (அவர் எப்படி இருந்தாலும்) கனிவாக இருக்கச் சொல்லுங்கள். வாழ்க்கையில் ஏற்படும் priorities-ஐப் பொறுத்து மனிதர்கள் மாறிக்கொண்டே வருவார்கள். உங்களுக்குச் சிறிய பெண்ணாகத் தெரிந்தாலும் அந்தத் தோழிக்கும் பல விஷயங்களில் முதிர்ச்சி உண்டு. இந்த விஷயத்திலும் அவருக்குக் கொஞ்சநாளில் தெளிவுவரும். கவலைப்படாதீர்கள்.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|